எஸ்.பொன்னுத்துரையும் முஸ்லிம்களும்
ஏ.பீர் முகம்மது
தமிழ்
இலக்கிய உலகில் தனக்கொரு தனியிடத்தைத் தேர்ந்து அதன்வழி பிசகின்றித்
தமிழ் ஊழியம் செய்து உச்சத்தைத் தொட்டவர் எஸ்.பொன்னுத்துரை. அவரின்
எழுத்தும் எழுத்து நடையும் பேச்சும் பேச்சின் தொனியும் தனித்துவமானது.
இலங்கையில் அறுபதுகளில் மேற்கிளம்பிய துடக்கு மனப்பான்மைகொண்ட
முற்போக்கு இலக்கியப் பணியாளர்களினால்கூட அவரின் தமிழ் இலக்கிய வாழுகையை
இல்லாமல் செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணம் நல்லூரிலே பிறந்து
மட்டக்களப்புவாசியாகவே வாழ்ந்து சிகரங்களைத் தொட்ட இந்த எழுத்துலகச்
செம்மலின் இறுதி மூச்சு அவுஸ்திரேலியாவிலே 2014
நவம்பர் 26இல் அடங்கிவிட்டது. அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரின்
இலக்கியம்சார் ஊழியத்தின் எச்சங்கள் இன்னமும் நம்மிடையே மிச்சமாய்
உள்ளன. இனி நமது அணியின் பணி அவர் பற்றிய தேடலாகும். அதன்வழி வந்ததே
அவர் முஸ்லிம்களோடு கொண்டிருந்த தொடர்புகள்பற்றியதான இந்த எத்தனமாகும்.
பாலில் நெய்யாக மறைந்திருக்கும் பல விடயங்கள் வெளிக்கொண்டுவரப்படுதல்
சேமமானது என்பது எனது கட்சி. அந்த முயற்சியே இந்த ஆக்கமாகும்.
முஸ்லிம்களுடன் எஸ்.பொன்னுத்துரை கொண்டிருந்த தொடர்புகள்பற்றி நான்கு
சிறிய தலைப்புகளின் கீழ் நோக்கலாம்.
(அ) முஸ்லிம்களோடு அவர் தொடர்புபட்டிருந்த வாழ்வுமுறை.
(ஆ) நெருங்கிப்பழகிய ஆளுமைகள்
(இ) முஸ்லிம்கள்தொற்றி அவரின் கருத்தியல்
(ஈ) பரஸ்பரம் ஏற்பட்ட தாக்கங்கள்
முஸ்லிம்களோடு அவர் தொடர்புபட்டிருந்த வாழ்வுமுறை
எஸ்.பொன்னுத்துரை தன்னை ஒரு நாத்திகவாதியாகவே கருதினார். அவ்வாறே தனது
தனிப்பட்ட வாழ்வுமுறையையும் அமைத்துக் கொண்டார். ஆனாலும் 'இஸ்லாமும்
தமிழும்' என்ற நூலை அவர் எழுத ஆரம்பித்தபோது 'அந்த இணை துணையற்ற ஏகனை
நெஞ்சிலே நிறுத்தி இந்த எழுத்துப் பணியிலே என் பேனாவை ஊன்றுகின்றேன்'.
எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறும்போது - இணை துணையற்ற ஏகன்
என்று மனதில் உள்வாங்கும்போது - அவரிலிருந்து நாத்திகம்
வெளியேறிவிடுகின்றது. மேலும் எல்லா மதத்தினரினதும் கடவுள் இணை
துணையற்றவனாக இருந்தாலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இணைதுணையற்ற
ஏகன் என்பது அடிப்படை நம்பிக்கையோடு (கலிமாவோடு) சம்பந்தப்பட்ட
விடயமாகும். முஸ்லிம்களோடு தொடர்புபட்ட விடயத்துக்காக அவர் தன்னளவில்
தனது அடிப்படைக் கொள்கைகளிலும்கூட விட்டுக் கொடுப்புக்குத் தயாரான
ஒருவராக இருந்தார் என்பதைச் சுட்டவே இதனைக் குறிப்பிட்டேன்.
'நான் ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமிய நூல்களைக் கற்றுள்ளேன்.
