மக்களின் வாழ்க்கைப் பயன்பாட்டில்
பழமொழியின் பங்குகள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
பழமொழிகள்
அறிவு வளர்ச்சியிலே பிறந்து சுருக்கம், தெளிவு, பொருத்தம் ஆகிய
பண்புகளால் என்றும் இறவாமல் இவ்வுலகில் வாழ்கின்றன என்கிறார்
அரிஸ்டாட்டல் எனும் பேரரறிஞர். பழமொழிகள் ஒரே மூச்சில்
சொல்லக்கூடியதாகவும் சுருக்கமாகவும் செறிவாகவும் கூர்மையாகவும் அன்றாட
வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்
டிரென்ச் அவர்கள். இவர் கூறும் வரையறை ஏறத்தாழ தொல்காப்பியர் கூறும்
வரையறை போன்றது என்கிறார் டாக்டர் சு. சக்திவேல் அவர்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாண்டில் உருவான
நம்பிக்கைகளை, எண்ணங்களை, அறிவுரைகளை, அனுபவங்களை நறுக்குத்
தெரித்தாற்போல் சுருக்கமாகச் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான
சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண கிராமப்புற மக்களின்
வாய்மொழி சொற்களாகவும் இருக்கலாம். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப்
பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ
முதிர்ச்சியையும் காட்டுகிறது எனலாம்.
பழமொழியின் விளக்கம்
பழமொழி என்ற சொல்லே பழமொழி பற்றிய சிறந்த வரையறையாக அமைந்துள்ளது
என்கிறார் ஜான் லாசரஸ் அவர்கள். பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும்
உண்மையை ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கிக் கூறுவது ஆகும்
என்கிறார் துர்கா பகவத் அவர்கள். ரிச்சார்டு டார்சன் அவர்கள்
பழமொழியானது எளிதில் கவனிக்கக் கூடிய, சேகரிக்கக்கூடிய தொன்மை வாய்ந்த
கருத்தாகும் என்கிறார். ஜான் ரஸ்ஸல் அவர்கள் பழமொழி பலரின் அறிவையும்
ஒருவரின் உண்மைத் தன்மையையும் உணர்த்துவனவாகும் என்கிறார்.
எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளைச் சிறு வாக்கியத்தில் வெளிப்படுத்துபவன
பழமொழிகள் என ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி எடுத்தியம்புகிறது.
பழமொழியின் தோற்றம்
பழமொழிகளின் தோற்றத்தை யாராலும் வரையறுத்துக் கூற முடியாது. மனிதன்
என்று பேசத் தொடங்கினானோ அன்றே பழமொழிகளும் தோன்றியிருக்க வேண்டும்
என்பர் சான்றோர். மேலும் அப்பழமொழிகள் வாய்மொழியாகவே வழி வழியாக
சொல்லப்பட்டு வந்துள்ளன. தாத்தா, தாத்தாவின் அப்பா, அப்பா, மகன் என்றும்
பாட்டி, பாட்டியின் அம்மா, அம்மா, மகள் என்றும் பரம்பரை பரம்பரையாக கூறி
வந்த பழமொழிகளும் உண்டு எனலாம். நாட்டுப்புறப் பாடல்களிலும் பழமொழிகளைப்
பயன்படுத்தி வந்ததை நாம் பலப்பாடல்களில் காணலாம்.
