ஞாபகங்கள்

விமர்சனம்:  கவிஞர்.இரா.இரவி


குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய தரமான படம். உண்மையில் நடந்த நண்பனின் காதல் கதையை திரைக்காவியமாக வழங்கி இருக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவில்லை, ஆனால் மதுரைக்காரர் ஜேம்ஸ் விக் என்ற புதிய இளைஞரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த துணிச்சலுக்கு வித்தகக் கவிஞர் பா.விஜய்-க்கு பாராட்டுக்கள். பாடல் வரிகள் அற்புதம்,பாடலுக்கான இசை மிகச் சிறப்பு.பின்னணி இசை மிகவும் நேர்த்தியாக உள்ளது.'ஞாபகம் இல்லையோ தோழி' என்ற பாடலை பாடி முடிந்ததும்,பின்னணி பாடகர் திரு.
s.P.பாலசுப்பிரமணியன் பாராட்டியதைப் போல மிகச்சிறந்த மேடைப்பாடல், மிகப் பொருத்தமான படப்பிடிப்பு. இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஜீவன் படத்திற்கு ஜுவனாக விளங்குவதுடன் கவிஞருக்கு தோழனாகவும் படத்தில் நடித்துள்ளார்.

'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போல, 'ஞாபகங்கள்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜேம்ஸ் விக் பிரபலமடைவார். இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான மதுரைக்காரர், இசைப்புயல் ரகுமான் அளவிற்கு புகழ் பெறுவர்.

இந்த படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவரவர் காதலை அசை போடுவது நிச்சயம்.அது தான் படத்தின் வெற்றி.படத்தில் வசனம் மிக நுட்பமாக, இயல்பாக சிறப்பாக உள்ளது.

ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி இது பெண் என்று கதிர் கூற, உடன் மீரா எப்படி என்று கேட்க, தலைக்குப் பின்னால் பூ இருப்பதால் இது பெண் என்பது, கடலில் கூட ஆண் அலை, பெண் அலை என விளக்கம் சொல்வது-இப்படி ரசிக்கக் கூடிய காட்சிகள் ஏராளம் உள்ளது.கதிர்-மீரா என்ற இருவரின் வாழ்க்கையை பக்கத்து வீட்டில் இருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.வித்தகக் கவிஞர் பா.விஜய்-யின் வெற்றிக்கு துணை நிற்கும் அவரது அப்பா மட்டுமல்ல, நண்பருமான திரு.பாலகிருஷ்ணன், அப்பாவாக ஒரு காட்சியில் வருகிறார்.

மீரா-வாக நடித்து இருக்கும் கதாநாயகி உயிரோட்டமாக நடித்து இருக்கிறார்.கதிர் வெளியே சென்றதும்இகதறி அழும் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார்.குடும்ப சூழ்நிலை காரணமாக தனக்கு வேறு ஒருவருடன் நாளை திருமணம் நடக்க இருக்கும் வேளையில்இகதிரின் தோழர், இருவரும் ஓடிப்போங்கள் என்று சொல்லும் போது, மீரா இருவரும் ஓடிப் போனால் என்ன நடக்கும் என்பதைக் கூறி, உன் இலட்சயத்தில் நீ ஜெயிக்க வேண்டும் என்று உரைப்பது என்னைத் தருகிறேன் என்பது, நீ ஒரு குழந்தை எனக்கு வேண்டாம் என்று கதிர் கண்ணியம் காப்பது தமிழ்ப்பண்பாட்டை, ஒழுக்கத்தைப் பறைசாற்றுகின்றது, மறக்க முடியாத காட்சிகள்.

உண்மையான காதல் என்பது உடல் சார்ந்தது அல்ல,உள்ளம் சார்ந்தது, உணர்வு சார்ந்தது என உணர்த்தும் காட்சிகள்.கதிர் பேசும் நாத்திகக் கருத்தில் சமூக நீதி உள்ளது பொதுவுடைமை பேசும் தலைவரின் பேச்சில் வித்தகக் கவிஞரின் பேனா வீச்சு தெரிக்கின்றது.வித்தகக் கவிஞரின் விவேகமான வைர வரிகள் படம் முழுவதும் ஒளிருகின்றது.கவர்ச்சி நடிகை இல்லை, நூறு பேரைத் தாக்கும் நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் இல்லை.பிரபல நனைச்சுவை நடிகர்களான வடிவேலு , விவேக் இல்லை.பழிக்குப் பழி வாங்கும் கொடூரமான வில்லன் இல்லை.இருந்த பொழுதிலும் படம் பார்ப்பவர்களின் பாராட்டைப் பெறுகின்றது, மனதில் நிற்கின்றது என்றால் இது ஒரு தரமான படைப்பு. யுகிளாஸ் படம் என்பார்களே,  அது போல் முதல் தரமான படம்.

தமிழ் பற்றியும், மீரா பற்றியும், மழை பற்றியும் தாஜ்மகால் பற்றியும் வித்தகக் கவிஞர் கூறும் உயிரோட்டமான கவிதை வரிகள் திரையரங்கில் கைதட்டல் பெறுகின்றது. இளைஞர்கள் முதியவர்கள் வேறுபாடு இன்றி அனைவருக்கும் பிடிக்கும் ஆரோக்கியமான திரைப்படம். படத்தின் இறுதியில் மீரா கதிரைப் பார்த்து பேசும் வசனங்கள் நெகிழ்ச்சி.

