தித்திக்கும் முத்தொள்ளாயிரம்

அவுஸ்திரேலியாவிலிருந்து பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


விப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் முன்பொருமுறை 'நீங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?'என்று ஒரு கேள்வியை ஒருவர் கேட்டிருந்தார். அதற்குக் கவிப்பேரரசர், 'முத்தொள்ளாயிரத்தில் மூழ்கிவிடுவேன்' என்று பதில் அளித்திருந்தார். அதனை வாசித்த கணத்திலிருந்து முத்தொள்ளாயிரத்தைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. அதன்பின்னர் தமிழகம் சென்றிருந்தபோது வழமைபோலப் புத்தகங்களை வாங்கச் சென்ற வேளையில், தவறாது முத்தொள்ளாயிரத்தையும் வாங்கி வந்தேன். ஒருநாள் அதனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் கவிப்பேரரசர் அந்த இலக்கியத்திலே காதல் கொண்டிருப்பதற்கான காரணத்தை உணர்ந்தேன். பண்டைத்தமிழ் இலக்கியங்கள் என்றாலே படிப்பதிலும், படித்ததை எண்ணிக் களிப்பதிலும் ஏற்படும் சுவையே தனியானதுதான். அதிலும் இந்த முத்தொள்ளாயிரம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள்தான். அவை தரும் இன்பமும், சுவையும் வித்தியாசமானவை. எனவே நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல, முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்களில் சிலவற்றைத் தெரிவுசெய்து அவைதருகின்ற இலக்கிய நயத்தை, இன்பரசத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விருப்பத்தின் விளைவே இந்தக் கட்டுரை.

முதலில் முத்தொள்ளாயிரம் என்ற நூலைப்பற்றிய தகவல்களைத் தரவிரும்புகின்றேன். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கப்பட்டவை என்பது அறிஞர்களது கருத்தாகும். வடமொழிச் சொற்களின் கலப்பின்றி, தூய தமிழில் இப்பாடல்கள் அமைந்திருப்பது அக்கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது. முத்தொள்ளாயிரம் என்றால் மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என்பது பொருள். அதாவது தொள்ளாயிரம் தொள்ளாயிரமாக மூன்று தொள்ளாயிரம் சேர்ந்து மொத்தமாக இரண்டாயிரத்து எழுநுர்று பாடல்களைக் கொண்டதாக இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. சேரன், சோழன், பாண்டியன் என்னும் முடியுடை மூவேந்தர்களைப்பற்றி, ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றிருந்திருக்கின்றன.

ஆனால், காலவெள்ளத்தில் அழிந்தவை போக இப்போது சேரனைப்பற்றி
21 பாடல்களும், சோழனைப்பற்றி 30 பாடல்களும், பாண்டியனைப்பற்றி 59 பாடல்களுமாக மொத்தம் 110 பாடல்களே கிடைக்கப்பெறுகின்றன. இந்த 110 பாடல்களுமே இலக்கிய ஆர்வலர்களுக்கு வியத்தகு இன்பத்தைக் கொடுக்கின்றனவென்றால் 2700 பாடல்களும் எத்தகையனவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே அவற்றின் இழப்பை எண்ணி நெஞ்சம் தவிக்கின்றது. இந்த நூலிலே இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இதில் அடங்கும் பாடல்களைப் பாடிய புலவர் யார் என்பது தெரியாமைதான். இந்நூலில் அடங்கியிருந்திருக்கக்கூடிய பாடல்கள் முழுவதையும் ஒருவரே பாடினாரா அல்லது பல புலவர்கள் பாடினார்களா என்ற விபரங்களும் தெரியவில்லை.

