மாவீரர்தினமும் கொல்பெக் நகரசபைத் தேர்தலும்
 

வி. ஜீவகுமாரன் 



மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் நாகரிகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதோடு வரலாற்றுத் தடங்களை பதித்தவர்கள் போர் வீர்ர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீர்ர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீர்ர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீர்ர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

அந்த வகையில் இந்த நவம்பர் மாதம்
11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரியது தெரிந்த்தே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்த்து. முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதியை உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீர்ர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.

தமிழீழ மக்கள் எவ்வாறு கார்த்திகை
27ஐ மாவீர்ர் தினமாக்க் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்றது. பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராக்க் கொள்ளப்படுகின்றது. பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும் சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன. என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.

இன்று ஈழத்தமிழர்களின் வரலாற்று பண்பாட்டுவிழுமியத்துடன் கலந்துவிட்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரினது இதழ்கள்.பண்டைய தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.

“மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது. “காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.

“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ள்ளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.

அத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்த வீர்ர்களின் நினைவுதினமான கார்த்திகை
27 ஆம் திகதி அன்றே அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுதின விழாஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட. இது குறித்த மேலதிக விடயங்கள் ஆராயப்படவேண்டியவையே.

அதேபோல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்லமையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும் தான் பிரகடணப்படுத்திய சுதந்திர தினத்தை
(1948) ஆண்டு தோறும் தேசிய வீர்ர்கள் தினமாக்க் கொண்டாடி வருவதனைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும் சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்கு அந்த இனத்தின் காவலர்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்கள் தியாகங்கள் என்பனவற்றின் பின் இஸ்ரேல் என்ற நாட்டை சமைத்துக் கொடுத்த க்கானா என்கின்ற விடுதலை அமைப்பினர். முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர்.

450 ஆண்டுகனளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமை தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 சுதந்திரம் அடைந்த்து. அந்த நாள் இன்றும் சுதந்திநர தினமாக இல்லாது விடுதலைக்கு வித்தாகிப் போனவர்கள் நாளாக எழுச்சியுடனும் உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம். ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில் தான் இருக்கின்றது என்பதனை கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர். இவர்களின் வெற்றி விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

மேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கெதிராக சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்கொங்ந படையின் தலைவர் ஹோ-சி-மின் இறந்த நாளான
03.09.1969 ஆம் ஆண்டை வியட்நாமின் தேசிய வீர்ர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். இவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும் உயிரிழப்புக்களும் சொல்லொணாத்துயர்களும் எண்ணிலடங்காதவை. இந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீர்ர்களை நினைவு கூருகின்றது. அதேபோல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீர்ர்களை தவறாது கௌரவித்து நினைவு கூருவது குறிப்பிடத்தக்கது.

சங்ககாலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது. போரில் மாண்ட வீர்ர்களை புதைத்து அவர்களின் ஞாபகார்த்தமாக நடுகற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்கமுறை காணப்பட்டு வந்திருக்கிறது. எனவே போரில் இறந்த வீர்ர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும். தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது. தமிழில் ஆரியம் வந்து கலந்துவிட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும் பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள். போரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுகல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானூற்றில் பரவலாக்க் காண்கின்றோம். அது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த்தனை இலக்கியங்கள் சான்றாக்கிறது. திருக்குறளிலும் போரில் இறந்த வீர்ர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது.
அந்தவகையில் மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீர்ர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு சில தினங்களையே மாவீர்ர் வாரமாக கொண்டாடுகின்ற மரபு ஈழத்தமிழ் மண்நணிலே சிறப்பாக இடம்பெற்றது.

இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனப் போரியல் மேதையான சன்சூ அவர்களால் எழுதப்பட்டதாக்க் கூறப்படும் உலகப் போரியல் நுணுக்கங்களும் அதன் தந்திரோபாயங்களும் என்னும் நூலில் எவனொருவன் போரில் இறந்த வீர்ர்களுக்கு மரியாதை செய்து கௌகரவப்படுத்துகிறானோ அவனே சிறந்த வீரன் என்றார் சன்சூ.
அத்துடன் போரில் மாண்ட வீர்ர்களின் கனவை நனவாக மாற்றுகின்ற படைத்தலைவன் தன்னிகரில்லாத் தலைவன் ஆகின்றான். என்று சன்சூ அன்று கூறியதை வரலாற்று நூல்களின் வாயிலாகவே அறிந்திருந்தோம். அன்று சன்சூ கற்பனை ரீதியாக கண்ட தன்னிகரில்லாத் தலைவன் இன்று தேசியத்தலைவர் பிரபாகரனாக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போரிற்கு கிடைத்திருப்பது நமது பாக்கியமே. அதேபோல் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரத்திலும் கூட போரில் இறந்தவனை எவ்வாறு கல்லறை அமைத்து நினைவு கூரப்பட்டது. என விரிவாகக் கூறுவதைக் காணலாம். சங்க்காலப் பாடல்கள் பலவும் இவ்வீர்ர்களை எவ்வாறு நினைவு கூரப்பட்டது என்பதற்கு சான்றாகிறது.

முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை
27 ஐ இறுதித் தினமாக்க் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீர்ர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 1989 ஆம் ஆண்டு 1307 மாவீர்ர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூரப்பட்டனர்.

அந்த நேரத்திலே மாவீர்ர்களைப் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. வீரமரணமடைந்த போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அவர்களது இறுதிக் கிரியைகள் நடந்தன. மாறாக காடுகளுக்குள் இறக்கும் மாவீர்ர்கள் மாத்திரம் விதைக்கப்பட்டனர்.

ஆனால்
1991 இலிருந்து வீரமரணமடைகின்ற மாவீர்ர்களின் உடல்கள் அனைத்தும் இனிமேல் எரிக்கப்படாது. விதைகுழிகளில் புதைக்கப்படும் எனவும் அவ்வாறு விதைக்கப்பட்ட மாவீர்ர்களின் இடத்தில் கல்லறைகள் எழுப்ப்ப்பட்டு அதில் அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டு இவை எமது தேசிய நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் எனவும் இவை காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். இந்த மாவீர்ர்கள் சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கடந்து இந்த நாட்டின் பொதுச்சொத்தாக பொக்கிசங்களாக இருக்கின்றார்கள். இந்தப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்க்க் கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்கவேண்டும். அத்துடன் 1990 ஆம் ஆண்டு தலைவர் அவர்கள் மாவீர்ர் வாரத்தை மக்களுக்குள் நடைமுறைப்படுத்தி மாண்ட வீர்ர்களைக் கௌரவிக்கும் முகமாக புலிகளின் கொடியாக இருந்த புலிக்கொடியைதேசியக் கொடியாக அறிவித்து அதில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற எழுத்துக்களையும் நீக்கினார்.

அந்தவகையில் 1991 ஆண்டு தொடக்கம் வீரமரணமடைகின்ற மாவீர்ர்களது உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்நட துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டனர். அந்த
1991 ஆண்டில் 3750ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கு தமிழினம் நினைவுகூரியது. அதே வருடம் (1991) இடம் பெற்ற மாவீர்ர் நாளில் புதுவை இரத்தின துரையின் கவிதை வரிகளை இசைவாணர் கண்ணன் கானமாக மீட்ட வர்ண இராமேஸ்வரனின் குரலில் கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் மாவீர்ர் துயிலுமில்லப் பாடல் முதன் முதலில் ஒலிக்கப்பட்டு மாவீர்ர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பின்
1998 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீர்ர் தினம் அனுட்டிக்கப்படுவதுதோடு முதல் மாவீர்ர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நேரமான மாலை 06.05 இற்கு சூரியன் மறையும் நேரம் இந்தச் சூரியர்களுக்கு தீபங்கள் ஏற்றி வணங்குவது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு 14.435 மாவீர்ர்களுக்கு நினைவு கூரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு 19.887 மாவீர்ர்களுக்கும், கடந்த 2008 ஆம் ஆண்டு 24.600 ற்கும் மேற்பட்ட மாவீர்ர்களுக்கும், முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் இந்தவருடம் கிட்டத்தட்ட 36.000 மாவீர்ர்களுக்கும் தமிழீழ மண் கண்ணீரால் இவர்கள் பாதங்கள் நனைத்து வழியனுப்ப உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் உலகெங்கும் கார்த்திகை தீபத்தை இம்மான வீர்ர்களை மௌனமாக வணங்குகிறது.

பொதுவாக விடுதலைக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் மற்றும் அரசுகளே போரில் இறந்த வீர்ர்களை ஆண்டு தோறும் நினைவு கூருகின்றனர். மாறாக ஏகாதிபத்தியத்தின் மூலம் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்காஅரசு இறந்த வீர்ர்களை நினைவு கூருவதை பொதுவாக்க் காணமுடிவதில்லை. ஆனால் வியட்நாம் போரில் கொல்லப்பட்நட
58132 அமெரிக்க வீர்ர்களுக்கு ஜோன் ஸ்ரக்ஸ் என்பவரின் தலைமையில் வியட்நாம் வீர்ர்கள் நினைவுநிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டு வோஷிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவுசின்னத்திற்கருகில் 75 மீ உயரமான இரண்டு சுவர்களுடன் கூடிய கல்லறை அமைக்கப்பட்டு அதில் வியட்நாமில் இறந்த 58132 அமெரிக்க வீர்ர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டன. இந்நினைவு சின்னம் 1982 நவம்பரிலேயே திறந்துவைக்கப்பட்டன.

