'டொராண்டோ'வில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு  

 

..கிரிதரன்

 

ழுத்தாளர் அகில் , மருத்துவர் லம்போதரன் ஆகியோரின் ஆதரவில் மாதா மாதம் ,கடைசிச் சனியன்று நடைபெறும் இலக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. எனக்குப் பொதுவாக எழுதுவதிலுள்ள ஆர்வம் பேசுவதிலில்லை. ஆயினும் எழுத்தாள நண்பர் தேவகாந்தன் இரு மாதங்களுக்கு முன்னரே இந்நிகழ்வில் 'புகலிட நாவல் இலக்கிய முயற்சிகள்' பற்றி உரையாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டதனால், வழக்கம்போல் தட்டிக்கழிக்க முடியாது போனது. நான் எதிர்பார்த்ததைவிட நிகழ்வு மிகவும் காத்திரமானதாக, பயனுள்ளதாக அமைந்திருந்தது. நிகழ்வில் எழுத்தாளர் தேவகாந்தன் 'தமிழ் நாவல் இலக்கியம்' பற்றி விரிவானதொரு உரையினை நிகழ்த்தியிருந்தார். தன் பார்வையில், தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி, தொடக்க நாவல்களிலிருந்து , நவீன நாவல்களை வரையில் குறிப்பிட்டு ஆற்றிய உரை பயன்மிக்கது.

 

தமிழில் வெளியான மொழிபெயர்ப்பு நாவல்கள் பற்றி . அகிலன் சுவையாக ஆற்றிய உரை பொருளில் காத்திரமானதாகவும் அமைந்திருந்தது. குரு. அரவிந்தன் 'கனடாவில் தமிழ் நாவல்' பற்றி, ஆதாரங்களுடன், ஆவணப்படுத்தலை நோக்காகக்கொண்டு உரையாற்றினார். எனது உரையில் புகலிடத் தமிழ் நாவல்கள் பற்றி முயற்சிகள் பற்றி எனக்கு ஒதுக்கிய நேரத்தில் உரையினை ஆற்றினேன். புகலிட, புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியம் பற்றி, புலம் பற்றி, பல்வேறு நாடுகளிலும் வெளியான முக்கியமான நாவல்கள் பற்றி, புகலிட நாவல்களின் ஆவணப்பட்டியல் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி, திறனாய்வுகளுக்கு அவ்விதமான பட்டியல்களின் அவசியம் பற்றியும் உரையில் குறிப்பிட்டிருந்தேன்.

 

நிகழ்வின் இறுதியில் ஐயந்தெளிதல் அரங்கில் (நிகழ்வில் ஆற்றப்பட்ட உரைகள் பற்றிய ஐயந்தெளிதல்) தேவகாந்தனின் உரையில் விடுபட்ட எழுத்தாளர்கள் பற்றி கவிஞர் வி.கந்தவனம், நாடக இயக்குநரும், எழுத்தாளருமான ஞானம் லம்பேட் போன்றோர் கேள்விகள் கேட்டனர். முனைவர் .சண்முகதாஸ், முனைவர் நா.சுப்பிரமணியன், கவிஞர் வி.கந்தவனம், எழுத்தாளர் அகில ஆகியோர் புகலிட, புலம்பெயர் மற்றும் கனடியத் தமிழ் இலக்கியம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். நாளைய இலக்கியம் கனடாத் தமிழ் இலக்கியமென்று அழைக்கப்படக் கூடாது; கனடாத் தமிழர் இலக்கியமென்று அழைப்பதே பொருத்தமானதென்று கவிஞர் வி.கந்தவனம் சுட்டிக்காட்டியது கவனத்துக்குரியது.

 

நீண்ட நாட்களின் பின்னர் நான் கலந்துகொண்டு , உரையாற்றிய இவ்விதமானதொரு நிகழ்வில் முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், முனைவர் .சண்முகதாஸ் தம்பதியினர், முனைவர் .பாலசுந்தரம், கவிஞர் கந்தவனம், எழுத்தாளர் டானியல் ஜீவா, எழுத்தாளர் .அகிலன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியது நிகழ்வினை மேலும் பயனுள்ளதாக்கியது. முனைவர் பார்வதி கந்தசாமி, எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, 'காலம்' செல்வம், எழுத்தாளர் 'வீரகேசரி' மூர்த்தி எனப் பலரை நிகழ்வில் காண முடிந்தது.

 

இவ்விதமான இலக்கியக் கலந்துரையாடல்கள் தொடர்வது பயன்மிக்கதாக அமையும். கனடாவில் வெளியாகும் ஊடகங்களில் வெளியாகும் ஆக்கங்களை ஒவ்வொரு மாதமும் ஆவணப்படுத்தினால், பின்னர் திறனாய்வுகளுக்கு அவை உதவும். மேலும் இவ்விதமான இலக்கிய அமர்வுகளில் அவ்வப்போது கனடாத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றி விவாதிக்கவும் அவை உதவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 


 

 

 

 www.tamilauthors.com