அரபுமொழியின் இயல்புகள்பற்றியும் அரபுத் தமிழ் வளர்ச்சிபற்றியும்
ஓரளவுக்கு ஆராய்ச்சியும் செய்துள்ளேன்' என்று இஸ்லாமும் தமிழும் என்ற
அதே நூலில் குறிப்பிட்டுள்ளார். இதைச் சொல்லி இன்றோடு நாற்பது வருடங்கள்
கடந்திருக்கின்றன. மேலதிகமாக இன்னும் ஒரு ஆயிரம் நூல்களை அவர்
வாசித்திருக்கமாட்டாரா? ஆராய்ச்சிகள் செய்திருக்கமாட்டாரா? அவரின்
இக்கூற்று முஸ்லிம்கள்பற்றி அறியத் துடிக்கும் ஏக்கம் அவருள் குடி
கொண்டிருந்தது என்பதன் அடையாளமாகும்.
அபுல் கலாம் ஆஸாத் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். அல்-ஹிலால்
என்ற வாராந்த சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர்.அவரின் நேர்மையான
வாழ்வுமுறையையும் இலக்கிய ஆளுமையையும் மிகவும் நேசித்தார்.
இந்தியாவில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த எஸ்.பொன்னுத்துரை தனது
ஆய்வுக்கு 'முஸ்லிம் இந்தியா' என்பதைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்தார்.
அதன்மூலம் முஸ்லிம்களின் உண்மை வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டாhர்.
இதுபோன்ற காரணிகள் எஸ்.பொ.வின் முஸ்லிம் நேயத்தின் அடிப்படைக்கு
காரணியாக அமைந்தன எனக் கொள்ளல் தகும்.
'இஸ்லாமிய வாழ்க்கை முறையின் மேன்மையினையும் சகோதரத்துவத்தினையும்
கம்பளையிலேயே நான் கற்றுக் கொண்டேன்' என்று தன்னுடைய எழுத்தில் எஸ்.பொ.
பதிவு செய்திருக்கிறார். கம்பளையில் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்களோடு
நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. ஸாஹிறாக் கல்லூரியின்
விடுதியில் சில காலமும் பின்னர் வாடகை வீடொன்றிலும் தங்கி வாழ்ந்தவர்.
பொன்னுத்துரையின் கம்பளைக் காலத்தைத் தவிர்த்து அவரது வாழ்வைத்
தரிசித்தல் சாத்தியமல்ல.
'சில உணவு வகைகளை நான் சாப்பிடுவதில்லை. பன்றி இறைச்சி ஹராமானது என்று
நம்பிப் பயில்பவன் நான்.பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களுடன் நான் ஒரே
மேசையில் அமர்ந்து சாப்பிடவும் மாட்டேன்' என்று எஸ்.பொ. அவருக்கே
உரித்தான எழுத்து நடையில் தனது 'வரலாற்றில் வாழ்தல்' என்ற சுயசரிதை
நூலில் பதிவு செய்திருக்கிறார். முஸ்லிம்களின் வாழ்வுமுறையைப்
பேணியவராக அவர் இருந்தார் என்பதை வெளிப்படையாகப் பேசும் துலாம்பரமான
சாட்சியமாக இக்கூற்று அமைந்துள்ளது.
நெருங்கிப்பழகிய ஆளுமைகள்
பிரபல முஸ்லிம் ஆளுமைகளுடன் தொடர்புபட்டு வாழும் சந்தர்ப்பம் அவருக்குக்
கிடைத்தது. பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற பாடசாலைகளிலும் பல
முஸ்லிம் மாணவர்கள் அவரோடு ஒன்றாகக் கல்வி கற்றனர். அதனால் அவர்களுடன்
பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார்
கல்லூரியில் மாணவனாக இருந்தவேளை பலாலி மற்றும் அட்டாளச்சேனை ஆசிரிய
பயிற்சி கலாசாலைகளில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய மன்னாரைச் சேர்ந்த
றஹீம் என்பவர் எஸ்.பொன்னுத்துரையோடு இக்கல்லூரியில் பயின்ற ஒருவரே.
