சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி
4
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத்
தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும்
படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள்
குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும்
கட்டுரைத்தொடர்.)
சொந்த வீட்டுக்குக்
கள்வனைப்போல வந்துபோகும் தலைவன்
இல்லறத்தில் இணைந்து நல்லதொரு
மனைவியுடன் வாழ்ந்தாலும் அந்தக்காலத்தில் கணிகையர் என்று
சொல்லப்படும் பரத்தைகளிடம் தொடர்புவைத்துக்கொள்வது ஆண்களில்
பெரும்பாலானோரின் வழக்கமாக இருந்திருக்கிறது. அதிலும் அரசர்கள்,
பெரும் வணிகர்கள், தனவந்தர்கள், கலைஞர்கள் முதலிய, அந்தஸ்தில்
உயர்ந்தவர்களின் வாழ்வில் பரத்தையர்களின் தொடர்பு என்பது
இன்றியமையாததோர் அம்சமாக இருந்திருக்கிறது என்றே சொல்லலாம். சில
ஆண்கள் பல பரத்தையர்களுடன் உறவு வைத்துக்கொள்வார்கள். சிலரோ, ஒரு
பரத்தையை நிரந்தரமாகத் தமது வைப்பாட்டியாக வைத்திருப்பார்கள். அவள்
வேறு சிலருக்கும் வைப்பாட்டியாக இருக்கக்கூடும். மனைவியோடு சேர்ந்து
வாழும் அதேவேளை பரத்தையிடமும் அடிக்கடி சென்று உடலுறவுக்காக அவளோடு
தங்குவார்கள். அத்தகைய ஆண்களின் மனைவிமார் தங்கள் கணவன்மார்களுடன்
ஊடல் கொள்வதும், கோபம் கொள்வதும், சண்டையிடுவதும், ஊடல் தணிந்து,
கூடலில் முடிந்து, இன்பம் காண்பதும், இல்லறம் தொடர்வதும் பண்டைத்
தமிழகத்தின் வாழ்க்கை முறையில் சாதாரணமாகும். அத்தகைய நிலைமைகளை
எடுத்துக்காட்டும் காட்சிகள் சங்க இலக்கியங்களில் நிறையவே
பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அப்படியொரு காட்சியை இப்போது கண்டு இரசிப்போம்.
அது ஓர் அழகான வீடு. வசதியான குடும்பத்தினர் வாழ்கின்ற பெரிய வீடு.
அந்த வீட்டுக்குக் காவல்கூட உண்டு. மன்னர்களின் அரண்மனையிலே
தொங்குகின்ற ஆராய்ச்சி மணியைப்போல அந்த வீட்டிலும் நீளமான நாக்குடன்
ஒரு மணி தொங்கிக்கொண்டிருக்கிறது. அந்த மணி அப்போது ஒலியெழுப்பத்
தொடங்குகிறது. வீட்டின் அருகே தென்னங் கீற்றினால் வேயப்பட்ட பந்தல்
ஒன்று உள்ளது. பந்தலின் உட்புறம் தரையில் வெண்மணல்
பரப்பப்பட்டுள்ளது. அந்தப் பந்தலினுள்ளே பெரிய பாணர்கள் சூழநின்று
வீட்டுக்குக் காவல் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நறுறுமணம் கமழும்
படுக்கை விரிப்பில், மெல்லிய மலரணையில் புதிதாகப்பிறந்த குழந்தையும்,
செவிலித்தாய் என்று அழைக்கப்படும் வளர்ப்புத் தாயும்
தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் விரும்புகின்ற அற்புதமான
மணம் குழந்தையிடம் கமழ்கின்றது. அது என்ன தெரியுமா? அதுதான்
புத்தம்புதிதாகப் பிறந்த குழந்தையிடம் வீசுகின்ற பிறப்பு வாசனை.
மற்றுமொரு பக்கத்தில் அழகிய பெண்யொருத்தி
படுத்துக்கொண்டடிருக்கிறாள். அவள்தான் குழந்தையைப் பெற்றவள்.
பிள்ளையைப் பெற்றெடுத்த பச்சை உடம்பு என்பதற்காக வெண்கடுகை அரைத்து
அவளது உடலெங்கும் அப்பி, எண்ணெய் தேய்த்து அவளுக்கு
நீராட்டியிருக்கிறார்கள். அதனால் அவளது அணிகள் ஈரமாக இருக்கின்றன.
அத்துடன் பசுநெய்யைப் பூசியிருப்பதால் அவளது உடல் முன்னரைவிட மேலும்
மென்மையாக இருக்கின்றது. மகப்பேற்றினால் ஏற்பட்ட சோர்வினால் அவள்
நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறாள்.
