மாயாண்டி குடும்பத்தார்
விமர்சனம்:
கவிஞர்.இரா.இரவி
உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 10
இயக்குனர்கள் நடித்து, அல்ல அல்ல, வாழ்ந்து வெளிவந்துள்ள சிறந்த படம்.
இயக்குனர் திரு. இராசு மதுரவன் 10
இயக்குனர்களின் திறமை அறிந்து பொருத்தமான பாத்திரங்களைத் தந்து மிகத்
திறமையாக இயக்கி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, நல்ல படம்
பார்த்த திருப்தி உள்ளது. மண்வாசனை மாறாமல், கிராமத்து வாழ்க்கையை மிகச்
சிறப்பாக காட்சிக்கு காட்சி செதுக்கி இருக்கிறார். வசனம் மிக நுட்பமாக
எழுதி இருக்கிறார். கதையே இல்லாமல், பெண்ணின் சதையை மட்டும் காட்டி, காசு
சேர்க்கும் இயக்குனர்கள் அவசியம் இந்தப் படம் பார்த்து திருந்த வேண்டும்.
கிராமத்து
திருவிழாக் காட்சிகள், கரகாட்டம், முளைப்பாரி என பண்பாட்டை
பறைசாற்றுகின்றன. பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்
இயக்குனர் திரு. சீமான். வைர வரிகள், கல்வெட்டு வார்த்தைகள். திரைப்படப்
பாடல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் வகையில் பாடல்
வரிகள், இசையும் மிக நன்று. சீமான் அவருக்குத் தந்த பாத்திரத்தை
உயிரோட்டமாக வழங்கி உள்ளார். பன்முக
ஆற்றலானர் என்பதை நிரூபித்து உள்ளார்.
இயக்குனர் திரு. மணிவண்ணன் மிகச்சிறந்த, குணச்சித்திர நடிகர் என்பதை
நீருபணம் செய்து உள்ளார். அப்பாவை திட்டியதற்காக சக மாணவனுடன் சண்டையிட்ட
மகனை கல்லூரி முதல்வர் திட்டியதும் அவர் முன்னிலையில் மகனை அடித்து விட்டு,
இயக்குனர் திரு. மணிவண்ணன், அய்யா, இதுவரைக்கும் என் மகனை அடித்தது இல்லை.
என் தாத்தா, அப்பா, நான் படித்ததில்லை. இவன் மூலம் தான் படிப்பு வாசனை என்
வாசலுக்கு வர வேண்டும் என்று சொல்லி, கண் கலங்கும் போது கல்லூரி முதல்வர்
எழுந்து வந்து படிக்கட்டும் என ஆறுதல் சொல்லும் போது நம் கண்களில் கண்ணீர்
வந்து விடுகிறது. திரைப்படம் என்பது வெறும் நடிப்புத் தானே என
விழ்ப்புணர்வுடன் இருக்கும் முற்போக்குவாதிகளும் கண்கலங்கி விடுகின்றனர்.
மின்சாரம் தாக்கி இறக்கும் தருணத்தில், மூத்த மகன்களிடம், தம்பி படிப்பைப்
பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுவது நெகிழ்ச்சி. வசனத்திற்காக
திரையரங்கில் கை தட்டல் கேட்கும் சத்தம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப்
படத்தில் தான் கேட்கின்றது. இந்தப் படத்தை கோடிகளைப் பெற்றுக் கொண்டு,
அளவுக்கு மீறி பந்தா காட்டும் பிரபல கதாநாயகன்கள் அனைவரும் பார்க்க
வேண்டும். 10 இயக்கனர்களின் இயல்பான
நடிப்பால் படம் பெற்றி பெற்று உள்ளது.
கதாநாயகன்களின் செருக்கை அழிக்க வந்த படம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு
மிகச் சிறப்பாக அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்து, நமது பண்பாட்டை, அன்பை,
பாசத்தை பறைசாற்றி இருக்கிறார்கள். இயக்குனர் தருண் கோபி, கிராமத்து
இளைஞராகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார். குடும்பம் பிரியக் கூடாது என
அண்ணி காலில் விழுவது, வெட்டிப்பயல் எனக் கேலி பேசிய அக்காள் கணவன் மாமா
வீட்டு காது குத்துவிற்கு ரூ. 50,000-
மொய் செய்து விட்டு சாப்பிடாமல் திரும்புதல், தானாக சமைத்து சாப்பிடுதல்,
நல்ல வேலை கிடைத்து பிரியாணி சாப்பிட வந்ததும், ஒரு நிமிடம் ! என்று
சொல்லி விட்டு, கை கழுவ வந்து, அப்பாஇ பரியாணி கூட சாப்பிடாமல்
கஷ்டப்பட்டு, தன்னை வளர்த்ததை நினைத்து அழும் காட்சி, இப்படி நம்மை நெகிழ
வைத்து விடுகிறார். குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் திரைப்படங்கள்
வந்து வெகு நாட்கள் ஆகி விட்டன. குடும்பம் என்றால் என்ன? பாசம் என்றால்
என்ன? விட்டுக் கொடுத்தல், அன்பு இப்படி பல பாடங்கள் படத்தில் உள்ளது.
குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய அற்புதமான
படம். படத்தை நீங்கள் சென்று பார்த்தால் உண்மை என்பதை உணருவீர்கள். மொய்
செய்து விட்டு, தம்பி சாப்பிடாமல் செல்வதுக் கண்டு, பின்னாடியே ஓடி வந்து
கூப்பிடுவது, பஸ் ஏறி தம்பி சென்றதும், அக்கா, என் அப்பா சாகவில்லை, தம்பி
வடிவில் வாழ்கிறார் எனக் கதறி அழுவதும் உள்ளத்தை உலுக்கும் உயிரோட்டமான
காட்சிகள். திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இன்றி, நம் கண் முன்னே,
உண்மையான நிகழ்வினை பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது.
சமூதாயத்தை நெறிபடுத்த, இது போன்ற திரைப்படங்கள் உதவும். கலை என்பது
மக்களுக்காக. இந்தக் கலை மக்களைப் பயன்படுத்த உதவ வேண்டும். அந்தப்
பணியினை இந்தப் படம் செவ்வனே செய்து உள்ளது.
eraeravi@gmail.com
|