மரபுப் பார்வையில் தொல்காப்பிய எச்சவியல்

 

முனைவர் க.துரையரசன்

      

 

முன்னுரை

 

ஒல்காப் புகழ் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. இதில் சொல்லதிகாரத்தின் இறுதி இயலாக எச்சவியல் அமைந்துள்ளது. இதன்கண் 66 நூற்பாக்கள் உள்ளன. இவ்வியல் செய்திகளை இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.

 

எச்சவியல்-உரையாசிரியர்கள் கூறும் பெயர்க்காரணம்

               எச்சவியல் என்ற பெயர்க்காரணம் குறித்து அறிஞர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.  

உரையாசிரியர் இளம்பூரணர், இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எல்லா வோத்தினுள்ளும் எஞ்சிய பொருள்களை யுணர்த்தினமையின் எச்சவியல் என்னும் பெயர்த்து என்று குறிப்பிடுகிறார்.

சேனாவரையர், கிளவியாக்க முதலாக உரியிய லிறுதியாகக் கிடந்த ஓத்துக்களுள் உணர்த்துதற் கிடமின்மையான் உணர்த்தப் படாத எஞ்சிநின்ற சொல்லிலக்கணம் எல்லாம் தொகுத்து உணர்த்திய வெடுத்துக் கொண்டார் அதனான் இவ்வோத்து எச்சவியல் என்னும் பெயர்த்தாயிற்று என்று காரணம் கூறுகிறார்.

தெய்வச்சிலையார், “இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எச்சவியல் என்னும் பெயர்த்து; கிளவியாக்கம் முதலாக உரிச்சொல் வோத்து ஈறாகக் கிடந்த எட்டோத்தினுள்ளும் உணர்த்தாத பொருளை ஈண்டுணர்த்துதலாற் பெற்ற பெயர் என்று கூறுகிறார்.

நச்சினார்க்கினியர், முற்கூறிய எண்வகை ஓத்தினுள்ளும் உணர்த்துதற்கு இடம் இன்றி எஞ்சி நின்ற சொல் இலக்கணங்களைத் தொகுத்து உணர்த்துதலின், இஃது எச்சவியல் என்னும் பெயர்த்தாயிற்று என்று விளக்குகிறார்.

 

வெள்ளைவாரணனார், கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல்களுள் உணர்த்துதற்கு இடம் இல்லாமையாற் கூறப்படாது எஞ்சிநின்ற சொல்லிலக்கணம் எல்லாவற்றையும் தொகுத்துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியல் என்னும் பெயர்த்தாயிற்று என்று கூறுகிறார்.

தமிழண்ணல், எச்சவியல் பெயருக்கேற்ப முன்னர்க் கூறாது விடத்தனவும் முன்னர்க் கூறியவற்றுக்குப் பொதுவானவதுமான இலக்கணங்களைப் பேசுகிறது என்று விளக்குகிறார்.

எனவே அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்து நோக்குமிடத்து இவ்வேறுபட்ட இரு கருத்துகளில் கிளவியாக்கம் முதல் உரியியல் ஈறான எட்டு இயல்களில் கூறாது விடுபட்ட செய்திகளை இவ்வியல் எடுத்துக் கூறுவதால் எச்சவியல் எனப் பெயர் பெற்றது என்பதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இங்கு, பல பொருட் டொகுதிக்கு ஒன்றனாற் பெயர் கொடுக்குங்கால் தலைமையும் பன்மையும் பற்றிக் கொடுப்பினல்லது தலைமையும் பன்மையும் எச்சத்திற் கின்மையானும் பத்துவகை யெச்சம் ஈண்டுணர்த்தலான் எச்சவிய லாயிற்றென்றல் பொருந்தாமையுணர்க என்ற சேனாவரையரின் கருத்து நோக்கத்தக்கது.

