தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்


கவிஞர் மு.சரளாதேவி


மிழ்மொழி பற்றி பேசுமுன் மொழியின் ஆரம்பக்காலதையும் அதன் படிப்படியான வளர்ச்சி பற்றி நாம் பார்க்கவேண்டும்.மனிதன் தோன்றிய ஆரம்பகாலத்தில் அவனின் மன உணர்வுகளை மற்றவர்களுக்கு தெரியபடுத்தவும் தன் தேவைகளை கேட்கவும் முதலில் அவன் கையாண்டது சைகை மொழி இந்த சைகை மொழிதான் இன்றும் நம்மிடையே பயன்பட்டு வருகிறது அதன் பின் உணவு தேடும் பொருட்டு இடம்பெயர்ந்து செல்லுகையில் எதிர்ப்படும் ஆபத்துகளை தனக்கு பின் வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் குறியீடுகள், கல்வெட்டுகள் மூலமாக உருவங்களை வரைந்தான், அதன் பின் நாகரிக வளர்ச்சியின் காரணமாக சொல், எழுத்து தோன்றிப் படிப்படியாக வளர்ந்து பின் பல அறிஞர்கள் மூலமாகச் செதுக்கப்பட்டு ஒரு உருவமாக செம்மையாக்கப்பட்டது நம் தமிழ்மொழி. அத்தகைய பழமையான நம் தமிழ் மொழியின் பிறப்பையும் வளர்ச்சி நிலைகளையும் பார்க்கலாம்.

மொழியின் ஆரம்ப நிலை ஓலி மொழியாதல்

மொழியின் முதற்காரணமே ஒலிகள் தான் சிலவகை அசைவுகள் நம் செவிபுலனைத் தாக்கும்போது உணரப்படுவதே ஒலியாகும் .இவ்வாறே மொழிஉணரப்படுகிறது. மொழி பேசுவோரின் குரலில் பிறந்து, பொருளை உணர்த்தும் அறிகுறிகளாக அமைந்து, கேட்போரால் பொருள் உணரப்படும் ஒலிவகை எனலாம். மேலும் பேசுபவர், கேட்பவர் இருவருக்கும் இடையே ஒருவர் உணர்ச்சியையோ, கருத்தையோ மற்றவருக்கு உணர்வதற்குப பயன்படுகிறது.

இவ்வாறு பேசும்போது ஏற்படும் ஒலிகூட்டங்களில் உள்ள சிறு சிறு ஓலி துணுக்குகளை ஆராய்ந்து பாகுபாடு செய்து எழுத்துகள் என வகுத்தனர் (எ கா) அ,ஆ இவை இவை செவியால் கேட்டு உணரப்படும் வரிவடிவங்கள் ஆகும். இவைகளை உயிர், மெய் என பிரித்து வகைபப்டுதியுள்ளனர்.

'நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று குரல்வளையின் ஊடே புகுந்து வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் வரும்போது, வாயில் உள்ள நாக்கு, இதழ், அன்னம், பல், ஆகிய உறுப்புகளால் தடையுற்று வெளிபடுவதே எல்லா ஒலிகளும் பிறக்க காரணம்' என்று மொழிநூல் அறிஞர் புளும்பீல்டு கூறுகிறார்.

இவ்வாறு வெளிப்படும் ஒலிகளை வகைபடுத்தி எழுத்துகளை வரிவடிவில் கொடுத்த நம் மூத்த அறிஞர்கள் இல்லாவிட்டால் இன்றைக்கு நாம் நம் மொழியின் அடையாளங்களாக சொல்லிகொண்டிருகிரோமே சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் போன்ற நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறைகளை படம்பிடித்து காட்டும் பல இலக்கியங்களை அடையாளம் காண முடிந்திருக்காது. எனவே முதலில் அந்த மூத்த மொழிநூல் அறிஞர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.
மொழியின் தற்கால நிலை

பேச்சு மொழி இன்று வட்டார வழக்குகளில் எப்படி பேசினாலும் எழுத்து மொழிவேறுபடுவதில்லை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.


'மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்
எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்'.
20 ( தொல்காப்பியம் மொழிமரபு )

ஆனால் இன்று நாம் நம் வசதிகளுக்கு ஏற்ப எழுத்துகளையும் சுருக்கிகொண்டுள்ளோம் நம் முன்னோர்கள் சொன்ன பல கருத்துக்களை ஒருவர் சொல்ல அது பல நபர்களை கடந்து நம் காதுகளுக்கு வரும் போது அதன் பொருள் மாறுபட்டு நம்மிடையே வந்து சேரும் இந்த திரிபுகளால் இன்று பல நல்ல விசயங்களை தவறாகவும் தவறான விசயங்களை நல்லது என்றும் நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

(உ.ம் ) 'பந்திக்கு முந்து படைக்கு பிந்து'

இந்த பழ மொழியின் பொருள் போர்க்களத்தில் குதிரைப் படைகளை முதலிலும் அதன் பின் யானை படைகள் கடைசியாக வீரர் படைகளை அனுப்புவது முறை . ஆனால் இதன் பொருளை நாம் எப்படி பொருள் கொண்டுள்ளோம் சாப்பாட்டு பந்திக்கு முதலும் படைக்கு பிந்தியும் செல்லவேண்டும் என்று அவரவர் தேவைக்கு ஏற்ப மாற்று பொருள் கொண்டுள்ளோம் இவற்றை பற்றி நம் மொழிநூலார்கள் விளக்கமாக கூறியுள்ளனர்

மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது என்பதையும் காலபோக்கில் மொழி அடைந்த வளர்ச்சியையும் அதன் மாற்றங்களையும் பல ஆசிரியர்களின் நூல்கள் மூலம் நம் அறியமுடிகிறது .

