யாருக்காகப் பேசுகிறார் ஜெயமோகன்?

 

தியாகு

 

தமிழைத் தமிழிலேயே எழுதுவோம்
 

 

என்னை இந்த நாட்டின் சர்வாதிகாரியாக்கினால் உடனே தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குவேன் என்றார் இந்திய நாட்டின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் அண்ணல் காந்தி. திருவாளர் ஜெயமோகனை அப்படியாக்கினால் தாய்மொழிக் கல்வியைத் தடை செய்து, எல்லா வகையிலும் ஆங்கிலக் கல்வியைக் கட்டாயமாக்கி விடுவார் போலும்.  
    

தி இந்து 04. 11. 2013 இதழில் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை ஆங்கிலவழிக் கல்விக்காக வழக்காடுவதோடு நில்லாமல், தமிழைத் தமிழ் வரிவடிவில் எழுதாமல் ஆங்கில வரிவடிவில் எழுதுமாறும் பரிந்துரைக்கிறது.
 

ஜெயமோகனின் வாதுரைகளை ஆய்விற்கொள்ளுமுன் அவரது சொல்லாட்சியிலும் முற்கோள்களிலும் காணப்படும் அடிப்படைப் பிழைகளைத் திருத்திச் சரிசெய்து  கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
 

தலைப்பிலிருந்தே தொடங்குவோம். எழுத்துரு என்று அவர் சொல்வது வரிவடிவைத்தான் என்பது புரிகிறது ஆனால் இரண்டும் ஒன்றில்லை. எழுத்துரு (FONT) வேறு. வரிவடிவு (SCRIPT அல்லது, இந்தியில் சொன்னால் லிபி) வேறு. எழுத்து வரிசையைத்தான் ஜெயமோகன் சொல்கிறார் என்றால் அதற்கான தமிழ்ச் சொல் நெடுங்கணக்கு. எழுத்துரு என்பது கணியச்சியல் தொடர்பான சொல்லே தவிர, மொழியியல் தொடர்பானதன்று.  
 

தமிழ் வரிவடிவை ஒரேயடியாக உதறி விட்டு ஆங்கில வரிவடிவிற்குள் தமிழைக் கூடு பாயச் செய்வதுதான் ஜெயமோகனின் பேரவா என்றால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஆங்கில வரிவடிவு என்ற ஒன்றே இல்லை. தமிழுக்கென்று தனி வரிவடிவு இருப்பது போல் ஆங்கிலத்திற்கென்று தனி வரிவடிவு ஏதுமில்லை. ரோமானிய வரிவடிவில்தான் ஆங்கிலம் எழுதப்படுகிறது.
 

ஒரு பிரெஞ்சியனிடம் போய் “உங்கள் பிரெஞ்சு மொழியை ஆங்கில எழுத்துருவில் எழுதுகிறீர்களே, ஏன்?” என்று ஜெயமோகன் கேட்டுப் பார்க்கட்டும். எதிர்வினை என்னவாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஏனென்றால் பிரெஞ்சு மொழியும் ரோமானிய வரிவடிவில்தான் எழுதப்படுகிறது. அதே நெடுங்கணக்குதான், ஆனால் எழுத்துக்கு எழுத்து உச்சரிப்பு மாறுபடும். A, B, C ... என்பதை ஆங்கிலத்தில் ஏ, பி, சி.. என்பர், பிரெஞ்சில் ஆ, பெ, செ என்பர். ரோமானிய வரிவடிவில் எழுதப்படும் ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் இந்த வேறுபாடுகள் உண்டு, தனித் தனி எழுத்துகளின் உச்சரிப்பில் மட்டுமன்று, எழுத்துக் கூட்டலிலும் வேறுபாடுகள் உண்டு. வீரப்பெண் Joan of Arc தெரியுமா, ஜெயமோகன், பிரெஞ்சுக்காரர்கள் அவளை ‘ழோந்தார்க்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ரோமானிய வரிவடிவிற்கு ஆங்கில எழுத்துரு என்று என்று பொய்ப்பட்டம் கட்டித் தமிழ் அரியணையில் அமர்த்தத் துடிக்கிறீர்களே, ஏன்?
 

நாளை ஒரு மேதை ‘ரோமானிய வடிவம் வேண்டாம், டூட்டானிய வடிவம் வேண்டும்’ எனலாம், இன்னொரு மாமேதை ‘தேவநாகரிதான் தெய்வாம்சம் பொருந்தியது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றது’ எனலாம் இதற்கெல்லாம் எங்கள் தமிழ்தான் கிடைத்ததா? தமிழ்நாட்டைத் திறந்த வீடாக்கியது போதாதென்று தமிழையும் திறந்த வீடாக்கி விடலாம் என்ற நினைப்போ? தமிழர்கள் தூங்கி விடவில்லை, ஐயா!
 

நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறதாம்! ஆனால் தாய்மொழிகளில் வாசிப்பதில்லையாம். இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகி வருகிறதாம்! உலகமயச் சூழலில் ஆங்கிலமே வேலைவாய்ப்புக் கல்விக்குரிய மொழி என்று நிறுவப்பட்டு விட்டதாம்! ஆகவே எதிர்காலத்திலும் ஆங்கிலமே இங்கே கல்வியின் மொழியாக இருக்குமாம்!
 

‘நம்’ என்று ஜெயமோகன் யாரைச் சொல்கிறார்? எங்கள் குழந்தைகளும் ஏராளமாக வாசிக்கவே செய்கின்றனர். ஆனால் பெரும்பாலும் தமிழில்தான் வாசிக்கின்றனர். தமிழ்நாட்டில் இன்றளவும் பெரும்பாலான குழந்தைகள் தமிழ்வழிக் கல்வியில்தான் பயில்கின்றனர். அவர்களும் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றாலும், சரளமாக வாசிப்பது தமிழில்தான். ஜெயமோகனின் தமிழ் நூல்களை வாசிக்கிறவர்களில் ‘நம் இளைய தலைமுறை’ இடம்பெறவில்லையோ? அதனால் இனிவரும் பதிப்புகளை ‘ஆங்கில எழுத்துருவில்’ அச்சிடப் போகிறாரா? தமிழில் வெளிவரும் தி இந்து நாளேட்டை வாசிப்பவர்களில் இளைய தலைமுறை உண்டா, இல்லையா? அதில் வெளிவந்த ஜெயமோகனின் கட்டுரையை இளைய தலைமுறை படித்து விட்டுக் கொதிப்புற்றது உண்டா, இல்லையா?
 

கல்வி மொழி என்று ஜெயமோகன் எதைச் சொல்கிறார்? பயிற்று மொழியையா? மொழிப்பாடம் எனப்படும் பயில்மொழியையா? ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் ஒரு தேசிய மொழி உண்டு. அதுவே அந்த இனத்துக்குரிய சமூகத் தாய்மொழி. இந்தத் தேசிய மொழியே முதல்பயில் மொழியாகவும் எல்லா நிலைகளிலும் பயிற்றுமொழியாகவும் இருக்க வேண்டும் என்பது கல்வியுலகில் நிலைபெற்று விட்ட விதி, அறிவியலும் அறவியலும் இணைந்த நெறி. இந்த விதிக்கு அரிதிலும் அரிதான விலக்குண்டு என்றாலும், அந்த விலக்கும் விதிக்குட்பட்டதே.
 

எது முதற்பயில்மொழியோ அதுவே பயிற்றுமொழியாகவும் இருக்க வேண்டும். ஒரு மக்களினத்தின் தேசிய மொழியே அதன்கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்பதுதான் தாய்மொழிக்கல்வி என்பதன் பொருள். முதற்பயில்மொழி என்று சொல்லும் போதே இரண்டாம் பயில்மொழிக்கு இடம் உண்டு என்பது தெளிவாகிறது. அந்த இரண்டாம் மொழி ஆங்கிலமாகவோ பிரெஞ்சாகவோ இந்தியாகவோ மலையாளமாகவோ இருக்கலாம். எனவே தாய்மொழிக் கல்வி என்பது பிறமொழிக் கல்வியைப் புறக்கணிப்பதன்று. அக்கல்வியை அறிவியல் முறைப்படிப் புகட்டுவதே. இதெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர் தானும் குழம்பி நம்மையும் குழப்புகிறாரே, ஏன்? ‘நம்’ என்ற அவரது வட்டம் நம்மையெல்லாம் சேர்க்காததுதான் காரணமா?
 

பிரெஞ்சு, சமஸ்கிருதம் போலவே (இரண்டாம் மொழியாக) நம் குழந்தைகள் தமிழையும் கற்கின்றனர் என்கிறார் ஜெயமோகன். தமிழ்நாட்டின் கல்விமுறையில் இந்த மொழிகள் முதல் மொழிகள், ஆங்கிலம்தான் இரண்டாம் மொழி என்பது கூட அவருக்குத் தெரியவில்லையா? முதல் மொழி, இரண்டாம் மொழி என்பதற்குரிய இலக்கணப்படி மொழிக் கல்வி நடைமுறையில் உள்ளதா? என்பது வேறு கேள்வி. ஆனால் தமிழையே முதல் மொழியாகக் கொண்டுதான் பெரும்பாலான தமிழ்க் குழந்தைகள் கல்வி பயில்கிறார்கள் என்ற உண்மையை ஜெயமோகன் தெரிந்து கொள்ளட்டும். அல்லது அவர் சொல்லும் ‘நம்’ குழந்தைகள் இவர்கள் இல்லையோ?
 

