சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி
8
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத்
தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும்
படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள்
குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும்
கட்டுரைத்தொடர்.)
வருந்துவாள் காதலி, விரைந்துசெல் பாகனே!
ஒரு நாட்டின் பல்வேறு படைப்பிரிவுகளிலே ஒரு பிரிவின் தளபதி அவன்.
தனது மன்னனின் கட்டளைப்படி தான் ஏற்றுக்கொண்ட பணியொன்றைச் செவ்வனே
நிறைவேற்றிவிட்டான். மன்னனின் செய்தியொன்றைத் தாங்கிக்கொண்டு
அண்டைநாட்டுக்குத் தூதனாகச் சென்று, செய்தியை அந்நாட்டு அரசனிடம்
சேர்ப்பித்துஇ தனது மன்னனின் கோரிக்கைக்கு அவனை இணங்கவைத்து
வெற்றிகரமாகத் தனது கடமையை முடித்துவிட்ட திருப்தி அவனுக்கு. இங்கே
வந்து பலநாட்களாகிவிட்டன. இனித் தாய்நாட்டுக்குத் திரும்ப
வேண்டியதுதான். புறப்படுவதற்கு முன்னர் அந்த நாட்டின்
அரசவிருந்தினர் மாளிகையிலே சற்றுநேரம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த
தளபதியின் சிந்தனை பின்னோக்கி நகர்கிறது. கடந்த நிகழ்ச்சி
கண்களுக்குள் விரிகிறது. குலங்கிய கண்களுடன் வழியனுப்பிவைத்த
காதல்மனையாளின் அன்புமுகம் நெஞ்சிலே படர்கிறது.
ஏதோ ஒரு காரணத்தினால் அவனது நாட்டுக்கும், அண்டைநாட்டுக்கும் இடையே
பகைமை உண்டாகியது. இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் ஒன்று
மூண்டுவிடக்கூடிய சூழ்நிலை எழுந்தது. இரண்டு நாடுகளின் அரசர்களும்
மாபெரும் வீரர்கள். நன்கு கட்டியெழுப்பப்பட்ட நாற்படைகளும் இரண்டு
நாடுகளிடமும் இருக்கின்றன. அரசர்களிலே ஒருவன் பக்கத்து நாட்டுடன்
போர்புரிந்து பகைவனை அழிப்பதைவிட, இருவருக்கும் இடையில்
உண்டாகிவிட்ட பகைமையை அழிப்பதையே பெரிதும் விரும்பினான். அண்டை
நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதிலேயே அவனுக்கு நாட்டம் இருந்தது.
அதனால் தனது நல்லிணக்கச் செய்தியினை பகைமைகொண்ட அரசனுக்கு
அனுப்பிவைக்கத் தீர்மானித்தான். தளபதிகளில் ஒருவனான அவனை அழைத்தான்.
தனது செய்தியினைச் சேர்ப்பித்து அந்த அரசனின் உள்ளத்தை அறிந்து
வருமாறு பணித்தான். அரசனின் கட்டளையைப் பெற்றுக்கொண்ட அவன்
அங்கிருந்து நேராகத் தன் இல்லத்திற்குச் சென்றான். காதல்மனையாளிடம்
அரசன் தன்னிடம் ஒப்படைத்த கடமையைக் கூறினான். அவள் கலங்கினாள்.
ஒருநாள்கூட தன்னால் அவனைப் பிரிந்திருக்க முடியாது என்று
வருந்தினாள். தன்னையும் அவனுடன் அழைத்துப்போகும்படி சிணுங்கினாள்.
தான் செல்வது அரசகாரியம் என்பதால் அவளை அழைத்துச்செல்ல முடியாது
என்று கூறிய அவன்இ தான் அதிககாலம் அங்கே நிற்கவேண்டி வராது என்று
சமாதானம் கூறினான். கார்காலம் தொடங்குவதற்கு முன்னர் வந்துவிடுவதாக
வாக்களித்தான். கார்காலம் கருக்கூட்டத் தொடங்குவதற்கு முன்னரே
கட்டாயம் வந்துவிடவேண்டும் என்றும். தாமதித்தால் தன்னால்
தாங்கிக்கொள்ளவே முடியாது என்றும் அவள் அவனைக் கட்டிப்பிடித்துக்
கண்ணீர் சொரிந்து விக்கிவிக்கி அழுது அவனுக்கு விடை கொடுத்தாள்.
