சிற்பியின் 'மௌன மயக்கங்கள்'காதல்
ததும்பும் காம நிலை
முனைவர்
பூ.மு.அன்புசிவா
தமிழிலக்கிய வரலாற்றில் சிற்பியின் 'மௌன மயக்கங்கள்' புதுக்கவிதை
வடிவில் வெளிவந்த முதல் (1982) கதைக் கவிதை
(Fiction Poetry) என்ற
சிறப்பைப் பெறுகிறது. தன் இனிய நண்பனின் அந்தரங்க வாழ்க்கையை மையமாகக்
கொண்டு இக்கதைக் கவிதையைப் படைத்திருக்கிறார் கவிஞர் சிற்பி
பாலசுப்பிரமணியம். பரத்தமை என்ற மாறாத சாபத்தில் இருந்து பெண்குலம்
விடுதலை அடைய முடியாதபடி பற்றிப்படர்ந்திருக்கும் இன்றைய சமூகச் சூழலைக்
கதைக் கருவாகக் கொண்டு இக்கதை படைக்கப்பட்டிருக்கிறது. இன்று மனித
குலத்தையே அச்சுறுத்தும் வகையில் உலகை உலுக்கிக் கொண்டு இருக்கும்
தீயசக்தியாக உருவெடுத்துப் பரவிவரும் ஆட்கொல்லி நோய் (எயிட்ஸ்)
எதிர்ப்புப் பிரச்சாரமாக, சிற்பியின் மௌன பிரச்சாரம் தேவையான ஒன்றாகவே
அமைகிறது.
கதையும் களமும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு பூர்வ ஜென்ம பந்தமானது.
வறுமையின் காரணமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணிடம் மயங்கிய
ஒருவன் அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறான். ஆனால் அப்பெண் முன்பு ஒரு
விபச்சாரியாக இருந்த காரணத்தால் அவளை இச்சமூகம் வாழ்க்கையின் ஓரத்திற்கு
விரட்டுகிறது. அவளை இழந்த அவன் சமூகத்தில் உள்ள பல அபலைப்
பெண்களுக்காகப் போராடும் இலட்சியவானாக வீறுகொண்டு எழுகின்றான். இதுவே
இக்கதையின் கருவாக அமைகிறது. இக்கதை ஆண் பெண் இடையிலான மெல்லிய
உணர்வுகளை வெளிப்படுத்தும் காதல் கதையாக இருப்பினும் சமூகத்தில் நிலவும்
பாலியல் கொடுமைகள், வறுமை, வேலையில்லாத திண்டாட்டம், பெண் விடுதலை,
தேசிய ஒருமைப்பாடு போன்ற சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டவும்
தயங்கவில்லை.
கதைச்சுருக்கம்
முதல் தேதி பரபரப்பில் பை கணத்த கணவானாகப் பட்டப் பகலிலும் அலைமோதும்
அந்த பட்டினத்தின் இரவுச் சந்தையில் விற்பனைப் பொருளான ஒருத்தியைத்
தற்காலிகமாக விலை கொடுத்து வாங்குகிறான் கதைத் தலைவன். அங்கே அவன்
வாங்கியது ஒரு பெண்ணின் உடலை அல்ல அழுக்கின் ஒரு துளி தூசும்படியாத ஓர்
ஆத்மாவை. இவ்வாறு பலமுறை அவளை விலை பேசிய அவன் அவளிடம் கொண்டது காதலா?
வெறும் இளமைத்திமிரா? என்று கூடத் தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றான்.
அப்பா இரயில் விபத்தில் இறந்தபோது தன் பள்ளிப் படிப்பிற்கு
முற்றுப்புள்ளி விழுந்து குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல
வறுமை பாதாள விளிம்பில் நின்ற கதையை அவள் கூறக் கேட்ட அவன், அவளை மணம்
முடிக்க முடிவெடுக்கிறான். பின்பு தன் தோழன் உதவியுடன் அவளைத் திருமணம்
செய்து அமைதியாக வாழுகிறான். ஆனால் இச்சமூகம் அவளை வாழவிடவில்லை.
வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டியது. முடிவில் அவள் தூக்கிட்டுத்
தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் நீங்காத நினைவுகளிலிருந்து விடுபடாத
அவனிடம் தோழரின் மகள், 'மல்லீ.....மல்லீ....' என்று புலம்புகிறீர்களே!
சொல்லுங்கள் உங்களைப் போல பெண்களின் உடலை விலைபேசும் ஆண்களால் தானே
விபரீதங்கள். ஒரு மல்லிகாவிற்கு ஊன்றுகோலாக முனைந்தீர்கள். ஆனால் தெரு
மல்லிகைகள் எத்தனை ஆயிரம் தெரியுமா? என்று சொல்லம்புளால் துளைக்க
மௌனமாகிறான். பிறகு தன் தோழருடன் இணைந்து குறிப்பாய் பெண் விடுதலைக்
கிளர்ச்சிகளில், உரிமைப் போர்க்களங்களில் முழங்கும் தொண்டனாக மாறுகிறான்.
கதைப்பின்னல்
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும், கற்புக்குக் கடைத்திறந்து
நிற்கும் ஒருத்திக்கும், இடையே நடக்கும் உறவினை மையமாகக் கொண்டு கதை
நகர்கின்றது. நெகிழ்ந்த சேறும், முரட்டு விதையும் ஒன்றில் ஒன்று உறவு
கொண்டதைப் போல அவர்கள் இருவரிடத்தே மலரும் அன்பு முதலில் இளமைத்
திமிராய், பின்பு காதலாய் மாறுகிறது. ஒரு கட்டத்தில் 'அவளைக்
காப்பாற்றுவது என் இலட்சியமில்லை. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள அவள்
வேண்டும்' என்னுமளவிற்கு அவளின் களிப்பில் மயங்கிக் கிடக்கிறான் அவன்.
பிறகு அவன் கொண்ட காதல் சூரியனைப் போல் சுத்தமானதாக மாறுகிறது.
இவர்களிடத்தே இருந்த நெருக்கத்தின் இடைவெளியைக் குறைக்க மீண்டும் புயல்
வீசுகிறது. புயலில் அடித்து ஒதுங்கியவன் இலட்சிய வீரனாக மாறுவதே கதையின்
உச்சமாக அமைகிறது.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகப் பொறுப்பு உண்டு. சமூகத்தின் ஓர்
அங்கமான படைப்பாளி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை முன்வைத்தே தன்
படைப்பைப் படைக்கிறான். அவனது படைப்பும் அவன் வாழும் சமூகத்தை
பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருக்கும்; இருக்கக்கூடும். 'கலை,
இலக்கியம் என்பவை மனித சமூகத்தைப் பற்றியதுதான் என்ற கருத்தாக்கம்
எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதிலிருந்தே யதார்த்தவாதம் என்ற முறையியல்
தோன்றிவிட்டது. கலைக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று
சுற்றுப்புறத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது
(Cognitive). இரண்டு
சுற்றுப்புறத்தைப் பிரதிபலிப்பது
(Reflective) இதில் சுற்றுப்புறம்
என்பது சமூகத்தை மட்டும் தான் குறிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்'
என்ற தோத்தாத்திரியின் கருத்துக் குறிக்கத்தக்கது. கவிஞர் சிற்பி
பாலசுப்பிரமணியம் அவர்களும் இதனை முன்னிருத்தியே தமது கட்டுரையில், 'இக்கால
மனிதனின் சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் இடையறாத முயற்சியே என் கவிதை'
(என் எழுத்து பக்.537) என்று குறிப்பிடுகிறார். கவிஞரின் கவிதைகள்
அனைத்தும் ஏதேனும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு
எழுந்தவையாகவே அமைகிறது. 'மௌன மயக்கங்கள்' என்ற கதையில் தொழில் முறையால்
விபச்சாரம் செய்யும் பெண்ணைத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, சமூகத்தில்
நடக்கும் கொடுமைகளைப் பிரதிபலிக்கும் முகமாகப் படைத்துக் காட்டுகிறார்
கவிஞர்.
