சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி 20

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா               

 

 

(பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)


ஆடவர் இயல்பும், அரிவையர் தவிப்பும்.

 

தலைவன் பொருளீட்டி வருவதற்காகத் தலைவியைப் பிரிந்து வேற்றூர் சென்றுவிட்டான். அவனது பிரிவு அவளை வெகுவாக வருத்துகிறது. இயல்பாகவே இயற்கைக் காட்சிகளை இரசிப்பதிலே விருப்பமுடையவள் தலைவி. அவ்வாறு விருப்பத்தோடு அவள் இரசித்து மகிழ்ந்த, அவளின் ஊரின் அழகிய காட்சிகள் எல்லாம் இப்போது தலைவன் இல்லாத தனிமையிலே அவள் அனுபவிக்கும் பிரிவுத்துயரைச் சுட்டிக்காட்டி அவளை வருத்துவதாக அவளுக்குத் தோன்றுகிறது.

அவளின் ஊரிலே தேன்கூடுகள் நிறைந்த மலை ஒன்று உள்ளது. அங்கே வட்டவடிவமான ஒரு கற்பாறையுள்ளது. அதனைச் சுற்றித் தெளிவான நீர் நிறைந்திருக்கிறது. கற்பாறைக்கு அப்பால் தூய்மையான பட்டுப்போன்ற மணல்வெளி உள்ளது. நீர் ஓடிக் கரையடைவதால் உண்டான அடைகரை அது. அந்த மணல்நிலப் பரப்பிலே மணம் வீசுகின்ற மாமரங்கள் நிறைந்துள்ள சோலை ஒன்றுண்டு. மாமரங்களிலே இலைகள் அடர்த்தியாகச் செறிந்து உள்ள கிளைகளிலே அழகிய கண்களையுடைய கரியநிறக் குயில்கள் தங்கியிருக்கின்றன. அவை இனிமையாகக் கூவுகின்றன. ஆனால் சும்மா கூவவில்லை. எதையோ சொல்லிக் கூவுவதுபோல அவளுக்குத் தோன்றுகின்றது. அவை என்ன சொல்லிக் கூவுவதைப்போல அவளுக்கு இருக்கிறது தெரியுமா?

'உருளுகின்ற சூதாட்டக்காரர்கள் சூதாடும்போது உருட்டுகின்ற சூதாட்டக் காய்களைப் போல நிலையில்லாதது இந்த உலகவாழ்க்கை. நிலையற்ற இந்த வாழ்க்கைக்காகப் பொருளாசைகொண்டு உங்கள்; துணைவர்கள்; உங்களை விட்டுப் பிரிந்து போவதற்கு நீங்கள் உடன்படாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்கள் அல்லவா?' என்று பிரிவுத்துயரைக் கொடுத்துப் பெண்களைக் கைவிட்டுப் போக நினைக்கும் ஆண்களுக்கு அறிவூட்டக்கூடியவகையில் இடித்துரைத்து அவர்கள் பிரிந்துபோவதைத் தடுப்பதுபோல அந்தக் கூயில்கள் கூவுவதாக அவளுக்குப் படுகிறது.


'உடலோடு உடலை நெருக்கமாக அணைத்தவாறு - நமது உள்ளத்திலும் அத்தகைய விருப்பத்தை நமக்கு உண்டாக்குகின்றவிதமாக - தன் பெடையுடன் சேர்ந்து அமர்ந்திருந்தபடி அவை கூவுகின்றன.


பிரிவானது நமக்குத் துன்பத்தைத் தருகின்ற இந்த இளவேனிற் காலத்திலும்கூட, பொருள் தேடுவதற்காகத் தம் மனைவிமாரைப் பிரிந்து செல்வதுதான் இந்த ஆண்களின் இயல்பு என்றால், அறத்தைக்காட்டிலும் பொருள்தான் இவ்வுலகில் பெரியது போலும்' என்று தலைவி தனக்குத்தானே சொல்லிக்கொள்கின்றாள்.

அப்போதும்கூட, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற தலைவனைக் கூறைகூறாமல், தன் துன்பத்திற்கக் காரணம் அவன்தான் என்று அவனைக் குற்றம் சொல்லாமல், ஆண்கள் இனத்தின் பொதுவான இயல்பு அதுதான் என்று சொல்லி ஆண் வர்க்கத்தின் இயல்பின்மீது குற்றத்தைச் சுமத்துகிறாள். தன் தலைவன்மீது தவறு உள்ளதாக நினைப்பதற்கக்கூட அவளது உள்ளத்தால் முடியவில்லை. அத்தகைய காதல் உள்ளம் அவளுக்கு.


தலைவனைப் பிரிந்து வாடும் ஒரு தலைவியின் ஏக்கத்தை இவ்வாறு காட்சிப்படுத்தும் அந்தப்பாடல் பின்வருமாறு:


தேம்படு சிலம்பின் தெள்ளறல் தழீஇய
துறுகல் அயல தூமணல் அடைகரை
அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப்
பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில்
கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கையிட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடை யீரெனக்
கையறத் துறப்போர்க் கழறுவ போல
மெய்யுற இருந்து மேவர நுவல
இன்னா தாகிய காலைப் பொருள்வயின்
பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின்
அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே!


(நற்றிணை பாடல் இல:
243 பாலைத் திணை. பாடியவர், காமக்கணி நப்பசலையார்)

இதன் நேரடிக்கருத்து:
தேன்கூடுகள் நிறைந்த மலை, அங்கே தெளிந்த நீர் சூழ்ந்தவாறுள்ள வட்டவடிவமான கற்பாறை, அதற்குப் பக்கத்திலே கரையிலே அடைந்துகிடக்கும் தூய்மையான மணல், அங்கே காற்றில் அசைகின்ற துளிர்த்த கிகைளைக் கொண்ட மணம்வீசும் மாமரங்கள் நிறைந்த சோலை, அங்குள்ள மரங்களில் இலைகள் செறிவாக உள்ள கிளைகளிலே தங்கியிருக்கும் கருங்குயில்கள். 'சூதாட்டக்காய் உருள்வதைப்போல நிலையில்லாத இந்த வாழ்க்கைக்காகப் பொருளாசைகொண்டு உங்கள் துணைவர்கள் போகாமல் இருக்கும்படி செய்வீர்களாக. நீங்கள்தான் அறிவுடையவர்கள்.' என்று பிரிந்து செல்பவர்களுக்கு இடித்துரைப்பதைப்போல, உடலோட உடல் சேர்ந்தவாறு தன்பெடையுடன் கூடியிருந்தபடி கூவும். நமக்குத் துன்பம் தருகின்ற இந்தக்காலத்திலும் பொருள்தேடுவதற்காக மனைவியரைப் பிரிவது ஆண்களுக்கு இயல்பு என்றால், அறத்தைவிடப் பொருள்தான் அரிதானது போலும்.


                                                                                                (காட்சிகள் தொடரும்....................................)

 

 

 

 

srisuppiah@hotmail.com