சங்க அகப்பாடல்களில் உவகை

 

வே.திருநீலகண்டபூபதி


முன்னுர

மிழ் காலந்தோறும் ஒவ்வொரு வகையில் வளர்ந்து வருகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை, தமிழ் இலக்கண இலக்கியங்கள் வெவ்வேறு வகையான பரிமாணங்களை அடைந்து வந்துள்ளன. இவற்றில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும் சங்க கால இலக்கியங்கள் இன்றளவும் புத்தம் புதிய கருத்துக்களைத் தருவனவாக உள்ளன. மேலை நாட்டுக் கருத்துக்களைக் கொண்டு தமிழினை ஆராயும் ஆய்வாளர்களுக்கு இவ்விலக்கியங்கள் கழிபேருவகையைத் தருவனவாக விளங்குகின்றன.

'சங்க அகப்பாடல்களில் உவகை' - சங்க அகப்பாடல்களில் காணப்படுகின்ற உவகையினை ஆராய்வதைத் தலைநோக்கமாகக் கொண்டது. சங்கப்புலவர்கள், அகமாந்தர் கூற்றுக்களாகத் தாம் பாடிய பாடல்களைப் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் சங்க கால மாந்தரின் அகவுணர்வுகளை வெளிப்படுத்துவதாகும். அத்தகைய பாடல்களில் அகமாந்தர்களின் மெய்பாடுகளை குறிப்பாக உவகை பெறுமிடத்தினை விளக்குவதும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தொல்காப்பியர் தலைமக்கள் மெய்யில் தோன்றும் மெய்பாட்டுணர்வுகளை மெய்பாட்டியலில் வகை பிரித்துக் கூறியுள்ளார். மெய்பாட்டில் நகை முதல் உவகை ஈறாக எண்வகை மெய்பாடுகள் உள்ளன. இவற்றுள் தலைவன் தலைவியரின் காதல் உள்ளத்தில் உவகை மெய்பாடுகள் வெளிப்படுமாற்றைச் சங்க அகப்பாடல்கள் மூலமாக விளக்குவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

'சங்க அகப்பாடல்களில் உவகை' என்ற தலைப்பிற்கு எல்லை சங்க இலக்கியமான எட்டுதொகை நூலாகும். எட்டுத்தொகையில் அகநூல்களான ஐங்குறுநூறு குறுந்தொகை, நற்றிணை, அகநாநூறு, கலித்தொகை என்னும் ஐந்து நூல்களே இக்கட்டுரைக்கு அடிப்படை நூல்களாகும்.

உவகை விளக்கமும் வரையறையும்

வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட தலைநூல் தொல்காப்பியம். இது மனித மனங்களின் உணர்வு வெளிப்பாடுகளை மெய்பாடுகளாகக் கண்டுள்ளது. அம் மெய்பாடுகளுக்கு தனியியல் வகுத்துள்ளது. தொல்காப்பியர் மெய்பாடு பற்றிக்குறிப்பிடும் பொழுது,

'கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே'

                                                                                               (தொல்.
1221)

என்பர் இதனை இளம்பூரணர் 'மெய்யின் கண் படுதலின் தோன்றுதலின் மெய்ப்பாடு என்னும் பெயர்த்து' என்று கூறுவர். பேராசிரியர் பொருள் புலப்பாடு-அஃதாவது உள்ளத்து நிகழ்ந்தமை நிகழ்ந்தவாறே புலப்படுத்து மாற்றான் வெளிப்படுதலாகும்' என்பர். சோமசுந்தரபாரதியார், 'மெய்ப்பாடு என்பது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற்புறவுடற்குறியாம்' என்று விளக்குவர்.

தொல்காப்பியர் மெய்பாட்டை, வகைப்படுத்தும்போது

'நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்
றப்பா லெட்டே மெய்ப் பாடென்ப'

                                                                   (தொல்.
1197)

என்பர். தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள மெய்பாடுகளில் இறுதியாகச் சுட்டுவது உவகை ஆகும். உவகை என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் மதுரைத் தமிழ்ப் பேரகராதி, 'களிப்பு, மகிழ்ச்சி, அன்பு, காமம், சிருங்கார ரசம், சந்தோசம், நேயம், பிரியம், மாய யாக்கை, பதினென் குற்றத்துளொன்று எனச்சுட்டுகிறது.

