வசனம் எழுதுவது எப்படி?


சுதேசமித்திரன்

 


சனம் என்றால் வஸ்திரம் என்பதாகவும் ஓரர்த்தம் உண்டு. அதனால்தானோ என்னவோ எமது வசனகர்த்தாக்கள் வகை வகையாக வசனம் எழுத விரும்புகிறார்கள். ஆடை என்பது நிர்வாணத்தை மூடுவதற்காக என்பது ஒழிந்து தோற்றத்தை அழகுபடுத்த என்பதாக மாறிவிட்ட வகையில்தான் வசனமும் இஷ்டத்திற்கு எழுதப்படுகிறதோ என்று தோன்றுகிறது.

கட்டபொம்மன் கப்பத்தைத் தூக்கிக்கொண்டு தென்னாடு முழுக்க ஜாக்சனின் பின்னால் அலைந்தான் என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? என்று நாடக பாணியில் நடிகர் திலகம் முழக்கமிட்டதைப் பார்க்க நேர்கையில் குமட்டிலிருந்து வருகிறது சிரிப்பு. இந்த சிரிப்ப, நடிகரைப் பார்த்து வருவதல்ல. வசனகர்த்தாவைப் பார்த்து வருவது.

சின்னதாக ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும், வசனகர்த்தா தன் மொழிப்புலமையை முழுக்க முழுக்க கொட்டித் தீர்த்து வந்திருக்கிறார் என்பதே நாம் காணக் கிடைப்பது.

மனோகராவில் வசந்தசேனை! வட்டமிடும் கழுகு! வாய்பிளந்து நிற்கும் ஓணாய்!! நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு!!! என்று அடுக்கடுக்காய் பொழிகிறது வசனம். சிவாஜி கணேசனின் கர்ஜனைக் குரலில் கேட்பதற்குத்தான் எத்தனை ஆசையாய் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் இம்மாதிரி பேசிக்கொண்டு அலைந்தார்களா என்று யோசிக்கப் புறப்பட்டால் முன்னால் ஒரு சுவர்தான் வந்து முட்டுகிறது.

ஒரு நடிகர், வாங்கிய காசுக்கு அதிகமாக நடித்தால் மிகை நடிகர் என்று பழிக்கப்படுகிற கலாச்சாரம் இருக்கிறதே தவிர, ஒரு வசனகர்த்தா இஷ்டத்துக்கு எழுதினால் அதை மிகையெழுத்து என்று தூற்றுகிற சமுதாயமாக ஏன் இல்லாமல் போயிற்று என்பதுதான் தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் வசனம் 'எழுத'ப்பட்டது! 'எழுத'ப்படுகிறது!

வசனத்தை பலரும் எழுதுகிறார்கள். கருணாநிதி எழுதினார், பஞ்சு அருணாசலம் எழுதினார், டீராஜேந்தர் எழுதினார், மணிவண்ணன் எழுதினார், மணிரத்னம் எழுதினார, சுஜாதா எழுதினார், அவர் எழுதினார, இவர் எழுதினார்... பிற்பாடு வந்த பலரும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்!

இதில் கருணாநிதி அந்தக்காலத்தில் எழுதிய அடுக்குமொழி பாணியைப் பின்பற்றி டீ.ராஜேந்தர் வசனம் எழுதுகிறேன் என்று செய்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துச் சொல்லவும் தரமன்று! கலைஞர் என்றால் கருப்புக் கண்ணாடி அணிந்திருப்பார், எம்ஜியார் என்றால் கூட ஒரு தொப்பியும் அணிந்திருப்பார, சோ என்றால் தலையை மொட்டையடித்திருப்பார் என்று கார்ட்டூனிஸ்டுகளின் வசதிக்காக அவர்கள் வாழ்வதைப்போல டீயார் என்றால் அடுக்குமொழி வசனம் பேசுவார் என்பது ஒரு அடையாளம் என்பதாக அவரே கருத ஆரம்பித்ததுதான் ஆச்சர்யம்! இதில் உண்மை என்னவென்றால் அடுக்கு மொழி எழுதுவதுதான் உலகத்திலேயே சுலபமானது!

