பத்மா இளங்கோவனுக்குப் பாராட்டு..!!
 


புலம்பெயர்ந்த மண்ணில் சிறுவர் இலக்கியத்துறை
கவனத்திற்குரிய முக்கியமானதொன்றாகும்..!
பத்மா இளங்கோவனுக்குப் பாராட்டு..!!



'
சிறுவர்களுக்கான பாடல்கள் புனைவதென்பது சிரமத்திற்குரிய விடயமென்றே கூறிவிடலாம். பெருங்கவிஞர்கள்கூட இப்பணியிலிருந்து விலகி பின்வாங்கிவிடுவதுண்டு. சிறுவர் இலக்கியம் - பாடல்கள் படைக்கும்போது மிகமுக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, எளிமையான நடைதனிலே - இலகுதமிழ்ச் சொற்களிலே பாடல்கள் அமைதல் வேண்டும். சிறுவர்களின் உள்ளங்களில் அப்பாடல்கள் அழிக்கமுடியா வர்ணங்களாய் தீட்டப்பட வேண்டும். ஓசை நயம் கோலோச்ச, எதுகை மோனை கைகோர்த்து ஜோடியாக நடைபயின்று ஏதாவதொரு கருத்தை எடுத்துக்கூறி, சிறுவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டித் தூண்டித் தூண்டாமணி விளக்காக ஒளிபெறச் செய்வதென்பது படைப்பாளியின் பாரிய கடமையாகும். 'செந்தமிழ் மழலைப் பாடல்கள்', செந்தமிழ் சிறுவர் பாடல்' நூல்கள் கவிநயம், ஓசைநயம், மொழியின் வீச்சு மட்டுமல்லாமல் பலவிதமான கருத்துக்களையும் உள்ளடக்கியிருப்பதோடு சிறுவர்களைக் கவரும்வகையில் அழகுற வடிவமைக்கப்பட்டுமுள்ளன. அந்தவகையில் புலம்பெயர்ந்த மண்ணில் சிறுவர் இலக்கியத்தளத்தில் தனக்கென்றோர் தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் பத்மா இளங்கோவன் பாராட்டுக்குரியவர்.'

இவ்வாறு பாரிஸ் மாநகரில் அண்மையில் (23 - 11 - 2014) நடைபெற்ற 'வாசிப்பு மனநிலை விவாதம்' - (14) நிகழ்வில் பத்மா இளங்கோவனின் 'செந்தமிழ் சிறுவர் பாடல்', செந்தமிழ் மழலைப் பாடல்கள்' நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்கிய எழுத்தாளர் தில்லை நடேசன் குறிப்பிட்டார்.

கவிஞரும் சினிமா இயக்குனருமான அருந்ததி பேசுகையில், 'புலம்பெயர்ந்த மண்ணில் சிறுவர் இலக்கியத்துறை கவனிக்கப்படவேண்டிய முக்கியமான துறையாகும். இத்துறையில் பங்களிப்புச்செய்து தமிழகத்திலும் விருதுபெற்ற பத்மா இளங்கோவன் தொடர்ந்தும் இலக்கியத்துறையில் பங்களிப்புச்செய்ய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.'
இந்நிகழ்வில் மேலும், இலங்கையில் வாழும் எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித் எழுதிய 'உம்மத்' நாவல் குறித்து விஜி கருத்துரை வழங்குகையில்;, 'கிழக்கு முஸ்லீம் மக்கள் மத்தியிலுள்ள பழமைவாத கட்டமைப்பு, தீவிரவாதப் போக்குகள், இயக்கங்களின் அடாவடித்தனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள், மக்களின் வறுமைநிலை ஆதியன குறித்துச் சித்தரிக்கும் நூலாக, அந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த அனுபவ வெளிப்பாடாக 'உம்மத்' நாவல் சிறப்பாக அமைந்துள்ளது' என்றார்.


பத்மா இளங்கோவன் ஏற்பரையாற்றினார்.

சோபாசக்தி, வி.ரி.இளங்கோவன், புஸ்பராணி, தர்மினி ஆகியோரும் கருத்துக்களை வழங்கினர். அசுரா இந்நிகழ்வுக்குத் தலைமைவகித்தார்.

 

 


 

 

 www.tamilauthors.com