சங்க இலக்கியக் காட்சிகள் - காட்சி
24
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா,
அவுஸ்திரேலியா
(பண்டைத் தமிழ்
மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும்
சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும்
சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.)
வீணாகிப் போனது வீதி உலா!
பண்டைத்
தமிழகத்தில் திருவிழாக்கள் நடைபெறும் நாட்களிலே இளம் கணிகையர்கள்
தழையாடை உடுத்துக்கொண்டு ஆண்களை மயக்குவதற்காக வீதிகளில் வலம் வருவது
வழக்கமாயிருந்திருக்கிறது. அந்நேரங்களில் தங்கள் கணவன்மார்
கணிகையர்களின் கவர்ச்சியில் மயங்கிவிடாதபடி மனைவிமார் வீட்டு
யன்னல்களைப் பூட்டிவைத்தும், கணவன்மாரை வெளியே போகவிடாமலும் பலவழிகளால்
காவல்செய்து பாதுகாப்பார்கள். இந்தத் தகவல்களை எடுத்தியம்பும்படியான
காட்சியொன்றைக் கீழ்க்காணும் பாடல் தருகின்றது.
அவள் ஒரு பரத்தை. அவளோடு நெடுங்காலமாக உறவாடிய ஒருவனிடம் அவள் தன்
உள்ளத்தையும் பறிகொடுத்தாள். தன்னைவிட்டு அவன் வேறு பெண்களை
நாடிவிடக்கூடாது என்பது அவளது கவலையாக இருந்தது. ஆனால், ஒருநாள் அவன்
வேறொரு இளம் பரத்தையின் பின்னால் சென்றுவிட்டான். அதனை இவளால் தாங்க
முடியவில்லை. அதேவேளை அவனோடு கோபித்துவிட்டு. வேறொருத்தனோடு
உறவுகொள்ளவும் அவளது மனம் இடந்தரவில்லை. அந்த அளவுக்கு அவள் அவனை
விரும்பினாள்.
ஒருநாள் அவள் தன் தோழியுடன் சென்றுகொண்டிருந்த போது அவனையும் அவனின்
புதிய இளம் பரத்தையையும் தெருவிலே காண்கிறாள். அவனைத் தன்னிடம் மீண்டும்
வரவைப்பதற்காக அவனைச் சீண்டுவதுபோலத் தோழியிடம் பேசுகின்றாள். அவன்
தற்போது உறவு வைத்திருக்கம் இளம் பரத்தையை ஏழனம் செய்து அவர்களுக்குக்
கேட்கும்படியாகப் கூறுகிறாள்.
'அடியேய் தோழி! ஊரிலே திருவிழாவும் முடிந்துவிட்டது. திருவிழாவிலே
இசையொலியெழுப்பிய வாத்தியங்களும் ஓய்ந்து விட்டன. ஊரே திருவிழா
நடைபெற்ற அடையாளமே இல்லாமல் உறங்கிக் கிடக்கின்றது. இந்தநேரத்தில்
யாருக்காக நான் உன்னையும் அழைத்துக்கொண்டு இந்த வீதியிலே வருகிறேன்
என்றுதானே நீ கேட்கிறாய்? (அவள் கேட்க வில்லை. இவளாகத்தான் சொல்கிறாள்
முன்னாலே சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்குக் கேட்கும்படியாக)
சொல்கிறேன் கேள்!
திருவிழா நடந்துகொண்டிருக்கும் போது ஒரு நாள், இதோ இந்தா போகிறாளே இந்த
இள நங்கை, தழையாடையை உடுத்துக்கொண்டு தன்னுடைய இன்ப உடல் சுழன்று
சுழன்று அசையும் வண்ணம் தெருவிலே நடந்து சென்றாள். அப்போது, இவள்
போவதைப் பார்த்து ஊர்மக்கள் பெரிதாகச் சத்தம்போட்டார்கள். ஏழனம்செய்து
சிரித்தார்கள். அந்தச் சிரிப்பொலி எப்படியிருந்தத தெரியுமாடி?
பழமைப் பெருமையுடையவனும், புகழ்பெற்ற வெற்றிகளையீட்டிய
சிறப்பையுடையவனுமான மன்னன் ஓரியைத் திருமுடிக்காரி என்ற அரசன்
வஞ்சகமாகக் கொன்றானல்லவா? அப்படிக் கொன்றுவிட்டு ஓரியின் நாட்டில் உள்ள
அரசவீதியூடாக அவன் சென்றுகொண்டிருந்தான். அப்போது ஓரியின் ஆதரவாளர்களான
மக்கள் ஒன்று சேர்ந்து, திருமுடிக்காரிக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்து,
கூச்சல்போட்டார்களே, அந்த ஆர்ப்பாட்டக் கூச்சல் பேர் இரைச்சலாகவே
இருந்தது. அதைப்போலவே, இவள் தெருவிலே வந்தபோது இவளைக் கண்ட ஊர்மக்கள்
இவளைப்பார்த்துக் கேலிசெய்து எழுப்பிய சிரிப்பொழியும் மிகப்பெரியதாக
இருந்தது.
