ஈழத்து கவிதைகளில் உயர்வு நவிற்சி


அனலை ஆறு இராசேந்திரம்

 

'அணியிலாக் கவிதை பணியிலா வனிதை' என்பது தமிழறிந்தோர் மொழியாகும். இயல்பாகவே அழகுடைய ராகிய மங்கையர் பொன்னகை பூண்டு விளங்கும் கோலம், அழகியற் கலைகளில் ஒன்றான கவிதை அணியழகோடு விளங்கும் கோலத்திற்கு நிகரானது என்கிறது மேலைமொழி. சொல்லணி, பொருளணி என்னும் இரு திறத்த அணிகளிலும் பொருளணிகளே புலவர் போற்றும் சிறப்புக்குரியன. 'அனைத்துப் பொருளணிகளுக்கும் உவமையே அடிப்படை' என்பது தமிழறிஞர் ஒப்பும் ஒரு கொள்கையாகும். அணிகளை முப்பத்தைந்தாகக் தண்டியலங்காரம் கூறும். மாறனலங்காரம் இன்னும் பலவாய் வகுத்துச் சொல்லும். உவமை, உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம், பிறிதுமொழிதல், வேற்றுப்பொருள்வைப்பு முதலான சில அணிகள் நெஞ்சை அள்ளும் தகையனவாகும்.

உள்ளதை, அதன் இயல்பான நிலை விளங்குமாறு உரைக்கும் முறை தன்மைஅணி எனப்படும். 'எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் சொன்முறை தொடுப்பது தன்மை ஆகும்' என்று தண்டியலங்காரம் கூறும். தன்மை அணிக்கு மாறானது உயர்வு நவிற்சி அணி. உலகியலுக்கும், நடப்பியலுக்கும் அப்பாற்பட்டு, கற்பனை வளம் பெருகும் புகழ்மொழிகளை உரைக்கும் போக்கு உயர்வு நவிற்சி ஆகும். இதை மிகைமொழி அணி என்றும் குறிப்பிடுவ துண்டு. கற்பனையின் உச்சத்திற்கு வாசகனை அழைத்துச் சென்று இன்பம் பயக்கும் இவ்வணி தென்மொழிப்புலவர்களும் வடமொழிப் புலவர்களும் ஏற்றிருந்த கௌடநெறியின் பாற்பட்டதாகும். உயர்வு நவிற்சிக்கு தண்டியலங்காரம் தரும் எடுத்துக்காட்டுச் செய்யுள் ஒன்றைப் பார்ப்போம்.

'அங்கண்மா ஞாலத் தகல்விசும்பை முன்படைத்த
பங்கயத்தோன் அந்நாளிற் பைந்தொடிதன் - கொங்கைத்
தடம்பெருக ஓங்குமெனத் தானினையா வாறோ
இடம்பெருகச் செய்தான் இயல்பு'


இங்கே புலவர் பெண்ணொருத்தியின் கொங்கைகளைப் பற்றிப் பேசுகிறார். அவள் கொங்கைகள் மிகப் பெரிதாக வளர்ந்து விளங்கின.
'அவை இவ்வாறு பருத்து வளரும் என எண்ணித்தானோ படைப்புக் கடவுளாகிய நான்முகன் அந்நாளில் வான்வெளியை இத்துணைப் பெரிய இடமுடைத்தாகப் படைத்தான்!' என்பதாகப் பாடுகிறார் புலவர். மங்கையின் கொங்கைகள் வான்வெளியின் அளவுக்குப் பருத்து வளரத்தக்கன' என்னும் புலவர் கற்பனை உயர்வு நவிற்சி அணியாகும்.

இனி, எடுத்துக்கொண்ட தலைப்புக் கேற்ப நம் புலவர்கள், தங்கள் கவிதைகளிற் கையாண்ட உயர்வு நவிற்சி அணிகளைப்; பார்ப்போம்.


தமிழில் முதல் எழுந்த பள்ளு நூலாகக் கருதப்படும் கதிரைமலைப் பள்ளு (1478 - 1519) இலங்கை வளம் பாடுகின்றது.


'வேணிச் சங்கரர் தொண்டர்கள் என்று
வீடு தோறும் இரப்பவர்க் கெல்லாம்
மாணிக்க மள்ளிப் பிச்சை கொடுத்திடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே'


சிவபெருமானின் அடியவர்கள் என்று கூறியவாறு வீடுதோறும் சென்று இரந்து நிற்போர்க்கு, மாவலி கங்கை பாயும் ஈழ நாட்டு மக்கள் மாணிக்கங்களை அள்ளிப் பிச்சை போடுவர்.

ஈழத்துப் பெரும் புலவர்களில் ஒருவராகக் கணிக்கப்படும் வரத பண்டிதர் (1656-1716) திரௌபதி பிறந்த பாஞ்சாலத்தின் ஒரு பகுதியாகிய காம்பிலி நாட்டின் செல்வச் சிறப்பை இப்படிச் சொல்கிறார்.