கம்பளை ஸாஹிறா கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி, ஏறாவூர் அலிகார்
மத்திய கல்லூரி போன்ற பிரபல முஸ்லிம் கல்லூரிகளில் ஆசிரியராகக்
கடமையாற்றியவர். மட்டக்களப்பு மத்திய கல்லூரி, வந்தாறுமூலை மத்திய
கல்லூரி போன்றவற்றிலும் முஸ்லிம் மாணவர்கள் இவரிடம் கல்வி கற்றனர்.
அவர்களிற் பலர் தமிழும் சரித்திரமும் பயின்று பயன் பெற்றனர்.
அக்கரைப்பற்று காலிதீன் - ஒலுவில் நூஹ்லெப்பை - நிந்தவூர் றஹீம்; -
சம்மாந்துறை சீனி முகம்மது - காத்தான்குடி உதுமாலெப்பை - ஏறாவூர்
எம்சீ.முகம்மது -ஓட்டமாவடி எஸ். எல் .எம். .ஹனிபா என்று பட்டியல்
நீளமானது. இன்றும்கூட உயிரோடிருக்கும் சிலர் எஸ்.பொன்னுத்துரைமீது
மிகுந்த நன்றியுடையவர்களாய் இருக்கிறார்கள். தன்னிடம் கற்ற யூசுப்
சாஹிப் என்ற மாணவர் பற்றி அவர் சொல்லும் பாங்கு கவனத்துக்குரியது. 'யூசுப்
சாஹிப் என்ற மாணவரை நான் என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். அவருடைய
பங்களிப்பினை நன்றி மறவா மட்டக்களப்பு மண்ணும் மறக்காது என்றே
நம்புகின்றேன். மாணாக்கராக இருந்து கொண்டே கலை - இலக்கிய - உடல் நல
முயற்சிகளுக்கு அவரைப் போன்று ஆக்கமும் ஊக்கமும் அளித்த பிறிதொரு
மாணாக்கனை நான் இன்னமும் என் வாழ்நாளிற் சந்திக்கவேயில்லை. அவர்
மட்டக்களப்புத் தமிழ்க் கலாமன்றத்தின் உயிர்மூச்சாகவும் இயக்க
சக்தியாகவும் இயங்கினார்.' எஸ்.பொ.வின் வாக்குமூலம் இது.
முஸ்லிம்களின் தலைவராகவும் கல்வி அமைச்சராகவம் இருந்த கலாநிதி அல்ஹாஜ்
பதியுதீன் மஹ்மூத் அவர்கள் அரசியலுக்கு வர முன்னர் கம்பளை ஸாஹிராக்
கல்லூரியில் அதிபராய் இருந்தார். தனக்கு 1954
ஆம் ஆண்டு ஆசிரிய நியமனத்தை பதியுதீன் அவர்களே வழங்கினார் என்று
சந்தர்ப்பம் கிடைக்கும்போது குறிப்பிட எஸ்.பொ. தவறுவதில்லை. பின்னொரு
சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்றவரான
ஜே.எம.;எம்.அப்துல் காதிர் தான் அதிபராகப் பணிபுரிந்த காத்தான்குடி
மத்திய கல்லூரியிலே அவரின் விருப்பத்தைப் பெற்று தனது கல்லூரியில்
இணைத்துக் கொண்டார். மட்டுமல்லாமல் ஏறூவூர் அலிகாருக்கு மாற்றம்
கிடைத்தபோது அங்கும் எஸ்.பொ.வை தன்னுடன் சேர்த்துக் கொண்டார். சிறிமா
அம்மையாரின் ஆட்சியில் மட்டக்களப்புத் தொகுதியின் அமைப்பாளராகவும்
ஏறாவூர் பட்டின சபைத் தலைவராகவும் இருந்த எம்.ஏ.சீ.ஏ. ரஹ்மான்
வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்கு அதிபராக நியமிக்க விருப்பம் கேட்டபோது
எஸ்.பொ.அதனை மறுத்தார். பிரபல முஸ்லிம் ஆளுமைகள் பலர் பொன்னுத்துரையை
தங்களோடும் தங்கள் பாடசாலையோடும் வைத்துக் கொள்ள விரும்பிய காரணம் என்ன?
