கல்யாணச் சாப்பாடு

 

கலாநிதி பால.சிவகடாட்சம்
 

ரிலே அந்த நாட்களில் கல்யாண வீடு என்றால் ஒரு கிழமைக்கு முன்னரே பலகாரம் சுடுவதற்கு என்றே சொந்தக்காரர்கள் எங்கெல்லாமோ இருந்துவந்து கல்யாணவீட்டாரின் சமையல் அறையில் கூடிவிடுவார்கள்.
 

ஊர்க்கதையெல்லாம் பேசியபடி வெகு அக்கறையோடு அவர்கள் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தாலே கல்யாணவீடு கலகலப்பாகிவிடும்.


கல்யாணவீட்டன்று சொல்லத் தேவை இல்லை. சமையலுக்கென்றே அமைக்கப்பட்ட ஒரு தனிப்படை வீட்டின் பின்புறம் போடப்பட்டிருக்கும் ஒரு கொட்டிலில் கண்ணுங்கருத்துமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இந்தச் சமையல் என்பது சாதாரண விடயமா என்ன? கல்யாணவீட்டில் தாலி கட்டுதலுக்கு அடுத்த முக்கியமான நிகழ்வு இந்தச் சாப்பாட்டுப் பந்திதான். சமைக்கும் உணவு வந்தவர்கள் எல்லோருக்கும் போதுமானதாக இருக்கவேண்டும். 'கல்யாண வீட்டில் சாப்பாடு அந்தமாதிரி' என்று எல்லோரும் பேசிக்கொள்ளும்படி இருக்கவேண்டும். (கனடாவில் இதற்கெல்லாம் பயப்படத்தேவயில்லை. இத்தனை பேருக்கு சாப்பாடு; இத்தனை அயிட்டங்கள்;  இந்தக் கறிவகைகள்; என்று ஒருலிஸ்டைத் தயாரித்துக் கொடுப்பதுதான் உங்கள் வேலை. மீதியை கேற்றரிங்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள்.)

இந்தக்காலத்தில் தமிழகத்தில் ஒரு சினிமா நடிகர் அல்லது அரசியல் வாதி (கனடாவில் என்றால் பிரபல வர்த்தகர் அல்லது வீடு விற்பனை முகவர்) வீட்டுத்திருமணம் என்றாலே மண்டபம் கொள்ளமுடியாத சனக்கூட்டம் இடித்து நெருக்கிக்கொண்டு பந்திக்குமுந்தும் காட்சி சர்வ சாதாரணம்.

இப்படி இருக்கும்போது நமது ஒளவை, கம்பன் வாழ்ந்த அந்தக் காலத்தில் நாட்டை ஆளும் மன்னன் வீட்டுக்கல்யாணம் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? பாண்டிய மன்னன் வீட்டுக் கல்யாணத்துக்கு நம்ம ஒளவைக் கிழவிக்கும் புகழ்பெற்ற புலவர் என்றவகையில் ஓர் அழைப்புக் கிடைத்தது. ஒளவையும் சென்றாள். அவள்மட்டுமா? அவளைப்போல் வேறுசில புலவர்கள், அரச குடும்பத்தவர், குறுநில மன்னர்கள், தளபதிகள், நிலப்பிரபுக்கள், பெரும்பெரும் வணிகர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் திருமணத்துக்கு வருகை தந்திருந்தார்கள்.

பாண்டியமன்னனைக் குறை சொல்வதற்கில்லை. அவ்வளவு சனத்துக்குள் யார் யார் வந்திருக்கிறார்கள்; யார் யார் வரவில்லை என்றெல்லாம் அவனால் கவனிக்கமுடியுமா? அரசகுடும்பத்துத் திருமண உறவுகளுடன் பேசுவதற்கே அவனுக்கு நேரம் போதவில்லை.

பாண்டியன் வீட்டுத்திருமணம் முடிந்து ஒளவை வீடு திரும்பினாள்.

பொதுவாகவே கல்யாணவீட்டுக்குப் போய்வந்தால் கல்யாணவீட்டுச் சாப்பாடு எப்படி என்று கேட்பதுதானே வழக்கம்.

'பாட்டி நம்ம ராசாவீட்டுக்கல்யாணத்துக்குப் போய்வந்தியாமே எப்படிச் சாப்பாடு' என்று ஒளவையிடம் ஆசைஆசையாய்க்கேட்டார் ஓர் அப்பாவி.

பாட்டிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

'நல்ல தமிழ் தெரிந்த பாண்டியன் வீட்டுக் கல்யாணத்தில் என்ன சாப்பிட்டேன் என்றுதானே கேட்கிறாய். சொல்கிறேன் கேள். நெருக்குண்டேன். தள்ளுண்டேன் பசியினாலே வயிறு சுருக்குண்டேன் ஆனால் சோறு உண்டேன் என்று சொல்வதற்கு இல்லை' என்றாள் ஒளவை.

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன்.


பாவம் ஒளவை. கூட்டத்தில் தள்ளுமுள்ளுப் பட்டதுதான் மிச்சம். சாப்பிடக்கிடைக்கவில்லை.

