சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி
5
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத்
தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும்
படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள்
குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும்
கட்டுரைத்தொடர்.)
கள்ள உறவில் களித்த தலைவன்
இருமனங் கலந்து திருமணமாகி
இல்லறத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அந்தத் தம்பதிகள். ஆராக்
காதலுடன் வாழ்க்கையினை ஆரம்பித்த அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர்
மாறாத அன்பு வைத்திருந்தார்கள். தலைவி தலைவனைத் தன் உயிருக்கும்
மேலாக மதித்தாள். அவனே தனக்கு எல்லாம் என்று நினைத்தாள். அவனும்
அப்படித்தான். ஆனால் அக்காலச் சமூக வாழ்க்கை முறையிலே பெரும்பாலான
ஆண்கள் பரத்தையரை நாடுவது வழக்கமாக இருந்தது. அவனும் ஒருநாள்
கணிகையொருத்தியின் கவர்ச்சியில் தன் மனதைப் பறிகொடுத்தான். அவளோடு
உறவு கொள்ளத் துடித்தான். எப்படியோ அவளின் தொடர்பினை
ஏற்படுத்திக்கொண்டான். தலைவிக்குத் தெரியாமல் அடிக்கடி பரத்தையர்
வாழும் பகுதிக்குக் களவாகச் சென்று அவளோடு மட்டுமன்றிப் பலரோடும்
உறவாடி மகிழ்ந்தான்.
தலைவியின் தோழிக்குத் தலைவனின் நடத்தையில் சந்தேகம் எழுந்தது.
நாளடைவில் அவனது கள்ள உறவு அவளுக்குத் தெரிந்துவிடுகிறது. ஒருநாள்
வீதியிலே அவள் தலைவனைக் கண்டாள். அவன் எதிர்த்திசையிலேயிருந்து
வந்துகொண்டிருந்தான். அவனது கோலத்தைக் கண்டதுமே அவன் எங்கேயிருந்து
வருகிறான் என்பதைத் தோழி புரிந்து கொண்டாள். அவன் பரத்தையர்களின்
இருப்பிடம் சென்று அவர்களோடு கூடிக்குலாவி இன்பம்
அனுபவித்துவிட்டுத் தன் இல்லத்திற்குத் திரும்பிவந்து
கொண்டிருந்தான். அவனது முகத்திலும், வெளித்தெரியும் பரந்த
மார்பிலும், அவன் அணிந்திருக்கும் உடையிலும் அவன் விலைமாதரோடு
களித்திருந்தமைக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. உடனே அவளுக்கு
மனதிற்குள் கேலிச் சிரிப்பு எழுந்தாலும் அதனை அடக்கிக்கொண்டு
தலைவனிடம் பின்வருமாறு கூறுகிறாள்.
'ஐயா! நீங்கள் வேறு பெண்களுடன் தொடர்புவைத்திருக்கிறீர்கள் என்ற
செய்தி உங்கள் மனைவியின் காதிற்கு எட்டினாலே அவள் கடுங்கோபமடைவாளே!
அப்படியிருக்கும்போது உங்களின் தோற்றத்தை இப்படியே அவள்
பார்த்துவிட்டால் அவளுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா?' என்று
அவனைப்பார்த்துக் கேட்கிறாள். தலைவியின் கணவன் பரத்தையரிடம் செல்வதை
அந்தத் தோழி விரும்பவில்லை என்பதைவிட, தலைவி அவனை இந்தக் கோலத்தில்
கண்டு, அவனிடம் காணக்கூடியதாகவுள்ள அடையாளங்களைக் கொண்டு அவனின்
பரத்தையர் தொடர்பு அவளுக்குத் தெரிந்துவிட்டால் அவள் துடிதுடித்துப்
போய்விடுவாளே. உயிரைவிட்டாலும் விட்டுவிடுவாளே என்பதில்தான் அந்தத்
தோழி மிகவும் அக்கறைப்பட்டாள், அச்சமடைந்தாள். அதனால், நடந்தது
நடந்ததுதான். உங்கள் கோலத்தையாவது மாற்றிக்கொண்டு, கள்ள உறவில்
ஈடுபட்டமைக்கான அடையாளங்களை அவள் கண்டுகொள்ளாதவகையில் அவளிடம்
செல்லுங்கள் என்று அவனுக்கு அறிவுறுத்துகின்றாள்.
பண்டைத் தமிழகத்திலே தோழமை கொண்டவர்களின் சிறப்புமிக்க பண்பாட்டை
இந்தக்காட்சிமூலம் நாம் அறியலாம். இந்தக்காலத்திலேயென்றால்,
அப்படியொரு தோழி என்ன செய்திருப்பாள்? அப்படியே தலைவியிடம்
ஓடிச்சென்று, தலைவனைப்பற்றி, நடந்ததை மட்டுமன்றி நடக்காதவைகளையும்
சேர்த்துச் சொல்லிக் கோள் மூட்டிக் குடும்பத்தைப் பிரித்து
விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.
இந்தக்காட்சியை வெளிப்படுத்தும் பின்வரும் பாடல் ஐங்குறுநூறில்
இடம்பெற்றுள்ளது. இந்தப்பாடலைப் பாடியவர் ஓரம்போகியார் என்ற புலவர்.
இவர்தான் ஐங்குறுநூறில் ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாக
அமைந்த மருதத்திணைக்குரிய பாடல்களைப் பாடியவர்.
'செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்,
கண்ணிற் காணின், என்னா குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்,
பலர்படிந் துண்ணும் நின் பரத்தை மார்பே.'
(ஐங்குறுநூறு பாடல் இல:
84)
இதன் பொருள்: பிறபெண்களோடு நீ உறவாடுகின்றாய் என்பதைத் தன் காதினால்
கேட்டாலே சொல்லில் அடக்க முடியாதளவு கடுங்கோபம் கொள்வாளே உன்காதலி.
அப்படியிருக்கும்போது, தைத்திங்கள் நாளில், நறுமணம் வீசுகின்ற
மலர்கள் சூடப்பட்ட கூந்தல்களையுடைய பெண்கள் எல்லாம் இறங்கி
நீராடுகின்ற குளத்தைப்போல, விலைமாதர்கள் பலர் தழுவிக்கிடந்த உன்
மார்பிலே காணப்படுகின்ற புணர்குறிகளை இப்போது அவள் கண்டால் என்ன
ஆகுவாளோ? (உயிரையே விட்டுவிடுவாளே!)
(காட்சிகள் தொடரும்....................................)
srisuppiah@hotmail.com
|