முன்னுரை
இன்றைய
காலகட்டத்தில் நாட்டுப்புறவியல் வளர்ந்து வரும் துறையாகும்.
கதைகளின் கூறுகளை ஆராய்ச்சி செய்வதற்குக் கோட்பாடுகள்
தேவைப்படுகின்றன. கோட்பாடுகள் வழி கதைகளை ஆராய்ச்சி செய்வதால்
பேருண்மைகளையும், தத்துவங்களையும் எளிமையாக புரிந்து கொள்ள
முடியும். கோட்பாடுகள் மூலம் கதைகளை விளக்கினால் பாமர மக்களும்
எளிதில் புரிந்து கொள்வார்கள். நாட்டுப்புற இலக்கியத்தை
மேலைநாட்டாய்வாளர்கள் கோட் பாடுகள் வழிநின்று ஆய்வு
செய்துள்ளனர். திண்டுக்கல் வட்டார நாட்டுப்புறக் கதைகளை ஆய்வு
செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கோட்ப்பாடுகள் உருவாகக் காரணம்
நம் முன்னோர்களின் பாரம்பரியம் மரபு வழிபட்டது என்று கூறி
பாதுகாத்து வருகிறோம். ஆய்விற்காக சேகரிக்கும் தரவுகள்
ஆய்வுக்கு இட்டுச் செல்ல வேண்டும். உலகம் முழுமையும் நடைபெறும்
எல்லாச் செயல்களும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. அவை தனி
மனிதனுக்கிடையேயும், கிராமத்திற்கு கிடையேயும்,
நகரத்திற்கிடையேயும் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும் சில
வேறுபாடுகளும் காணப்படுகின்றன. ஆகவே ஆய்வில் சேகரித்த தரவுகளைப்
புரிந்து கொள்வதற்குக் கோட்பாடுகள் இன்றியமையாததாகின்றன.
புராணவியல் கோட்பாடு
நாட்டார் வழக்காற்றியல் கல்வி இருவகைப்படும். ஒன்று நாட்டார்
வழக்காறுகளை அடையாளம் காணுதல்
(identification),
மற்றொன்று அவற்றை
விளக்குதல்
(interpretation).
இதற்குத் துணையாகப்
பல்வேறு அடைவுகளும், ஆய்வடங்கல்களும் உருவாக்கப்பட்டன வில்
கெல்ம் கிரிம், ஜெக்கப் கிரீம் போன்ற ஜெர்மானிய சகோதரர்கள்
இருவரும் வாய்மொழிப் புராணவியல் ஆய்வாளர்களாகும். புராணவியலில்
தத்துவக் கருத்துக்களும், நீதிக்கருத்துக்களும் காணப்படுகின்றன.
புராணக்கதைகளை ஒழுங்குபடுத்தவும், விளக்கவும் முற்பட்ட நாட்டார்
வழக்காற்றியல் கருத்தாக்கம் புராணவியல் கோட்பாடு
என்றழைக்கப்பட்டது. வள்ளித்தினைப்புனம் காத்ததால் தினவிளை
என்றாகியது. முருகனுக்கும் குறமகள் வள்ளிக்கும் திருமண வேள்வி
நடந்ததால் வேள்விமலை இன்று வேளிமலையாகியுள்ளது. குமரி
மாவட்டத்திலுள்ள மலை நாட்டகத்தொரு திருப்பதி வேளிமலை தான்
என்பதற்கு நக்கீரர் குறிப்பிடும் திரு ஏரகம் என்பது சான்று
பகர்கிறது. வள்ளிக்கதை போன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள
பல்வேறு ஊர்களிலும் இக்கதையானது வழங்கப்பட்டு வருகின்றது.
முருகன் விருத்தனாக வந்து வள்ளியை மணம் முடிக்க வருகிறார்.
குறவர் படுகளத்தால் இறந்த குறவர்கள் வள்ளியின் வேண்டுதலால்
உயிர்ப்பெற்று எழுகிறார்கள். இன்றும் குமாரகோவிலிலுள்ள வள்ளிக்
குகையில் குறவர்களே பூஜை செய்கின்றனர். இங்குள்ள வேளிமலை,
தினைப்புனம் நீர்ச்சுனை, குறவர் படுகளம், வேள்விச் செய்யும்
யாகசாலை போன்றனவும் தெய்வத்தன்மை பெறுகின்றன.