அந்த நினைவுகள் தளபதியின் நெஞ்சிலே உராய்ந்ததும், திடீரென்று
எழுந்தான். காதலியைப் பிரிந்து வந்து கன நாட்களாகிவிட்டன. கார்காலம்
ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளை இயற்கை வெளிக் காட்டத் தொடங்கிவிட்டது.
இனி ஒரு கணமும் தாமதிக்க முடியாது என்று எண்ணினான். தேரோட்டியைத்
தேடினான். அவனோ பயணத்திற்குத் தயாராகத் தேரின் சில்லுகளைச்
செப்பனிட்டுக்கொண்டிருந்தான். பக்கத்திலே குதிரைகள் பிடரிமயிiரைச்
சிலுப்பியவாறே உணவருந்திக்கொண்டிருந்தன. தளபதி தேரோட்டியை அழைத்துப்
பின்வருமாறு சொல்கிறான். 'கார்காலம் நெருங்கிவிட்டது. என் காதலி
எனக்காகக் கலங்கிய கண்களோடு காத்திருப்பாள். நாம் போய்ச்
சேர்ந்தவுடன் நமக்கு விருந்துணவளிக்கும் மகிழ்விலே நம்மைக்கண்டதும்
ஆனந்தக் களிப்படைந்து புன்னகை பூக்கின்ற அவளின் அழகிய முகத்தைக்
கண்டு நாமும் மகிழ்ச்சியடைவோம். உடனே குதிரைகளைத் தேரிலே பூட்டு.
இயன்ற மட்டும் தேரை விரைவாக ஓட்டு'. தளபதி இவ்வாறு தேரோட்டியிடம்
சொல்வதாக நமது மனத்திரையில் மலரும் காட்சியொன்றைப் பின்வரும் பாடல்
தருகின்றது.
பாடல்:
இருநிலங் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதிபோகிய அசைவுஇல் நோன்தாள்
மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி
கொய்ம்மயிர் எருத்தில் பெய்ம்மணி ஆர்ப்பப்
பூண்கதில் பாக! நின்தேரே பூண்தாழ்
ஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம்மா அரிவை
விருந்துஅயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்நகை காண்கம்
உறுபகை தணித்தனன் உரவுவாள் வேந்தே
(நற்றிணை. பாடல் இலக்கம்: 81.
முல்லைத்திணை. பாடியவர்: அகம்பன் மாலாதனார். )
இதன் கருத்து:
தேர்ப்பாகனே! வலிமைபொருந்திய வாளைவைத்திருக்கும் நமது மன்னன் நமது
நாட்டுக்கு வந்த பகைமையைத் தணித்துவிட்டான். பரந்த நிலத்தில்
குழிகள் உண்டாகக்கூடியவாறு விரைந்துநடக்கின்றனவும், அரசர்களும்
மதிக்கின்ற தன்மை வாய்ந்த வலிய கால்களைக்கொண்டனவுமான குதிரைகளை
அவற்றின் மயிர்நிரம்பிய பிடரியிலே தொங்கும் மணிகள் ஆரவாரித்து
ஓசையிட நீ தேரிலே பூட்டுவாயாக. பூண்கள் தாழ்ந்து கிடக்கும் வனப்பு
மிக்க மார்பகங்களில் கண்ணீர்த்துளிகள் விழுந்து
தெறித்துக்கொண்டிருக்கும் நிலையில் என்மனைவி இப்போது வீட்டிலே
அழுதுகொண்டிருப்பாள். அவ்வாறு வருந்திக்கொண்டிருக்கும் அவள்
நம்மைக்கண்டதும் நமக்கு விருந்தளிக்கும் விருப்பத்துடன் (அதுவரை
என்னைப்பிரிந்திருந்த வருத்தத்தினால் உண்டான தளர்ச்சியோடு)
நம்மைப்பார்த்து முறுவலிக்கம் அந்த இனிமையான புன்னகையை கண்டு
மகிழ்வோம். (தேரை விரைந்து செலுத்துவாயாக)
(காட்சிகள் தொடரும்....................................)
srisuppiah@hotmail.com
|