முத்தவெண் மணித்தோள் தரித்தநூல் வடத்தின்
முறைமுறை குறவறக் கோத்து
வைத்தெனச் சிதறி விரிந்தபூம் பாளை
மரகதக் கமுகினிற் குலையைத்
துய்த்தலை கடுவன் பாய்ந்துறச் சிந்தச்
சுரிமுகக் கூன்பிடர்ச் சங்கம்
கைத்தலத் தெடுத்துக் கம்பள ரெறிந்து
கடிந்திடும் காம்பிலி நாடு.


தோளில் அணிந்த நூலில் முறையாகக் கோத்து வைத்த வெண்முத்துக்கள் போல் விளங்கும் பூம்பாளைகளையுடைய கமுக மரத்தின் குலைகளை கடுவன் குரங்குகள் பாய்ந்து சிதைத்துக் கொட்டும். காம்பிலி நாட்டு மருத நிலமக்கள் வளைந்த கழுத்துக்களையுடைய சங்குகளால் எறிந்து அவற்றைக் கடிந்து ஓட்டுவர்.

அருளம்பலக் கோவை பாடிய குமாரசமாமி முதலியார் (1791-1874) தீட்டும் காட்சி ஒன்றைப் பார்ப்போம்.

'கல்லைக் கடையர்கள் கைவிட்டெறியக் கனன்றெழுந்து
பல்லைத் திறந்துறுமிக் கவிதெங்கின் பழமுதிர்க்கும்
மல்லற் பழனங்கள் சூழ்நல்லை........

நல்லைப் பதியில் அறிவிற் கடையரான சிறுவர்கள் குரங்குகளுக்குக் கல்லால் எறிய, கோபம் கொள்ளும் அவை பதிலுக்கு முற்றிய தேங்காய்களை உதிர்த்துக் கொட்டும்.

மாணிக்கங்களை அள்ளிப் பிச்சை போடுவதும், அந்நாளில் அணிகலன்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டனவும் பொன்னுக்கு நிகரான மதிப்புடன் விளங்கியனவுமான சங்குகளால் எறிந்து கடுவன்களைக் கடிந் தோட்டுவதும், 'சிறுவர்கள் கல்லால் எறிந்திடக் குரங்குகள் பதிலுக்கு பழுத்த தேங்காய்களை உதிர்த்துக் கொட்டுவதும் ஆன செயல்கள் ஈழ நாட்டின் மாணிக்கவளத்தையும் காம்பிலி நாட்டின் சங்கு வளத்தையும் நல்லைப் பதியின் தெங்கு வளத்தையும் உயர்த்திப் பேசும் புலவர்களின் மிகைமொழிகளாகும். இவை இயல்பில் நடக்க ஒண்ணாதனவாதலின் உயர்வு நவிற்சி அணிகளாயின.

ஒரு பகற்போதில் நம் பெரும்புலவர் வரதபண்டிதர் மருத நிலப்பகுதிக்குச் சென்றார்.. வயல்வெளியை ஒட்டி வாவி ஒன்று அழகுற அமைந்திருந்தது. அங்கே தாமரை மலர்கள் நிறைந்து விளங்கின. மலர்களோடு சேர்ந்து சங்குகளும் சில கரையொதுங்கிக் கிடந்தன. வயலின் ஒரு புறம் கரும்புகள் செழித்து வளர்ந்திருந்தன. தவளையொன்று சத்தமிட்டது. காட்சிகளில் மகிழ்ந்த புலவர் நெஞ்சம் கற்பனை வானிற் பறந்தது. சொல்லினும் பொருளினும் சுவைதரும் அற்புதக் கவிதை பிறந்தது.

'கயமலர் துவைத்துக் கரைதவழ் பணிலம்
கான்றிடத் தோன்று நித்திலத்தை
முயன் மதிப்பிள்ளை எனப்பகற் காவி
முகைமுறுக் குடைந்துதே னொழுக்கும்
வயல்மருங் கெழுந்த கரும்பினைக் கவரி
முறித்திடத் தெறித்தவெண் மணிமுத்
தயன் முதிர்ந் திடுசூற் றவளைமேற் படநொந்
தாங்கது பொறுத்திடா தரற்றும்

'வாவிக் கரையிற் கிடந்த சங்குள் ஈன்ற வெண்முத்துக்களை இளமதி என எண்ணிக் காவிமுகைகள் பகற் போதில் இதழ் விரிந்து தேன் உருத்தன' எனச் சொல்வதும், 'வயலோரத்தே நின்ற கரும்பினைக் கவரிமான் முறித்திட, அதில் விளைந்த முத்துத் தெறித்து, சூல் முதிர்ந்த தவளைமேற் பட, அது நோவுற்றுக் கத்தியது' எனச் சொல்லுவதும் கற்பனையில் விளைந்த மிகைமொழிக ளன்றோ!