கல்விமான்கள் பலரோடும் அவருக்கு நெருக்கமான தொடர்பிருந்தது. கலாநிதி
அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத், இலங்கையின் முதல் முஸ்லிம் சிவில் சேவை
உத்தியோகத்தரான அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ், புலவர்மணி சரீப்தீன், ஜாமியா
நளிமியாவின் மேலாளர் எம்.ஏ.எம்.சுக்ரி, அட்டாளச்சேனை ஆசிரிய பயிற்சி
கலாசாலை அதிபராகவிருந்த ஒமர்தீன், கல்விப் பணிப்பாளர்களான எம்.எம்.சமீம்,
ஏ.எம்.மஜீது, கலாநிதி எம்.ஏ.நுஹ்மான், கொழும்பு முஸ்லிம் மகளிர்
கல்லூரியின் அதிபரும் கல்விச் சேவை அதிகாரியுமான திருமதி அஸாரியா நுபைல்
போன்றவர்கள் அவர்களுட் சிலராவர். முஸ்லிம்கள்பற்றியதான நல்லெண்ணத்துடன்
வாழ்ந்த எஸ்.பொ.அவர்களுக்கு இவர்களுடனான நட்பும் உறவும்
முஸ்லிம்கள்பற்றிய அவரின் நல்லெண்ணத்துக்கு நீரூற்றியது.
எஸ்.பொன்னுத்துரையின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஒருவர்தான்
எம்.ஏ.ரஹ்மான் என்பவர். 1960இல் அறிமுகமானவர். இருவரும் தமிழ்
இலக்கியத்தின் ஒரு புதிய சக்தியாக மேற்கிளம்பினர். ஒரே இலக்கில்
இருவரும் பயணித்தனர். முற்போக்கு இலக்கியவாதிகளின் புத்திஜீவித
சர்வாதிகாரப் போக்கினையும் தங்களுக்குக் கிண்ணி தாங்குபவர்களுக்கு
மாத்திரம் வர்ணம் பூசும் பக்கச் சார்பான விமர்சன அணுகுமுறையினையும்
எதிர்த்து 1963இல் 'நற்போக்கு இலக்கியம்' என்ற கோட்பாட்டினை
உருவாக்கினர். 1964 இல் கூட்டாசிரியர்களாக இணைந்து 'இளம்பிறை' என்ற
சஞ்சிகையை ஒன்பது வருடங்களாக வெளிக்கொணர்ந்தனர். இச்சஞ்சிகை தமிழ்பேசும்
மக்கள் மத்தியிலே முஸ்லிம் கோலம் புனைந்து கலாசாரத் தூதுவனாக
வெளிவந்ததோடு புதிய ஆற்றல்கள் மின்னல் வெட்டாக வெளிக்கிளம்பவும்
காரணமாயிற்று.; மஹாகவியின் குறும்பா இச்சஞ்சிகையிலேயே முதன்முதலில்
வெளிவந்தது என்பதோடு அது தமிழுக்குப் புதுவடிவமா இல்லையா என்ற
சர்ச்சையும் இங்கிருந்துதான் ஆரம்பமாயிற்று. 1965
இல் இக் கட்டுரையாளன் பாடசாலை மாணவனாக இருந்தபோது இளம்பிறையை சந்தா
கட்டி வாங்கி வாசித்து எழுதப் பழகியவன். 'அரசு வெளியீடு' என்னும்
நிறுவனத்தின் மூலம்; பிரசுரிப்பு வசதிகளை எம்.ஏ.ரஹ்மான் இலகுவாக்கி
மேம்படுத்தினார். 1964 இல் தமிழில்
வெளிவந்த முதலாவது உருவகக் கதைத் தொகுப்பான 'மரபு' மற்றும் 'தீபன்'
ஆகியன இவருடையதே.