பாரதிக்க, வாத்தியார் 'கணக்கு' என்றதும் கணக்கு பிணக்கு மணக்கு எனக்கு ஆமணக்கு என்று வார்த்தைகள் மனதில் ஓடியதாக சொல்வார்கள். சிறு வயதில் இதைப் படித்தபோது பாரதியும் என்னை மாதிரி கணக்கில் தற்குறி போலிருக்கிறது என்றுதான் நான் நினைத்தேன். உண்மையில் இது கவிஞனின் மனத்தில் இயல்பாக எழும் அடுக்குமொழிக்கான உதாரணம். டீயார்தான் அடுக்குமொழி எழுதுவார் என்றால் ஏன் சுஜாதா எழுதமாட்டாரா? எழுதமாட்டார். அது தேவையில்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனால் டியாரோ சினிமாவில் மட்டுமல்லாமல் பொது வாழ்விலும் அதையே செய்து, பார்ப்பவர்கள் பரிதாபப்படுகிற அளவுக்கு கொண்டுபோய்விட்டதுதான் கொடுமை.

அதே மாதிரிதான் பஞ்ச் வசனங்கள்! படத்தில் எது இருக்கிறதோ இல்லைய, பஞ்ச் வசனங்கள் மாத்திரம் இருந்துதான் ஆகவேண்டும். வசனத்தின் ஹீரோயிஸம் பஞ்ச் வசனம்தான்! நா ஒரு தடவெ சொன்னா, நூறு தடவெ சொன்னா மாதிரி! வில்லு பவர்
பவர்ஃபுல்லு! ரூம் போட்டு யோசிப்பது என்பதாக விளையாட்டாக சொல்கிறார்கள, அந்தக் கூற்று இந்தக் கூத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும். (பார்த்தீர்களா, கூற்று என்றதும் கூத்து என்று வந்து தொலைக்கிறது. இந்தக் கட்டுரையை நான் இதே அடுக்கில் கூத்த, நேத்து, பாத்து, வேத்து, சாத்து, காத்து, சேத்து, பூத்து, ................ என்று எழுதிக்கொண்டே போனால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்!)

பஞ்ச் வசனம் என்பது வம்படியாகவே யதார்த்தத்தை மீறுவது. படம்தான் யதார்த்தமாக எடுக்கப்படுவதில்லை. வசனமாவது யதார்த்தமாக எழுதப்படக்கூடாதா என்பதே எனது ஆதங்கம்! ஒரு பெரிய நட்சத்திரத்தின் படத்துக்கு பஞ்ச் வசனம் தேவைப்படுகிறது என்றால் அதைத் தவிர மற்ற வசனங்கள் ஏன் யதார்த்தமாக இருக்கக்கூடாது என்பதே எனது கேள்வி!

முள்ளும் மலரும் படத்தில் ஒரு முக்கியமான வசனம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. அண்ணன் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்புகிறான். அவனுக்கு கை துண்டிக்கப்பட்டது தங்கைக்குத் தெரியாது. ஷோலே சஞ்சீவ் குமார் மாதிரி அண்ணன் போர்வை போர்த்திக்கொண்டு ஜீப்பிலிருந்து இறங்கி நிற்கிறான். தங்கை ஓடிவருகிறாள். சந்தோஷத்தோடு அவனைக் கட்டியணைக்கிறாள். அப்போது ஒரு கரம் இல்லை என்பது தெரிகிறது. இந்தக் காட்சியில் நம் ஆட்களை விட்டு வசனம் எழுதச் சொல்லியிருந்தால் எத்தனை வெள்ளைக் காகிதங்களை வீணாக்கியிருப்பார்கள் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்!

மகேந்திரன் அப்படிச் செய்யவில்லை. அந்தக் காட்சி உணர்ச்சிகளின் காட்சி. அழுகை வெடிக்கும்போது வசனமே அழுகை மாத்திரம்தான். அவள் அழுகிறாள். அப்போது அண்ணன் எதையாவது சொல்லியாக வேண்டும். அவளைத் தேற்றும் விதமாக அவன் சொல்கிறான், 'என்னாச்சு? ஒன்னும் இல்ல!' அவ்வளவுதான் வசனம். ஒரு கையே போனதற்கு இவ்வளவுதான் வசனம்! இதற்கு மேல் ஒரு வார்த்தை எழுதிப் பாருங்கள். அப்போது தெரியும் மகேந்திரனின் அருமை!