நீதிக்கருத்துகள்
சமுதாயத்தில் திருமணம் என்பது ஒழுக்கமும் சமூக நீதியுமாகும்.
முருகப்பெருமானிடம் போர் செய்து குறவர் படுகளத்தில் இறக்கும்
குறவர்கள் வள்ளியின் வேண்டுதலால் நீதியின் பொருட்டு
உயிர்ப்பெற்று எழுகின்றனர். வள்ளிக்குகையில் வேடுவர்களே பூஜை
செய்கின்றனர் என்பது ஜாதி, மத பேதமின்றி அனைவரும் பூஜை
செய்யலாம் என்ற நீதியினையும், இறைவன் முன்னிலையில் அனைவரும்
சமம் என்கிற நீதிக் கருத்தினையும் உணர்த்து கின்றது. புராணவியல்
மூலம் இத்தத்துவக் கருத்துகளை அறிந்து கொள்ளமுடிகிறது.
வள்ளிக்கதை
முருகன் என்ற மானுடன் தெய்வநிலைக்கு மாறி வள்ளிக் குறத்தியாகிய
மானுடப் பெண்ணைத் திருமணம் செய்யும் நிலையை அறிந்து கொள்ள
முடிகிறது. இதனால் வள்ளி என்ற மானுடப் பெண் தெய்வ நிலைக்கு
உயர்த்தப்பட்டுள்ளாள். அவள் வாழ்ந்த இடமும் தெய்வத்தன்மை
பொருந்தியதாகக் காணப்படுகிறது.
இராமன் வில் முறித்தல்
திருமாலின் அவதாரமாகிய இராமன் என்ற மானுடன் மனித நிலையில்
வில்லை முறித்து சீதையைத் திருமணம் செய்து கொள்கிறான். இன்று
இராமனும் சீதையும் தெய்வநிலையை அடைந்துள்ளதை அறிய முடிகிறது.
இலட்சுமணன் வில்லால் கோடு கிழித்தல் இலட்சுமணன் வில்லினால் கோடு
கிழித்து அரக்கர்களிடமிருந்து சீதையைக் காக்க நினைத்ததால்
இலட்சுமணனும், தெய்வீகத்தன்மை அடைந்த நிலையை அறிய முடிகிறது.
வண்டிமலைச்சியம்மன்
தனது பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்க பேயாக மாறிய அண்ணனும்,
தங்கையும் அகத்தியரால் சாந்தப்படுத்தப்பட்டனர். இவர்கள் பல
அரிய செயல்கள் செய்ததால் இன்று தெய்வமாக மக்கள்
ஏற்றுக்கொண்டுள்ள நிலையைக் காணமுடிகிறது.
சிவனிக்கோணம் இசக்கியம்ம்மன்
குரும்புலியார் மகள்களானச் செம்பம்மகுட்டியும்,
நீலம்மகுட்டியும் மனித நிலையிலிருந்து தெய்வமாக மாறிய நிலையை
அறிந்து கொள்ள முடிகிறது. திருவிடைக்;கோடு சடையப்ப்பர் கோவில்
ஆதி திராவிடராகிய சடையன் மாட்டினை அறுக்க கத்தியைத் தீட்டிய
வேளையில் கல்லிலிருந்து இரத்தம் வடிந்ததால் இக்கல்லும்
தெய்வநிலையை அடைந்துள்ள நிலையைக் காணமுடிகிறது.
காந்தாரி அம்ம்மன்
திருதராட்டினன் மனைவியாகிய காந்தாரி தன் கணவனையே தெய்வமாக
போற்றும் பண்பால் அவளும் தெய்வமாக மாறிய நிலையைக் காணமுடிகிறது.
ஒப்பீட்டு முறைக் கோட்ப்பாடு
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களை ஒரு சேர நிறுத்தி
வைத்து, அவற்றிற்கிடையேயுள்ள ஒப்புமையையும், வேற்றுமையையும்
பார்ப்பது மனித இயல்பு. அதுபோல கதைகளுக்கிடையேயான ஒன்றுபட்ட
கூறுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது இயல்பான ஒன்றாகும்.