'உவகை சிருங்காரத்தில் பிறப்பது' என இளம்பூரணரும் 'உவகையென்பது காம முதலிய மகிழ்ச்சி' எனப் பேராசிரியரும் குறிப்பிடுகின்றனர். சோமசுந்தரபாரதியார் நவரசத்தோடு இதனை ஒப்பிட்டுக் கூறுகின்ற போது, 'சிருங்காரம் கற்புக் கருதாக் காமக்கலி அதனைச் செய்யுளில் கொள்ளதகும் ஒரு பொருளாக தமிழ்ப்புலவர் கருதுகிலர்' என்பர். இவ்வாறு உவகை பற்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களின் வழி, காம இன்பத்தால் பிறப்பது உவகை என்னும் பொதுவான கருத்து தெளிவாகும்.

உவகையின் நிலைக்களன்கள்

உவகை பிறத்தற்கான நிலைக்களன்கள் நான்கு, அவற்றை,

'செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
றல்லல் நீத்த உவகை நான்கே'
(தொல்.
1205)

என்று தொல்காப்பியர் சுட்டுவர். செல்வப் பொருளை நுகர்தலால் வரும் உவகை, கல்விப்பயனாகிய அறிவுடைமையால் வரும் உவகை, காமப்புணர்ச்சியால் வரும் உவகை, ஆறும் குளமும் காவும் ஆடி வருதலால் வரும் உவகை எனத்துன்பம் கலவாத உவகை நான்கு வகைப்படும். பிறர் துன்பம் கண்டு பிறப்பது இன்பம் அன்று. பிறரின் அல்லலில் உவகை தோன்றாது, அதனாற்றான் தொல்காப்பியரும் 'அல்லல் நீத்த உவகை' என்றார். தன்கண் தோன்றிய இன்பம் கண்டு உவகை பிறக்கும். பிறர்கண் தோன்றிய உவகை குறித்தும் இன்பம் பிறக்கும். உள்ளம் முழுவதும் நிறைந்து உடல் பூரித்து முகத்தில் சிறு நகையை வெளிப்படுத்துவதே உவகையின் ஆற்றல். காதலால் புணர்வு உவகையில் வரும் பாக்களே இலக்கியங்களில் மிகுதியானவை. உவகையை நகையோடு தொடர்புபடுத்தி நகையிலிருந்து சற்று மாறுபட்ட மெய்ப்பாடு என்பர். பெரும்பாலும் உவகை காமத்தின் கண்ணே தோன்றும் என்பது முடிவு.

செல்வ உவகை

செல்வம் வழிப்பிறக்கும் உவகைக்கு இளம்பூரணர், ' செல்வ நுகர்ச்சியான் வரும் உவகை' எனவும்' பேராசிரியர், 'செல்வம் என்பது நுகர்ச்சி' என்றும் சோமசுந்தர பாரதியார் திரு அல்லது ஆக்கப்பெருக்கம்' என்றும் வெள்ளைவாராணனார் 'செல்வம் என்பது செல்வத்தால் உளதாகும் முயற்சி' என்றும் விளக்கம் கூறுகின்றனர்.

ஒருவன் தனக்குரிய இல்லின்கணிருந்து தன் முயற்சியால் எய்திய பொருளைத் தென்புலத்தார், தெயவம், விருந்து ஒக்கல்கட்டும் பகுத்துத்தானும் உண்டலால் மகிழ்ச்சி எய்துகின்றான்.

புலன் உவகை

புலன் உவகையை இளம்பூரணர். 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களாலும் நுகர்தலால் பெறப்படும் உவகை' என்கிறார். பேராசிரியர், 'கல்விப்பயனாகிய அறிவுடமை' எனறும் சோமசுந்தர பாரதியார். 'அறிவிலூறும் அகமலர்ச்சி' எனவும் சுட்டுகின்றனர். அறிஞர்களின் கூட்டத்தால் மகிழ்ச்சி உண்டாகும். இது உள்ளத்தின்கண் தோன்றும் உவகையை மேம்படுத்தும். மேலும் 'புலம்' என்பது அறிவு சான்ற இடம். 'புலன்' - புலம் என்பதன் திரிபு.