 

எச்சவியல் செய்திகள்
 

எச்சவியலில் கூறப்படும் செய்திகளைத் தொல்காப்பிய உரை வள ஆசிரியர் ஆ.சிவலிங்கனார், இவ்வியலின்கண் 1 முதல் 15 வரையுள்ள சூத்திரங்கள் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்றாற்  செய்யுள் வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள்கோளும் உணர்த்துவன. 16 முதல் 25 வரையுள்ள சூத்திரங்கள் வேற்றுமைத் தொகை முதலிய அறுவகைத் தொகைச் சொற்களின் இயல்பினை விரித்துரைப்பன. 26 முதல் 30 வரையுள்ளவை சொல்மரபு பற்றிய வழுக்காப்பன. 31 முதல் 33 வரை வரையுள்ளவை முற்றுச் சொற்கு இலக்கணம் கூறுவன. 34 முதல் 45 வரையுள்ளவை முன்னர்க் கூறப்படாது எஞ்சிய பிரிநிலை முதலிய பத்துவகை யெச்சங்களின் முடிபு கூறுவன. 46 முதல் 65 வரையுள்ள சூத்திரங்கள் ஒருசார் மரபு வழுக்காத்தல், மரபிலக்கணம், விகாரம், வினையெச்சத்திரிபு, இரட்டைக்கிளவி, ஆற்றுப்படைச் செய்யுள் முடிபு என முன்னர்க் கூறாதெஞ்சிய சொல்லிலக்கணம் உணர்த்துவன. இறுதியிலுள்ள 66 ஆம் சூத்திரம் இச்சொல்லதிகாரத்துக்குப் புறனடையாகும் என்று எடுத்துரைக்கிறார்.

 

எண்வகைச் செய்திகள்

 

எச்சவியல் செய்திகளை மாணவர்களுக்குக் கற்பித்தல் நோக்கில் எட்டு வகையாகப் பிரிக்கலாம். அவை: 1) சொற்களின் வகைகள் (அல்லது) செய்யுளீட்டச் சொற்கள் 2) செய்யுள் விகாரங்கள் 3) மொழிபுணர் இயல்பு (அல்லது) பொருள்கோள் 4) தொகைச்சொற்கள் 5) பொருணிலை மரபு 6) பத்து வகை எச்சங்கள் 7) அவையல் கிளவி 8) குறைச்சொற்கள்.

1) சொற்களின் வகைகள் (அல்லது) செய்யுளீட்டச் சொற்கள் 

சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்று வகைப்படுத்திய தொல்காப்பியர் அவற்றை முறையே பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் ஆகியவற்றில் விரித்துரைத்துள்ளார். அவற்றின் ஒழிபாக அல்லது எச்சங்களாக இங்கு செய்யுள் ஈட்டச் சொற்களான இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகியவற்றை எச்சவியலில் 1 முதல் 5 நூற்பாக்களில் எடுத்துரைக்கிறார்.
 

·        இயற்சொல்: மேற்சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் இயற்சொல் என்பது வையையாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின்கிழக்கு, மருவூரின் மேற்கு என்ற எல்லைக்குட்பட்டிருந்த செந்தமிழ் நிலத்தில் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழுவாமல் நடக்கும் சொல் என்பர்.

 எ.கா. : சோறு, கூழ், பால், பாளிதம் (தயிர்ச்சோறு)  

·        திரிசொல்: ஒரு பொருளைக் கருதிப் பல சொல்லான் வருதலும் பல பொருளைக் கருதி ஒரு சொல்லான் வருதலும் என இரு கூற்றனவாகும் திரிசொற்கள் என்பர்.

எ.கா. ஒரு பொருளைக் குறித்த வேறு சொல்லாகி வருவன:  வெற்பு, விலங்கல், விண்டு என்பன மலையைக் குறிக்கும் சொற்களாகும்.

எ.கா. வேறு பொருள் குறித்த ஒருசொல்: உந்தி என்பது, ஆற்றிடைக் குறையும், கொப்பூழ், தேர்த்தட்டு, யாழ்ப்பத்தர் உறுப்பு.