பிற நாட்டவர் கலப்பினால் அவர்களின் கலாச்சாரம், உணவு, உடைகளை நம் பயன்படுத்துவதுபோல மொழியையும் அவர்களின் உச்சரிப்புபோல உச்சரிக்க ஆரமித்ததின் விளைவு மொழி திரிந்தது.

'நாலாம் தலைமுறையில் நாவிதனும் சித்தப்பனாவான்' ( பழமொழி)

மனிதர்களின் உறவு முறைகளுக்கு மட்டுமல்ல மொழிக்கும் பொருத்தமானதுதான்.

மொழிக் கலப்பு:

நன்கு படித்தவர்கள் சொற்களை அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறார்கள். வடநாட்டினர் வருகையால் ஷா, ஹ ,ஜ, போன்ற வார்த்தைகளை நம் சுலபமாக பயன்படுத்த ஆரமித்ததால் நாம் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க ஆரமித்துவிட்டோம் இது நம் சோம்பேரித்தனத்தால் உருவானதா ?அல்லது எளிமையாக சொல்வதாக நினைத்து பயன்படுதினோமா ? என்பதை மொழிநூலார் ஆராய்ந்துகொண்டு இருகின்றனர்.

மொழியின் எதிர்கால போக்கு:

இன்று மொழியின் நிலை என்னவென்றால் சிறுக சிறுக குறைந்து அவரவர் வசதிக்கேற்ப சிதைந்து புது வடிவம் கொடுத்துக்கொண்டிருகிறோம் இயந்திரமயமாகிவிட்ட இன்றைய நிலையில் இன்பங்களைகூட இணையத்தளத்தில்தான் பெறுகின்றனர். நேரம் குறைவாக இருப்பதால் பேச்சில் சுருக்கம் ஏற்பட்டது ' வந்து கொண்டிருகின்றேன் ' என்பதை 'வரேன்' என்றாலே புரிந்து கொள்ளமுடிகிறது. எனவே நேரம் குறையும் போது வார்த்தைகளையும் குறைதுத்துக்கொண்டிருகிறோம் . ஒரு முழு சாப்பாட்டை கையடக்க பையில் கொண்டு வந்ததுபோல மொழியை வாயிற்கு அடக்கமாக் கொண்டு வந்துள்ளோம்.

மொழியும் கால நிலையும்

பேச்சு உறுப்புகள் கால நிலைக்கு ஏற்ப ஒலிகளை வெளிப்படுத்துவதில் வித்தியாசப்படுகின்றன, குளிர் பிரதேசத்தில் வாழகூடியவர்கள், வெப்பமான பிரதேசத்தில் வாழ கூடியவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உணவு, உடை மாறுவது போல பேச்சும் மாறுபடுகிறது.

'அடுத்த
100 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள பேச்சு மொழிகளில் 90 விழுக்காடு காணாமல் போய்விடும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 6,000 முதல் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பூர்வீக குடிமக்களால் பேசப்படுகிறது. ஆனால் இவற்றில் பெரும்பான்மையான - 90 விழுக்காடு - மொழிகள் காணாமல் போகும் நிலையில் உள்ளன.
ஏனெனில் மேற்கூறிய மொழிகளில்
4 விழுக்காடுமொழிகளே உலகம் முழுவதும் அதிகமாக - உலக மொத்த மக்கள் தொகையில் 97 மூ - பேசப்படுகிறது.மீதமுள்ள 96 விழுக்காடு மொழிகளும், உலகம் முழுவதும் 3 மூ மக்களால் மட்டுமே பேசப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த
100 ஆண்டுகளில் 90 விழுக்காடு மொழிகள் காணாமல் போய் விடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது'


எனவே இன்றைக்கு இயற்கையின் பேரழிவு ஏற்படக்கூடிய இடங்களில் இருக்க கூடிய மக்கள் பேசும் மொழிகள் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது காரணம். நில நடுக்கம், கடல் சீற்றம், இவற்றால் பூகம்பம், சுனாமி, இவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு தீபகற்ப நாடுகளுக்கு புலம் பெயர்கிறார்கள், அங்கு வசிக்கும் மக்களுடன் பழகும் போது அவர்களின் மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள்.

நம் நாடு வந்தோரை வாழ வைக்கும் நாடு. நம் நாட்டிற்கு வரும் பல நாட்டு மக்களையும் இனம், மொழி, மதம் கடந்து சகோதரத்துவத்துடன் வாழ வைக்கும் நம் தாய் நாடும் ,தாய் மொழியும் என்றும் அழியா வரம்பெற்ற செம்மையான மொழி என்பதில் கடுகளவும் ஐயம் இல்லை.

முடிவுரை:

நம் மொழியின் பெருமை உலகம் முழுவதும் பரவினாலும் நம் தாய் நாட்டில் சிறுமைப்பட்டு இருப்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை 'நெய்தவன் சட்டை இல்லாமல் இருப்பது போல' மற்ற மொழி பேசுபவர் கொடுக்கும் மதிப்பை நம் தாய் நாட்டில் தமிழ் மொழிக்கு நாம் கொடுக்காதது வருத்ததிற்குரியது . தமிழில் படித்தவர்களை தொழில் கூடங்களிலும், கல்விகூடங்களிலும், பணியில் அமர்த்த யோசிக்கும் நிலை நம் நாட்டில் இருப்பதை நினைத்து வேதனையின் உச்சத்தில் இருந்தாலும் எங்கள் தமிழ்மொழியின் புகழ் பரப்ப ஒருபோதும் ஓய்ந்ததில்லை நாங்கள் 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' இனி ஒலிக்கட்டும் உலகமெங்கும்.



கவிஞர் மு.சரளாதேவி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
ஈச்சனாரி , கோவை.