சமூக அவலங்கள்
ஒரு பெண் விபச்சாரியாக மாற அக்குடும்பத்தில் நிலவும் பொருளாதாரச்
சூழ்நிலையே காரணமாக அமைகிறது. இக்கதையின் தலைவியும் வறுமையின் கரணமாகக்
குடும்பத்தின் சுமையைத் தாங்க, விபச்சாரியாக மாறுகிறாள். கவிஞர் 'அப்பா
இரயில் விபத்தில் இறந்த போது தன் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி
விழுந்தது. குடும்பம் பாலத்துச் சுவரில் மோதிய வாகனம் போல் வறுமை பாதாள
விளிம்பில் நின்றது. அம்மா நகைகளை விற்றாள். அப்புறம் காய்கறி விற்றாள்.
தலையில் சுமந்து விறகு விற்றாள். பிறகு கற்பை விற்றாள்! எங்களுக்குக்
கால் வயிறு நிரம்பியது..... எனக்கு இரட்டைச் சடைபோட்டு ரோஜாப்பூ
வைத்துப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தவள் தானே, ஒற்றைச்சடை பின்னி
கனகாம்பரம் வைத்து இரவுப் பள்ளிக்குப் போகத் தொடங்கினாள்' என்ற காரணத்தை
விவரிக்கிறார்
இந்தியத் திருநாட்டில் 'வறுமை' தலைவிரித்து ஆடுகிறது. உலக நாடுகளில்
இந்தியாவில் தான் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு
தான் பட்டினிச்சாவுகள் அதிகம் நடக்கின்றன. 'ஈ மொய்க்கும் ஓர் ஈயக் குவளை
நீட்டிப் பிச்சை கேட்கிறது ஒரு கரம்' என்று இந்தியாவின் வறுமை
நிலைக்காக வருத்தப்படுகிறார் .நம் நாட்டிற்கு உரிய இந்தச் சாபக்கேட்டை
அகற்றும் முகமாகக் கவிஞரின் சிந்தனை கவிதைகளில் தெரிகிறது. 'திரும்பத்
திரும்ப நான் பார்க்கவும், கேட்கவும் அறவே விரும்பாதவை இரண்டு. ஒன்று
என் வளநாட்டின் தீரா வறுமை மற்றொன்று வேலையில்லாத் திண்டாட்டம்' என்று
குறிப்பிடுவதன் மூலம் கவிஞரின் தேசப்பற்று தெரிகிறது.கதைத் தலைவனின்
தோழன் ஓர் இயக்கத்தினைச் சார்ந்து பல போராட்டங்களை நடத்துகிறான், 'தீபங்களைத்
தூக்கியபடி உச்சக் குரலில் வேலை கொடு! எங்களை வாழ விடு' என்று தோழர்
அதன் முன்னிலையில் இருந்து குரல் கொடுப்பதாகக் காட்டுகிறார்.
பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிஞர்கள் வரிசையில் சிற்பி
பாலசுப்பிரமணியம் குறிப்பிடத்தக்கவர். 'பூக்களுக்கு முதுகெலும்பும்
இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பும் இல்லை'. எனவே தேடிப்போன ஒவ்வொரு
மாளிகையும் விதவிதமான காமவெறிக் கானகமாய்க் காட்சியளிக்கிறது. ஒரு நாள்
கூலி வேலைக்குப்போய் இருட்டுச் சந்தில் திரும்பியவளை ஒரு குடிகாரன் வழி
மறித்து கற்பழிக்கிறான். அப்போது அவளைக் காப்பாற்ற எந்தப் 'பேடியும்'
வரவில்லை என்று கவிஞர் பாலியல் கொடுமைகள் நடப்பதை வன்மையாகக்
கண்டிக்கிறார்.
விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் இயல்பாக, 'ஊருக்கொரு பெயர்,
நாளுக்கொரு பெயர், ஆளுக்கொரு பெயர், நொடிக்கொரு மதம் மாறுவோம், அடிக்கடி
மனம் மாறுவோம்' என்றும், 'குவிந்து விரியும் இரப்பர் உதடுகள்' என்றும்
குறிப்பிடுகிறார். விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் அவளை ஒருமுறை பார்க்கச்
செல்லும் பொழுது 'தெரு முனையில் ஒரு பையன் அவன் கையில் ஒரு காகிதம்
திணித்தான்... போலீஸ் முற்றுகையில் இடமாற்றம். 17, இராமர் கோவில் தெரு,
என்று முரண்தொடையாகக் குறிப்பிடுவதன் மூலம் ஆசிரியரின் புலப்பாட்டு
உத்தி புலனாகிறது.