காதலையும், வீரத்தையும் தம்வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் நமது பண்டைத்தமிழ் மக்கள். அவர்களின் வாழ்க்கையினைப் படம்பிடித்துக்காட்டுகிறது முத்தொள்ளாயிரம். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் வீரத்தை, போர்த் திறனை, படைச்சிறப்பை எல்லாம் உன்னதமான உவமைகளோடு முத்தொள்ளாயிரத்தின் பாடல்கள் நம் கண்களின் முன்னே கொண்டு வந்து நிறுத்து கின்றன. காதல் வயப்பட்ட கன்னியரின் உள்ளத்து உணர்வுகளை, உணர்வுகளின் விளைவுகளை, ஏற்படுகின்ற இன்பங்களை, இடையில் வரும் துன்பங்களை எல்லாம் தௌ;ளத்தெளிவாக நம் சிந்தையிலே பதித்துவிடுகின்ற பாடல்கள் இலக்கியச்சுவையின் இமயத்தையே தொட்டுநிற்கின்றன.

அத்தகைய பாடல்களில் சிலவற்றின் சுவையினை இனி அனுபவிப்போம்.

காதல் என்பது ஓர் அன்புதமான உணர்ச்சி. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. காதல் இல்லாமல் உலகம் இல்லை. உலகில் உயிரினம் தோன்றியபோதே காதலும் தோன்றியது என்று சொல்வார்கள். காதல் உண்டானதால்தான் உயிரினமே தோன்றியது என்றுகூடச் சொல்வார்கள். அந்தக்காதலைப் பற்றி கோடானுகோடி இலக்கியங்கள் உள்ளன. தமிழ்மொழியில் காதலைக்கூறும் அகத்திணை இலக்கியங்களை அளவிடவேமுடியாது. அவற்றின் சிறப்பை எடுத்துரைக்க இயலாது. காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை. அண்மைக்காலங்களில் கவிதைகளாகவும், இசைப்பாடல்களாகவும், திரையிசைப் பாடல்களாகவும் பல்லாயிரம், பல்லாயிரம் பாடல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. நம் செவிகளிலே விழுந்துகொண்டிருக்கின்றன. இசை இன்பத்தைச் சொரிந்து கொண்டிருக்கின்றன.

நமது ஊனோடும், உயிரோடும் கலந்தது காதல். உணர்வோடு மலர்வது காதல். அந்தக்காதலில் வீழ்ந்து வாழ்வை அனுபவித்தவர்களில் பலர் தம் காதல் வாழ்வின் பெறுபெறாகக் கிடைத்த தமது குழந்தைகள் காதலிப்பதை விரும்புவதில்லை. தமது பிள்ளைகள் பெரியவர்களாகி இளமைப் பருவத்தை அடையும்போது அவர்கள் காதலில் வீழ்ந்தவிடக்கூடாதே என்று நினைப்பது பொதுவாக எல்லாச் சமூகங்களிலும் இருக்கின்றது. எல்லாக் காலங்களிலம் நிகழ்கின்றது. பண்டைக்காலத்திலும் இந்த நிலை காணப்பட்டமைக்குப் பல்வேறு இலக்கியச் சான்றுகள் உள்ளன. முத்தொள்ளாயிரத்திலும் சில பாடல்கள் இந்த நிலைமையை எடுத்தக்காட்டுகின்றன.

பண்டைத் தமிழகத்தில் காதலுக்குத் தடை இருக்கவில்லை. ஆனால் ஒரு கட்டுப்பாடு இருந்திருக்கின்றது.

காதல் நோயும், கண்டிக்கும் தாயும்

நாட்டை ஆளும் மன்னன் நல்லவன். வீரத்தில் வல்லவன். பேரழகன். அவன் வீதியிலே பவனிவரும்போது அவனைக் காணவும், அவனது அழகை இரசிக்கவும், இளம்பெண்கள் தத்தம் வீடகளிலேயிருந்து வெளியே வருவார்கள். அப்படி வருகின்ற சமயத்திலே, மன்னன்மீது தன் பிள்ளை காதல் கொண்டுவிட்டால் நிறைவேறாது போய்விடக்கூடிய அந்தக் கர்தலால் தன்மகளின் வாழ்வு பாழாகிப்போய்விடுமே என்ற அச்சத்தால் மன்னனைப் பார்க்கவிடாது தாய் தடுப்பாள். இது இளம்பெண்கள் இருக்கும் இல்லங்களில் சாதாரணமாக நடைபெறுவது வழக்கம். இதுபற்றி முத்தொள்ளாயிரத்தில் உள்ள ஒரு பாடல் வருமாறு.