ஒன்றனை இன்னொன்றனோடு ஒப்பிடுவதற்குக் காரணம். ஒன்றனை விட
இன்னொன்று சிறப்பானது என்று செம்மாப்புக் கொள்வதற்காக அன்று
மாறாகக் குறிப்பிட்டக் கதைகளைப் படிப்பவர்களுக்குத் தெளிவாகவும்,
எளிதாகவும் விளக்குவதற்காகவும் ஒரு புதிய கோணத்தில் ஒப்பீடு
செய்வதற்காகவும் ஆகும். இவ்வாறு காணப்படும் ஒற்றுமைகளையும்
வேற்றுமைகளையும் அறிந்து கொள்ள முடியும். ஒப்பீட்டு முறையில்
வள்ளிக்கதையும், அனந்தபத்மநாபபெருமாள் கதையும், சிவனிக்கோணம்
இசக்கியம்மன் கதையும். வண்டிமலைச்சியம்மன் கதையும்,
திருவிடைக்கோடு சடையப்பர் ஆலயக் கதையும் ஒப்பீட்டுமுறைக்
கோட்பாட்டினைப் பயன்படுத்தி ஆய்வுச் செய்யப்படுகின்றன.
வள்ளிக்கதை ஒப்பீடு
கதைகள் பல்வேறிடங்களில் தோன்றி இருப்பினும் அவை ஒப்புமையுடன்
காணப்படுகின்றன. புராணக் தைகளின் தோற்றத்திற்குக் காரணம்
மொழியின் நோய்
(The
melody of language or the disease of language)
என்ற நிகழ்வாகும் என்பது
மார்க்ஸ் முல்லர் கருத்து. இங்கு வள்ளிக்கதையை கிரேக்கக்
கதையான டாஃபினே கதையுடன் ஒப்பீடு செய்ய முடிகிறது. அப்பல்லோ
டாஃபினேயைப் பின் தொடர்கிறான். அப்பல்லோ என்பது ஆண்பால் சொல்
என்றும் டாஃபினே பெண்பால் சொல் என்றும் அவர்கள் கண்டு
பிடிக்கிறார்கள். அதே முறையில் அப்பல்லோ என்பவன் காதலிக்கும்
இளம் கடவுள். அவன் அழகு மிக்க தூய கற்புடைய அணங்கு டாஃபினேயை
பின் தொடரப்படுதலின்றும் தப்பியோடி மரமாக மாறிவிட்டாள் என்ற
முடிவுக்கு வந்திருக்கலாம். இதனைப் போன்று வள்ளிக்கதையிலும்
முருகன் என்றால் அழகன் என்பது பொருள். தமிழ்க் கடவுளாகிய
முருகன் வள்ளியைப் பின் தொடர்ந்து செல்கிறான் என்றும் வள்ளிக்
குறத்தியின் குரல் கேட்டு வேடர்கள் வரும் போது அவர்கள் கண்ணில்
அகப்படாமல் இருக்க வேங்கை மரமாகி விடுகிறான். வள்ளிக்கதையினைப்
போன்று கிரேக்கக் கதையான டாஃபினே கதையில் பின்தொடர்தலாகிய
ஒற்றுமைக் காணப்படுகிறது. ஆனால் வள்ளிக்கதையில் ஆண் (முருகன்)
வேடர்களிடமிருந்து தன்னைக் காப்பதற்காக வேங்கை மரமாகும்
நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனால் கிரேக்கக்கதையில் பெண் டாஃபினே
அப்பல்லோவிடமிருந்து தன்னை காப்பதற்காக டாஃபினே மரமாகி விட்டாள்
என்ற வேறுபாடு காணப்படுகிறது. அனந்த பத்மநாபபெருமாள் கதை
ஒப்பீடு அனந்த பத்மநாபபெருமாள் சுவாமி கதையினைப் போன்ற
ஒப்புமையுடைய மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கதையும்
காணப்படுகின்றது. ரெங்கத்தில் மக்களிடையே ஏற்பட்ட
ஒற்றுமையின்மையாலும் பூசலாலும் அனந்தபத்மநாப பெருமாள்
திருஅனந்தபுரம் வர திருவுளம் கொண்டார். வேதியன் பின் தொடர்
வரும் பொழுது குளுமைக்காட்டில் தங்கி இளைப்பாறி திருஅனந்தபுரம்
சென்றார். இறைவன் மரத்தில் உறைந்ததை அசரீரி உணர்த்தியது அரசன்
கனவிலும் கோவில் எழுப்பவேண்டும் என்று கூறியது. இதனால்
திருஅனந்தபுரத்தில் கோவில் எழுப்பப்பட்டது. ஆனால் மதுரை
மீனாட்சிசுந்தரேசுவரர் கதையில் வேறுபட்ட காரணம் காணப்படுகிறது.