சொற்கள் பகுதி திரிதல், முழுவதும் திரிதல் என இரு வகைப்படும்.

§  பகுதி திரிதல் : கிளி கிள்ளை, மயில் மஞ்ஞை

§  முழுவதும் திரிதல்: வெற்பு விண்டு, விலங்கல்

·        திசைச்சொல்: பொதுங்கர் நாடு. தென்பாண்டிநாடு, ஒளிநாடு, குட்டநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலைநாடு, குடநாடு ஆகிய பன்னிரண்டு நிலத்தினும் தாம் குறித்த பொருள் விளக்குவதல்லது, அவ்வியற்சொல் போல எந்நிலத்தும் தம் பொருள் விளக்கா என்றவாறாம்.

எ.கா. தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்றம் எனல்.

·        வடசொல்: தமிழ் மொழி வழங்கும் தமிழ் நாட்டிற்கு வடக்கே வழங்கும் மொழி வடமொழி ஆகும். அம்மொழிக்குரிய சிறப்பு எழுத்துக்களால் ஆனவை வட சொல்லாகும்.

அச்சொல்லில் உள்ள சிறப்பெழுத்துகளை நீக்கி வடமொழி, தமிழ்மொழி என்னும் இரண்டிற்கும் உரிய பொதுவான எழுத்துகளால் சொற்கள் அமைக்கப்படும். அவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட அவ்வட சொல்லும் செய்யுள் செய்வதற்கு உரியதாகும்.

எ.கா. வாரி, மேரு, குங்குமம்.

§  பொது எழுத்துகளால் வராமல் சிறப்பெழுத்துகளால் அமைந்த வடசொற்கள் முழுமையாக வராமல் சிதைந்தும் வரும்.

எ.கா.தஸம் தசம், மாத்தா மாதா, பித்தா பிதா,

ராமா  இராமன், சீத்தா  சீதை

2) செய்யுள் விகாரங்கள்

மேற்கண்ட நான்கு சொற்களும் செய்யுளில் ஓசைநயம் கருதி ஆறுவகை விகாரங்களைப் பெற்று வரும். அவை:

வலித்தல் விகாரம் – மெல்லினம் வல்லினமாதல் - எ.கா. குறுங்கைகுறுக்கை

மெலித்தல் விகாரம் – வல்லினம் மெல்லினமாதல் – எ.கா. குற்றியலுகரம் குன்றியலுகரம்

விரித்தல் விகாரம் – தொகுத்து வரவேண்டியது விரித்து வரல் – எ.கா. தண்துறைவன் தண்ணந்துறைவன்

தொகுத்தல் விகாரம் – விரிந்து வர வேண்டிய இடத்தில் தொகுத்து வரல் – எ.கா. மழவரையோட்டிய மழவரோட்டிய

நீட்டல் விகாரம் – குறுகி வரவேண்டிய இடத்தில் நீண்டு வரல் – எ.கா.  விடுமின் வீடுமின்

குறுக்கல் விகாரம் – நீண்டு வரவேண்டிய இடத்தில் குறுகி வருதல் – எ.கா. ஆழ்ந்துபடு அழுந்துபடு

3) மொழிபுணர் இயல்பு (அல்லது) பொருள்கோள்

செய்யுளின்கண் முறை பிறழ்ந்து கிடக்கும் சொற்களை முறைப்படுத்திப்  பொருள் காணும் முறைக்குப் பொருள்கோள் (அ) பொருள்கோள் மரபு என்று பெயர். இப்பொருள்கோள் நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நான்கு வகைப்படும் என்பது தொல்காப்பியர் கருத்து. நன்னூலார் இதனை மேலும் விரிவுபடுத்திக் கூறுவர்.