தாயர் அடைப்ப மகளிர் திறந்திட
தேயத் திரிந்த குடுமியவே - ஆய் மலர்
வண்டுலாஅம் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு

                                                                     (பாடல்இல:
10)

இதன் கருத்து என்னவென்று பார்ப்போம். வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலைகளை அணிந்துகொண்டு சேரமன்னன் தேர்மீது அமர்ந்த தெருவிலே பவனி வருகின்றான். அவனைக் காணும் ஆர்வத்தில் இளம்பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வாசலுக்கு வர முயல்கிறார்கள். தம்பிள்ளைகள் மன்னனைக் கண்டால் மன்னன்மேல் காதல் கொண்டுவிடுவார்களே என்று கவலைப்பட்ட அவர்களின் தாயமார்;, வெளிக்கதவைப் பூட்டிவிடுகின்றார்கள். தாய் கதவிற்குத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அப்பால் சென்றதும், மகள் மீண்டும் கதவைத் திறக்க முற்படுகின்றாள். அதைக்கண்ட தாய் ஓடிவந்து மறுபடியும் கதவை நன்றாகப் பூட்டிவிடுகின்றாள். மகள் திரும்பவும் திறக்கின்றாள். தாய் பூட்டுகின்றாள். மகள் திறக்கின்றாள். இப்படியாக இளம் பெண்களும், அவர்களின் தாய்மாரும், கதவுகளைத் திறப்பதும், பூட்டுவதுமாக இருந்ததால் கதவின் பூட்டில் உள்ள குமிழ்கள் தேய்ந்துபோகின்றன. இதுதான் பாடலின் பொருள்.

காலத்தால் பழசாகி, பயன்பாட்டால் பழுதாகி பூட்டுக் குமிழ்கள் தேய்வது வழமை. இங்கோ காதலால் குமிழ்கள் தேய்வதாகச் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு அருமை!

காதல்வயப்பட்ட கன்னி ஒருத்திக்கும் அவளது தாய்க்கும் நடக்கும் போராட்டத்தை இன்னும் ஒரு பாடல் மிகவும் சுவையாகச் சித்தரிக்கின்றது.

கடல்தானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை அடைக்குமேல்
ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான்
                                                                                        (பாடல்இல:
14)

'கடல் போன்ற மிகப்பெரிய படையினைக்கொண்ட மன்னனைப் பார்க்கவிடாமல் என்னைத் தடுத்து ஒரேயொரு வெளிக்கதவையும் மூடிவிடுகிறாள் எனது தாய். ஆனால், அழகிய நகைகளை அணிந்துள்ள என் தோழியே! அந்த மன்னன்மேல் நான் காதல் கொண்ட விடயம் ஊர்மக்கள் எல்லோருக்குமே தெரியும். அவர்கள் மன்னனிடம் சென்று என் காதலைப்பற்றிச் சொல்வார்கள். அதைத் தடுக்க அவளால் முடியுமா?' என்று தோழியிடம் கேட்பதுபோல இந்தப்பாடல் அமைந்துள்ளது. வீட்டுக்குள் என்னைப் பூட்டி வைத்து, வெளிக்கதவை அடைத்துவிடத்தான் முடியும். ஊர்வாயை அடைக்க உன்னால் முடியுமா? என்காதல் மன்னனிடம் சென்று சேர்வதைத் தடுக்க உன்னால் முடியுமா? என்று தாய்க்கு விடுக்கப்படுகின்ற கேள்விக்கணைதான் அது. அந்தக்கேள்வி அவள் அரசன்மேல் வைத்துள்ள காதலின் ஆழத்தை நன்கு உணர்த்துகின்றது.