தங்ககம்ம, தாயம்ம கதை
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த அரசனுக்கு வேறொரு அரசன்
பரிசாகச் சில பவளங்களைக் கொடுத்தான். அரசன் அதனைத் தன் மனைவி
கழுத்தில் அணிந்து அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசையால் அரண்மனைத்
தட்டான்களை அழைத்துப் பவளத்தைக் கோர்த்துத் தரும்படி கேட்டான்.
அரசனுக்குரிய பவளத்தை ஏதேனும் கருவிகளை உபயோகப்படுத்தி
துளையிட்டால் உடைந்துவிடும் எனக்கருதி அரண்மனைத் தட்டான்கள்
கோர்க்க முடியாத காரணத்தால் அரசனிடமே பவளத்தைத் திருப்பிக்
கொடுத்தனர். இதனால் அரசன் அரண்மனைச் செட்டியாரை அழைத்துப்
பவளங்களைக் கையில் கொடுத்து எப்படியும் கோர்த்துத் தரவேண்டும்
எனக் கட்டளையிட்டான். இதனால் வீட்டிற்குச் சென்ற செட்டியார்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர் மகள்கள் தந்தையின்
கவலைக்கான காரணத்தைக் கேட்டறிந்தனர். தந்தையே நீங்கள்
கவலைப்படவேண்டாம். நாளை காலைக்குள் மாலையுடன்அரண்மனைக்குச்
செல்லலாம் என்று கூறினர். பின்பு தந்தையிடமிருந்து பெற்ற
பவளங்களின் இருபுறமும் (பனைவெல்லம்) கருப்புக்கட்டி நீரை
ஊசியால் தொட்டு வைத்தனர். இப்பவளங்களுடன் ஒரு பட்டு நூலின்
நுனியிலும் பனைவெல்லத்தை வைத்து எறும்புகள் இருக்கும் இடத்தில்
பவளங்களை வரிசையாக வைத்து அதனருகிலேயே பட்டுநூலையும்
வைத்திருந்தனர். அடுத்த நாள் பார்க்கும் போது எறும்புகள்
பவளங்களின் இனிப்பு இருந்த இடத்தில் துளையிட்டு பட்டுநூலை
பவளங்களி;ன் வழியாகக் கோர்த்து வைத்திருந்தன. இதனைப் பார்த்த
செட்டியார் மகிழ்ந்து கோர்த்தப் பவள மாலையை அரசனிடம் கொண்டு
கொடுத்தார். அரசன் அதிசயித்து இந்த பவளமாலையைக் கோர்த்தது
எப்படி எனக்கேட்டார். செட்டியாரும் நடந்த உண்மைகளைச் சொன்னார்.
உடனே அரசன் இத்தகைய அறிவுக் கூர்மை உடைய பெண்கள் இருக்குமிடம்
செட்டியார் வீடல்ல அரசன் அரண்மனையாகும் எனக்கூறி
அப்பெண்குழந்தைகளைத் தனக்கு மணமுடித்து வைக்க அவகாசம் கேட்க,
செட்டியார் மானத்திற்கு அஞ்சி அப்பெண்களை நிலவறைக்குள் அனுப்பி
ஏதோ ஒரு பொருளை எடுத்துவரக் கூறி அந்நிலவறையை மண்ணால் மூடி
தானும் அதனுள் பாய்ந்து உயிரைவிட்டார். அக்குழந்தைகள்
உயிர்ப்போகும் வேளையில் சாபமிட்டனர். இதனால்
காவிரிப்பூம்பட்டினத்தில் பஞ்சமும் பசியும் உண்டாயின.