எம்.ஏ. ரஹ்மானின் இலக்கிய ஆற்றல்பற்றி பல்வேறு சந்தேகம் தொற்றிய
கற்பிதங்கள் உண்டு. இதுபற்றி எஸ்.பொ. பின்வருமாறு கூறுகின்றார். 'என்னுடைய
எழுத்தாற்றலைச் செப்பனிடவும் வளப்படுத்தவும் ரஹ்மானின் படைப்பாற்றலும்
இலக்கிய நயப்பும் பெரிதும் உதவியிருக்கின்றன என்ற உண்மையை மிகுந்த
நன்றிப் பெருக்குடன் இங்கு பொறித்து வைக்க விரும்புகின்றேன்'. இவ்வாறு
'இஸ்லாமும் தமிழும்' என்ற நூலில் பக்கம் 92 இல் மிகவும் தெளிவாக
கூறியுள்ளார். இதே நோக்கில் 'எம்.ஏ.ரஹ்மான் என் இனிய நண்பனாயும்
பரமார்த்த இலக்கிய சகாவாகவும் வாழ்பவர் என்பதை இலக்கிய உலகம் நன்கறியும்.
அவருடைய நட்பின் செழுமையும் இணைந்ததுதான் என்னுடைய வாழ்க்கை' ;என்று
நீலாவணன் : எஸ்.பொ.நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின்
நினைவாக 'அப்பையா' என்ற காவியத்தை வெளியிட்டபோது அதனை எம்.ஏ.ரஹ்மானின்
சகோதரி ஷரீஃபா அவர்களுக்கே காணிக்கையாக்கினார் . எஸ்.பொ. என்ற இலக்கிய
ஆளுமையோடு எப்படிப்பட்ட நெருக்கம் ரஹ்மானுக்கு இருந்துள்ளது என்பதை
இந்தப் புள்ளியில் நின்று பார்க்கலாம்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரோடும் அவருக்கு நெருக்கமான உறவிருந்தது.
1977ம் ஆண்டு மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் நட்சத்திர அந்தஸ்து
பெற்ற அரசியல்வாதிகள் பலர் போட்டியிட்டனர். செ.இராசதுரை கா.சி.ஆனந்தன்,
ராஜன் செல்வநாயகம் ஆகியோர் தமிழர் தரப்பிலும் டாக்டர். பதியுதீன்
மஹ்மூத், டாக்டர் பரீத் மீராலெப்பை ஆகியோர் முஸ்லிம்கள் சார்பிலும்
போட்டியிட்டனர். பதியுதீன் அத்தேர்தலில்; எஸ்.பொ.வின் ஆதரவைக் கோரினார்.
அவருடன் எஸ்.பொ.கொண்டிருந்த தொடர்புபற்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் பரீட் மீராலெப்பை தேர்தல் மேடைதோறும் எஸ்.பொ. தனது ஆசிரியர்
என்றும் தன்னை மேடைப் பேச்சாளனாக்கி அரசியல்வாதியாக்கியது அவரேதான்
என்றும் முழங்கினார். அந்தத் தேர்தலின்போது பரீட் மீராலெப்பை
விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள் அனைத்தும் எஸ்.பொன்னுத்துரை
பார்வையிட்டு செப்பமிட்டவை என்பது அப்போதைய இரகசியமாகும். பரீட்
மீராலெப்பை வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார். மூதூர் ஏ.எல்.ஏ.மஜீது
உடனான உறவு 1964 இல் முளைவிட்டது.
இந்த உறவு 1970களில் அமைந்த
சிறிமாவோ அரசாங்கத்தில் தகவல் ஒலிபரப்புத்துறை உதவி அமைச்சராக
ஏ.எல்.ஏ.மஜீது நியமனம் பெற்றபோது கிளைவிட்டது. ஒலிபரப்புத் துறையின்
விரிந்த பணியாக்கத்திற்காக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எஸ்.பொ.வின்
ஆலோசனையை அவர் ஆவலோடு எதிர்பார்ப்பார். முஸ்லிம்களோடு எஸ்.பொ.