இளம்பூரணர் 'புலன்' என்பதை ஐம்புலன் எனக்கொண்டு ஈண்டு உரை கூறியிருப்பது ஏற்கத்தக்கது அன்று. புலனுக்கு அடுத்தபடியாக வருகின்ற 'புணர்வு' என்பதில் ஐம்புலன்களுக்கும் இன்பம் கிடைத்தலான் 'புலன்' இன்பம் எனத்தனி நிலைக்களன் படைத்திரார். ஈண்டு புலன் என்பது அறிவுடைமையைக் குறிக்கும்.

புணர்வு வகை

புணர்ச்சி வழிப்பிறக்கும் உவகையை இளம்பூரணர், 'மகளிரொடு புணர்தலான் வருவது' என்று பேராசிரியர், 'காமப் புணர்ச்சி முதலாயின வழிப்பிறக்கும் உவகை' எனவும் சோமசுந்தர பாரதியார், 'கற்புறு காதற் கூட்டம்' எனவும் வெள்ளை வாரணனார், 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமப்புணர்ச்சியின் வழிப் பிறக்கும் உவகை' புணர்வு உவகைக்கு விளக்கம் தருகின்றனர். இதனால் கற்புறுகாதற் கூட்டத்தால் புணர்ந்து பிறத்தல் புணர்வு உவகை என்பது தெளிவு.

விளையாட்டு உவகை

விளையாட்டு பற்றி வரும் உவகைக்கு இளம்பூரணர், 'சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டினால் பிறப்பது' எனவும் பேராசிரியர், 'ஆறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து வருதல்' எனவும் சோமசுந்தர பாரதியார், 'தீதில் பொய்தல்' எனவும் வெள்ளைவாரணனார், 'மலையும் ஆறும் குளனும் சோலையும் முதலிய இயற்கை வனப்பு மிக்க இடங்களில் தங்கி, துணையோடு விளையாடி மகிழும் விளையாட்டினைக் குறிக்கும்' எனவும் விளக்குவர். தமிழண்ணல், 'ஆடல் பாடல்' எனப் பொதுவாக எல்லாவற்றையும் விளக்குவர். இவற்றால் நீர்விளையாட்டின்கண் தலைவன் மகளிரொடு விளையாடி மகிழும் மகிழ்ச்சியே விளையாட்டு உவகை என்பது புலப்படும்.

அகமாந்தர்களுள் உய்த்துணர்ந்து வாழுநர் என்ற முறையில் தலைமக்களாம் தலைவன், தலைவி இவர்களின் கூற்று வழி உவகை இடம் பெறும் இடங்களே ஈண்டு நிலைக்களன்கள் வழி தொகுக்கப்பெறுகிறது.

தலைவன் கூற்றில் உவகை

செல்வ உவகை:

வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்;பாகனிடம் கூற்று நிகழ்த்தும் போது முன்பு நடந்த நிகழ்ச்சியை எடுத்து கூறி மகிழும் நிலையில் அவனுக்குச் செல்வ உவகை பிறக்கிறது. இவ்வாறு நற்றிணையில் மூன்று பாடல்கள் அமைந்துள்ளன. இவற்றுள் இரண்டு பொருட்செல்வத்தால் வரக்கூடிய உவகையாகவும் அமைந்துள்ளன.