கவிஞர் இந்திய நாட்டின் மீது கொண்ட நாட்டுப்பற்றை அவர்தம் கவிதைகளில்
காணமுடிகிறது. 'அன்று குடியரசு நாள், கொடிகள் கம்பத்தின் உச்சியில்
படபடத்துத் துடிதுடித்துக் கொண்டிருந்தன. பத்திரிக்கைப் பக்கங்களில்
இளம் நடிகைகள் சுதந்திர மகிமையை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தனர்'
என்று குறிப்பிடுகிறார். இன்றும் கூடச் சுதந்திர தினம், குடியரசு தினம்
ஆகிய நாள்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் நடிகர், நடிகைகளின்
பேட்டிகள் அதிகம் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. தேசியக் கொடியைத்
தலைகீழாக ஏற்றும் அதிகாரிகள், அரசியல் வாதிகள் இருக்கும் பட்சத்தில்
கவிஞரின் தேசப்பற்றுப் போற்றுதற்குரியது. நம்பிக்கையோடு தொடங்கப்படுகிற
ஒவ்வொரு பயணமும் நச்சு அழிக்கின்ற யாகங்கள் தொடங்க வேண்டும் என்ற
குறிப்புப் பொருள்பட 'சர்ப்பயாகம்' என்ற படைப்பையும், இந்தியத்
திருநாட்டின் வளர்ச்சிக்காகப் படைத்துள்ள பாங்கினையும் அறிய முடிகிறது.
வடிவம்
மரபுக்கவிதைகளின் பிள்ளையான சிற்பி தமிழில் எழுந்த முதல் கதைக்கவிதையான
'மௌன மயக்கங்கள்' எனும் புதுமையின் தோழனாகவும் பரிணமிக்கிறார்.
எண்ணங்களை வெளிப்படுத்த வடிவம் வேண்டும். அந்த வடிவம் எண்ணங்களை
எடுத்துச் சொல்லும் பாலமாகத் திகழ வேண்டும். பாரதியார், 'எளிய நடை,
எளிய பதம், எளிதில் அறிந்து கொள்ளும் சந்தம், பொது மக்கள் விரும்பும்
மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது
தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்' (பாஞ்சாலி சபதம் முன்னுரை)
என்று குறிப்பிடுகிறார். சிற்பி, பாரதியின் வழிவந்த காரணத்தால், புதிய
இலக்கிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஓர் இலக்கிய வடிவம்
மற்றொரு இலக்கிய வடிவத்தின் மீது தாக்கம் செலுத்துவது இலக்கிய
வளர்ச்சியில் தவிர்க்க இயலாது (சிற்பியின் கட்டுரைகள், பக்.294) என்ற
கருத்தும் ஈண்டு நோக்கத்தக்கது. புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்தி
அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்.
எளிய தமிழ், தெளிந்த நீரோட்டமாகக் கவிதை அமைந்துள்ளது.
தாக்கம்
கவிஞர் சிற்பி கோவை நகரப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்கிறார். தன்
நண்பனின் அந்தரங்க வாழ்க்கையை இலக்கியமாகப் படைத்திருப்பதால் கவிஞரின்
இளமைக்கால அனுபவங்கள் (கையயழுத்து பிரதி நடத்தியது). நினைவுகள் அவர்
வாழ்ந்த நகரப் பின்னணி (நெசவுத் தொழில் ஆலைச் சங்கு ஒலி), ஆகியவற்றை
இக்கவிதையில் காண முடிகிறது. அவளின் அழகில் மயங்கிய அவன் உரைக்கும்
மொழிகளின் போது சிலப்பதிகாரத்தின் (கோவலன் கூறும் குறியாக் கட்டுரை)
தாக்கத்தையும், அவள் ஒருமுறை அவனைச் சந்தித்து விட்டுத் திரும்பும்போது,
'வந்த சுவடு தெரியாமல் போன காற்றைப் போல அடுத்த கணம் நீ காணாமல்
போய்விட்டாய்' என்று கூறுமிடத்தில் மாங்கனியில் கண்ணதாசனின் (தென்றல்
வந்து போனதற்குச் சுவடு ஏது?) தாக்கத்தையும், 'நான் வானத்தையும் கரு
மேகங்களையும் தலையில் சுமந்து கொண்டு அவரை நெருங்கினேன்' என்று அவன்
கூறுமிடத்தில் பாரதிதாசனின் கவிதை வரிகளின் (கடைக்கண் பார்வை காதலியர்
காட்டிவிட்டால்...) தாக்கத்தையும் காணமுடிகிறது.