·        நிரல்நிறை: செய்யுளில் உள்ள சொற்களை நிரல் நிறையாக மாற்றிப் பொருள்கொள்வது நிரல் நிறை பொருள்கோள் ஆகும். இது வினை நிரல் நிறை, பெயர் நிரல் நிறை என இரண்டு வகைப்படும் என்பது தொல்காப்பியர் கருத்து. ஆனால் உரையாசிரியர் பொது நிரல், மயக்க நிரல் நிறை ஆகியவற்றையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்.

·        வினை நிரல் நிறை: மாசு போகவும்1 காய்பசி நீங்கவும்2

கடிபுனல் மூழ்கி1 அடிசில் கைதொட்டு2

மாசு போக கடிபுனல் மூழ்கி, காய்பசி நீங்கவும் அடிசில் கைதொட்டு என்று சொற்களை மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.

·        பெயர் நிரல் நிறை: கொடி1 குவளை2 கொட்டை3

நுசுப்பு1 உண்கண்2 மேனி3

கொடி நுசுப்பு, குவளை உண்கண், கொட்டை மேனி என்று நிரல்நிறையாகப் பொருள் கொள்ள வேண்டும்.

·        பொது நிரல் நிறை: உடலும்1 உடைந்தோடும்2 ஊழ்மலரும்3  பார்க்கும்4

 கடல்1 இருள்2 ஆம்பல்3 பாம்பு4

இதனை, கடலும் உடலும், இருள் உடைந்தோடும், ஆம்பலும் ஊழ்மலரும், பாம்பும் பார்க்கும் என்று பொருள் கொள்ள வேண்டும். இதில் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் சேர்ந்து வருவதால் இதனைப் பொது நிரல் நிறை என்பர்.

·        மயக்க நிரல் நிறை: நினையத் தோன்றி என்பதனால், சொல்லும் பொருளும் வரிசைப்பட நிற்காமல் மயங்கியும் வரும்.

களிறும்1 கந்தும்2 போல நளிகடல்

கூம்பும்2 கலனும்1 தோன்றும்

இதில் களிறு போன்றது கலன், கந்து போன்றது கூம்பு என்று வரிசை மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.

·        சுண்ணப் பொருள்கோள்: இரண்டு அடிகளில் இடம் பெற்றுள்ள எட்டு சீர்களும் ஒரு முறையில் நிற்காமல் பொடி போலச் சிதறிக் கிடக்கும். இவற்றை ஆராய்ந்து பொருள் தரும் வகையில் பொருள் கொள்ள வேண்டும். இது நான்கு சீர்களைக் கொண்ட அளவடிகள் இரண்டனுள் மட்டுமே வரும். நான்கு சீர்களுக்கு மிகுந்தோ குறைந்தோ வரும் அடிகளில் வராது.

சுரை1 ஆழ2 அம்மி2 மிதப்ப1 வரையனைய

யானைக்கு3 நீத்து4 முயற்கு4 நிலை3 யென்ப

கானக நாடன் சுனை

இதனை. சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து என்று சொற்களை மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.

·        அடிமறிப் பொருள்கோள்: ஒரு பாடலில் உள்ள அடிகளை முன்னும் பின்னுமாக மாற்றிப் பொருள் கொள்ளுதல் அடிமறிப் பொருள்கோள் ஆகும்.

மாறாக் காதலர் மலைமறந் தனரே

ஆறாக் கட்பனி வரலா னாவே

வேறா மென்தோள் வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே.

இப்பாடலடிகளை எப்படி வேண்டுமானாலும் முன்னும் பின்னுமாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பாடலின் பொருள் சிதையாது. இது அளவடியால் ஆன நான்கடிப் பாடல்களில் மட்டுமே பயின்று வரும்.