இளம் பெண்களின் இதயத்தில் எழுகின்ற காதல் அவர்களைப் படுத்தும் பாட்டை மற்றும் ஒருபாடல் வேறொரு கோணத்தில் புலப்படுத்துகின்றது.

வரைபொரு நீள்மார்ப வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல்மாந்தைக் கோவே, நிரைவளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ, அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என

                                                                       (பாடல் இல: 11)

இதன்கருத்து என்னவென்றால் -

'மலைபோன்ற விரிந்த மார்பைக் கொண்டவனே! பகைவரைத் தோற்கடிக்கும் வீரம் நிறைந்தவனே! ஆ நிரைகளைக் கவரும் அற்றல் மிக்கவனே! மாந்தை நகரின் மன்னவனே! உனது அழகிலே மயங்கி, உன்மேல் காதல்கொண்டு, அந்தக்காதல் நோயால் உடல் மெலிந்து, கைவளையல்கள் கழன்று, இளம்பெண்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அந்தப் பெண்களின் தாய்மார்கள் உன்னைக் கொடுங்கோலன் என்று பழிக்கிறார்கள். மிகவும் வல்லமை கொண்ட நீ இப்படி அழகிய பெண்களைக் கவர்வது முறைதானா?' என்று அரசனைப்பார்த்துக் கேட்பது போல இந்தப்பாடல் அமைந்துள்ளது.

மன்னன் அழகானவன். மக்களில் அன்பானவன். வலிமை மிக்கவன். செங்கோல் தவறாது ஆட்சிசெய்பவன். அவன்மீது மங்கையர்கள் காதல் கொள்வதில் வியப்பில்லை. மன்னவன் தவறேதும் செய்யாதிருந்தும்கூடத் தங்கள் பெண்களுக்குக் காதல்நோய் வருவதற்குக் காரணமாக இருந்த காரணத்தால் அவனின் செங்கோலையே பழிப்பதாக அமைந்துள்ள இந்தப்பாடல் உண்மையில் மன்னனையும் போற்றுகின்றது. காதலையும் போற்றுகின்றது.

தேங்காய்க்குத் தேரைநோய் என்று ஒரு நோய் வருவதை நாம் அறிவோம். தேங்காயினுள் உள்ள இளநீர் அழுகி வரண்டுவிடும். தேங்காயின் சாப்பிடும் பகுதி கெட்டுச் சிறுத்துவிடும். இதைத் தேரைத்தேங்காய் என்று அழைப்பார்கள். தேரை பிடித்துவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் தேங்காயில் ஏற்படும் அந்த நோய்க்கும் தவளை இனத்தைச் சேர்ந்த, தவளையைப் போன்ற உருவமுள்ள பிராணியான தேரைக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லை. 'தேங்காயின் நோய்க்குத் தேரை காரணம் அல்ல. அதேபோல, சோழமன்னனான கிள்ளிவளவனைப் பார்க்கக்கூடாது என்று அன்னை தடுக்கிறாள். தடியால் அடிக்கின்றாள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் என்னைப் பழித்து ஏழனம் செய்கிறார்கள். (இத்தனைக்கும் நான் கிள்ளிவளவனோடு கூடிக்களிக்கவில்லை. குலாவியிருக்கவில்லை.) தேங்காயைத் தின்னாத தேரை பழிக்கப்படுவதைப்போல, எக்குற்றமும் செய்யாத நானும் வலிமைபொருந்திய தேர்ப்படையைக் கொண்டுள்ள கிள்ளிவளவன் (மீதுகொண்ட காதல்) காரணமாக பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டுத் துன்புறுகின்றேன்' என்று ஒரு பெண் கூறுவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

அன்னையும் கோல்கொண்டு அலைக்கும், அயலாரும்
என்னை அழியுஞ்சொல் சொல்லுவர், நுண்ணிலைய
தெங்கு உண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண்தேர் வளவன் திறத்து

                                                                                   (பாடல்இல: 42)

