புறநானூறு போற்றும் தலைமைப் பண்புகள்

 

பேராசிரியர் இரா.மோகன்
 

புறநானூற்றில் பாடப்பெற்றுள்ள சோழ மன்னர்கள் பன்னிருவர்; அவருள் ஒருவன் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி என்பவன். அவனது குணநலன்களைப் புகழ்ந்து ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சங்கச் சான்றோர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் இன்றைய மேலாண்மை இயல் (Management Studies) கூறும் தலைமைப் பண்புக்குப் பெரிதும் (Leadership Quality பொருந்தி வருவது ஆகும்.
 

'பெருமானே! உன்னைப் பணிந்து வழிபடுவோரை நீ விரைவில் அறிந்து கொள்வாய்; பிறர் மீது பழி கூறுவோரின் சொற்களை நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய் ; உண்மையில் ஒருவன் செய்தது தவறு என்று நீ கண்டால்> நீதி நூலுக்கு ஏற்ப நன்கு ஆராய்ந்து> தகுந்த முறையில் அவனுக்குத் தண்டனை தருவாய்; தவறு செய்தவர்கள் மனம் திருந்தி உன் முன்னர் வந்து அடி பணிந்து நின்றால்> அருள் கூர்ந்து நீ முன்பு தந்த தண்டனையைக் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத> மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வரும் விருந்தினர்க்குக் குறைவின்றிப் படைக்கும் புகழ் வாய்ந்த இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடலில் போர் செய்வதன்றி> பகை வேந்தர் எவரும் உன்னோடு போர் புரிந்தது என்பது இல்லை. வானவில் போன்ற பல்வகையான நிறங்கள் கொண்ட மாலையை அணிந்த மார்பினை உடையவனே! ஒரு செயலைத் தவறாகச் செய்துவிட்டுப் பின்னர்> 'இப்படிச் செய்து விட்டோமே" என்று வருந்துதல் இல்லாதபடி செயலாற்றும் திறனும்> பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம்; உன்னைப் பலவாறாகப் புகழ்கின்றோம்" என்பது ஊன்பொதி பசுங்குடையார் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிக்குச் சூட்டும் புகழாரம். இதனைத் தன்னகத்தே கொண்ட புறநானூற்றுப் பாடல் வருமாறு:
 

         'வழிபடு வோரை வல்லறி தீயே;

        பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;

        நீ மெய் கண்ட தீமை காணின்

        ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

        வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின்

        தண்டமும் தணிதிநீ பண்டையில் பெரிதே;

        அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

        வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை

        மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்

        மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப்

        செய்துஇரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்

        நெய்தலங் கானல் நெடியோய்

        எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே."     (10)
 

மேலாண்மை இயல் நோக்கில் இப் பாடல் போற்றும் தலைமைப் பண்புகளைக் குறித்து நிரலே காண்போம்.
 

ஒரு நல்ல தலைமைக்கு இன்றியமையாது தேவைப்படுகின்ற முதற்பண்பு தன்னை வழிபடுவோரை தன்னிடம் கூழைக் கும்பிடு போட்டு நிற்பவரை விரைவாக அடையாளம் கண்டுகொள்வது ஆகும். 'வழிபடுவோரை வல்லறி தீயே" என இதனைச் சுட்டுகின்றார் ஊன்பொதி பசுங்குடையார். 'வல்லறிதல்" என்பதில் உள்ள 'வல்" என்ற அடைமொழி கூர்ந்து நோக்கத்தக்கது.
 

அடுத்து> பிறர் மீது குற்றம் கூறுவோர் சொல்லை ஏற்றுக் கொள்ளாமை சிறந்த தலைமைப் பண்பு ஆகும். அடுத்தவர் மீது பழி சுமத்திப் பேசுவதில் ஆர்வம் காட்டுவது என்பது பொதுவான மனித உளவியல்; இதற்கு மாறாக> ஒரு பொறுப்புள்ள தலைவனின் இயல்பு அதற்குச் செவி சாய்க்காமல் எப்போதும் விழிப்போடு இருப்பது ஆகும். 'பிறர்பழி கூறுவோர் மொழி தேறாமை" என இப் பண்பினைக் குறிப்பிடுகின்றார் புலவர்.
 