தலைப்புப் பொருத்தம்
ஒரு பெண்ணின் கூடல் இன்பத்தால் மயங்கும் ஓர் இளைஞன் 'குதிரை மேல்
பறக்கும் உன்னை (அவளை) விடாமல் துரத்தித் துரத்தித் தொடர்கிறதே என்
இதயப்புரவி. இல்லை, இல்லை நீ ஒரு புதிர். உன்னை என்னால் விடுவிக்கவே
முடியவில்லை' என்று மயங்கிக் கிடக்கிறான். இவ்வாறு மயங்கிக் கிடக்கும்
இளைஞர்களை நோக்கிக் கவிஞர், 'தோழரே நினைவில் வையுங்கள் இரண்டு கண்களில்
மயங்கிக் கிடப்பது அல்ல வாழ்க்கை! நான்கு கைகள் ஒரே திசை வழியில் நோக்கி
நிற்பதே இலட்சிய வாழ்க்கை' என்று இறுதியாகக் கூறும் கூற்று இளைஞர்களை
முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக அமைகிறது.
தீர்வை நோக்கிய பயணம்
பாலுணர்வு ததும்பும் கருப்பொருளை மிகுந்த எச்சரிக்கையுடன் தமிழ்க்
கவிதையில் எடுத்தாண்ட தனித் தன்மையை மௌனமயக்கங்களில் காண முடிகிறது.
காதல் உணர்ச்சியைக் கத்தி முனையில் நடப்பது போல் வெகு கவனத்தோடு
கையாண்டிருக்கிறேன் என்று கவிஞர் நூலின் முன்னுரையில்
குறிப்பிட்டிருக்கிறார். எனினும் தமிழ்த் திறனாய்வாளர்கள் இந்நூலை
முறையாக விமர்சிக்கவில்லை என்ற மனக்குறையைத் தன் கவிதை மூலம்
வெளிப்படுத்தும் கவிஞர் 'இன்றும் கூட என் மொழி விமர்சகர்களோடு எனக்கு
நேசமும் இல்லை, பாசமும் இல்லை' (சிற்பியின் கட்டுரைகள், என் எழுத்து,
பக்.542) என்று கூறுகிறார். அவளின் மீது கொண்ட தீராக்காதலில் மூழ்கிக்
கிடக்கும் அவளை, இன்னுமா தூக்கம்? என்று தோழர் கேட்பது, கவிஞர் உள்ளே
ஒரு குறிப்புப் பொருளை வைத்தே கேட்பதாகத் தோன்றுகிறது.
ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் பாடிய பாசுரங்கள் குறிப்பிடத் தக்கவை.
ஆண்டாள் தன் தோழிகளை மார்கழி மாதம் அதிகாலையில் துயில் எழுப்பும்
நிகழ்வைக் குறிப்புப் பொருளை வைத்தே ஆண்டாளின் துயில் எழுப்பும்
பாடல்கள் (5) உள்ளது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக
வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் அனைவரையும் ஆன்மீக விழிப்புணர்வு
பெறப்பாடியதாகவே ஆண்டாள் பாடல்களைக் குறிப்பிடுகின்றார். அதுபோலவே
தோழரின் இன்னுமா உறக்கம்? என்ற வினா நம் அனைவரையும் தீர்வை நோக்கிய
பயணமாகக் கருதியே இக்கூற்றை வைத்தார் என்ற குறிப்புப் பொருள் புலப்படத்
தன் படைப்பைப் படைத்திருப்பதன் மூலம் கவிஞரின் இலட்சியக் கனவு
நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641 028
பேச : 9842495241.
www.tamilauthors.com
|