அதேபோல் மகேந்திரனின் இன்னொரு படமான உதிரிப்பூக்கள் க்ளைமாக்ஸ்! இரக்கமேயில்லாத வில்லன் ஊர் மக்களால் தற்கொலை செய்துகொள்ளும்படி பலவந்தப்படுத்தப்படுகிறான். ஆற்றில் மார்பளவு நீரில் நிற்கிறான். வெளியே வந்தால் மற்றவர்கள் கொன்றுவிடுவார்கள். கொலையுண்டு சாவதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்பதை அவன்தான் அப்போது தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேரும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் தற்கொலைக்குத் தயாராகிறான். திருந்துகிற சோலியெல்லாம் இல்லை. நீரில் மூழ்குமுன் கடைசியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்தவனாக அவன் சொல்கிறான். 'இந்த ஊர்ல நான் ஒருத்தன்தான் கெட்டவனா இருந்தேன்! இப்ப உங்க எல்லாரையும் கெட்டவங்களா ஆக்கிட்டேன்!' அவ்வளவுதான் வசனம். இதனால்தான் வசனகர்த்தா என்றால் இன்றும் மகேந்திரன் நினைக்கப்படுகிறார்.

அவரைப் போலவே பாலு மகேந்திராவும். அவரது பல படங்கள் வசனங்களுக்காக நினைவில் தங்குபவை. அதிகம் பேசப்படாத அவரது படமான வண்ண வண்ணப் பூக்கள் டீவியில் ஓடினால் அவசியம் பாருங்கள். எத்தனை யதார்த்தமான வசனம் அவரால் எழுதப்படுகிறது என்பது தெரியும்.

அண்மைக்கால மறைவு வரைக்கும் திரையுலகின் முடிசூடா வசன மன்னாக இருந்தவர் சுஜாதா! என்னைப் பொருத்தவரை சுஜாதாவின் வசனங்கள் வைரமுத்துவின் கவிதைகள் போல வசீகரமானவை. அவை ஒருபோதும் யதார்த்தமாக இருந்ததேயில்லை. அதேபோல்தான் பாலகுமாரனும். இவரது பாணி வித்தியாசமானது. அவரது வசனம் புலம்பல்கள் மற்றும் போதனைகள் இவற்றின் இடையே ஊசலாடுகின்றது. நாயகனில் இவர் எழுதிய முக்கியமான வசனமாகக் கருதப்படும் நாலு பேருக்கு நல்லது செய்யலாம்னா எதுவுமே தப்பில்ல என்கிற வசனம் ஓர் உதாரணம்.

இதை உணர்ந்ததாலோ என்னவோ மணிரத்தினம் தானே எழுதிப் பார்த்தார். 'ஏன்?' இந்த ஒற்றை வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது என்று பார்வையாளன் கூச்சலிடத் தொடங்கியபோது அவர் வசனம் எழுதுவதை நிறுத்திவிட்டார். அவரது வசன மொழி ஆங்கிலப் படங்களை ஒட்டியதாயிருந்ததே அவரது பிழையாகிவிட்டது.

அவர் கைக்கொண்டது ஆங்கிலப் படங்களில் ஹாலிவுட் கமர்ஷியல் படங்களின் வசன பாணி. அந்தப் படங்கள் உலகமெங்கிலும் வெளியிடப்படவேண்டிய அவசியம் கருதிஇ சுருக்கமான வசனங்களால் நிரம்பியிருக்கும். பத்து வார்த்தை பேச வேண்டிய இடத்தில் ஒரே ஒரு ஆகப் பொருத்தமான வார்த்தையை அவர்கள் எழுதுவார்கள். மிகக் கச்சிதமான உரையாடல்கள் பாத்திரங்களுக்குள் நிகழும். அரை நிமிடத்தில் முடிந்துவிடுகிற ஒரு காட்சிக்குள் இரண்டு பாத்திரங்கள் ஆகச்சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிக்கொள்ள வேண்டுமானால் இருவரும் பெரும் மொழிவல்லுனர்களாக இருந்தேயாகவேண்டும். உண்மையில் அந்த அரை நிமிடக் காட்சிக்கான நாலே நாலு வசனம் (பெரும்பாலும் அவை நாலே நாலு வார்த்தைகளாகவே இருக்கும்) நாற்பது நாட்கள் யோசித்து எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே உண்மை. இதனாலேயே ஹாலிவுட் ப்ளாக் பஸ்டர் படங்களின் வசனங்கள் புத்திசாலித்தனமாகத் தோன்றும்போதும் யதார்த்தத்தை மீறுவனவாகவே அமைந்துவிடுகின்றன. இந்த பாணியை முயன்று பார்த்ததே மணிரத்தினம் எனும் வசனகர்த்தாவின் தோல்விக்கான காரணம். ஏனென்றால் நம்மாட்களுக்கு சுருக்கமாகப் பேசுவது என்றால் என்ன என்பதே தெரியாது.