இனி, தேனில் நெல் விளைக்கும் நம் புலவர்கள் கவிதைகளைப் பார்ப்போம்.

'மாறில் பாளைகண் மலரிளங் கமுகினல் வாளை
ஏறுபாய்தர வயலெலா முகுவன விளங்கா
யாறு பாய்வதென் றதிசயமெனக் கரும்பாலைச்
சாறு பாய்தர வளர்வன கழனியிற் சாலி'
                                                         (கரசைப் புலவர் 1380 -1414)


வாளைமீன்கள் துள்ளி கமுக மரங்களின் பாளைகளில் மோத, பூக்கள் சிதறி வயலெங்கும் வீழும். ஆறு போற் சாலைகளிலிருந்து பாயும் கரும்பஞ் சாற்றினாற் கழனிகளில் நெற் பயிர்கள் வளரும்.

'ஊன்கொடுத்திடும் வேற்கணார்க் கொதுங்கிடும் ஆம்பல்
கான்கொடுத்திடும் குவளைநாட் கமலமூ விரண்டும்
வான்கொடுத்திடும் அன்னைய ரறுவரின் வழிபாற்
றேன்கொடுத்திட முருகனின் வளர்ந்தன செந்நெல்
                                                                          (அரசகேசரி 1478 – 1519)


கார்த்திகைப் பெண்கள் அறுவரின்; பால் அருந்தி முருகக் கடவுள் வளர்ந்தது போல் ஆம்பல், குவளை, தாமரை என்னும் மூவினத்திலும் இவ்விரண்டு மலர்கள் உகுத்த தேனில் நெற்பயிர்கள் வளர்ந்தன.

வன்னி மாங்கனி ஊற்றிய ஊற்றின்
வருக்கை வாழை பெருக்கிய சேற்றின்
கன்னலென்னவே செல்நெல் வளர்ந்திடும்
தென்காரை வள நாடெங்கும் நாடே
                                               (தண். கன. பள்ளு – 1815)        


மா, பலா, வாழை என்னும் முக்கனிகளும் சிந்திய தேனால் நிலம் சேறாகி, நெற்பயிர்கள் கரும்புகள் போல் வளர்ந்தன. கரைசையாரும், அரசகேசரியாரும் சின்னக்குட்டிப் புலவரும் நெற்பயிர்கள் தேனில் வளர்ந்தன எனச் சொல்வது உயர்வு நவிற்சிகளன்றோ!

செவ்வந்திநாத தேசிகரின் திருநல்லைக் கோவைத் தலைவியிடம் தோழி, அவள் கவினழிந்து மெலிவுற்றமைக்கான காரணம் வினவுகிறாள். இப்படிப் பதில் சொல்கிறாள் தலைவி,

தெங்கங் கனியுதிர்ந் தோங்கும்
வருக்கைச் செழுங்கனியின்
துங்கம் பொலிகளைக் கீறிடப்
பில்கும் சுவைமதுவைச்
சங்கம் பருகும் பழனநல்
லூரர்தம் சாரனல்லாய்
அங்கம் மெலிந்து கவினழிந்
தேன்றணந் தண்ணலையே!


முற்றிய தேங்காய்கள் உதிர்ந்து செழித்த பலாக்கனிகளில் மோதி இனிய சுளைகளைப் பிய்ந்திட, அதிலிருந்து வழியும் சுவைமிக்க தேனை சங்குகள் பருகும் வயல்கள் விளங்கும் நல்லைப்பதி அமர்ந்த முருகப்பெருமானைப் பிரிந்து, உடல் மெலிந்து அழகிழந்தேன்.

'தேங்காய்கள் உதிர்ந்து பலாக்கனிகளை மோதிச் சுளைகளைக் கிழித்திட, அதிலிருந்து வடியும் தேனைச் சங்குகள் பருகும். என்பது உயர்வு நவிற்சியாகும்.

உவமை, உயர்வுநவிற்சி, தற்குறிப்பேற்றம் முதலிய அணிகள் பயின்று வர நம்புலவர் பெருமக்கள் ஆக்கி அளித்த கவிதைகளைத் துய்ப்பது தனித்துவமானதோர் இன்பம் தருவதாகும். இத்தகைய நயம்மிக்க கவிதைச் செல்வங்கள் பலவற்றை அச்சிட்டுப் பாதுகாக்க நாம் தவறிவிட்டோம். அச்சிட்டுப் பேணியனவும் இன்று கைக்கு எட்டாதவை ஆயின. தமிழர் தொன்மைக்கும் இலக்கிய வளமைக்கும் சான்றுகளான பல ஆக்கங்களைத் தொலைந்தமை வரலாற்றுத் தவறு என்பதைக் காலம் சொல்லிக்கொண்டே இருக்கும். அதற்காக நாம் எதிர்காலச்; சந்ததியினர் முன் தலைகுளிந்து நிற்க வேண்டியவர்களானோம்.