ஒளவைப்பிராட்டி பத்துக்கறியோடு சாப்பிடவேண்டும் என்று ஆசைப் படுபவள் அல்ல. அன்போடு கொடுத்தது கீரைக்கறி என்றாலும் அமுதம் என்று சொல்லிச் சாப்பிடுவாள்.

புல்வேளூர்ப் பூதன் ஒரு கமக்காரன். படித்தவர்கள் என்றால் அவனுக்கு அளவுகடந்த மரியாதை. ஒளவை அவன் வீட்டுக்குச் சென்றாள். அவளை அன்போடு உபசரித்து நல் வார்த்தைகள் கூறி தனது வசதிக்கு ஏற்றபடி விருந்துவைத்தான் பூதன். ஒளவையைப் பொறுத்தமட்டில் வாழ்நாளில் மறக்கமுடியாத சாப்பாடு அது.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்டசோ (று)
எல்லா உலகும் பெறும்.


என்னதான் அந்தச்சாப்பாடு?

வழுதுணங்காய் என்றால் கத்தரிக்காய். வரகரிசிச் சோறும், கத்தரிக்காய் வாட்டலும, நல்ல புளித்த மோரும் என்று பூதன் தந்த சாப்பாடு இருக்கிறதே அதற்கு சமமாக உலகில் எதுவுமே இல்லை என்கிறாள் ஒளவை.

எந்த ஒரு நிகழ்வானாலும் அதை நேரத்துக்கு நடத்தி முடிக்க மாட்டார்கள் என்று பொதுவாகவே நம்மவர்பற்றி ஒரு குறையுண்டு. திருமணங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. சடங்குகள் நீண்டுகொண்டே போகும். சாப்பாடு வரும் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் வயிறு ஒரு கட்டத்தில் இன்றைக்குச் சாப்பாடு இல்லை என்று தானாகவே தீர்மானித்துக்கொண்டு உறங்கப்போய்விடும். சாப்பாடு வரும் போது பசி இருக்காது.

ஒரு சிலர் பசி தாங்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் கவி காளமேகம். கடல் நாகைக்காரோணம் என்று ஒரு ஓர். அங்கு காத்தான் என்று ஒருவர் சத்திரம் கட்டிவைத்து தங்குவோருக்கு இலவசமாகச் சாப்பாடும் கொடுத்து வந்தார். இலவசமாகக் கொடுத்தாலும் பசிக்கும்போது கொடுத்தால்தானே அதற்கு மரியாதை. அன்று சாப்பாடு மிகவும் பிந்திவிட்டது. சத்திரத்தில் தங்கியிருந்த காளமேகப் புலவரின் வாயில் இருந்து ஒரு பாட்டும் பிறந்தது.

கத்து கடல் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போது அரிசிவரும் - குத்தி
உலையில் இட ஊர்அடங்கும் ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்


காத்தானின் சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் நெல் வரும். அதைக்குற்றி அரிசியை உலையில் போடும்போது எல்லோரும் உறங்கிவிடுவார்கள். சமையல் முடிந்து இலையில் சாப்பாடு விழும்பொழுது மறுநாள் காலை விடிவெள்ளி உதித்துவிடும் என்பது இப்பாடலின் பொருள்.

எதிலும் பிழை கண்டுபிடிப்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருக்கும் ஒருசிலருள் காளமேகப் புலவரும் ஒருவர். இவருக்கு ஒரு அத்தை மகள். மச்சான் வந்திருக்கிறாரே என்று ஆசை ஆசையாய் சமைத்து அவருக்கு விருந்து வைத்தாள். சாப்பிட்டுவிட்டு அதற்கும் ஒரு பாடல் பாடிவைத்தார் காளமேகம்.

கரிக்காய்பொரித்தாள்கன்னிக்காயைத் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாப் பண்ணினாள்- உருக்கம்உள்ள
அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்
உப்புக்காண் சீச்சி உமி.


ஏதாவது விளங்குகிறதா?

ஆங்கிலமொழிக்கு
Lexicon  என்று இருப்பதுபோல் தமிழுக்கும் உண்டு. இதற்கு நிகண்டு என்று பெயர். ஒரு சொல்லுக்கு ஒத்தசொற்கள் பலவற்றை இந்த நிகண்டு தரும்.

கரி என்பதை ஒத்த சொற்கள் யானை, அத்தி என்பன. கரிக்காய் என்பது அத்திக்காய். கன்னிக்காய் என்பது வாழைக்காய். பரி என்பது குதிரை. குதிரையைக்குறிக்கும் மற்றுமொரு சொல் மா. எனவே பரிக்காய் என்பது மாங்காய். அப்பைக்காய் என்பது கத்தரிக்காய்.

'உருக்கம் உள்ள அத்தைமகள் எனக்காக அத்திக்காய் பொரித்தாள். வாழைக்காயைத் தீயில்வாட்டினாள். மாங்காயில் பச்சடி செய்தாள். கத்தரிக்காயில் எண்ணெய்த் துவட்டல் செய்தாள். என்ன பிரயோசனம். ஒரே உப்பு. துப்பத்தான் வேண்டி இருந்தது.' என்கிறார் கவி காளமேகம்.

சமையல் என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது இப்பொழுதாவது தெரிகிறதா?