பழமொழிகளின் தோற்றத்தைப் பற்றி கூறுகையில் ச.சிவகாமி, 'பழமொழிகள்
பழங்காலத்தில் இருந்தே மக்களிடையே வழங்கி வருகின்றன. காலந்தோறும்
அவற்றிற்கிடையே மாற்றங்கள் சூழலுக்கு ஏற்ப ஏற்படுவதுடன் புதியனவும்
தோன்றுகின்றன. வாழ்க்கை ஒழுங்கிற்கு எழுதாச்சட்டங்களாக நின்று வழங்கி
வந்த பழமொழிகள் இலக்கிய உருவாக்கக் காலத்திற்கு முன்பே தோன்றின என தனது
பன்முகப் பார்வையில் பழமொழிகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
பழமொழிகள் ஒவ்வொரு காலத்திலும் தோற்றம் பெற்று மக்களின் வாழ்க்கையோடு
இயைந்தும், சிறந்தது நிலைத்தும் அல்லாதது மறைந்தும் போய்விடுகின்றன
எனலாம். பழமொழிகள் மனித வாழ்வில் நல்லது கெட்டதைச் சுட்ட வருவன. இவை
அறிவின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும், பண்பின் அடியாக நிகழும்
நிகழ்ச்சிகளையும், தொழிலின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும், வாழ்வியல்
முறைகளின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் கொண்டே அந்தந்த
நிகழ்ச்சிகளில் வல்லார் அந்தந்த நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டி பல
பழமொழிகளைத் தோற்றுவித்தனர். அவையே பழமொழிகளாயின என தனது பழமொழியும்
பண்பாடும் என்ற நூலில் குறிப்பிடுகிறார் செந்துறை முத்து.
தமிழில் பழமொழிக்கு மூதுரை, முதுமை, மொழிமை, முன்சொல், முதுசொல்,
பழஞ்சொல் என ஆறு பொருள் இருப்பதாகச் சேந்தன் திவாகரம் கூறுகின்றது.
மலையாளத்தில் 'பழஞ்சொல்' எனவும் தெலுங்கில் 'நாதுடி' எனவும் கன்னடத்தில்
'நாண்ணுடி' எனவும் ஆங்கிலத்தில் 'Pசழஎநசடி' எனவும் பழமொழிகள்
அழைக்கப்படுகின்றன. தமிழ் இலக்கிய, இலக்கணங்களை ஆராய்ந்து பார்த்தால் ,
பழமொழிகளைக் குறிக்க முப்பத்திநான்கு சொற்கள். இருப்பதாக டாக்டர் வ.
பெருமாள் அவர்கள் குறிப்பிடுகிறார்.
பயன்கள்
பழமொழிகள் இலக்கியச்சுவை கருதி கூறப்படும் வழக்காறு அல்ல. அது மக்களின்
அன்றாட வாழ்வில் பயன்படும் பயன்பாட்டு வழக்காறாகும். அப்பழமொழிகள் ஒரு
பயனை நோக்கியே வழங்கப்படுவதுடன் சமூகத்தின் ஆழ்ந்த அறிவினைப்
புலப்படுத்துவனவாகவும் திகழ்கின்றன எனக் கூறப்படுகிறது. பழமொழிகள்
வாழ்வியலின் முதிர்ந்த வெளிப்பாடாக, வாழ்வின் பல கோணங்களையும் விளக்கும்
ஒவியங்களாக மிளிர்கின்றன. மனிதனையும் அவனைச் சார்ந்தவற்றையும் இணைக்கும்
ஒரு தூதுவனாகச் செயல்படுகின்றன பழமொழிகள்.
தமிழ் மக்களின் எண்ணம், உணர்ச்சி, வாழ்க்கை நெறிமுறை முதலிய அனைத்தைக்
கூறுகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பழமொழி மிகத் தெளிவாகக்
காட்டியவண்ணம் இருக்கிறது. தமிழ்ப்பண்பாட்டை முறையாகவும் முழுமையாகவும்
அறிந்து கொள்வதற்கு வாழ்மொழி இலக்கியமாகிய பழமொழி ஒன்றே போதும் என
வ.பெருமாள் கூறுவது ஏற்று மகிழத்தக்கதே என்கிறார் தனது நாட்டுப்புறவியல்
நூலில் சு. சண்முகசுந்தரம் அவர்கள்.