குழந்தைகளிடம், ' அவனைத்தான் உனக்கு கல்யாணம் செய்வது', 'நீ இவளைத்தான் கட்டிக்கோள்ள வேண்டும்', 'நீ பெரியவளானதும் அவனுக்குத்தான் உன்னைக் கட்டிக்கொடுப்போம்' என்றெல்லாம் பெரியவர்கள் விளையாட்டாகச் சொல்வது வழக்கம். அந்த வேடிக்கைப் பேச்சு அந்தச் சின்னஞ்சிறுசுகளின் மனதில் சிலவேளை நன்றாகப் பதிந்துவிடுவதும் உண்டு. அதேபோல ஒரு விடயத்தை அடுத்த பாடல் எடுத்துரைக்கின்றது.

குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை பெறுகென்றாள் அன்னை அதுபோய்
விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்த்
துலங்கு நீர் மாமருட்டி அற்று

                                                                             (பாடல்இல: 45)

'நான் சிறுமியாக இருந்தபோது, உறையூரை ஆளுகின்ற சோழ மன்னனைத் திருமணம் செய்துகொள்ளும்படி என்னிடம் எனது தாய் சொல்வாள். இப்பொழுது, நான் அவனைக் காதலிக்கிறேன் என்பதற்காக எனக்கு ஏசுகின்றாள். எனது காதலை எதிர்க்கின்றாள். (அவள் விளையாட்டாகப் பொய்யாகச் சொல்லியிருந்தாலும் அவ்வாறு அவள் அடிக்கடி சொன்னதால் அவன் மீது எனக்கு விருப்பம் ஏற்பட்டது. அது காதலாக மாறிவிட்டது) பாலைவனத்தில் தெரியும் கானல் நீர், விலங்குகளுக்கு உண்மையான நீர் போலத் தோன்றி ஏமாற்றும். எனது காதலும் அந்தக் கானல் நீர்போல ஆகிவிட்டது.' என்று ஒரு பெண் மனம்வருந்திச் சொல்வது இந்தப் பாடலின் கருத்தாகும்.

காணும்வரை கோபம், கண்டவுடன் போகும்

காதலர்களுக்கிடையே அடிக்கடி ஊடல் வருவது இயற்கையானது. ஊடல் என்பது சிறு மனத்தாங்கல். அந்த மனத்தாங்கல் உண்மையான காரணத்தாலும் வரலாம். பொய்யாகவும் எழலாம். ஆனால் ஊடல் அன்பை மேலும் அதிகமாக்கும். அதனால் ஊடலைப் பொய்க்கோபம் என்றும் சொல்லலாம்.

''ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்''
என்று திருக்குறளின் இறுதிக்குறள் எடுத்துரைக்கின்றது. ஊடலின் பின்னர் ஏற்படும் கூடல் மிகவும் இன்பமானது. இரம்மியமானது என்றெல்லாம் திருக்குறள் மட்டுமன்றிப் பல்வேறு இலக்கியங்களும் சொல்கின்றன.

இங்கே முத்தொள்ளாயிரத்திலே ஒரு பாடல் சற்று வித்தியாசமாக ஊடல் உணர்வினைக் காட்டுகின்றது.
தலைவி தன் உள்ளம் கவர்ந்த சேரமன்னனைக் காண்பதற்கு விரும்பினாள். ஆனால் அவன் சொன்னபடி வரவில்லை. அதனால் அவன்மீது கோபம் கொண்டாள். வரட்டும், வரட்டும், எப்படியும் வருவார்தானே அப்போ என்ன செய்கிறேன் பார் என்று மன்னனுக்கு ஏசினாள். மற்றவர்களுக்கெல்லாம் கேட்கும்படியாக வார்த்தைகளை வீசினாள். ஆத்திரத்தோடு காத்திருந்தாள். அப்போது அவன் வந்தான். அவள் கண்டாள். கண்டதுமே அவன்மீது கொண்டிருந்த கோபம் மறைந்துவிட்டது. (அவன் மீது அன்பு மேலிட்டது. நாணம் கொண்டாள்.)

வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்று
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம்
உண்டாய் இருக்கஅவ் வொண்தொடியாள் மற்றவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம்

                                                                                  (பாடல்இல: 18)

இது இப்போதும் கூட கணவன்-மனைவி. காதலன்-காதலியர்களுக்கிடையே சாதாரணமாக நடைபெறுவது நாம் அறிந்ததுதான். சந்திக்க வருவதாகச் சொன்ன நேரத்திற்குச் சற்றுத் தாமதித்து விட்டாலும் கோபத்தோடு காத்திருப்பதும், வந்து விட்டால் நேரிலே கண்டுவிட்டால் கோபம் மறைந்து கொஞ்சிக் குலாவுவதும் காதலர்களிடம் இயற்கையாக எழுகின்ற உணர்வுகள்தான். இந்தக் காதல் உணர்வுகள் எல்லாக்காலத்திற்கும் பொதுவானவை.

மன்னரின் முடியும், மாமன்னர் அடியும்

பேரரசர்களாக இருந்தவர்களுக்குச் சிற்றரசர்கள் திறை செலுத்துவது வழக்கம். திறை என்பது வரி. ஒவ்வொரு வருடமும் விதிக்கப்பட்ட திறையைக் குறிக்கப்பட்ட ஒரு காலக்கெடுவுக்குள் சிற்றரசர்கள் செலுத்தவேண்டும். கிள்ளிவளவன் என்ற சோழ மன்னனுக்குத் திறை செலுத்த வரும் சிற்றரசர்கள், அவனது கால்களில் விழுந்து வணங்குவார்கள். அப்போது சிற்றரசர்கள் தலைகளிலே சூடியிருக்கம் முடிகள் கோழமன்னனின் கால்களில் குத்திக் காயப்படுத்திவிடும். சோழமன்னனின் பெருமையையும், சிற்றரசர்கள் அவனது அடிபணிந்தே ஆட்சிசெய்தார்கள் என்பதையும் மட்டுமன்றி அவ்வாறு ஏராளமான சிற்றரசர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நேரடியாகக் கூறாமல் புலவர் தனது கற்பனைத் திறத்தால் இவ்வாறு மறைமுகமாக உணர்த்துவது புலவரின் புலமைச சிறப்பையும், தமிழ் மொழியின் அழகையும் எடுத்துக்காட்டுகின்றது.

நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்தந்த மன்னர் முடிதாக்க இன்றும்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ

                                                                                 (பாடல்இல: 26)
'திறைசெலுத்த வந்திருக்கும் மன்னர்களே! சற்று நில்லுங்கள். அவசரப்பட வேண்டாம். அமைதியாக ஒவ்வொருவராக வந்து செலுத்துங்கள். ஏனென்றால், உங்களுக்கு முன்னர் திறை செலுத்த வந்திருந்த மன்னர்கள் எங்களின் சோழமன்னவனின் கால்களில் விழந்து வணங்கியபோது அவர்களின் கிரீடங்கள் மன்னவனின் பாதங்களிலே குத்தியதால் அழகிய அந்தப் பாதங்கள் புண்பட்டுவிட்டன. இன்னும் அந்தப் புண்கள் ஆறவில்லை.' என்பதுதான் இந்தப் பாடலின் கருத்து. உண்மையில் இந்தப்பாடல், திறைசெலுத்த வந்திருக்கும் மன்னர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்போலவே இருக்கிறது.

இந்த நேரத்தில், ஏன் அந்தச் சோழ மன்னன் காலில் சப்பாத்தப் போடாமல் இருந்தானா என்றோ, ஒரு தடவை சிற்றரசன் ஒருவனின் முடி குத்தியதும் பிறகு அவதானமாக இருந்திருக்கலாமே என்றோ அல்லது சிற்றரசர்களைத் தள்ளிநின்று வணங்க வைத்திருக்கலாமே அல்லது முடிகளைக் கழற்றிவிட்டு வணங்கச் சொல்லியிருக்கலாமே என்றோ நாம் இப்போது கேட்கக் கூடாது. இது அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் விடயம் அல்ல. தமிழின் அழகையும், புலவர்களின் கற்பனை வளத்தையும் அனுபவித்துச் சுவைக்கும் விடயம்.