சூரல் பம்பிய சிறுகான் யாறே

சூரர மகளிர் ஆரணங் கினரே

சாரல் நாட நீவரு தீயே

வாரல் எனினே யான்அஞ் சுவலே

(அஞ்சுவல் யானே என்று ஈற்றயல் சீர் திரிந்து வருதலும் உண்டு)

·        மொழிமாற்றுப் பொருள்கோள்: ஒரு செய்யுளில் உள்ள சொற்களைப் பொருளுக்கேற்ப முன்னும் பின்னுமாக மாற்றிப் பொருள் கொள்வது மொழிமாற்றுப் பொருள்கோள் ஆகும்.

 

 

ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும்

பாரி பறம்பின்மேல் தண்ணுமை – காரி

விறன்முள்ளூர் வேங்கைவீ தான்நாணும் தோளான்

நிறனுள்ளூர் உள்ளது அலர்

இப்பாடலில் உள்ள சொற்களை,

பாரி பறம்பின்மேல் தண்ணுமை தான்நாணும் தோளான்

நிறன் விறன்முள்ளூர் வேங்கைவீ

உள்ளூர் உள்ளது அலர் ஆரிய

மன்னர் பறையின் எழுந்தியம்பும்

என இயைபுபடுத்திப் பொருள் கொள்ள வேண்டும்.

4) தொகைச்சொற்கள்: வேற்றுமை உருபுகள் முதலானவை மறைந்து வருவது தொகை ஆகும். இது ஆறு வகைப்படும். அவை:

·        வேற்றுமைத் தொகை – பாடம் படித்தான், என் புத்தகம்

·        உவமத்தொகை - மதி முகம், பொன்மேனி

·        வினைத்தொகை - சுடுசோறு, ஊறுகாய்

·   பண்புத்தொகை  -கருங்குதிரை (வண்ணம்), வட்டப்பலகை  (வடிவு), நெடுங்கோல் (அளவு), தீங்கரும்பு (சுவை)

·        உம்மைத்தொகை        -      தாய் தந்தை, அண்ணன் தம்பி

·        அன்மொழித்தொகை     -      பொற்றொடி, பவளவாய்

5) பொருணிலை மரபு:

Ø  பிரிப்பப் பிரியாப் பெயர்கள்: தமன், தமள், தமர், நமன், நமள், நமர், நுமன், நுமள், நுமர், எமன், எமள், எமர்.

Ø  ஒரு சொல் அடுக்கு (அ) அடுக்குத் தொடர்:

v  இசைநிறை    – ஏஏஏஏ அம்பல் மொழிந்தனள் (நான்கு முறை அடுக்கி வரும்.    எ.கா. பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ

v  அசைநிலை – மற்றோ மற்றோ (2 முறை அடுக்கி வரும்) கண்டீர், கொண்டீர், சென்றது, போயிற்று – இவை வினைச்சொற்கள். ஆனால் அசைநிலையாய் வரும். அதுபோல கேட்டை, நின்றை, காத்தை, கண்டை என்பன முன்னிலைப்பொருள் உணர்த்தாது அசைநிலாயாய் வரும்.

v  பொருளொடு புணர்தல் - பாம்பு பாம்பு பாம்பு (விரைவு 3 முறை அடுக்கி வரும்), உண்டு உண்டு (உடம்பாடு), வைதேன் வைதேன் (துணிவு), போம் போம் (ஒரு தொழில் பல முறை நிகழ்தல்)

Ø  வழக்கால் பொருள் தரும் குறிப்பு மொழிகள்:

v  வாரா மரபின் வரக்கூறுதல் - இச்சாலை பேருந்து நிலையம் செல்லும்

v  என்னா மரபின் எனக்கூறுதல் – மழை மழை என்கிறது பயிர், ஏதோ நடக்கப்போகுது என் மனது சொன்னது.