அது ஓர் இரவு நேரம். இடைச்சாமப் பொழுது. அந்த நேரத்தில்
தனக்குப்பிறந்த மகனை, தன் தந்தையின் பெயரைத் தாங்கப் போகின்றதனால்
தந்தைக்குப் பெயரன்(பேரன்) ஆனவனைப் பார்ப்பதற்காக அன்போடும்,
பாசத்தோடும், ஆசையோடும் அவன் அங்கே வருகிறான். இவ்வளவு காலமும்
மனைவியைப் பிரிந்து கணிகையின் வீட்டில் காமக்களியாட்டத்தில் இருந்த
அவன்மீது மனைவி கோபமாக இருப்பாள். அவனைக் கண்டால் ஊற்றாரும்
உறவினரும் எள்ளி நகையாடுவார்கள். அதனால்தான் அவன் இரவு நேரத்தில்
வருகிறான்.
அதேவேளை, அவன் தன் குழந்தையைப் பார்க்கப் போவதால் ஒருவேளை
மனைவியுடன் உறவாகி தன்னை மறந்து அங்கேயே தங்கிவிடுவானோ என்ற கவலை
அவனோடு கூடிவாழும் பரத்தைக்கு வந்துவிடுகிறது. அதுவும் தன்னோடு
தங்கியிருக்க வேண்டிய இரவு நேரத்தில் அவன் மனைவியிடம் செல்வதை
அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், அவளுக்கு அவன்மேல் கோபம்
பிறக்கிறது. அவன் தன்வீட்டுக்குப் போவது ஒன்றும் மனைவியைப்
பார்க்கவல்ல. தன் தந்தையின் பெயர் சொல்லப் பிகுழந்தையை ஒருமுறை
பார்ப்பதற்காகத்தான், மற்றும்படி அவனுக்கு அவனின் மனைவிமேல்
அன்பில்லை, தன்மேல்தான் அவனுக்கு அன்பும் ஆசையும் என்ற கருத்துப்பட,
தன் கவலையைமறப்பதற்காக, அவனின் மனைவியின் தோழிகள் கேட்கக்கூடியதாக
பரத்தை கூறுகிறாள். 'இரவு நேரத்தில் ஒரு கள்வனைப்போலச் செல்கிறான்'
என்று தனது ஆற்றாமையால் அவனை எள்ளிநகையாடித் தன்னைத் தானே
சமாதானப்படுத்திககொள்கிறாள்.
நெடுநா ஒள்மணி கடிமனை இரட்டக்
குரைஇலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென, ஒருசார்,
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறிஉற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்ளன் போல
அகன்துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே
நற்றிணை. மருதத் திணை. பாடல் இல:
40.
பாடியவர்: கோண்மா நெடுங்கோட்டனார்
(பரத்தையின் வீட்டில் தங்கியிருந்த தலைவன் தனது மனைவி ஓர்
ஆண்குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்பதை அறிந்ததும், தன்
மகனைப் பார்ப்பதற்காகத் தன் வீட்டுக்குச் செல்கிறான். அதனால்
கோபங்கொண்ட பரத்தை அவனின் மனைவியின் தோழிகளிடம் அவனைப்
பழித்துரைக்கிறாள்.)
காவல்காரர்களையுடைய அந்த வீட்டில் உள்ள நீண்ட நாக்குடன் கூடிய
மணியும் ஒலிக்கத் தொடங்குகின்றது. தென்னங்கீற்றினால் அமைக்கப்பட்டு,
மணல்பரப்பப்பட்டிருக்கும் பந்தலுக்குள் பாணர்கள் சூழநின்று காவல்
காத்துக்கொண்டிருக்கிறார்கள். இளம்பெண்கள் தலைவனின் மகனைச்
சுற்றிவரநின்று அவனைக் காவல்செய்கிறார்கள். வீட்டினுள்ளே நறுமணம்
வீசுகின்ற மெல்லணையோடு கூடிய படுக்கை விரிப்ப்பில், அப்போதுதான்
பிறந்ததினால் பிறந்த மணம் கமழுகின்ற குழந்தை செவிலித் தாயோடு
படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறது.
வெண்கடுகை அரைத்து உடலெங்கும் அப்பி, எண்ணெய் தேய்த்து முழுகியதால்
ஈரமான அணியை அணிந்துகொண்டுள்ளதுடன், பசுநெய் பூசியதால்
மென்மையாகவும் இருக்கும் உடலைக்கொண்ட அழகு நிரம்பிய அவனின் மனைவி,
குழந்தையைப் பெற்றெடுத்த சோர்வினால் இரண்டு சோடி இமைகளும் பொருந்தி
மூடியவாறு நன்றாக உறங்குகின்றாள். அந்த இடைச்சாம இரவிலே அகன்ற
நீர்த்துறையையுடைய ஊரைச் சேர்ந்த தலைவன், சிறப்புப்பெற்ற தனது
தந்தையின் பெயரைத் தாங்கப்போகின்ற தனது மகன் பிறந்திருப்பதனால்
அவனைப் பார்க்கத் தன் வீட்டுக்குள்ளேயே கள்வனைப்போல வந்திருக்கிறான்
போலும். என்பது இந்தப்பாடலின் கருத்து.
(காட்சிகள் தொடரும்....................................)
srisuppiah@hotmail.com
|