தாஜ்மகாலுக்கும் எனக்கும் ஒரு வேறுபாடு மூச்சு விடாத கல்லறை தாஜ்மகால் மூச்சு விடும் கல்லறை நான், என்று கூறுவது. இப்படி மனதை விட்டு அகலாத வைர வரிகள் தாரளம். இந்தப் படத்தில் தாஜ்மகாலையும் பார்க்கலாம். தென்னகத்து தாஜ்மகாலான திருமலை நாயக்கர் மகாலையும் பார்க்கலாம். பாடல்கள் இனிமை என்றால் அவற்றை படமாக்கிய விதம் அருமை.

மீராவும் கதிரும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் போட்டோ,  பத்திரிக்கையில் வந்தது கண்டு. அதனை மீரா தன் தந்தை அக்கா, அண்ணன் பார்த்து விடக் கூடாது என பயப்படும் காட்சி, பழரசத்தை வேண்டுமென்றே கொட்டி விட்டு உடன் அந்த பத்திரிக்கையைப் போட்டு அள்ளும் காட்சி,  நம்மை அசை போட வைக்கும் காட்சி.

திரு.டி.ராஜேந்தர் போல சகலகலா வல்லவர் என்பதை நிலைநாட்டி விட்டார். வித்தகக் கவிஞர் சிறந்த நடிகன் என்பதையும் நிரூபித்து உள்ளார். காதலியின் விதவை நிலை கண்டு வருந்துவது முன்னாள் காதலியைப் பார்த்து விட்டு வருகிறாயா? என்று கேட்டதும் முன்னாள் இன்னாள் அல்ல, எந்நாளும் என் காதலி எனச் சொல்வது. காதலிக்கு பரிசாக தேசிய விருதையே வீட்டில் வைத்து விட்டு வருவது இப்படி கதிர் என்ற பாத்திரமாக வாழ்ந்து காட்டி விட்டார். வித்தகக் கவிஞர் பா.விஜய் கதாநாயகன் என்ற புதிய முயற்சியிலும் வெற்றிக் கொடி நாட்டி விட்டார்.

விஷம் அருந்தி தற்கொலை செய்ய மீரா முயற்சிக்கும் வேளையில் தேசிய விருது கையில் கிடைத்ததும், விஷத்தைக் கீழே போடுவது அம்மாவிடம் கொடுங்கள் என்ற அந்த வைர மோதிரத்தின் வைரத்தைச் சாப்பிட்டு கதிர் இறப்பது என இயக்குனர் முத்திரை பதிக்கும் காட்சிகள் நிறைய உண்டு. ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த எழுத்துக் கரங்களுக்குச் சொந்தக்காரர். சொந்தப் படத்திற்கு சொக்கத் தங்கமாக பாடல்களைபத் தீட்டி உள்ளார்.

சந்தேகத்தின் பேரில் இளைஞர்களை காவல்துறை பிடித்துச் செல்வதால் அவர்களது வாழ்க்கை சீரழிந்து போவது, அப்பா அம்மா தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டுவதால், காதலை தியாகம் செய்து விட்டு பின் உயிர் உள்ளவரை அந்தக் காதலை மறக்க முடியாமல் நடைப்பிணமாக வாழ்வது. இப்படி பல்வேறு நிகழ்வுகள் படத்தில் வருகின்றது. படம் பார்த்து விட்டு வந்த பிறகும் படத்தின் காட்சிகள் நம் மனக் கண்ணில் வந்து விடுகின்றது. இரட்டை அர்த்த வசனம் ஆபாச நடிகையின் குத்துப்பாட்டு, கிராபிக்ஸ் கலக்கல் என வழக்கமான சினிமாத்தனமே இல்லாத ஒரு சினிமா தந்த வித்தக் கவிஞர் பா.விஜய் பாராட்டுக்குரியவர். நடிகர் என்ற மற்றொரு மைல்கல்லைத் தொட்டு சிகரத்தில் சிம்மாசனம் இடுகின்றார்.

கவிஞர் கதிர், தனது காதலியின் நினைவாக தனது பெயரையே மீரா பிரியன் என மாற்றிக் கொள்வது காதலி தன்னை விட்டுப் பிரிந்த போதும். வேறு மணம் முடித்து சராசரி வாழ்க்கை வாழாமல் காதலி சொன்ன இலட்சியமான தேசிய விருது பெறுவது என காதலை மிக மென்மையாகவும், மேன்மையாகவும் வெள்ளித்திரையில் பதிவு செய்து இருக்கிறார்கள்.

செருக்கு இல்லாத சிறந்த மனிதர் வித்தக் கவிஞர் தனது திறமை, தன்னம்பிக்கை இவற்றை மூலதனமாகப் போட்டு மூளையைப் பயன்படுத்தி மிக நுட்பமாக தரமான படம் தந்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படம் சொல்ல வரும் செய்தி 'உண்மையான காதலுக்கு என்றும் அழிவில்லை, காதலர் அழிந்தாலும் காதல் அழிவதில்லை. உங்களுக்கு நேர்ந்த அவமானங்களைச் சேமித்து வையுங்கள். அவை உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாகும். இப்படி திரைப்படம் பார்த்தவர்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் தரமான படைப்பான வழங்கி உள்ள வித்தகக் கவிஞர் பா.விஜய் இயக்குநர் திரு.ஜீவன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் விக் உள்ளிட்ட அத்துணை தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்.

நிஜத்தில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதர்,  நிழலில் மிக நன்றாக நடித்துள்ளார். சிறந்த கவிஞர் சிறந்த நடிகராக மலர்ந்தமைக்கு இலக்கிய உலகின் சார்பில் இனிய வாழ்த்துக்கள். தமிழத் திரைப்படத்தை உலகத்தரத்திற்கு உயர்த்திய தரத்திற்குப் பாராட்டுக்கள். குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய மிகச்சிறந்த கண்ணியமான காதல் சித்திரம்.





eraeravi@gmail.com