ஒருவன் உண்மையில் குற்றம் புரிந்தவன் என்று கண்டால்> நீதி நூல் கூறுவதற்குத் தகுந்த முறையில் ஆராய்ந்து> தீர விசாரித்து> அவனுக்கு உரிய தண்டனை வழங்குவது பிறிதொரு தலைமைப் பண்பு. 'கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று> வெள்வேல் கொற்றம்" (சிலப்பதிகாரம்> வழக்குரை காதை> வரி.64-65) எனச் சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டிய மன்னனின் கூற்று இங்கே நினைவு கூரத் தக்கது.

 

தவறு செய்வது என்பது மனித இயல்பு (To err is human).  தவறு செய்தவர்கள் உணர்ந்து> மனம் திருந்தி> முன்னே வந்து தாள் பணிந்து நின்றால்> கருணை உள்ளத்தோடு முன்பு வழங்கிய தண்டனையைக் குறைப்பதும் உயர்ந்த தலைமைப் பண்பில் அடங்கும். 'மெய்கண்ட தீமை காணின்> ஒப்ப நாடி அத்தக ஒறுத்தல்'> 'வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதல்' என இப்பண்புகளைச் சுட்டுகின்றார் புலவர்.
 

'யாரொடும் பகை கொள்ளாமை" என்பது மிகச் சிறந்த தலைமைப் பண்பு ஆகும். 'யாரொடும் பகைகொள்ளலன் என்ற பின்> போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது" (அயோத்தியா காண்டம்> மந்தரை சூழ்ச்சிப் படலம், பா.21) என்னும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வாக்கு இவ்வகையில் மனங்கொளத்தக்கதாகும். 'மகளிர் ஊடற் போர் செய்தல் அல்லது பகைவேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை' என ஊன்பொதி பசுங்குடையார் நயமாகச் சோழன் இளஞ்சேட் சென்னியின் தலைமைப் பண்பினைப் போற்றுகின்றார். நல்ல தலைமைக்கு அழகு புறவேந்தர்க்கு முதுகினையும்> புறப்பெண்டிர்க்கு மார்பினையும் காட்டாமை ஆகும்.
 

        'எற்றென்று இரங்குவ செய்யற்க் செய்வானேல்

        மற்றன்ன செய்யாமை நன்று"        (655)
 

என 'வினைத்தூய்மை" அதிகாரத்தில் மொழிவார் வள்ளுவர். 'செய்து இரங்கா வினை"க்குச் சொந்தக்காரனாக இருப்பது ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய இன்றியமையாத ஆளுமைப் பண்பு ஆகும்.
 

நிறைவாக> ஒரு தலைவன் அனைவரும் எளிதில் அணுகக் கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். 'எய்த வந்தனம் யாம்" என்னும் புலவரின் கூற்று இதனைக் குறிப்பால் உணர்த்துவதாகும்.
 

இத்துணைப் பண்புகளும் ஒருங்கே பெற்ற ஒரு தலைவன் குறுகிய அளவிலன்றிச் 'சேண் விளங்கும் புகழ்" பரந்த புகழ் - படைத்தவனாகத் திகழ்வது என்பது இயல்பினும் இயல்பே. இங்ஙனம் ஒரு மன்னனின் நற்பண்புகளாக ஊன்பொதி பசுங்குடையார் தம் புறப்பாடலில் சுட்டியிருக்கும் கருத்துக்கள்> இன்றைய மேலாண்மை இயல் வல்லுநர்கள் வகுத்துத் தரும் தலைமைப் பண்புகளுடன் பெரிதும் ஒத்துச் செல்வது கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.
 

 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்

தமிழியற் புலம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை 625 021.

eramohanmku@gmail.com