இதேபோல இன்னும் ஒரு பாடல் உள்ளது. அது பாண்டிய மன்னனைப் பற்றியது.

திறை செலுத்துவதற்கு வந்த சிற்றரசர்கள் பாண்டிய மன்னனுக்குத் தலைசாய்த்து வணங்கும்போது அவர்களின் தலைகளிலே சூடப்பட்டிருக்கும் மலர்கள் பாண்டியனின் பாதங்களில் வீழ்கின்றன. இந்த நிகழ்ச்சி அருச்சுனன் திருமாலின் முடியில் தூவிய மலர்கள் சிவனின் திருவடிகளில் காணப்பட்டதைப்போல இருக்கிறது என்று கூறும் அந்தப்பாடல் வருமாறு:

செங்கண் நெடியான்மேல் தேர்விசயன் ஏற்றிய பூ
பைங்கண் வெள்ஏற்றான் தாள் கண்டற்றால் - எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசை காணப் படும்.

                                                                                 (பாடல்இல: 53)

அபிமன்யு போரில் இறந்ததால் அருச்சுனன் உண்ணாது. உறங்காது துடித்தான். அப்போது கண்ணன், அருச்சுனனிடம் கனிகளை உண்ணும்படி சொன்னான். அதற்கு அருச்சுனன், 'சிவனைப் பூசைசெய்து வணங்காமல் நான் எப்படி உண்பது?' என்று கேட்டான். உடனே கண்ணன், 'நீ எனது முடியில் மலர்களைத் தாவிப் பூசைசெய். அந்த மலர்கள் சிவபெருமானைச் சென்றடையும்' என்று சொன்னான். அருச்சுனனும் அவ்வாறே செய்தான். இது மகாபாரதத்திலே சொல்லப்படகின்ற ஒரு கதை. அந்தக்கதையைக் இந்தப்பாடலில் நினைவுபடுத்திய புலவர், அவ்வாறு கண்ணனின் முடியில் அருச்சுனன் தூவிய மலர்கள், சிவனின் காலடியில் காணப்பட்டதைப்போல, எங்கெங்கோ இருந்து வந்திருந்த சிற்றரசர்கள் தங்கள் முடிகளின் மீது சூடியிருந்த மலர்கள் பாண்டிய மன்னனின் பாதங்களில் காணப்படுகின்றன என்று பாடுகின்றார்.

ஆசையும், நாணமும்

ஆசைக்கும் நாணத்திற்கும் இடையிலான மனப்போராட்டம் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதனை இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. வீதி உலா வருகின்ற சோழ மன்னன் கிள்ளிவளவனைக் காண்பதற்கு ஆசைப்படுகிறாள் ஒருத்தி. ஓடிச்சென்று வாசற்கதவைத் பார்த்துவிடுவதற்கு ஆசை எழுகின்றது. காண்பதற்குக் கண்கள் துடிக்கின்றன. ஆனால் நாணம் அவளைத் தடுக்கிறது. தனது இந்த மனப்போராட்டத்தை ஓர் உவமையோடு அவள் வெளிப்படுத்துகிறாள். 'நான் படுகின்ற இந்த வேதனை எப்படிப்பட்டதென்றால், ஒரு மூங்கில் குழாயினுள் எறும்பொன்று சிக்கிக்கொண்டது. மூங்கில் குழாயின் இருபக்கங்களிலும் தீப்பிடித்து எரிகிறது. எறும்பு அக்கரைக்கும் போக முடியாமல் இக்கரைக்கும் வரமுடியாமல் அனலிடைப்பட்டுத் துடிக்கிறது. அந்த எறும்பைப்போல இந்த நள்ளிரவு நேரத்திலும் நான் தவிக்கிறேன்' என்று சொல்கிறாள். அவ்வாறு அந்த இளம்பெண் சொல்வதை அப்படியே பாடலாக அமைத்திருக்கின்றார் புலவர்.