அன்பும் அறிவும்
மனிதனின் வாழ்வியலுக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உறவுகளின் பிணைப்புக்கும்
அன்பும் அறிவும் இரு கண்களாக விளங்குகின்றன. அனுபவ மொழிகளான பழமொழிகள்
அன்பும் அறிவும் ததும்ப மனிதனுக்கு நல்வழிகாட்டுகின்றன. பழமொழிகளில்
சுட்டும் பண்பாட்டுக் கூறுகளின் வழி தமிழரின் வாழ்வியல் சார்ந்த
பண்பாட்டுக் கூறுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
'அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்'
ஆன்றோர் தம் வலிமைக்கு மீறிய செயலாயினும் அன்பிற்காக எதையும்
செய்யத்துணிவர் என்பதை இப்பழமொழி காட்டுகிறது.
அன்பே சிவம் என்பது திருமூலர் மந்திரம். மக்கள்பால் விருப்பம் கௌ;ளும்
நல்லுணர்ச்சியே அன்பு எனப்படும். அன்பு மனித மனதில் மலரும் மென்மையான
உணர்ச்சியாகும். பல்வேறு பூக்கள் நாரால் கட்டப்பட்டு மாலையாகக்
காட்சியளிப்பது போல மனிதர்கள் அன்பால் கட்டப்பட்டுச் சமூதாயமாகக்
காட்சியளிக்கின்றார்கள். நார் இல்லாவிட்டால் மாலை இல்லை. அன்பு
இல்லாவிட்டால் சமுதாயம் இருக்காது. தனித்தனி மனிதர்கள் மட்டுமே இருப்பர்.
எனவே அன்பே மனித நேயங்களை பிணைக்கின்றன.
'அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்'
எனகிறது மனிதனின் பட்டறிவு.
இதனையே வள்ளுவர்,
'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கே' என்கிறார்.
அன்புடையாரை இவ்வுலகமே விரும்பும் என இக்குறள் பகர்கின்றது.
சிந்தித்து செயல்படுபவன் மனிதன். மனிதன் மனிதனாக வாழ அவனுக்கென்று
தனித்த பண்புகள் இருக்கின்றன. இதை அறநூல்கள் பல வகைகளில் போதிக்கின்றன.
பழமொழிகளும் இதில் சிறந்து விளங்குகின்றன.
'புத்திமான் பலமான்'
'அறிவு இல்லார் தமக்கு அண்மையும் இல்லார்'
'அறிவுடையாரை அரசனும் விரும்பும்'
என அறிவின் பெருமையையும் வீழ்ச்சியையும் ஒருவருடைய சொல்லும் செயலும்
உணர்த்தும்.
'இருவரும் ஒத்துப்போனால் இடையில்
இருப்பவனுக்கு வேலை இல்லை'
மனிதர்களிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் எத்தகைய
மனக்கசப்பும் தவிர்க்கப்படும் என்பதை தௌ;ளத்தெளிவாக எடுத்தியம்புகிறது
இப்பழமொழி.
பண்பாட்டுக் கூறிகளைத் தாங்கி வரும் பழமொழிகள் வாழ்வியலை நமக்கு
முன்னுரைக்கின்றன. சமுதாய உறவுமுறைகளையும், குடும்ப உறவு முறைகளையும்
செம்மைப்படுத்துவதில் பழமொழிகளில் பதிவாகியுள்ள அன்பும் அறிவும் பெரும்
பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது.
ஒற்றுமை உணர்வு
'ஊரோடு ஒத்து வாழ்'
'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை''
போன்ற பழமொழிகள் தனிமனிதனுக்குப் பொருந்துவதாகும்.
குலத்தொழில்
'மீன் குஞ்சுக்கு நீந்தப் படிப்பிக்கணுமா'
என்ற பழமொழி தந்தையின் குலத்தொழிலை மகன் இயல்பாகப் பெற்று வருவதைக்
குறிக்கிறது.