கொண்டிருந்த மாசிலா உறவும் பணியும் காரணமாக 'கத்னா செய்யாத முஸ்லிம்
எஸ்.பொ' என்று மூதூர் மஜீது இவரைச் செல்லமாகக் குறிப்பிடுவதுண்டு. அவர்
இறக்கும்வரை எஸ்.பொ.வுடன் நல்லுறவு பூண்டிருந்தார். நிந்தவூர் தொகுதி
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 'சுவீட் மஜீது' அவர்கள் 1956 இல்
பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காகப் பிரச்சாரம் செய்த
ஒரே தமிழர் எஸ்.பொ அவர்களே. பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும்
இருந்த ஏ.எச்.எம். அஸ்வர், ஏறூவூர் பட்டினசபைத் தலைவராக இருந்த
எம்.ஏ.சி.ஏ. ரஹ்மான், முன்னாள் மூதவை உறுப்பினர் எஸ். இஸட். எம். மசூர்
மௌலானா ஆகியோர் பொன்னுத்துரையுடன் தொடர்பிலிருந்த மற்றும் சில முஸ்லிம்
அரசியல்வாதிகளாவர்.
இலங்கை வானொலியுடன் தொடர்புபட்டிருந்த பலர் எஸ்.பொன்னுத்துரையுடன்
நெருக்கமாகப் பழகியுள்ளனர். அங்கு மேல்நிலை உத்தியோகத்தராகப்
பணியாற்றிய புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச் குத்தூஸ், பணிப்பாளரான
தோப்பூரைச் சேர்ந்த வீ.ஏ.கபூர், அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீது ,
கிரிக்கட் வர்ணனையாளர் எஸ்.எம்.ஏ.ஜப்பார், சுஹைர் ஹமீட்.
எம்.எம்.இர்பான் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வானொலியில் 'கலைக்
கோலம்' என்ற நிகழ்சியை நடத்தியபோது தமிழர்களுக்குப்போலவே
முஸ்லிம்களுக்கும் போதிய வாய்ப்புகளை வழங்கினார்.
முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரோடு நட்புடன் பழகிய அதேவேளை அவர்களின்
வளர்ச்சிக்கு வேராகவும் விழுதாகவும் அவர் இருந்தார். 1956 க்கு முன்னரே
புரட்சிக் கமால், பித்தன், அண்ணல் ஆகியோருடன் அவருக்குத் தொடர்பிருந்தது.
இதன் தொடர்ச்சியாக மருதூர் கொத்தன் காலத்தவர்களது நட்பு இவருக்குக்
கிடைத்தது. ( பட்டியல் நீளம் என்பதால் பெயர்கள் தவிர்க்கப்பட்டன.)
இலக்கிய முனைப்புடன் வாழ்ந்த இளம்முஸ்லிம்கள் பலருடைய முயற்சிகளுக்கு
ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர். எஸ்.பொ.வின் தமிழ்த் தொண்டுக் காலத்தின்
பல்வேறு காலகட்டங்களிலும் அவரின் சகாக்களாகவோ நண்பர்களாகவோ வேண்டிய
ஆலோசனை பெற்றவர்களாகவோ எழுத்துச் செப்பம் பெற்றவர்களாகவோ பல முஸ்லிம்கள்
இருந்துள்ளனர். இக்கட்டுரையாளனின் பெயர் உட்பட ஏதோவொரு வகையில்
தொடர்புபட்டிருந்த 80 இற்கும்
மேற்பட்ட முஸ்லிம்களின் பெயர்களை தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.
மட்டக்களப்பு முஸ்லிம்களோடு அவருக்கிருந்த இணைப்பையும் பிணைப்பையும் 'ஈரா'
என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுகதையொன்றின்மூலம் அறிந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு முஸ்லிம் பெண்கள் கணவன் இறந்தமை காரணமாக 'இத்தா'
அநுஸ்டித்தலை ஈரா இருத்தல் என்றும் வழங்குவர். 'ஈரா' என்ற இச்சிறுகதை
1965 இல் வெளியான 'வீ' என்ற அவரது
சிறுகதைக் கோவையில் பிரசுரமாகியுள்ளது. மட்டக்களப்பு முஸ்லிம்களின்
பேச்சுத் தமிழில் எழுதப்பட்ட இக்கதையின் மண்வாசனையின் யதார்த்தம்பற்றி
சோதித்துச் சொல்லுமாறு எஸ்.பொ. மருதூர் கொத்தனைக் கேட்டதான தகவல்
ஒன்றும் உள்ளது.