அவ்வாறு தெருக்களிலே எழுந்த சிரிப்பொலியைக் கேட்டார்கள் அங்கே வாழ்ந்த
பெண்கள். அவர்கள் என்ன சாதாரண பெண்களா? நன்றாக ஆராய்ந்து வாங்கிய
வளையல்களை அணிந்திருப்பவர்கள். அழகிய மாந்தளிரைப் போல மென்மையான
வனப்பான உடல்வாகு கொண்டவர்கள். நகைகளையே ஆராய்ந்து வாங்குபவர்கள்
கணவன்மார்களை எப்படித் தெரிந்தெடுத்திருப்பார்கள்? தாங்களே அப்படி
மிகவும் அழகாயிருக்கும்போது இவளைப் போன்ற ஒருத்தி தங்கள் கணவன்மாரை
மயக்க நினைத்தால் விடுவார்களா? ஆனால், இவள் தம்முடைய கணவன்மாரையும்
மயக்கி விடுவாளோ என்று பயந்தார்கள். அதனால் கணவன் மார்களுக்குக் காவல்
இருந்தார்கள். இவள் தெருவால் சென்று மறையும்வரை கணவன்மாரை
வீட்டுக்குள்ளேயே வைத்துப் பாதுகாத்தார்கள். இவளின் எண்ணம்
நிறைவேறவேயில்லை. இவள் வீதியுலாச் சென்றது வீணாகிப் போயிற்று.
அதனால்தான் இவனை இழுத்துக்கொண்டு ஓடியிருக்கிறாள். இவனைக் காப்பாற்ற
யாருமில்லை. இவனை விட்டால் இவளுக்கு வேறு ஆளுமில்லை.'
என்று முன்னால் சென்றுகொண்டிருக்கும் இருவருக்கும் கேட்கும்படியாக
அந்தப் பரத்தைப் பெண் தன் தோழியிடம் உரத்துக் கூறுகின்றாள். இந்தக்
காட்சியை நமக்குப் புலப்படுத்தும் விதமாக அமைந்த பாடல் ஒன்று
பின்வருமாறு:
விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று
எவன்குறித் தனள்கொல் என்றியாயின்
தழையணிந்து அலமரும் அல்கல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்குப் பழவிறல்
ஓரிக்கொன்ற ஒருபெருந் தெருவிற்
காரிபுக்க நேரார் புலம்போல்
கல்லென் றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
எழில்மா மேனி மகளிர்
விழுமாந் தனர்தங் கொழுநரைக் காத்தே.
நற்றிணை பாடல் இல: 320
மருதத்திணை. பாடியவர்: கபிலர்
இதன் கருத்து:
தோழி! ஊரிலே திருவிழாவும் நடந்து முடிந்துவிட்டது. விழாவுக்காக ஒலித்த
வாத்தியங்களும் ஓய்ந்துவிட்டன. இந்த நேரத்திலே இவள்
யாரைக்குறித்துள்ளேன் என்று என்று கேட்பாயென்றால், சொல்கிறேன் கேளடி!
விழாக்காலத்திலே ஒருநாள் தழையுடை அணிந்துகொண்டு, இன்ப உடல் அசைந்தாடிவர
இந்த இளநங்கை தெருவிலே நடந்து சென்றாள்.
பழமைப் பெருமையுடைய வெற்றிச்சிறப்பைக் கொண்ட ஓரி என்பவனைக் கொன்ற
திருமுடிக்காரி என்பவன் ஓரியின் நாட்டில் உள்ள பெருந்தெருவொன்றினூடே
சென்றபோது, அவனின் பகைவனான ஓரியின் ஊர்மக்கள் ஒன்றுபட்டுக்
கூச்சல்போட்டனர்.
அன்று அவர்கள் எழுப்பிய அந்த எதிர்ப்புக்கூச்சலைப் போன்ற
பெருஞ்சிரிப்பொலி (இவள்தெருவிலே நடந்து சென்றபோது) உண்டாயிற்று. அந்த
ஒலியைக் கேட்டார்கள் ஆராய்ந்து தெரிந்தெடுத்த வளையல்களை அணிந்தள்ள
அழகிய மாந்துளிர் போன்ற வனப்பான உடலைக்கொண்ட அவ்வூர்ப் பெண்கள். இவள்
நமது கணவன்மார்களைக் கைப்பற்றிவிடுவாளோ என்று அஞ்சி, ஒவ்வொருவரும்
தத்தம் கணவரைக் காவல்செய்து பாதகாத்துக்கொண்டனர். அவ்வாறு அவர்கள்
செய்ததினால் இவளது செயல் வீணாகிவிட்டதனால்தான் (கட்டுக்காவல் எதுவும்
இல்லாத) இவனைக் கைப்பற்றிக்கொண்டு போயிருக்கிறாள் போலும்! (என்று தன்னை
விட்டுப் பிரிந்த வேறொரு பரத்தையை நாடிவிட்ட ஆண்மகன் ஒருவனைத் தெருவிலே
கண்ட பரத்தையொருத்தி அவனுக்குக் கேட்கும் விதமாகத் தன் தோழியிடம்
கூறுவதாக அமைந்த பாடல் இது)
(காட்சிகள் தொடரும்....................................)
|