வினைமுற்றி காட்டு வழியில் வரும்போது தலைவன் பாகனை நோக்கி, 'பாகனே அதோ பார்! காட்டுக் கோழியின் சேவல் தன் பெட்டைக்காக, நாங்கூழ் புழுவைக் கவர்ந்து செல்கிறது.
அதேபோல் நானும் என்பால் மிகுதியான காதல் கொண்ட தலைவியிடம் கிடைத்த பொருளைக் கொடுத்து இன்புறுவதற்காகத் தாற்று முள்ளால் குதிரையைத் தீண்டுக' எனக் கூறுகிறான். இதனை,

' ........................ உதுக்காண்
....................................
நாளிரை கவர மாட்டித்தன்
மான்பெடை நோக்கிய பெருந்தகு நிலையே'
(நற்.
21:6-12)

எனப் பாடுவர். மேலும் பகற்பொழுதில் காடெல்லாம் அலைந்து வேட்டையாடி வரும் வேட்டுவன் மாலையில் வீடு திரும்பியதும் அப்பொருளை மனைவியின் பொறுப்பில் விட்டு விட்டுக் கள்ளருந்திக் கிடப்பான். அதுபோல் தாமும் கொணர்ந்த பொருளினைத் தலைவி பொறுப்பில் கொடுத்து விட்டுக் கவலையின்றி வாழ்வோம் என்பதைத் தலைவன்,

'வண்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே . . . . . . .'
(நற்.
59:4-8)

என்று தேர்ப்பாகனிடம் குறிப்பதன் மூலம் அறிய முடிகிறது. இவ்விரண்டு பாடல்களும் தலைவன் பொருட் செல்வத்தால் உவகை அடைதலை விளக்குகின்றன. நாம் ஈட்டி வந்த பொருளைத் தம் மனைவியிடம் கொடுக்கும் பொழுது உண்டாகும் மகிழ்ச்சியை எண்ணித் தலைவன் உவக்கின்றான். தம் கட்டுக்கடங்கா மகிழ்ச்சியை இடை வழியில் பாகனிடம் பகிர்ந்து கொள்ளுதல் தலைவியைக் கண்டு தாம் ஈட்டிய பொருளைக் கொடுத்து மகிழ வேண்டும் என்னும் அவனது உள்ள விரைவை நன்கு புலப்படுத்தும். வினைமுற்றி மறுத்தரா நின்ற தலைமகன் தேர்ப்பாகனிடம் தன்மகன் நடையிட்டு நடக்கும் காட்சியினை,

'நடைநாட் செய்த நவிலாச் சீறடிப்
பூங்கட் புதல்வன் . . . . . . .'
(நற்.
221:10-11)

எனக் கூறி மகிழ்கின்றான். மகனின் இன்பமொழியைச் செவிகுளிரக் கேட்க எழுந்த வேட்கையை,

'பூங்கட் புதல்வன் தூங்குவயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம்தீம் கிளவி கேட்கம் நாமே'
(நற்.
221.11-13)

என உரைக்கிறான். இவை மகனது தளர் நடையைக் காணவும், மழலைப் பேச்சை கேட்கவும் விழையும் தலைவனது ஆர்வத்தையும் அவை உண்டாக்கும் உவகையையும் நன்கு புலப்படுத்தும்.

புலனுவகை:

தலைவன் கூற்றில் புலனுவகை இடம்பெறும் சூழல்களை வினைமீட்சிகண் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறல், தலைவன் தலைவியிடம் கூறல், தலைவன் பாகனிடம் கூறல், தலைவன் கண்டோரிடம் கூறல், ஆகிய பகுப்புகளில் அமைத்துக் காணமுடிகின்றது.

தiலைவன் புலவி நீக்கப் புணர்ந்த புணர்ச்சியின் இறுதியில் தன்னுள்ளே எண்ணுகின்றான். இதனை,

'பகன்ற வான்மலர் மிடைந்த கோட்டை
கருந்தா ளெருமைக் கன்று வெரூஉம்
பொய்கை ஊரன் மகள் . . . . . . . '
(ஐங்.
97.97:1-3)

என்னும் அடிகள் வழி தலைவியின் அறியாமையயை எண்ணுதால் தலைவனுக்கு உவகை தோன்றுகிறது. மேலும் 'பொருள் வயிற் பிரிந்து சென்று மீண்ட தலைவனிடம் தலைவி எம்மையும் நினைப்பீர்களா என்று கேட்க உன் கண்களை நினையாது கழிந்த நாட்கள் வாழாதிருந்தேன். என்பதை அகநாநூறு.29 என்ற பாடல் வழி அறியமுடிகிறது. இதில் தலைவனுக்கு புலனுவகை தோன்றுவதை உணரமுடிகிறது.