முஸ்லிம்கள்தொற்றி அவரின் கருத்தியல்
முஸ்லிம்களின் வரலாறுபற்றி தெளிவான அறிவுடையவராக அவர் இருந்தார்.
மற்றவர்கள் சொல்ல மறந்த அல்லது சொல்ல மறுத்த பல விடயங்களை முஸ்லிம்கள்
தொடர்பில் தனது எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தினார். சோற்றுப்
பருக்கையாக ஒரு விடயத்தை மட்டும் குறிப்பிடலாம். சோழர்கள் ஆட்சி
தமிழ்நாட்டில் உச்சம் பெற்றிருந்த வேளையில் முஸ்லிம்கள் தமிழ்நாட்டில்
வாழ்ந்தார்கள் என்றும் உயர்பதவி வகித்தார்கள் என்றும் சோழர் படையில்
அகமது என்பவன் பல வீரர்களுக்குத் தலைமை தாங்கினான் என்றும் அவர்
எழுதியிருக்கிறார்.
சில நேரங்களில் துணிகரமாகவும் முஸ்லிம்களுக்குச் சார்பாகவும் தன்னுடைய
கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். '1915
ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் கண்டியில் ஆரம்பித்தபோது
சேர்.பொன்னம்பலம் இராமநாதன் என்ற தமிழர் தலைவன் சிங்களவரை ஆதரித்தார்.
அவர் எடுத்த நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழர் எடுத்த பாதக
நிலைப்பாடாகவே வரலாறு விளங்கிக் கொண்டுள்ளது. இதற்காகத் தமிழ் இனம்
நிச்சயமாக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி இருக்க வேண்டும்' என்று அவர்
எழுதினார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது 'பெருந்தொகையான
மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் இவ்வாறு வேருடன் பிடுங்கி
எறியப்பட்டமையானது மாபெரும் துயர நிகழ்வாகும். ஒரு சிலரின் செயலுக்காக
முழு இனமும் தண்டிக்கப்பட்டதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது'
என்று சுயசரிதை நூலிலே குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் படைப்பாளிகள் சிலரிடையே எஸ்.பொ. இன்னமும் பேசுபொருளாக உள்ளார்.
ஆசிரியம் ஊடாக அவர் விட்டுச் சென்ற வகிபாகம்பற்றி விடுபட முடியாத
ஏக்கத்துடன் அவரின் மாணவர்கள் பலர் இன்றும் உள்ளனர்.
முஸ்லிம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரோடு வாழக் கிடைத்தமையும்
மட்டக்களப்புச் சூழலும் கம்பளையின் வாழ்க்கைமுறையும் அரசியல் மற்றும்
இலக்கிய முஸ்லிம் ஆளுமைகளின் தொடர்பும் எம்.ஏ.ரஹ்மானின் உறவும்;
எஸ்.பொன்னுத்துரை அவர்களை முஸ்லிம்நேயத் தமிழ்ப் படைப்பாளியாக
அடையாளப்படுத்தியுள்ளது. அவரின் வரலாற்றை எழுத முற்படும் எவரும்
முஸ்லிம் காரணியைப் புறந்தள்ளி மேலெழுதல் சாத்தியமல்ல.
எனக்கிருந்த வாசிப்பின் வரையறைக்குள் கிடைத்த தகவல்கள் மாத்திரமே இங்கு
பதிவிடப்பட்டுள்ளன. மாதிரிக்காக சில பெயர்களும் சில விடயங்களும்
தடயமாகின்றன. தொடர வேண்டும் இத்தேடல் என்பதனால் இதனிலும் கூடுதலான
தகவல்களைகளை ஏ.பீர் முகம்மது, 510,
ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது -7 (0714498887
) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க
எதிர்பார்க்கிறேன்.
(மட்டக்களப்பு
நூலக கேட்போர்கூடத்தில் 06.12.2014
பி.ப.4.30 அளவில் நடைபெற்ற
நினைவிடை தோய்தல் நிகழ்வின்போது எஸ்.பொன்னுத்துரையும் முஸ்லிம்களும்
என்ற தலைப்பில் கலாபூஷணம் ஏ.பீர் முகம்மது ஆற்றிய உரையின் விரிவாக்கம்)
www.tamilauthors.com
|