பாலச்சந்தர் பல படங்களில் வளவளவென்று பேசும் பாத்திரங்களை உற்பத்தி செய்து தந்தார். ரொம்பவே அதிகமாகப் பேசிய வகையில் அவர்களும் யதார்த்தம் என்றால் வீசை என்ன விலை என்றே கேட்டார்கள். சுஜாதாவோடு ஒப்பிடுகையில் கிரேஸிமோகன் எவ்வளவோ தேவலை. இருந்தாலும் டைமிங் நகைச்சுவையோடு இவரது சோலி முடிந்துவிடுகிறது.

ஓரளவுக்கு இயல்பான வசனங்களை முயன்று பார்ப்பவர்களில் கமலஹாசனும் ஒருவர். இருந்தாலும் வசனத்துக்காக பேசப்படுவதை அவரது ஸ்டார் இமேஜ் தடுத்துவிடுகிறது.

உண்மையான வசனம் என்பது எப்படி இருக்க வேண்டும்? உண்மையான வசனம் முதலில் வசனமாக இருக்கக்கூடாது. பேச்சாக இருக்க வேண்டும். மொழிப் புலமையை புலப்படுத்துவதாக இருக்கக்கூடாது. எழுதுபவனின் புத்திசாலித்தனத்தைப் பறைசாற்றுவதாக இருக்கக்கூடாது. காட்சிக்கும் பாத்திர இயல்புக்கும் சூழ்நிலைக்கும் தேவைப்படுவதை மட்டுமே பேசுவதாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பிழைகள் நிறைந்ததாக இருக்கவேண்டும்.

யதார்த்தத்தில் பேசும்போது யாருமே பிழையில்லாமல் பேசுவதேயில்லை. சுகிசிவம் போன்றவர்கள் அவ்வாறு பேச முயலலாம். இருந்தாலும் அவர்களுக்குக்கூட நூறு சதவிகித சாத்தியமானதல்ல அது.

உதாரணமாக நடிகர் நாசர் ஆரண்யம் வெளியீட்டில் பேசிய உரையை எடிட் செய்யாமல் அப்படியே எழுதிப் பார்த்தபோது அனாவசியமாக நாற்பது 'வந்து' வந்திருந்தது. நாசர் மட்டுமல்ல, 'நான் வந்து, வரும்போது வந்து, வழியில வந்து' என்று வந்து என்கிற வார்த்தையை அதிகம் உபயோகிப்பவர்கள் பேரதிகம். இது மேடைப்பேச்சில் யோசிப்பதற்கான இடைவெளியில் விழும் வார்த்தை.

இதேமாதிரி பல அபத்தங்கள் சம்பாஷணையில் நிகழும். 'நான் சொல்ல வந்தத நீங்க சரியா புரிஞ்சுக்கங்க!' என்று சொல்ல ஒருவர் விரும்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் பேச ஆரம்பிக்கிறார், 'நான் சொல்ல வந்தத நீங்க சரி...' இங்கே அவருக்கு இன்னும் பொருத்தமான வார்த்தை நினைவு வருகிறது. அவர் இப்படி முடிக்கிறார், 'தப்பா புரிஞ்சுக்கப் போறிங்க!' இந்த வசனத்தில் 'சரி' என்கிற வார்த்தை தேவையில்லாமல் உச்சரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அது கவனத்தில் கொள்ளப்படாமல் சம்பாஷணை தொடரும். இது யதார்த்த வசனத்திலும் மேலதிக கவனம் செலுத்தப்படும் ஒரு நிலைப்பாடு.

என் ஞாபகத்தில் உள்ளவரை இந்த உத்தியைக் கையாண்டது, கற்றது தமிழ் ராம் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

இதற்கு முந்தைய பாராவை எடுத்துக்கொள்ளுங்கள், என் ஞாபகத்தில் உள்ளவரை என்று வரும்போது, நினைக்கிறேன் என்று வருவது அவசியமில்லாதது. எழுதும்போதே இத்தனை பிரச்சனைகள் வரும்போது பேசும்போது சுத்தமாகப் பேச உங்களால் முடியுமா இல்லை என்னால் முடியுமா?

 


நன்றி: உயிரோசை

 

 

 

 www.tamilauthors.com