ஆனால் இன்று இராணுவக் ஆக்கிரமிப்புக்குள் தமிழீழ தேசம் விழுங்கப்பட்டதனால் அங்கு உள்ள மாவீர்ர் துயிலுமில்லங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. உலகப் பொது வழக்கங்களுக்கும், இராணுவ விழுமியங்களுக்கும் மாறாக சிங்களப் பேரினவாத அரசின் இவ் கல்லறைகள் இடிப்பு மனிதநாகரிக விழுமியங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒவ்வொரு மாவீரனுக்கும் தனித்தனிக் கல்லறை அமைத்து அவர்களுக்காக விசேடமாக தனித்தனித் தீபங்கள் ஏற்றப்படுவதோடு மாவீர்ர்கள் பெற்றோரும் கௌரவிக்கப்படுகின்றமை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். ஆனால் இன்று வெறும் படங்களிலும் வீடியோ காணொளிப்பதிவுகளிலுமே மாவீர்ர் துயிலுமில்லங்களைக் காண முடியும். நாளை தேசம் மீளும் போது கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக இன்னும் ஒரு விடயத்தைப் பார்க்க வேண்டும்.
வித்துடலான இந்த வீரர்கள் அனைவரும் சமரில் நேரடியாக இறந்தவர்கள் அல்லர். விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி நேரடியாக அல்லது மறைமுகமாக எதிரியால் வஞ்சகமாகவோ அல்லது சொந்த இனத்தின் சூழ்ச்சியாலோ கொல்லப்பட்டவர்கள் பலரும் அடங்குவர்.

இந்த மாவீரர் அனைவரும், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் ஆயினும் சரி, எந்த இயக்கங்களைச் சார்ந்தவர்கள் ஆயினும் சரி நாட்டின் மீது ஏதோ பற்றுக் கொண்டவர்களே. ஓவ்வோர் இயக்கமும் ஒவ்வோர் கால கட்டத்தில் வெவ்வேறு சூழ்ச்சிகளுக்கு விலைபோயிருக்கிறார்கள் என்பது வேறுவிடயம். அதிலும் பலர் மாண்டிருக்கின்றார்கள். விலை போனமைக்கு அரசியல் தந்திரம் என தமக்கு தாமே பெயர்சூட்டிக் கொண்டவர்களும் உண்டு. துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டவர்களும் உண்டு.

நாட்டிற்காக அல்லது விழுந்துபோயிருக்கும் மண்ணுக்காக ஒரு தேர்தலில் முன்வைக்கப்பட்ட ஒரு திட்டம் திட்டமிட்டு டென்மார்க் கொல்பெக் நகரில் முடக்கப்பட்டிருக்கிறது.

தமிழர் புனர் வாழ்வுக் கழகம் மேற்கொண்ட பணிக்கும் இதற்கும் எந்தப் பெரிய வேறுபாடும் இல்லை.

கொல்பெக்கில் இந்த திட்டம் வெற்றி பெற்றிருந்தால் பக்கத்து தீவான யூலண்டில் வெற்றிபெற்ற இரண்டு தமிழர்களையும் இணைத்து இரண்டு கைகள் ஆறு கைகள் ஆகியிருக்க வாய்ப்பிருந்தது.

ஆனால் அது நடக்காத பட்சத்தில் இன்று இந்த கொல்பெக் தேர்தல் முடிவுக்கான கல்லறைகளுக்கு எனது கார்த்திகை மலர்கள் சமர்ப்பணமாகின்றது.

அதேவேளை விழுவது ஒன்று ஆயினும் எழுவது ஆயிரம் என்ற வார்த்தை போல இன்றைய ஒரு சின்ன வீழ்ச்சியில் இருந்து இன்னும் பல நல்ல சிந்தனைகள் உதயமாகும். அதிகப்படியான தமிழர்கள் இதற்கு ஆதரவு அளித்துது போல எதிர்காலத்தில் இன்னும் பல மடங்கு தமிழர்கள் ஆதரவளிப்பார்கள் என்பது திண்ணம். நான் போட்ட இந்த விதை நிச்சயம் ஒருநாள் பெரிய விருட்சம் ஆகும்.

நாட்டுப் பற்றை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தவும் எவரின் அங்கீகாரமோ குழுநிலை அரசியலோ தேவையில்லை.

தூய்மையான ஒரு இதயம் ஏற்றி வைக்கும் ஒரு விளக்குப் போதுமானது. அது ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கும்.


 

visvasethu@gmail.com