வேளாளர் சமுதாயக் கதை
வேளாளர் சமுதாயத்திலும் இரு பெண் குழந்தைகள் கதை
பேசப்படுகின்றன. நாகப்பட்டினத்தில் வேளாளர் சமூகத்தினர்
வாழ்ந்து வந்தனர். திப்புசுல்தான் தனது படைகளுடன் வந்து
கொண்டிருக்கும் போது விளையாடிக்கொண்டிருந்த இரு பெண்களைக்
கண்டான். அப்பெண்கள் அழகில் மயங்கி அப்பெண் குழந்தைகளைத்
திருமணம் செய்து தரும்படி அமைச்சர்களிடம் கூறினான். இதனைக்
கேள்வியுற்ற வேளாளர் சமூகத்தினர் மானங்கருதி திப்புசுல்தானுக்கு
பயந்து வேற்றூருக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து விலை
உயர்ந்த பொருட்களை அப்பெண்களை அனுப்பி நிலவறைக்குள்ளிருந்து
எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திப்பு சுல்தான் படைகள்
வீட்டைநெருங்கி விட்டன. இதனால் நிலவறையை அடைத்துவிட்டனர்.
இதனால் அக்குழந்தைகள் இறந்துவிட்டன. செம்பம்மகுட்டி,
நீலம்மகுட்டிக் கதையில் மார்த்தாண்டவர்மா அரசன் பெண்களைத்
திருமணம் செய்துதரக் கேட்டதால் உரக்கிணற்றினுள் (ஆழ் கிணறு)
இறக்கிக் கொல்லும் நிலையைக் காணமுடிகிறது. இக்கதைக்கு வலுச்
சேர்க்கும் ஒப்புமை உடைய பிற கதைகளைக் காணமுடிகின்றன. இதனைப்
போன்று வேளாளர் சமுதாயத்திலும் முகமதிய அரசனான சுல்தான்
பெண்களின் அழகில் மயங்கி பெண்களைத் திருமணம் செய்துதரக்
கேட்டதால் நிலவறைக்குள் அப்பெண்களை அடைத்து வைத்துக் கொல்லும்
நிலையைக் காணமுடிகிறது.
செட்டியார் சமுதாயத்தில் தங்கம்ம, தாயம்மையின் புத்திகூர்மையைக்
கண்டு சோழ அரசன் பெண்களைத் திருமணம் செய்து தரக் கேட்டதால்
நிலவறைக்குள் அப்பெண் குழந்தைகளை அடைத்து வைத்துக் கொல்லும்
நிலையைக் காணமுடிகிறது. இம்மூன்று கதைகளிலும் அரசன் பெண்
கேட்டல் என்ற ஒப்புமைக் காணப்படுகிறது. அரசன் பெண் கேட்டதன்
காரணமாக வேற்று சமுதாயத்தில் பெண்களைத் திருமணம் செய்து
கொடுத்தால் மானம் அழிந்துவிடும் என்னும் ஒப்புமை எல்லாக்
கதைகளிலும் காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வேளாளா,;
செட்டியார் சமுதாயத்தில் வீட்டிற்குள் நிலவறை வைக்கும் பழக்கம்
இருந்திருக்கிறது. அதனால் அப்பெண் குழந்தைகளை நிலவறைiயில்
வைத்துப் பூட்டிக் கொன்றனர் என்றும் செம்பம்மகுட்டி,
நீலம்மகுட்டிக் கதையில் நிலவறை இல்லாதக் காரணத்தினால்
கிணற்றினுள் இறக்கி கொன்றிருக்கின்றனர் என்ற வேறுபட்ட
கருத்தினையும் காணமுடிகிறது.
வண்டிமலைச்சியம்;மன் கதை - ஒப்ப்பீடு
வண்டிமலைச்சியம்மனுக்கு வில்லுக்குறியிலுள்ள பள்ளத்தில்
கோவில்கள் அமைந்துள்ளன. கிருஷ்ணவகை சமுதாயத்தினருக்கும்,
வேளாளர் சமுதாயத் தினருக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன.
செட்டியார் சமுதாயத்தினருக்கும் வடசேரியில் கோயில் அமைந்துள்ளது.