6) பத்து வகை எச்சங்கள்: எச்சவியலில் பத்து வகை எச்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

·        பிரிநிலை எச்சம்:`   தானே கொண்டான் (ஏகாரப் பிரிநிலை)

தானோ கொண்டான் (ஓகாரப் பிரிநிலை)

·        வினையெச்சம்:    உழுது வந்தான் (தெரிநிலை வினைமுற்று)

மருந்துண்டு நல்லன் ஆயினன் (குறிப்பு வினைமுற்று)

·        பெயரெச்சம்:       உண்ட சாத்தன் (இறந்தகாலப் பெயரெச்சம்)

உண்ணும் சாத்தன் (நிகழ்காலப் பெயரெச்சம்)

·        ஒழியிசை எச்சம்:  கூரியதோர் வாள்மன்

·        எதிர்மறை எச்சம்: யானே கொள்வேன் (ஏகார எதிர்மறை)

யானோ கள்வன் (ஓகார எதிர்மறை)

வரலும் உரியன் (உம்மை எதிர்மறை)

·        உம்மை எச்சம்:    சாத்தனும் வந்தான்; கொற்றனும் வந்தான்

·        எனவென் எச்சம்:  காரென கறுத்தது

·        சொல்லெச்சம்:    உயர்திணை என்மனார் (ஆசிரியர்) - என்மனார் என்ற  சொல்லுக்குப் பின் ஆசிரியர் என்ற சொல் எஞ்சி நின்றது.

·        குறிப்பெச்சம்:     தத்தம் குறிப்பால் பொருள்தரும்–விண்ணென வலித்தது

·        இசையெச்சம்:     ஒல்லென ஒலித்தது

 7) அவையல் கிளவி: இடக்கரட்டக்கல் – ஆன் முன் வரும் ஈகார பகரம் (பீ)

  புலி நின்றிறந்த நீரல் ஈரம் (சிறுநீர்)

8) குறைச்சொற்கள்:   முதற்குறை மரை (தாமரை)

இடைக்குறை ஓதி (ஓந்தி)
கடைக்குறை
 நீல் (நீலம்)   

பிற செய்திகள்:

Ø  (உயிரினத்தைக் குறிக்காமல்) இழிந்தோன் உயர்ந்தோனிடம் கேட்டல் அரசே சோறு ஈ

தா (வலிமையைக் குறிக்காமல்) ஒப்போன் கூற்று நண்பனே ஆடை தா

கொடு (வளைவைக் குறிக்காமல்) உயர்ந்தோன் கூற்று ஆசிரியர் மாணவனைப் பார்த்துப் புத்தகத்தைக்கொடு என்று கேட்டல்

Ø  கடி சொல் இல்லைக் காலத்துப் படினே

Ø  ஒரு பொருள் உணர்த்தும் இரு சொற்கள் சேர்ந்து வருதல் மீமிசை (மீ, மிசை=மேல்), நிவந்தோங்கு (நிவந்து, ஓங்கு=உயர்ந்து)

Ø  ஒருமை சுட்டிய பெயர் பன்மைக்காகி வருதல் இளையர் தாய் முன்னிலை ஒருமைப் பெயர் பன்மைக்காகி வருதல் தலைவ


முடிவுரை
முந்தைய எட்டு இயல்களிலும் கூறாமல் விடுபட்ட செய்திகளை விளக்கிக் கூறும் இயலாக எச்சவியல் செய்திகளைத் தொல்காப்பியர் அமைத்திருப்பதைக் காணமுடிகிறது. மேலும் இவ்வியலில் கூறப்பட்ட பத்து வகை எச்சங்கள் பற்றிய செய்திகள் தலைமைத் தன்மையுடையதாகவோ, மிகுதிப்பாற்பட்டதாகவோ இல்லை. எனவே சொல்லதிகாரத்தின் எஞ்சிய எட்டு இயல் செய்திகளை எல்லாம் தொகுத்துரைக்கும் இயலாகவே எச்சவியலைத் தொல்காப்பியர் அமைத்துள்ளார் என்பது புலனாகிறது.



முனைவர் க.துரையரசன்
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அரசினர் கலைக் கல்லூரி (தன்.)
கும்பகோணம்.

 

 darasan2005@yahoo.com