சகோதரியான புன்னை மரம்.......
முனைவர்.இரா.குணசீலன்
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி
வரைவு கடாயது குறிபெயர்த்தீடும் ஆம்
பகலில்
தலைவன் தலைவியைக் காணும் ஆவலில் அவள் வீட்டின் அருகே உள்ள புன்னை மர
நிழலில் வந்து காத்திருந்தான். தோழியோ அவன் இதுவரை காதலித்தது போதும்
தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ளத் தூண்டவேண்டும் என எண்ணினாள்..
அதனால் தலைவனிடம் தோழி கூறுவாள்........
நீயோ தலைவியைச் சந்தித்து மகிழ்வதற்காக இங்கு வந்திருக்கிறாய். ஆனால்
தலைவியோ இவ்விடத்தில் உன்னுடன் மகிழ்ந்து உறவாட விரும்பவில்லை. ஏனென்றால்....
யாரவது தம் தங்கையின் முன் காதலித்து மகிழ்வார்களா?
ஆம்... நீ நிற்கும் இந்த புன்னை மரம் எங்களுக்குத் தங்கை உறவாகும். அதனால்
நீ வேறு மர நிழல் உண்டா என்று பார் என்கிறாள்....
இதுவே தலைவனிடம் தோழி கூறியது....
இப்பாடல் வழி சங்க காலத்தில் மரங்களையும் உறவாக, உயிராக மதித்தமை
புலனாகிறது...
பழந்தமிழர் இயற்கையோடு கலந்து வாழ்ந்தமை, இயற்கையோடு உறவு கொண்டிருந்தமை
ஆகியன இதனால் அறியமுடிகிறது.
சுற்றுச்சூழல் சீர்கேட்டில் வாழும் நமக்கு சங்க கால மக்களின் வாழ்வியல்
ஒரு பாடமாக அமைகிறது...
இதனை,
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே!
நற்றிணை- 172
இப்பாடலை உரையாடல் வடிவில் இங்கு காண்போம்.....
தோழி: வாங்க சரியா நேரத்துக்கு வந்துவிடுகிறீர்களே எப்படி?
தலைவன்: அவளைப் பார்க்காமல் ஒருவேளையும் செய்யமுடியவில்லை.
விழித்திருக்கும் போது ...
எந்தப் பக்கம் திரும்பினாலும் அவள் முகம் தான் தெரிகிறது.. கண்மூடித்
தூங்கினாலும் கனவிலும் அவள் முகம் தான் தெரிகிறது நான் என்ன செய்வது...
தோழி: போதும் போதும்.....
தலைவன்: தலைவி எங்கே...?
தோழி: அருகில் தான் இருக்கிறாள்....
ஆனால்......
தலைவன் : என்ன ஆனால்.........?
தோழி : நீங்கள் நிற்கும் இந்த புன்னை மரநிழலில் உங்களைச் சந்தித்து
உறவாட அவளுக்கு விருப்பமில்லை..
தலைவன் : ஏன் இது அவர்கள் வீட்டு மரம் தானே... இங்கு என்னைச்
சந்தித்துப் பேச அவளுக்கு என்ன தயக்கம்....?
தோழி : அவள் வீட்டு மரம் தான் ஆனால், இதனை நாங்கள் யாரும்
மரமாகக் கருதவில்லை.....
தலைவன் : பிறகு...?
தோழி: எங்கள் தங்கையாகக் கருதுகிறோம்.....
தலைவன்: என்ன இது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது...
மரத்தை தங்கையாகக் கருதுகிறீர்களா...? இது என்ன வேடிக்கையாக இருக்கிறது...?
தோழி: இது ஒன்றும் வேடிக்கையல்ல....
இதற்கான காரணத்தைத் தாங்கள் அறிந்தால் இவ்வாறு கேட்க மாட்டீர்கள்....
தலைவன்: அப்படியா...! அப்படி என்ன காரணம்.....?
தோழி: முன்பு ஒரு நாள் புன்னை விதையை வைத்து மண்ணுள்
புதைத்து விளையாடினோம்..
தலைவன்: சரி...
தோழி: அப்போது எம் அன்னை எம்மை அழைத்தாள்...
நாங்களும் மண்ணுள் புதைத்த விதையை மறந்து அப்படியே விட்டு விட்டுச்
சென்றுவிட்டோம்...
தலைவன்: பிறகு...?
தோழி: பின் மழை வந்ததில்.. மண்ணுள் இருந்த புன்னை விதை வளர
ஆரம்பித்தது...
தலைவன்: அட...!
தோழி: நாங்களும் மகிழ்வோடு அதனை வளர்க்கலானோம்....
சாதாரணமாக வளர்க்கவில்லை....
தலைவன்: வேறு எப்படி வளர்த்தீர்கள்...?
தோழி: அந்தப் புன்னைச் செடிக்கு... பால்.... தேன் என்று
ஊற்றி வளர்த்தோம்.....
தலைவன்: செடிக்கு யாராவது பாலும் தேனும் ஊற்றுவார்களா...............?
தோழி: நாங்கள் அதனை ஒரு செடியாக மட்டும் மதிக்கவில்லை...
எங்கள் சகோதரியாகவே மதித்தோம்... அதனால் தான் பாலும் தேனும் ஊற்றி
வளர்த்தோம்.
தலைவன்: சரி...
தோழி: எம் அன்னை பல நேரங்களில் கூறுவாள்.....
நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும் என்று....
தலைவன்: அப்படியா.........?
தோழி: ஆம் நாங்கள் தவறு செய்யும் சூழல்களில் இந்த புன்னை
மரத்தைத்தான் காட்டி
உரைப்பாள்....
உங்களைக் காட்டிலும் இந்த புன்னை மரம் எவ்வளவோ பரவாயில்லை....அமைதியாக
உள்ளது....
சொல்வதைக் கேட்டுக்கொள்கிறது என்று பலவாறு கூறுவாள்...
தலைவன்: சரி இந்தப் புன்னை மரம் உங்கள் சகோதரியாகவே
இருக்கட்டும்....
தலைவி இங்கு வந்து என்னைக் காண்பதில் என்ன சிக்கல் உள்ளது...?
தோழி: யாரவது தங்கைக்கு முன்னர் காதலித்து மகிழ்வார்களா...?
இந்தப் புன்னை,
மரம் மட்டுமல்ல எங்கள் தங்கையும் கூட...
அதனால் வேறு மர நிழல் ஏதும் உள்ளதா என்று பாருங்களேன்....
தலைவன்: (மனதில் எண்ணிக் கொள்கிறான்)
தோழி அதற்காக மட்டும் மறுக்கவில்லை....
நான் தலைவியை விரைவில் மணந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடும்..,
பகற்குறி வந்தால் ஊரார் பார்த்துப் பழி தூற்றுவர் என்று அஞ்சியும் தான்
தலைவியைப் பார்ப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கிறாள்...
சரி இனியும் காலம் தாழ்த்தாது தலைவியை மணந்துகொள்ள வேண்டியது தான்..)
இதுவே அப்பாடலின் பொருளும் உட்பொருளும்...
இப்பாடல் வழி நாமறிந்து கொள்ள வேண்டியது..
தாவரங்கள் உறவாக மதிக்கப்பட்ட காலம் சங்ககாலம் என்பதையும்............
நாம் உறவாக மதிக்காவிட்டாலும் உயிராகவாவது மதிக்கவேண்டும் என்பதும் தான்...
gunathamizh@gmail.com
|