எல்லாக் கோயில்களிலும் தெய்வத்தின் உருவம் கிடந்த கோலத்தில்
காணப்படுகின்றன. வடசேரியில் ஒரு காலை மடக்கிய படி இருக்கும்
வேறுபாடு காணப்படுகிறது. எல்லாக் கதைகளிலும் வணிகத்தின்
பொருட்டு தெய்வம் இடம் பெயர்ந்து வந்ததாகக் கூறப்படும் காரணம்
ஒன்று போல் உள்ளது. ஆனால் புராணக்கதையில் வேறுபாடுகள்
காணப்படுகின்றன. காளியின் பிறப்பின் நோக்கம் தாருகாசுரனை
வதஞ்செய்வதாகும். நீதியினை நிலை நிறுத்தவும் அநீதியை விரட்டவும்
தேவர்கள் ஒன்றுகூடி முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை நோக்கித்
தவமிருந்து அவர்கள் வேண்டுகோளின்படி பாற்கடலை கடைவது என்று
முடிவுக்கு வந்தனர். அப்போது மந்திரகிரி மலையை மத்தாகவும்,
வாசுகியைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தனர்.
கடலிலிருந்து காமதேனு, இலட்சுமி, ஐராவதம் என ஒவ்வொன்றாகப்
பிறந்து கொண்டே இருந்தன. பிறகு பத்தாவது ஆலகாலவிஷம் வந்து
பிறந்தது. இதனால் உயிர்களுக்குக் கேடுவிளையும் எனக்கருதி
சிவபெருமான் விஷத்தை எடுத்து உண்டார். உடனே பார்வதி அரனின்
கழுத்தைப் பிடிக்க விடம் கண்டத்திலேயேத் தங்கிவிட்டது. இதனால்
திருநீலகண்டன் ஆனார். ஆலகால விஷத்தை வாயில் இட்டதால் வாயினை
உமிழ்வதற்கு பார்வதி நீரினைக் கொடுத்தார். வாயினை கழுவி முதலில்
காறி உமிழும் போது வண்டிமலையானும், இரண்டாவது காறி உமிழும் போது
வண்டிமலைச்சியும் பிறந்ததாகப் புராணக்கதைகள்
கூறுகின்றன.காளியின் கன்னத்திலிருந்து வண்டிமலையானும்
வண்டிமலச்சியும் பிறந்ததாக வேறு கதைகளும் கூறுகின்றன.
நாகராஜனுக்கும் நாகக் கன்னிகை;கும் குழந்தைப் பேறில்லாக்
காரணத்தால் சிவபெருமானை வேண்ட எட்டு முட்டைகளைக் கொடுத்தார்.
அதனை அவர்கள் அடைகாத்து வரப் பணித்தார். 41 நாட்கள் கழித்து
எட்டு முட்டைகளும் பொரித்து வந்தன. இதில் முதல் முட்டையில்
பிறந்தவளே வண்டிமலைச்சியம்மன் என வில்லுப்பாட்டுக் கதைகள்
கூறுகின்றன. வேளாளர், கிருஷ்ணவகை சமுதாயகதைகள் காளி தாருகனை
அழிக்கும்போது வண்டிமலையானும் வண்டிமலைச்சியும் உதவி புரியும்
படைகளாக வருகின்றனர் என்ற ஒப்புமையும் பிறப்பிடம் வேறாகவும்
காட்டப்பட்டுள்ளன. ஆனால் வடசேரி வண்டிமலைச்சியம்மன் கதையில்
வண்டிமலைச்சியம்மனே தாருகனை அழிப்பதாகக் கருத்து
காணப்படுகின்றது.
கதைகளின் திரிபு வடிவங்கள்
வாய்மொழி கதைகள் மக்களிடையே வாய்மொழியாக பரவி பரவி இரு
வேறுபட்ட கதைகள் சேர்ந்து ஒரே கதையாக திரிவு வடிவம் பெற்றுள்ளதை
வண்டி மலைச்சியம்மன் கதையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
முதல்பாதி கதையான செம்பம்மகுட்டி நீலம்மகுட்டி கதையைப்போன்று
ஒற்றுமையுடையதாகவும் பின் பகுதி கதையானது வேறுபட்டும்
வழங்கப்பட்டு வருகிறது.
