சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 11

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)

 

உடல் தேரிலே உள்ளம் ஊரிலே!

அரசாங்க அலுவல் காரணமாக வெளியூருக்குச் சென்றிருந்த தலைவன் அலுவல் முடிந்ததும் தேரிலே சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறான். குதிரைகள் தேரை வேகமாக இழுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. தேரின் பின்னால் படைவீரர்களைக் கொண்ட சிறிய சேனையொன்றும் வந்துகொண்டிருக்கின்றது. அந்த வீரர்கள் ஓட்டமும் நடையுமாகத் தேரைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்குக் களைப்பும், சோர்வும் ஏற்படுகின்றது. அதனை நன்குணர்ந்த தலைவன் படை வீரர்கள் தேரைத் தொடர்ந்து வரத் தேவையில்லை என்றும், தேவையானபோது இடைக்கிடையே இளைப்பாறி, தங்கள் உடைகளைத் தளர்த்தி ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்றும் தேரோட்டி மூலமாகச் சொல்கின்றான்.

தேர் விரைவாகச் சென்றுகொண்டிருக்கின்றது. வழிநெடுகப் பல்வகை இயற்கைக் காட்சிகளை அவன் காணுகின்றான். நகரங்கள், ஊர்கள், பெருந்தெருக்கள். சிறிய வீதிகள், அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள். செடிகள், கொடிகள், புதர்கள். பற்றைகள், பாம்புப் புற்றுகள் என்றிவ்வாறு தேரோடும் வீதியின் இரு பக்கங்களும் அவனின் கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள் தென்படுவதால் மனச்சோர்வின்றி அவனது பயணம் தொடர்கிறது. இடைக்கிடை தேர்ப் பாகனுடன் பேசிக்கொண்டே வருகிறான்.

அவனது தேர் காட்டு வழியே வந்துகொண்டிருந்தபோது, அங்கே அவனது உள்ளத்தைப் பாதிக்கும் காட்சியொன்றைக் அவன் காணுகின்றான். முதல்நாள் இரவு பெய்த மழையால் நிலம் ஈரலிப்பாக உள்ளது. அந்த நிலத்தை இரை தேடும் ஒரு காட்டுக்கோழி கிளறிக்கொண்டிருக்கிறது. கணப்பொழதில் காட்டுக்கொழியின் வாயிலே ஓர் உயிரினம் சிக்கிக்கொள்கிறது. அதனைத் தன் காலால் மிதித்து, சொண்டினால் கொத்திக் கொல்கிறது காட்டுக்கொழி. பின்னர் தனது சொண்டிலே கவ்விக்கொண்டு பக்கத்திலே நின்றுகொண்டிருந்த பெட்டைக்கோழியின் அருகிலே சென்று பெருமிதத்தோடு அதனை உற்றுப் பார்க்கின்றது. அதற்கு இரையை ஊட்டுகின்றது. இந்தக்காட்சியைக்கண்ட தலைவனுக்கு அப்போதே தன் காதலியைக் காணவேண்டும் என்ற ஆசை பிறக்கின்றது.

அந்தக் காட்டுக்கோழி தன் பேடைக்கு உணவூட்டியது போலத் தானும் தன் காதலிக்கு இன்பமூட்டி இதுவரையும் பிரிந்திருந்த அவளை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும் என்று ஆவல் பெருகுகின்றது. தேரிலே அவன் இருந்தாலும் அவனின் மனம் ஊரிலே இருக்கும் தலைவியிடம் சென்றுவிட்டது. அனது மனவேகத்திற்குத் தேரை இழுக்கும் குதிரைகளின் வேகம் போதவில்லை என்பது அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அதனால் தேர்ப்பாகனிடம் தேரை மேலும் விரைவாகச் செலத்துமாறு கூறுகிறான். அதற்காகக் குதிரைகளைக் கூரிய முட்களுடன்கூடிய சவுக்கினால் அடித்து ஊக்கப்படுத்தும்படி சொல்கிறான். இத்தகைய காட்சியினை எடுத்துக்காட்டும் பாடல் ஒன்று பின்வருமாறு.

பாடல்:

விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்ப அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக!
தீண்டா வைமுள் தீண்டிநாம் செலற்கு
ஏமதி வலவ, தேரே! உதுக்காண்
உருக்குறு நறுநெய் பால்விதிர்ந் தன்ன
அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல்பொறிக்
காமறு தகைய கான வாரணம்
பெயல்நீர் போகிய வியல்நெடும் புறவிற்
புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி
நாள் இரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!


(நற்றிணை பாடல் இல:
21. முல்லைத்திணை. பாடியவர்: மருதனிள நாகனார்)

இதன் நேரடிக்கருத்து வருமாறு:

வலவனே! (நாம் தேரிலே செல்கின்றோம்) நமது படை வீரர்கள் நம்மோடு விரைவாக நடந்து வருகிறார்கள். அதனால், அவர்கள் மிகவும் களைப்படைந்து வருந்துகின்றனர். அவர்கள் தமது இடுப்பிலே இறுக்கிக் கட்டியுள்ள கச்சையினை அவிழ்த்து நுகைய விட்டுத் தாம் விரும்பியபடி வழியில் ஆங்காங்கே தங்கி இளைப்பாறி மெல்ல மெல்ல நடந்து வரட்டும். நறுமணம் தருகின்ற உருக்கி வார்த்த நெய்யிலே பாலைத் தெளித்தது போலத் தோன்றகின்ற அழகான சிறு புள்ளிகள் பலவற்றைக் கொண்டுள்ளதும், பால்கடையும் போது ஏற்படும் சத்தத்தைப்போலக் குரலொலியெழுப்புவதுமான மிடறையுடையது காட்டுக்கோழியின் சேவல். அது காண்பவர்களை விரும்பம் கொள்ளச் செய்வது. மழைபெய்து வடிந்தோடிய பரந்த இதக் காட்டில் அந்தக் காட்டுக்கோழி காலை நேரத்தில் ஈரமான மணலைக் கிளறுகிறது. இன்றைய நாளுக்குரிய இரை கிடைத்ததும் அதனைத் தன் பெட்டைக்கோழிக்குக் ஊட்டிவிட நினைத்து அதை உற்றுப் பார்க்கிறது. பெருமை மிக்க அதன் நிலைமையைப் பார்! வளவனே! அதைப்போல நாமும் விரைவாக ஊருக்குச் சென்று நம் காதலியைச் சேர்ந்து இன்புறுவதற்காக நீ (இதுவரை நீ அடிக்காமலேயே விரைவாக ஓடிய) குதிரைகளை கூரிய முள்கொண்டு அடித்து தேரை இன்னும் விரைவாகச் செலுத்து.



 


                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com