பிஞ்சுப் பழம்
அனலை
ஆறு
இராசேந்திரம்
காங்கேசன்
துறையிலிருந்து பெரியவர் ஒருவர் கீரிமலை நோக்கி நடந்தார். வழியில் அவர்
எட்டு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தியைக் கண்டார். அந்த வயதிலும்
சிறுமி மிக அழகாகக் காணப்பட்டாள். அவர் கண்களிரண்டும் அமுதத்தைச்
சொரிந்தன. இதழ் திறந்து சிரிக்குங்கால் அவள் முகத்தில் முத்துக்கள்
பளிச்சிடும்.¹
அச்சிறுமியிடம் 'தங்கைச்சி உன் பேர் என்ன? உனக்குத் தாயும் தந்தையும்
உடன் பிறந்தோரும் உள்ளனரா? சொல்வாயேல் ஐந்து சதம் தருவேன்' எனத்
கதையாடத் தொடங்கினார் அப்பெரியவர். பெரியவரே என் பெயர் ஐந்து சதம்தான்
பெறுமா? உங்கள்காசு எனக்கு வேண்டாம்.² ஆயினும் வயதிற் பெரிய நீங்கள்
கேட்டதற்காகச் சொல்கிறேன். எல்லோரும் என்னைச் சுந்தரி என்று அழைப்பர்.
அப்புவும் ஆச்சியும் வீட்டிலிருக்கின்றனர். அண்ணன் சம்பந்தன் கொழும்பிற்
படிக்கிறார். அக்கா சிவகாமி இரங்கூனில் உள்ளார். தங்கை கற்பகம் போன
புரட்டாதி கூத்தப் பெருமான் குரைகழல் சென்று இன்புற்றிருக்கிறாள். தம்பி
சிதம்பரநாதன் இப்போதுதான் தவழத் தொடங்கியுள்ளான்.³
'என்னோடு சேர்த்துப் பெற்றோர்க்கு ஐந்துபேர் பிள்ளைகள் உள்ளோம். வேறு
பிள்ளைகள் இலர்' என்றாள் சிறுமி.
நாங்கள் ஐவேம் மக்கள் உளேம் என்றுமொழி நவின்றாய்
ஐவரிலே ஒருத்தி நடராசர் பதம் நண்ணின்
பாங்கிபின்னர் நால்வர் உளீர் ஐவிர்எனல் தவறு
பாராய் அஞ்சினி லொன்று போனால் நாலன்றோ
'குழந்தாய் ஐந்து பேர் உள்ளோம் என்கிறாய். ஒருத்தி நடராசர் திருவடி
அடைந்துவிடின் நால்வரே இருக்கின்றீர்கள். ஐவர் என்று சொல்லுதல் தவறாகும்.
ஐந்தில் ஒன்று போனால் நாலு அல்லவா?' என்று அவளைத் திருத்தினார் பெரியவர்.
இது கேட்ட சுந்தரி பின்வருமாறு சொன்னாள். 'ஐயா நீங்கள் பேசுவது புரியாத
புதிராக இருக்கிறது. நான் சொல்;வதைப் பொறுமையாய்க் கேளுங்கள். அண்ணன்
சம்பந்தன் கொழும்பு போய்விட்டதினால் மேலும் ஒருவர் போயிற்றாரென்று
நாங்கள் மூவரே' என்றும் சொல்வீர்கள் போலத் தெரிகிறது.
'அக்கா சிவகாமி இரங்கூன் போனதினால் மூவரல்லர் இருவர்தான் என்றும்
சொல்வீர்களன்றோ?'5
பெரியவர் அவளுக்குப் பாடம் நடத்தலானார். இதுகேள் சுந்தரி. கொழும்பு
சென்ற உன் அண்ணன் திரும்பி வருவார். இது மெய்யாய் நடக்கக் கூடியதுதானே?.
'அக்கா சிவகாமியும் இரங்கூனிலிருந்து திரும்பி வருவாள். இதுவும் நடக்கக்
கூடியதுதானே? நடராசர் திருவடி அடைந்த உன் தங்கை கற்பகம் திரும்பி
வருவாளா? இனிப் பூமியில் நீ அவளைக் காண முடியுமா?'7 ஆதலால் நீங்கள்
நால்வர்தான் இருக்கிறீர்கள் (ஐவர் இலீர்) என்றேன். இதை அறிந்துகொள்.
சிறுமி பிடியைச் சிறிதும் விட்டுக்கொடுத்தாளல்லள்: பெரியவரைக் கேள்விக்
கணைகளால் துளைத்தாள்.
கொழும்பு சென்ற அண்ணன் வந்தாற்றான் உளரோ
கொழும்பினிலே இருந்துவிடின் இல்லை அவர் போலும்
வழுவில் சிவகாமி அக்கை இரங்கூனி லிருந்து
வந்தாற்றான் உளர் இலையேல் இலர் என்பீர் போலும்
'கொழும்பு சென்ற அண்ணன் சம்பந்தன் அங்கிருந்து இவ்விடம் வந்தாற்றான்
இருக்கிறார் என்பதாகுமா? வாராது அங்கேயே தங்கிவிட்டால் அவர் இலர் என்று
ஆகிவிடுமா?'
உன்தங்கை இங்கினிமேல் ஒருகாலும் வாராள்
உங்களிலே இனிஅவளைச் சேராதே என்றீர்
என்தங்கை இங்கினிமேல் வாராளே ஆயின்
யான் அங்கே போய்அவளைக் காண முடியாதோ?
'தங்கை கற்பகம் இனி இவ்வுலகு வாராள் ஆயின் நான் அங்கு சென்று அவளைக்
காணமுடியாதா?'
கொழும்பி லண்ணர் வாராரேல் நானங்கே செல்வேன்
அக்கையவர் வாராரேல் குறுகியங்கே செல்வேன்
எழுதவோணு அழகுடையாள் கற்பகம் வாராளேல்
எங்குநட ராசர்என ஏகிடுவேன் அங்கே
'அண்ணன் வாராவிட்டாற் கொழும்பு சென்று அவரைக் காண்பேன். அக்கா சிவகாமி
வாராவிட்டால் இரங்கூன் சென்று அவளைக் காண்பேன். எழுத்தில் வடிக்க
வொண்ணுப் பேரழகுடைய என் தங்கை கற்பகம் இவ்விடம் வாராளாயின் நான் நடராசர்
திருவடியைத் தேடிச் சென்று அவளைக் காண்பேன்'.
'ஆதலினால் ஐவமுளேம் ஐவமுளேம் நாங்கள்
ஐவமுளேம் ஐவமுளேம் ஆச்சி அப்புவுக்கு' என்று தன் கொள்கையில் உறுதியாக
நின்றாள் சிறுமி.
உயிர் (ஆன்மா) பற்றிய சிந்தாந்தக் கோட்பாட்டிற்கு அழைத்துச் சென்று தன்
வார்த்தைகளின் ஒவ்வாமையை உணர்த்திய சிறுமியின் அறிவை வியந்தவாறே
குழப்பம் நீங்கியவராய், வேறு வழிசெல்லும் அவளைப் பார்த்தபடியே தன்வழி
நடந்தார் பெரியவர். அவர் வாய் 'இற என்ற சொல்லுக்குக் கட என்று பொருளே'
என்று பாடியது.
|