அரசன் வீதியில் உலா வரும்போது செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த
அழகான பெண் ஒருத்தி குளித்து விட்டு வந்தாள். அவளது அழகில்
மயங்கிய அரசர் அந்தப் பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து
வைக்குமாறு கேட்டார். அந்தக் காலத்தில் அதனை ஏற்க மறுத்த
சமுதாயத்தினர் வீட்டுக்குள் குழி தோண்டி அப்பெண்ணை உயிருடன்
புதைத்து சமாதி கட்டினர். இதனையறிந்த அப்பெண்ணின் சகோதரர் தனது
சகோதரியின் உயிரைக் காப்பாற்ற புதைத்த இடத்தை மீண்டும் தோண்டி
உடலை எடுத்து மாட்டு வண்டியில் வைத்து சிகிட்சைக்குக் கொண்டு
சென்றார். ஊரின் எல்லைப்பக்கம் வந்ததும் வண்டிக்காரர்
திரும்பிப் பார்த்தார். அப்போது வண்டியில் படுத்தவாறே அந்தப்
பெண்ணும் அவரது சகோதரரும் மரித்து (இறந்து) விட்டது தெரிந்தது.
மாட்டு வண்டியில் படுத்தவாறே இறந்ததால் வண்டியை மறித்த அம்மன்
என்ற பெயர் ஏற்பட்டு நாளடைவில் வண்டிமலைச்சியம்மன் என்ற பெயர்
ஏற்பட்டது. இந்தக் கோவில் கொடைவிழாவின் போது அசைவம் படைப்பது
வழக்கமாக உள்ளது. இதனை செட்டியார் சமுதாயத்தார் எடுத்துக்
கொள்ளாமல் அதனை கூலி தொழிலாளர்களுக்குக் கொடுத்துவிடுகின்றனர்.
ஏனெனில் வண்டியில் மரித்த பெண் மற்றும் அவளது சகோதரனின் உடல்
அடக்கம் செய்யக் கொண்டு சென்ற வண்டியை ஓட்டி வந்த கூலி தொழிலாளி
மற்றும் இதர தொழிலாளிகளுக்கு நன்றி செலுத்துவதாக நினைத்து
வழங்கப்படுகிறது. இவ்வாறு இக்கதையானது வேறு வண்டிமலைச்சியம்மன்
கதையிலிருந்து வேறுபட்டு வழங்கி வருகிறது.
தொகுப்புரை:
கதைகளின் கூறுகளை ஆராய்ச்சி செய்வதற்குக் கோட்பாடுகள்
தேவைப்படுகின்றன. ஆய்விற்கு எடுத்துக் கொண்ட திண்டுக்கல்
வட்டார நாட்டுப்புறக்கதைகள் மேலைநாட்டு ஆய்வாளர்களின் கோட்பாடு
வழி நின்று ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அறிவியலில் கோட்பாடுகளை உருவாக்குவது போல் இலக்கியத்திலும் சில
நிகழ்வுகளை வைத்துக் கொண்டு கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன.
புராணக்கதைகளை ஒழுங்குபடுத்தவும், விளக்கவும், முற்பட்ட
நாட்டார் வழக்காற்றியல் கருத்தாக்கம் புராணவியல் கோட்பாடு என
அழைக்கப்பட்டது. புராணவியல் கோட்பாடு வழி நின்று வள்ளிக்கதை
ஆய்வு செய்யபடுகிறது.
செம்பம்மகுட்டி நீலம்மகுட்டி கதையில் குரும்புலியார் அரசன் பெண்
கேட்டதால் தனது பெண்களை உரக்கிணற்றுக்குள் இறக்கிக் கொல்லும்
நிலையைக் காணமுடிகின்றது. இதனைப் போன்று செட்டியார் வேளாளர்
சமுதாயக்கதைகளிலும் அரசன் பெண் கேட்டதால் பெண்களை நிலவறைக்குள்
இறக்கிக் கொல்லும் நிலையைக் காணமுடிகிறது.
வண்டி மலைச்சியம்மனின் கிடந்தகோலம் எல்லா ஊர்களிலும் ஒன்றுபோல்
காணப்படுகின்றன. காலை மடக்கி வைத்திருப்பதும், புராணக்கதைகளும்
வேறுபட்டுக் காணப்படுகின்றன.