தலைமகன் வினை முடித்துத் திரும்பும் போது தேர்ப்பாகனுடன் உரையாடுகையில் தலைவியின் நலம் பாராட்டல், அவளின் ஊரைப் புகழ்தல் ஆகிய நிலைகளில் தனது புலனுவகையை வெளிபடுத்தியுள்ளான். தலைவியின் நலம் பாராட்டல் நிலையில் என் மகன் என்னை நினையாமல் இருக்க தலைவி இனிய மொழிகளைக் கூறி நினக்கு பால் தருவேன் என அழைப்பாள். இதனை

'வருகுவை யாயிற் றருகுவென் பாலென (அக.நா.
54,19-22)

என்ற பாடல் வாயிலாகவும்,

'காதல் கெழுமிய நலத்தள் ஏதில
புதல்வற் காட்டிகப் பொய்க்கும்'
(நற்.
16:10-12)

என்ற வழியும் உவகைத் தோன்ற கூறுகிறான். தலைவியின் ஊரைக் காணும் தலைவன் தலைவியையேக் கண்டது போல் மகிழ்கின்றான் இதனால் அவனுக்கு புலனுவகை தோன்றுகிறது. இதனை குறுந்தொகை
231 பாடல் வழி அறியமுடிகிறது. மேலும் கண்டோரை நோக்கி தலைவன் தலைவியின் விந்தோம்பும் மாண்பினை எடுத்துக் கூறி எம்மனைக்கு வருக என அழைக்கின்றான். இதனை 'விருந்தயர் விருப்பினள்' நற்றிணை 374 பாடல் வாயிலாக உணரப்பெறும்.

புணர்ச்சி உவகை:

தலைவன் கூற்றில் புணர்ச்சி உவகை இயற்கை புணர்ச்சி, இடந்தலைப்பாடு, இரவுக்குறி, உடன்போக்கு, ஊடல், இனிதிருத்தல், வினைமுற்றி மீளல், செலவழுற்குவித்தல் ஆகிய கலன்களில் அமைந்துள்ளன.

இயற்கைப் புணர்ச்சி சூழலில் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பதாக நற்றிணையில் ஒரு பாடலும் (நற்
.8) குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (குறுந்.70.116) என மொத்தம் மூன்று பாடல்கள் அமைந்துள்ளன.

'திண்தேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுக இவள் ஈன்ற தாயே'
(நற்.
8:9-10)

தலைவியை புணர்ந்த தலைவன் அவளின் பெற்றோரை பாராட்டுகின்றான். இதன் அடிப்படை புணர்ச்சி உவகை ஆயிற்று. இதே போன்று குறுந்தொகை 2,62,116 ஆகிய அகநாநூறு
140,142,162 ஆகிய பாடல்களில் காணப்படுகிறது. மேலும்

'வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே' (அகநா.
140:15)

எனும் பாடலிலும், தலைவன் தலைவியின் கூந்தலில் உறையும் வண்டு ஒன்றினை விளித்து வண்டே நீ மலர் தேர்ந்து தேன் உண்ணும் வாழ்க்கையை யுடையாய் ஆதலில், நீ அறியும் பூக்களில் இவள் கூந்தலைவிட. நறியன உள்ளனவாக அறிதியோ!' (குறுந்.2) என்று கேட்பதின் மூலமும் தலைவனின் புணர்ச்சி உவகை வெளிப்படுகிறது.

மேலும் இடந்தலைப்பாடு, இரவுக்குறி, உடன்போக்கு, ஊடல், இனிதிருத்தல், வினைமுற்றி மீளல், செலவழுங்குவித்தல் என்ற நிகழ்வுகளின் போது ஆங்காங்கே தலைவனுக்கு புணர்ச்சி உவகை தோன்றுகிறது.

