சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 17

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)

 

விரைந்து வா! அவளை மணந்து வாழ்!

 

சோழநாட்டிலே ஆர்க்காடு என்று ஒரு பேரூர் இருந்தது. சோழமன்னனின் அட்சிக்குட்பட்ட அந்த ஊரிலே வீதிகளில் குடங்களிலே வைத்து கள் விற்பார்கள். கள்ளின் சுவையைப் பருகக் குடங்களிலே மொய்த்த வண்டுகள் அந்த இடத்தை விட்டு அகலாது எப்போதும் ரீங்காரமிட்டபடி குடத்தைச்சுற்றியே பறந்து கொண்டிருக்கும் அல்லது குடத்திலேயே அமர்ந்து கொண்டிருக்கும். கள் குடிப்பவர்கள் போதையில் எப்போதும் சத்தம்போட்டு ஆரவாரம் செய்துகொண்டேயிருப்பார்கள். வீதிகளிலே தொடர்ந்து தேர்வண்டிகள் சென்றுகொண்டிருக்கும். அவற்றிலிருந்தும் இரைச்சல் ஒலி எழுந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஆர்க்காடு என்னும் ஊரிலே, அவனும் அவளும் கருத்தொருமித்த காதலர்கள்.

ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் ஊருக்கு அயலில் உள்ள புன்னைமரச்சோலைக்கு வரும்படி அவளை அவன் அழைத்தான். அவள் மறுத்தாள். அவன் வற்புறுத்தினான். அவள் தயங்கினாள். தோழியையும் அழைத்துக்கொண்டு வரலாம் என்று தன் கோரிக்கையில் சற்று இறங்கினான். அவள் மயங்கினாள். பின்னர் இணங்கினாள். ஆரம்பத்தில் சிலநாட்கள் தோழியுடன் வந்த சோலையிலே அவனைச் சந்தித்தாள். அவர்களைத் தனிமையில் விட்டுவிட்டுத் தோழி நழுவிக்கொள்வாள். அவர்கள் தழுவிக்கொள்வார்கள். பின்னர் அவள் தனியே வரத் தொடங்கினாள். அவனது விருப்பத்திற்கெல்லாம் இணங்கினாள். புன்னைமரச் சோலலையிலே தம்மை மறந்து அவர்கள் கூடிக்குலாவும் விடயம் மெல்லமெல்ல ஊருக்குள் கசிந்தது. மக்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் அவர்களைப்பற்றிய பழிச்சொல் எழுந்தது. இப்படியிருக்கும்போது தலைவியை முறைப்படி மணம்முடித்து வாழ்வதற்கு முடிவெடுத்த தலைவன் அயலூருக்குச் சென்று அதற்கான பொருளை ஈட்டிவருவதற்குப் புறப்பட்டான். அதனால் தலைவி மிகவும் கலங்கினாள். அவனைப் பிரிந்திருக்க வேண்டி வருகிறதே என்று வருந்தினாள். இதனை அறிந்த தோழி தலைவனிடம் சென்று தலைவியின் நிலைமையை எடுத்துக்கூறுகின்றாள்.

'இங்கே பார் ஐயா! நீ வரச்சொன்ன போதெல்லாம் புன்னைமரச் சோலைக்கு அவள் வந்தாள். உனக்கு இன்பம் தந்தாள். உன்னுடைய அந்தச் செய்கையால் இப்போது உங்களைப்பற்றிய கதை ஊரெல்லாம் பரவிவிட்டது. தெருவிலே உங்களைப் பற்றி ஊரவர் பேசுகின்ற பழிச் சொற்கள். தேரோடும் வீதியிலே எழுகின்ற சத்தத்தைப்போல இருக்கின்றது. அறிவுடையவர்கள் எல்லோருமே நல்லொழுக்கமடையவர்கள் என்று சொல்ல முடியாது என்றெல்லாம் பலரும் பழித்துரைப்பார்கள். நீயும் அப்படிப்பட்டவன் என்றால் ஒருவேளை அவள் இறந்துவிட்டால்கூட அதற்குப்பிறகும் இந்தப் பழிச்சொல் அவளது குடும்பத்திற்கு துன்பத்தைத் தந்துகொண்டேயிருக்கும் என்பதை நீ அறிந்துகொள். களவு உறவிலே அவளோடு இன்பம் அனுபவித்த நீ முறைப்படி அவளை மணந்து கற்புவழி நிற்க வழிதேடு. எனவே வெளியூர் செல்லுகின்ற நீ விரைவாக உனது பணிகளை முடித்துப் போன காரியம் நிறைவேறியதும் வீணாகத் தாமதம் செய்யாமல் விரைந்து வந்து அவளை மணந்து, அவளின் உயிரைக் காப்பாற்றுவதுடன் பழிச்சொற்களையும் இல்லாமல் செய்துவிடு'

இவ்வாறு தலைவனிடம் தலைவியின் தோழி கூறுகின்ற மாட்சியையும், அந்த ஊரின் காட்சியையும் நமது மனத்திரையில் ஓடவிடும் ஒன்பது வரியில் அமைந்த பாடலைக் கீழே காணலாம்.


அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்த
இன்னுயிர் கழியினும் நனியின் னாதே
புன்னயங் கானல் புணர்குறி வாய்த்த
பின்னேர் ஓதியென் தோழிக்கு அன்னோ
படுமணி யானைப் பசும்பூண் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவில் புள்ளொலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன
கௌவையாகின்றது ஐய நின் அருளே!


(நற்றிணை பாடல் இல: 227. நெய்தல் திணை. பாடியவர்: பூதன் தேவனார்.)


இதன் நேரடிக் கருத்து:

ஐயா! புன்னை மரங்கள் அடர்ந்து நிற்கின்ற சோலையிலே. நீ கேட்டதற்கிணங்கப் படதடவைகள் வந்து உனக்கு இன்பம் தந்தவள் பின்னல்லிட்ட கூந்தலையுடைய எனது தோழி. ஒலிக்கும் மணிகளையும், பூண்களையும் அணிந்திருக்கும் யானையினைக் கொண்ட சோழமன்னருக்கு உரித்தானதானது, கொடிகள் அசைந்தாடும் வீதிகளையுடைய ஆர்க்காடு என்னும் ஊர். அங்கே கள் நிறைந்திருக்கும் குடங்களிலே மொய்த்த வண்டுகள் குடத்தை விட்டு அகலாது இருக்கும். தேர்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் அவ்வூர் வீதியிலே எழுகின்ற ஆரவாரத்தைப்போல உன்னால் என்தோழியைப்பற்றி எழுகின்ற வதந்திகளின் ஆரவாரம் இருக்கிறது. அறிவுடையவர்கள் எல்லோருமே அறத்தின் வழி நிற்பவர்கள் அல்ல என்று பலரும் சொல்வார்கள். அதுதான் உன்னுடைய நிலைமையும் என்றால் அவளது சிறந்த, இனிய உயிர்தான் அவளைவிட்டுப் பிரிந்ததற்குப் பின்னரும் இந்தப் பழிச்சொற்கள் அவளது குடிக்குத் துன்பத்தைத் தரும் என்பதை அறிவாயாக. அதனால் நீர் செல்லும் இடத்திற்குச் சென்று, உனது வேலைகளை முடித்துவிட்டு உடனே வந்து அவளது உயிரைக் காப்பாற்றிப் பழிச்சொல்லை நீக்கிவிடு.

                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com