சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி
23
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத்
தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும்
படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள்
குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும்
கட்டுரைத்தொடர்.)
சிறுகுடி என்கின்ற ஊரைச் சேர்ந்தவன் அருமன் என்பவன். அவனது ஊரிலேயுள்ள
வீடுகளிலே உணவு சமைப்பதற்கான அடுக்களையை அடுத்து, உணவு பரிமாறுவதற்கான
பகுதியொன்று தனியாக இருக்கும். உயரம் குறைந்த கட்டையான கால்களைக் கொண்டு
அவை அமைக்கப்பட்டிருக்கும். தெய்வத்திற்கு உணவுபடைப்பதும் அங்கேதான்.
விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதும் அங்கேதான். அந்தப்பகுதியைச்சுற்றி
எப்பொழுதும் காகங்கள் கூட்டமாக இருப்பது வழக்கம். கருணைக்கிழங்கிலே கறி
சமைத்து, செந்நெல் குற்றி எடுக்கப்பட்ட அரிசியிலே வெண்சோறு ஆக்கி
இரண்டையும் கலந்து இறைவனுக்குப் படைப்பார்கள். அவற்றை உண்ணுவதற்காக
வருகின்ற காகங்கள்தான் அங்கே கூட்டமாக இருக்கும். உணவு படைக்கப்பட்டதும்
அதனை உண்ணவந்த காகம் ஒன்று இன்னமும் இறகு முற்றாத தனது குஞ்சையும்
அணைத்துக்கொண்டு, அதுவரை அங்கே வந்து சேராத தனது சுற்றத்தவரைக்
கூவியழைக்கும். அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பழமையான வீடுகளைக்
கொண்ட அருமனின் ஊரான சிறுகுடி மிகவும் அழகானது.
அந்த ஊர் அமைந்துள்ள நாட்டை ஆளுகின்ற அரசனின் படை போரில் ஈடுபடுவதற்காக
வேற்று நாட்டுக்குச் சென்றிருந்தது. அந்தப் படையினரிலே அருமனும் ஒருவன்.
இப்போது போர் முடிந்து, வெற்றிவாகை சூடி வீரர்கள் திரும்பிக்
கொண்டிருக்கிறார்கள். வெற்றியடைந்த செய்தியையை அவர்கள் சூடியுள்ள
மாலைகள் தெரிவிக்கின்றன. இதுவரை திரும்பி வந்த வீரர்களிலே அவன் இல்லை.
அருமன் இன்னும் வரவில்லை. அதனால் கவலையடைகிறாள் அருமனின் காதலி.
தலைவனுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறாள். உண்ணாமல் உறங்காமல்
வாடி வதங்கிக்கொண்டிருந்தாலும், தலைவனை எதிர் கொள்வதற்காக குவளை
மலரையும், முல்லை மலரையும் சேர்த்துக் கட்டித் தலையிலே
சூடியிருக்கின்றாள். அவளுக்கு அவளின் தோழி ஆறுதல் சொல்லித் தேற்றுகிறாள்.
அவளின் காதலனின் ஊரின் சிறப்பைக்கூறி அவளை மகிழ்விக்கக் கருதி, 'சிறுகுடி
என்ற அந்த ஊரைப்போலவே மென்மையான அழகு வாய்ந்தவளே! தலைவனுடன்
சென்றிருந்த வீரர்கள் வெற்றி மாலைகளைச் சூடியவாறு
வந்துகொண்டிருக்கின்றனர். அடர்த்தியான, அழகிய பிடரிமயிரைக்கொண்ட
குதிரையிலே கம்பீரமாக அமர்ந்து அதனைச் செலுத்திக்கொண்டு தலைவன் விரைவில்
வருவான். அவன் எங்கும் தாமதிக்க மாட்டான். இந்தப்பனிக்காலம் முடிவதற்கு
முன்னரே அவன் உன்னைச் சேர்ந்து இன்புறுவதற்காக வந்துவிடுவான். நீ
கலங்காதே' என்று அவளுக்கு நம்பிக்கையூட்டி ஆறுதல் சொல்லுகின்றாள்.
இத்தகைய காட்சியைப் புலப்படுத்தும் நற்றிணைப் பாடல் ஒன்று வருமாறு:
கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து
கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு
சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால்
கூழுடை நன்மனை குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி
மெல்லியல் அரிவைநின் பல்லிருங் கதுப்பிற்
குவளையொடு தொடுத்த நறுவீ முல்லைத்
தளையவிழ் அலரித் தண்நறும் கோதை
இளையருஞ் சூடி வந்தனர் நமரும்
விரியுளை நன்மா கடைஇப்
பரியாது வருவர் இப் பனிபடு நாளே.
(நற்றிணை. பாடல் இல: 367.
முல்லைத்திணை. பாடியவர்: நக்கீரர்)
இதன் நேரடிக் கருத்து:
ஒருக்களித்துப் பார்க்கும் கண்ணையும், கூரான வாயையும் கொண்ட காகத்தின்
பேடை, நடுங்குகின்ற இறக்கைகளைக் கொண்ட தன் குஞ்சைத் தழுவிக்கொண்டு தன்
சுற்றத்தவரைக் கூவியழைத்து கரிய கண்களையுடைய கருணைக்கிழங்குக்கறியோடு,
செந்நெல்லின் அரிசியைச் சமைத்து உண்டான வெண்சோற்றுடன் கலந்த படையலை
அச்சந்தருகின்ற தெய்வத்திற்கு இடப்பட்ட பலியுடன் சேர்த்து உண்ணுவதற்காக,
கட்டையான கால்களை நட்டுக்கட்டப்பெற்றுள்ள உணவுபரிமாறும்
பகுதிகளைக்கொண்ட நல்ல வீடுகள் இருக்கும் இடங்களில் கூட்டமாக
அமர்ந்திருக்கும். அத்தகைய பழமையான வீடுகளையுடைய அருமன் என்பவனின்
பகழ்பெற்ற சிறுகுடி என்னும் ஊரைப்போலவே மென்மையான தோற்றத்தையடைய பெண்ணே!
பலவாறு வகுத்துக் கட்டிய உன்னுடைய கரியகூந்தலில் சூடியுள்ளதைப் போல.
குவளை மலரோடு சேர்த்துத் தொடுத்த நறுமணமள்ள முல்லை மலரின் கட்டு அவிழும்
வண்ணமான பூக்களால் குளிர்ந்த மணம் வீசும் மாலைகளைச் சூடியவாறு நம்
தலைவனுடன் சென்றிருந்த வீரர்கள் திரும்பி வந்துவிட்டனர். நம் தலைவரும்
விரிந்த அடர்த்தியான பிடரிமயிரையுடைய நல்ல குதிரைகளைச் செலுத்திக்கொண்டு,
வழியில் எங்குமே தாமதிக்காது இந்தப் பனிவிழும் நாளிலேயே வந்தவிடுவார்.
ஆதலால் நீ வருந்தாதே.
(காட்சிகள் தொடரும்....................................)
|