நம்பிக்கை
'தை பிறந்தால் வழி பிறக்கும்'
'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது'
போன்றவை மக்களின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பவைகளாகும்.
பிறரை இகழாமை
'சிறு துரும்பும் பல் குத்த உதவும்'
என்ற பழமொழி உலகில் எதையும் இகழ்ச்சியாகப் பார்க்கக் கூடாது என்பதை
உணர்த்துகிறது.
உதவி
'உப்பிட்டவரை உள்ளளவும் நினை'
'உண்ட சோற்றுக்கு வஞ்சகம் கூடாது'
போன்றவை செய்நன்றி மறவாமையை சுட்டுகின்றது.
வீண்செலவு
'வரவு எட்டண்ணா செலவு பத்தண்ணா'
வரவிற்கு மேல் செலவு செய்வதை எடுத்தியம்புகிறது.
மருத்துவம்
நோயின்றி மகிழ்வாக வாழ்வதே உண்மையான செல்வமாகும். நோயுடன் நீண்ட நாள்
செல்வராக வாழ்வதைக் காட்டிலும், நோயின்றி உடல் நலமுடன் வாழ்வதே ஒருவர்
பெற்ற உண்மையான செல்வமாகும். இத்தகைய வாழ்க்கைக் குறிப்பை,
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. உணவை அளவோடு உண்ண வேண்டும். அவ்வாறு
உண்டால் நோயின்றி வாழலாம். அளவுக்கு மீறி உண்டால் உடலில் உணவு நஞ்சாக
மாறி உடலுக்கு தீங்கினைத் தரும். இதனை வாழ்க்கைச் சித்தரான வள்ளுவர்,
'மிகுனும் குறையினும் நோய் செய்யும்'
என குறள்வழி குறிப்பிடுகிறார். இக்கருத்தையே,
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்'
என்ற பழமொழி தௌ;ளத்தெளிவாக இயம்புகிறது. இவ்வண்ணம் பல்வேறு பழமொழிகள்
சித்த மருத்துவக் குறிப்புகள் அடங்கிய களஞ்சியமாகத் திகழ்கின்றன.
இப்பழமொழிகள் நமது முன்னோர்களின் அனுபவ மருத்துவத்தை எடுத்துரைக்கின்றன
எனக் கூறப்படுகின்றன. இவை கைவைத்தியம் எனவும் பாட்டி வைத்தியம் எனவும்
அழைக்கப்படுகின்றன. இத்தகைய பழமொழிகளில் பொதிந்துள்ள அனுபவக்
குறிப்புகளை நன்கு ஆராய்ந்தால் இனனும் பல்வேறு சித்த மருத்துவ
நுட்பங்கள் புலப்படலாம் என தனது பழமொழிகளில் மருத்தவக் குறிப்புகள்
என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார் முனைவர் சி.சேதுராமன்.
மதத்தத்துவங்கள்
'அரியும் சிவனும் ஒன்று / அறியாதவன் வாயில் மண்ணு'
என்னும் பழமொழி இறைவன் ஒருவனே என்ற மதநல்லிணத்தை மக்கள் மனதில் பதிய
வைக்கிறது.
வாய்மொழி இலக்கிய வகையைச் சார்ந்த இப்பழமொழிகளை சம்பந்தர், அப்பர்,
சுந்தரர் ஆகிய மூவரும் தாங்கள் அருளிய தேவாரப் பதிகங்களில் பதிவு
செய்துள்ளதாக முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி குறிப்பிடுகிறாhர்.
ஏறத்தாழ எட்டுப் பாடல்களில் பழமொழிகளைச் சம்பந்தர் கையாண்டுள்ளார்ஜ10ஸ.