நாண் ஒருபால்வாங்க நலன்ஒருபால் உண்நெகிழ்ப்ப
காமருதோள் கிள்ளிக்கு என் கண்கவற்ற யாமத்து
இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போல
திரிதரும் பேரும் எந்நெஞ்சு

                                                                (பாடல் இல: 48)

சிந்திய கள்ளும், சேறான மண்ணும்

சேரநாடு மிகவும் செல்வம் நிறைந்தது. வளத்தில் செழித்த மக்கள் நன்கு உண்டு களித்தார்கள். மதுவையும் அருந்தி மகிழ்ந்தார்கள். தென்னம்பாளையில் இருந்து கிடைக்கும் கள்ளை மக்கள் பெரிதும் விரும்பினார்கள். கடைவீதிகளிலே கள் குடித்து மகிழ்வோர் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள். அவர்களில் சிலர் கள்ளுண்ட போதையில் மயங்கிக் கிடப்பார்கள். அதனால் கடைவீதி எப்பொழுதும் கலகலப்பாகவே இருக்கும். இதனை நமக்கு அறியத்தரும் பாடல் ஒன்று இப்படியிருக்கின்றது.

களிகள் களிகட்கு நீட்டத்தம் கையால்
களிகள் விதிர்த்திட்ட வெம்கள் துளிகலந்து
ஓங்கொழில் யானை மிதிப்பச் சேறாயிற்றே
பூம்புனல் வஞ்சி அகம்
                                                   
                 (பாடல்இல: 4)

இதன் கருத்து:

நீர் வளம் மிக்க வஞ்சிமாநகரிலே கள் குடிப்பவர்கள், கள் குடிக்கம் பாத்திரத்திலே அதனை வாங்கி, கள்ளின் மேற்பரப்பில் மிதக்கும் நுரையைக் கையால் வழித்து வெளியே எறிந்துவிட்டுக் கள்ளைக் குடிப்பார்கள். அவ்வாறு நுரையை வழித்தெறியும் போது கள்ளும் நிலத்தில் சிந்தும். அந்த வீதியால் அரசனின் அழகிய யானைகள் செல்லும்போது அவ்வாறு நிலத்தில் சிந்திக்கிடக்கும் கள்ளிலும், நுரையிலும் யானைகளின் கால்கள் பட்டு மிதிபடும். அப்போது கள்ளும், நுரையும், மண்ணும் கலந்து வீதியெங்கும் சேறாகிவிடும். அவ்வளவு வளம் நிறைந்தது வஞ்சி நகரம்!

மது அருந்தபவர்கள் சிலர் அருந்தத் தொடங்குமுன்னர் சிறுதுளி மதுவைக் கையால் எடுத்து நிலத்தில் தெளித்துவிட்டு, அல்லது சிந்திவிட்டு மதுவை அருந்துவது சில இடங்களில் இப்பொழுதும் வழக்கத்தில் உள்ளது. இந்தப் பழக்கம் பண்டைக்காலத்தில் எப்படி ஏற்பட்டது என்பதை இந்தப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும் கொள்ளலாம்.

இவ்வாறு முத்தௌ;ளாயிரத்தின் ஒவ்வொரு பாடலுமே தித்திக்கும் சுவையைக் கொடுக்கும். இப்போதள்ள நூற்றுப்பத்தப் பாடல்களையும் ஒவ்வொன்றாகப் படித்துச் உளமாரச் சுவைப்பதற்கே பலநாட்கள் எடுக்கும். அப்படியிருக்கும் போது முத்தொள்ளாயிரத்தின் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களும் கிடைக்கப்பெற்றிருக்குமானால் அவை தமிழ் அன்னைக்கு எவ்வளவு அழகான அணிகலனாக இருந்திருக்கும்.




வாழ்க தமிழ் வணக்கம்.





srisuppiah@hotmail.com