அவமரியாதைகளை அலட்சியம் செய்யுங்கள்
கவிஞர்.இரா.இரவி
வெற்றிக்கொடி நாட்டிய புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திரு.இராஜா அவர்கள்
பெற்ற வெற்றிக்கு முன்னால் சந்தித்த அவமானங்கள் பல. கோவையில் ஒரு
நகைக்கடையின் சார்பில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை நடுவராகக்
கொண்டு தங்க நகை வாங்கியது ஆடம்பரமா ? சேமிப்பா ? என்ற தலைப்பில்
பட்டிமன்றம் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டது. திரு.இராஜா அவர்கள், ஒல்லியாக
இருப்பதால் பேச்சாளர்களுடன் காரில் பயணப்படும் பொழுது ஓரமாக ஒட்டிக்
கொண்டு சென்று விடுவது வழக்கம். உடன் பயணம் செய்யும் சக பேச்சாளர்கள்
பேசுவதை கவனமாக உற்றுநோக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இந்த பயிற்சி
தான் அவரை வெற்றி பெற்ற பேச்சாளராக பின்னர் மாற்றிக் கொள்ள உதவியது.
கோவையில் பட்டிமன்றத்தில் பேசுவதற்கு திரு.லியோனி அவர்களைத் தவிர
அழைப்பிதழில் அச்சிட்ட எல்லோரும் வந்து விட்டார்கள். ஆனால் அன்று நடந்த
ஒரு கலவரம் காரணமாக பஸ்போக்குவரத்து தடைப்பட்டதால் திண்டுக்கல் திரு.லியோனி அவர்கள் வர இயலவில்லை என தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. உடன்
தகவல் கிடைத்ததும் அவருக்குப் பதிலாக இவர் பேசுவார் என திரு.இராஜாவை
காட்டி இருக்கிறார் திரு.சாலமன் பாப்பையா. கைலி கட்டி பனியன் அணிந்து
சென்று இருந்த இராஜாவை பார்த்த நகைக்கடை அதிபர் இவரா ? பேசப் போகிறார் என
மிகவும் ஏளனமாக பார்த்து இருக்கிறார்.
நீ தான் பேசுகிறாய் உடன் தயாராகி விடு என திரு. சாலமன் பாப்பையா அவர்கள்
சொல்லவும். இவருக்கு ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு புறம்
பயமும் வந்து இருக்கிறது. இவருக்கு தெரிந்த விஷயங்களை எல்லாம் ஏற்கனவே
மற்ற பேச்சாளர்களுக்கு சொல்லி விட்டார். சரக்கு எதுவுமில்லை. ஆயினும்
மற்றவர் பேசுவதை வைத்து மடக்கிப் பேசி விடலாம் என்ற தைரியத்தில் மேடையேறி
விட்டார். மேடையில் பேச்சாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வெள்ளி விளக்கு
நினைவுப் பரிசும் வழங்கினார்கள். பரிசுகளை வழங்கிக் கொண்டு வந்த நகைக்கடை
அதிபர், திரு. இராஜாவிடம் வரும்போது மெதுவாக, நீ பேசுவதற்குள் திரு.லியோனி
வந்து விட்டால் என்ன செய்வாய் என்று கேட்டிருக்கிறார். என் பெயர்
அழைப்பிதழில் இல்லை. அவர் பெயர் தான் உள்ளது. அவர் வந்து விட்டால் நான்
இறங்கி விடுவேன் என்றார்.பட்டிமன்றம் துவங்கியது. நகை வாங்குவது ஆடம்பரமே
என்ற அணியிர் திரு.இராஜா எல்லோரும் பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக
பேசி இருக்கிறார். இவரா? பேசப் போவது என ஏளனம் செய்த நகைக்கடை அதிபர்
திரு.இராஜா அவர்களுக்கு கை கொடுத்துப் பாராட்டி, மன்னிப்பும் கேட்டு
இருக்கிறார். திரு.இராஜா அவர்களின் பட்டிமன்ற நிகழ்வுகளில் நடந்த மற்றொரு
சம்பவம். மதுரையில் தமிழறிஞர் திரு. சாலமன் பாப்பையா அவர்களை நடுவராகக்
கொண்டு பட்டிமன்றத்தில் பேச சென்று இருக்கிறார்கள். மேடையில் நடுவர்
உட்பட பேச்சாளர்கள் ஏறி அமர்ந்து விட்டனர்.
திரு.இராஜா மேடைக்கு ஏறும்போது அவரைத் தடுத்து விட்டனர். இவர் தான் ஒரு
பேச்சாளன் என்றும் தன்னை மேடையில் ஏற விடுங்கள் என்று சொல்லியும் அவர்கள்
நம்பவில்லை. அவரைப் பேச்சாளராக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அவமானத்தை அவர்
பொறுத்துக் கொண்டு அமைதி காத்தார். பேச்சாளர்களுக்கு மரியாதை செய்யும்
பொருட்டு, வரிசையாக பெயர் சொல்லி அழைத்த போது, இராஜா என்ற போது மேடையில்
இவரைக் காணவில்லை. உடன் நடுவர் எங்கப்பா? இராஜாவைக் காணோம் என்றதும், கீழே
இருந்து இராஜா இதோ இங்கே இருக்கேன் என்றார். வாப்பா மேடைக்கு என்றார்
நடுவர். விட மறுக்கிறார்கள் என்றார் திரு.இராஜா. விடுங்கப்பா, அவர் ஒரு
பேச்சாளர் என்று நடுவர் சொன்ன பிறகு தான் அவரை மேடை ஏற
விட்டிருக்கிறார்கள்.
இது போன்று பல அவமானங்களைச் சந்தித்து, அவற்றை இலட்சியம் செய்யாமல்,
அலட்சியம் செய்ததன் காரணமாகவே, இன்றைக்கு அவர் சிறந்த பேச்சாளர் என்
நிலைக்கு உயர முடிந்தது. அவமானம், தோல்வி ஏற்படும் பொழுது துவண்டு
விடுகிறோம். அவமானத்திற்கும், தோல்விக்கும் துவளாமல் தொடர்ந்து முயற்சி
செய்து கடினமாக உழைப்பவர்கள் வாழ்க்கையிவ் வெற்றி பெறுகிறார்கள்.
வெற்றிக்கனி என்பது தானாக வந்து நம் மடியில் விழாது. வெற்றிக்கனி
ஈடுவதற்கு நாம் தான் நம்மை தயார்படுத்த வேண்டும். பயிற்சி என்பது மிகவும்
அவசியம்.
eraeravi@gmail.com
|