எடுத்துக் காட்டாக,
'யார் அறிவார் சாம் நாளும் வாழ்நாளும்'
என்ற பழமொழியில் சம்பந்தர், இவ்வுலகில் பிறந்து வாழ்கின்றவர் இறக்கிற
நாளையும், உலகில் வாழும் நாளையும் எவராலும் கணக்கிட்டுக் கூறமுடியாது
என்பதைக் கூறுகின்றார்.
அப்பர் அருளிய தேவாரத்தில் ஏராளமான பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. காந்தாரப்
பண்ணில் அமைந்த திருவாரூர்ப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும்
பழமொழிகள் வருவதால் இப்பதிகம் 'பழமொழிப் பதிகம்' என்றே அழைக்கப்படுகிறது.
'கனி இருக்கக் காய் கவர்தல்'
'முயல்விட்டுக் காக்கைப் பின் செல்லல்'
'விளக்கிருக்க மின்மினித் தீயில் குளிர் காய்தல்'
இவ்வாறாகப் பழமொழிகளைக் கையாண்டுள்ளார் அப்பர் அடிகள்.
'திருநெல்வாயில் அரத்துறை' எனும் பதிகத்தில் உலக நிலையாமையை
வலியுறுத்திக் கூற வந்த சுந்தரர்,
'உறங்கி விழித்தால் ஓக்கும் பிறவி'
என்ற பழமொழியைக் கூறுகின்றார். இவ்வாறு மூவர் தேவாரத்திலும் காணப்படும்
பழமொழிகள் மக்கள் வாழ்க்கையோடு தொடர்புடையவனாக விளங்குகின்றன.
இலக்கியத்தில் பழமொழி
கற்றவர்குரிய இலக்கியங்களைப் பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில்
பல பழமொழிகள் இருக்கின்றன.
'ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' எனும் நாலடியாரின் வரிகள்.
'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்'
எனும் பழமொழி கம்பரின் கவி நலத்தையும் சொல்லாட்சிச் சிறப்பினையும்
உணர்த்துகிறது. இவ்வாறாக இலக்கியங்களையும் மக்களிடையே கொண்டு
செல்கின்றன இப்பழமொழிகள்.
எதிர்கால நிலை
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் தான் பழமொழிகளைப் பயன்படுத்துவர்
என்று குறிப்பிடஇயலாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவர்.
அறிவுரை வழங்கும் போது, தன்னிலை உணர்த்தும் பொழுது, மதிப்பீடு செய்யும்
பொழுது, தவறு செய்வோரை ஏசும் போதும் பழமொழிகள் பயன்படுத்ப்படுகின்றன.
பழமொழிகள் பொருள், தகுதி, சமுதாயம், சமயம், வட்டாரம், நிலம், செயல்
ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான பொருண்மையுடைய
இப்பழமொழிகளின் எதிர்காலம் என்பது வரும் நாளில் குறிப்பிட்ட ஒரு
வட்டத்துக்குள்ளேயே அடைபட்டுப் போகும் சாத்தியக் கூறுகளே அதிகமாக
இருக்கின்றன.
கல்விக் கூடங்கள், மேடைப்பேச்சாளர்கள், நாடகக்கலைகள் என இப்பழமொழிகளின்
பயன்பாடு குறுகிப்போகும் போக்கே அதிகமாகக் காணப்படுகிறது. சிங்கப்பூர்
போன்ற நாடுகளில் தமிழர்களிடையே தமிழ் புழக்கம் அரிதாகி வருவது நாம்
கண்கூடாகக் காணும் காட்சிகள். மனிதத்தொடர்புகள் குறுகியும் இயந்திரத்
தொடர்புகள் மிகுதியாகும் இந்நவீன யுகத்தில் வாய்மொழி இலக்கியமான
பழமொழிகள் மறக்கப்படும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன எனலாம்.
