சிந்தை அள்ளும் சிற்சபேசனார் கவிதைகள்
அனலை
ஆறு
இராசேந்திரம்
மூன்று
நாட்களாகப் பெய்த அடைமழையால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த
நிலக்கிழாரான புலவர் வயலைப் பார்த்து வரும் நோக்கோடு
எழுந்தார்,வெளிவந்து வானை அண்ணந்து பார்த்தார். மாலை வானம் கருமேகக்
கூட்டங்களால் நிரம்பியிருந்தது. எந்த நேரத்திலும் மழை பெய்வதற்கான
அறிகுறி தெரிந்தது. 'போவதா, விடுவதா' என்று மனம் ஊசலாடத் தொடங்கிற்று.
முடிவெடுக்க முடியாமல் இருந்தது புலவரால். வள்ளுவர் நினைவில் வந்து
'செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடிவிடும்' என்றார். 'இனியும் தாமதித்தால் பூமாதேவி
கோபித்துக் கொள்வாள்' என்று அவர் வாய் முணுமுணுத்தது. துண்டை உதறித்
தோhளிற் போட்டவராய் குடையை எடுத்துக் கமக்கட்டில் வைத்துக் கொண்டு
நடந்தார் புலவர்.
செல்லும் வழியில் அழகு குடியிருக்கும் ஒருசோலை கணணைக் கவர்ந்து
விளங்கிற்று. அங்கு நின்ற தனிப்பனை மீது காகம் ஒன்று சோகமே ஒருவாகக்
காணப்பட்டது. காக்கையின் துயருக்கான காரணத்தைத் தேடினார் புலவர். இது
நாள் வரை தன்; கூட்டில் வளர்த்த குஞ்சுகள் சிறகடித்துப் 'கூக்கூ'
எனக்கூவியவாறு பறந்து குயில்களுடன் நென்றதைக் கண்டு,
குயில் முட்டையை அடைகாத்த தன் அறியாமையை எண்ணிக் காகம் சோகம் கொண்டதாய்
தெளிந்தார்.
தாக்கணங் குறையும் சோலைத்
தனிப்பனை மீது வைத்த
சேக்கையில் வளர்த்த குஞ்சு
சிறகடித் தெழுந்து தாவிக்
கூக்குரல் செய்து கூவிக்
குயிலினம் சேரக் கண்ட
காக்கைதன் னிழிவு நோக்கிக்
கருத்தழிந் தயரு மன்றே
இப்படி, அவர் எழுத்தாணி காட்சியை ஏட்டிற் பதிந்து கொண்டது.
வயற்புறம் சென்று சேர்ந்தார் புலவர். அந்த மழைக்காலக் கருக்கள் மாலைப்
போதில், தவளைகள் சிறிதாய்ச் சத்தமிட்டன. மண்டூகங்கள் கத்தின. மின்மினிப்
பூச்சிகள் ஒளிசிந்திப் பறந்தன. மேகம் முழங்கிற்று. வீசிய காற்றுக்குப்
பயிர்கள் அழகாய் அசைந்தன. காட்சி புலவருக்கு நடன நிகழ்வாகத் தெரிந்தது.
'சின்னத் தவளையினம் வீணை
தித்தி காளம் குழலிசைப்பப்
பென்னம் பெரிய மண்டூகம்
பேரி முழவு கடமொலிப்ப
மின்னின் மினிகள் விளக்கேத்த
மேக வெடிசங் கொலியுடனே
வன்னச் சாலிமாது வயல்
அரங்கில் ஆடி மகிழ்ந்திடுமே.
துவளை கத்தும் ஒலியை வீணை, தித்தி, காளம், குழல் என்பவற்றின் இசையாகவும்
மண்டூகங்களின் பெருங்கூச்சலைப் பேரி, முழவு,கடம் என்பனவற்றின்
ஓசையாகவும் மேக முழக்கத்தைச் சங்கொலியாகவும் கொண்டு, மின்மினிப்
பூச்சிகள் சிந்திய ஒளியில் வயலரங்கில் அழகிய நெற்பெண்ணாள் நடனம் ஆடி
மகிழ்ந்தனள் என்று நயம்படி எழுதிக்கொண்டார் புலவர்.
தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக்
கொணடல்கள்; முழவி னேங்கக்
குவளைகண் விளித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிளி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ!
வயல் நிலத்தை இயற்கை அழகு கொஞ்சும்
ஆடரங்கு என்னக் காட்டுவான் கம்பன்.
அவ்வரங்கில் அழகிய ஒரு நடனத்தைக் காட்டுகிறார் ஈழத்துப்புலவர்.
கம்பநூற் கடலுட் படிந்து நன்மணிகள் பல எடுத்துத் திரட்டி வைத்த பண்டாரம்
போன்று விளங்கிய தமிழ்ச் செல்வர் சிற்சபேசனார் உள்ளத்தே பிறந்த கவிதை ,கவிச்சக்கரவர்த்தியின்
சாயலை ஒத்திருப்பது இயல்புதானே!.
மழை கொட்டுவதற்கு முன் வீடு போய்ச் சேர்ந்துவிடும் நோக்கில் குறுக்குப்
பாதையில் இறங்கி நடந்தார் புலவர். அங்கே காணப்பட்ட வாழைத் தோப்பொன்றின்
கரையிற் சாய்ந்து வளர்ந்திருந்த தென்னை மரத்தின் பாளை, மதுவைச்
சொரிந்தது. அதனை உண்ட சிறிய அணிலொன்று மயக்குற்றுத் துயின்றது. சினம்
கொண்ட காக்கை அணிலின் கன்னத்தைக் கொத்திக் கிழித்தது. காட்சியைக்
கீழ்க்கண்டவாறு அழகுற எழுதிக்கொண்டார் புலவர்.
கன்னங் கரிய கதலிவனக்
கரையிற் றெருவிற் சாய்ந்துவளர்
தென்னம் பாளை மதுச்சொரியத்
தேறலுண்டு திகைத் தயரும்
சின்னஞ் சிறிய அணில் மீது
சீறிச் சினக்கும் காக்கையதன்
கன்னங் கிழியக் குட்டுமொரு
காட்சி என்று முளதாமால்
மேல் எடுத்தாண்ட பாக்கள் மூன்றையும் எழுதியவர் புலவர் சிற்சபேசனார்
அவர்கள் ஆவார்;. இவர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஈழத்தின்
சிறுந்த புலவராக கணிக்கப்பட்டிருந்தவர். ஈழத்தமிழ் வரலாற்றில்
இடம்பெற்ற 'இந்துசாதனம்' செய்தி ஏட்டின் உதவி ஆசிரியராகக்
கடமையாற்றியவர். தமிழ்ப் புலமையும், இயற்கையைப் பாடும் கவித்துவமும்
இலங்கைப் புலவர் வரிசையில் அவருக்கு ஒப்பற்ற இடத்தைக் கொடுத்திருந்தன.
|