‘நம்’ குழந்தைகள் தேர்வுகளில் எளிதாக  வெல்வதற்கு மட்டுமே தாய்மொழியைத் தட்டுத் தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனராம். இந்த உண்மையை ‘நாம்’ மழுப்ப வேண்டியதில்லை என்கிறார் ஜெமோ. இந்த வாக்கியத்தில் தாய்மொழியை என்பதற்கு பதிலாக ஆங்கிலத்தை என்று சொல்லிப் பாருங்கள் இது கிட்டத்தட்ட 97 விழுக்காடு உண்மை என்று தெரிய வரும். எஞ்சிய கிட்டத்தட்ட 3 விழுக்காடு உண்மை ஜெமொவிடம் இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
 

இந்தச் சமூகத்தில் படிப்பாளியாக அறியப்பட்டுள்ள ஒருவர் நம் (உண்மையிலேயே நம்) குழந்தைகளில் பலர் தாய்மொழி கற்கத் தடுமாறுகின்றனர் என்றால் அதற்காக வெட்கப்பட வேண்டாமா? இந்த அவலத்திற்குத் தீர்வு தேட  வேண்டாமா? மொழியை – அதன் வரிவடிவாகிய மெய் அல்லது உடலை -- தீர்த்துக் கட்டுவதுதான் தீர்வா? உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது தெரிந்துதான் ஜெயமோகன் புதுமைத் திட்டம் தீட்டுகிறார?
 

இரண்டு மொழிகள், இரண்டு மொழிகள் என்று திரும்ப திரும்பச் சொல்லிப் பூச்சாண்டி காட்டுகிறார் ஜெமோ. தாய்மொழியையும் அயல்மொழியையும் சமப்படுத்துவதோடு நில்லாமல், அயல்மொழி ஆங்கிலத்தையே தாய்மொழிக்கு நிகராக்கி, தாய்த் தமிழை பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்றவற்றுக்கு நிகராக்கி விடுகிறார். தமிழ் நீச மொழி என்ற நச்சுப் பார்வையை நாசூக்கான முறையில் பதிய வைப்பதல்லாமல் இது வேறென்ன?
 

இரண்டு வரிவடிவங்களைக் கற்பது கடினம் என்று வாதிடும் ஜெமோ ஆங்கிலத்தையும் தமிழ் வரிவடிவிலேயே எழுதலாம் என்று பரிந்துரைக்கலாமே? நாம் அப்படிப் பரிந்துரைக்கவில்லை. ஒவ்வொரு மொழிக்கென்றும் இலக்கண இலக்கியங்கள் இருப்பது போலவே தனித்துவமான ஒலியமைதியும் உண்டு. அதை வேற்றுமொழியின் வரிவடிவத்தில் கொண்டுவர முடியாது. வரிவடிவத்தின் முக்கியத்துவம் மொழியியல் தொடர்பானது மட்டுமன்று. சமூகவியல், அரசியல் தொடர்பானதும் ஆகும். இந்தியதேசிய காங்கிரசின் 1925 கான்பூர் மாநாட்டுத் தீர்மானத்தில் (இரு வரி வடிவங்கள் கொண்ட) இந்துஸ்தானி என்ற மொழி குறித்து தரப்பட்ட விளக்கத்தையும் அதற்கான அரசியல் காரணத்தையும் ஜெமோ அறிவாரா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஆட்சிமொழி பற்றிய பகுதி 17 “தேவநாகிரி வரிவடிவிலான இந்தி’ என்று சொல்வதன் சூக்குமம் தெரியுமா உங்களுக்கு?
 

உலகமயம், இந்தியமயம் என்று எந்தப் பெயரில் ஜெமோக்கள் தமிழின் மீது தாக்குதல் தொடுத்தாலும் எதிர்த்து நின்று முறியடிக்கும் திறன் தமிழுக்கும் தமிழர்க்கும் உண்டு. எப்படி என்றால்,
 

“நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.”            . .  

 .                                         -- திருக்குறள் 495.

 

தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

 

நன்றி:தி இந்து