பழமொழிகளுக்கு இணையாக புதுமொழிகள், பொன்மொழிகள் என வந்தவண்ணம்
இருந்தாலும் தமிழின் பயன்பாடு குறுகும் போது, அவைகளின் பயனும் கால
ஓட்டத்தில் வீழ்ச்சியடையும் என்றே கூறத் தோன்றுகிறது. இப்போது நம்
காலத்திலேயே பல மொழிகள் பொருள் திரிந்து வழங்கப்படுவது நாம் அறிந்தும்
அறியாமலும் நடக்கிறது.
'ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு'
என பரவலாகப் பயன்படுத்தப்படும் இப்பழமொழி நம் முன்னோர்களால்,
'ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு'
எனத்தான் வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பெரியோர்கள் நல்லதைத்தான்
போதிப்பர். நம்மைப் பொய் சொல்ல ஒரு நாளும் ஊக்குவிக்கமாட்டார்கள்.
மேலும்,
'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்'
என்ற பழமொழியின் உண்மையான போதனை,
'கல்லான் ஆனாலும் கணவன்
புல்லான் ஆனாலும் புருஷன்'
என்பதேயாகும். கல்வி அறிவற்றவனாக இருந்தாலும், அன்பற்றவனாக (புல்லாதவன்)
இருந்தாலும் கணவன் என்றான பிறகு எற்றுக்கொண்டு வாழவேண்டும் எனும்
வாழ்க்கையறிவை விளக்குகிறது.
தமிழ் உணர்வும் மொழிப்பற்றும், தமிழ்ப்பாடங்களின் போதனைகளும்
ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கின்ற நம் காலக்கட்டத்திலேயே இப்பொருள்
மாற்றங்கள் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது பழமொழிகளின்
எதிர்கால பயன்பாடு மாபெரும் ஒரு கேள்விக்குறியை நோக்கியே
சென்றுகொண்டிருக்கது எனலாம்.
தொகுப்புரை:
பழமொழிகள் வாழ்க்கைப் பயன்பாட்டிற்கு உதவுவதால், நன்மைத் தீமைகளைச்
சுட்டுவதால் நீதிக்களஞ்சியமாகத் திகழ்கின்றன. மக்கள் தம் அனுபவத்தை
என்றைக்கு வெளிப்படுத்த விரும்பினார்களோ அன்றே பழமொழிகள் தோற்றம்
பெற்றன. பழமொழிகள் சுருக்கம், எளிமை, கருத்து, விளக்கம், எதுகை, மோனை,
ஓசை நயம், வினா ஆகிய தன்மைகளைக் கொண்டே எதன் உதவியும் இன்றி தன் கருத்தை
வளத்தைக் கொண்டே நிலை பெறுகின்றன. மக்கள் தம் சிக்கல்களுக்குத் தீர்வும்
பேச்சுக்கு ஓர் அழகையும் தருவதால் இப்பழமொழிகளைப் பயன்பாட்டில் நிலை
நிறுத்தி வந்தனர். பயன்பாட்டில் அதிகம் இடம் பெறாதவைகள் நாளடைவில்
மறைந்தும், சூழ்நிலைக்கேற்றாற் போல் புதியவை பூத்தும் தமிழ் இலக்கியச்
சோலையில் மலர்ந்து மணம் வீசுகின்றன. ஆனால்அந்த மணம் தொடருமா? காலம்தான்
பதில் சொல்ல வேண்டும்.
துணை நூல்கள்
1. சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, 2010, மணிவாசகர் பதிப்பகம,;
சென்னை.
2. சு. சண்முசுந்தரம், நாட்டுப்புறவியல், இரண்டாம் பதிப்பு 2007, காவ்யா,
சென்னை.
3. பழமொழிகளின் விளக்கம், இணையக்கட்டுரை, கூடல் இணையத்தளம்
4. வ.பெருமாள், பலநோக்கில்பழமொழிகள், 1987, இலக்கியப் பதிப்பகம், சென்னை
5. நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள் – முனைவர் பா. நீலாவதி
முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-
641 028
பேச:098424 95241,98438 74545.
www.tamilauthors.com
|