தலைவி கூற்றில் உவகை

செல்வ உவகை

தலைவி கூற்றில் செல்வ உவகை பிறத்தல் ஒரு பாடலில் மட்டுமே அமைந்துள்ளது. தலைவி தன் மகனைக் கண்டு உள்ள மகிழ்ச்சியால் பாலுண்ண அழைக்கிறாள். அப்பொழுது அங்கு வந்த தலைவனோடு ஊடித் தன் காதல் மகனோடு உறவாடும் அவள் உள்ளத்தைக் காண முடிகிறது. இங்கு தலைவி தன் மகன் அணிந்திருக்கும் அணிகலனைப் பாராட்டி அவன் உருட்டி விளையாடும் சிறு தேரினையும் அவன் தளர் நடையினையும் கூறி, அவனைப் பாலுண்ண வருமாறு அழைக்கிறாள். மேலும் பாணர்களைத் தூதாகக் கொண்டு, பரத்தையர் புணர்ச்சியினை விரும்புகின்ற தலைவன் உண்ணும் பாலும் இருக்கிறது. அதிலாவது கொஞ்சம் உண்ண வா! என்று அழைக்கின்றாள். இதனை,

'செருக்குறித் தாரை உவகைகூத் தாட்டும்
வரிசைப் பெரும்பாட்டொ டெல்லாம் பருகீத்தை
தண்டுவென்ஞா யர் மாட்டைப் பால்'
(கலித்-
85.34-36)

என்பதில் காணமுடிகிறது. இதனால் தலைவி தன் மகனுக்குப் பால் உண்பிக்கச் செய்வதில் தலைவி கொண்ட உவகை தெளிவுறும். இதில் செல்வங்களுள் போற்றுதற்குரிய மக்கட்செல்வம் சிறப்பித்துப் பேசப்பெறுவதால் இது செல்வ உவகையின் பாற்பெறும். 'புதல்வனாற் றலைவிக்குச் செல்வமாகிய உவகை பிறந்தது' என்னும் நச்சினார்க்கினியார் விளக்கம் இதற்கு அரண்சேர்க்கும்.

புலன் உவகை:

தலைவி கூற்றில் புலனுவகை பிறத்தலை, ஒன்பது பாடல்களிலும் காணமுடிகிறது. அவற்றைத் தலைவனின் தன்மை கூறல், வரைவு மலிவு, ஊடல், பொருள்மீட்சி, தலைவி தோழியை பாராட்டல், ஆற்றியிருந்தது கூறல், வரவுணர்த்தல், ஆற்றியிருத்தல் என்ற நிலைகளில் பகுத்துக் காணவியலும்.

தலைவனின் தன்மையை கூறும் பொழுது தலைவி பெருமிதத்தோடு

'தாமரைத் தண்தா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்தத் தீந்தேன் போல'
(நற்.
1.3-4)

தலைவன் தன் மீது கொண்ட அன்பினை விளக்குகிறாள். இதில் தலைவியின் அறிவுத் தன்மை வெளிப்படுகிறது. தலைவிக்கு புலன் உவகை பிறத்தல் உணரப்பெறும். இதே போன்று குறுந்தொகை.
257, ஐங்குநுறூறு.120 ஆகிய பாடல்களில் உவகை பிறத்தலை உணரமுடிகிறது.

புணர்ச்சி உவகை:

தலைவி கூற்றில் வரைவு மலிவு, இனிதிருத்தல், பரத்தையர் பிரிவு ஆகிய மூன்று கலன்களில் புணர்ச்சி உவகை இடம்பெற்றுள்ளது. வரைவு மலிவு என்ற நிலையில் தலைவி பேருவகையால் இவ்வாறு கூறுகின்றாள். 'நீர் நிறைந்த இடத்தில் மரங்கள் எவ்வாறு செழிப்புற்றிருக்குமோ அதுபோலத் தலைவனோடு இடையீடின்றி உடனுறைந்து இன்புறுவோம். இதனை,

'நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத்
திண்கரைப் பெருமரம் போலத்
தீதில் நிலைமை முயங்குகம் பலவே'
(குறுந்.
368.6-8)

இதில் தலைவிக்கு புணர்ச்சி உவகை வெளிப்படுவது விளங்கும். இதே போன்று இல்லறம் நடத்தும் தலைவி தோழியிடம் முன்னொரு திங்கள் தலைவனோடு இனிதிருந்த நிகழ்ச்சியை கூறுகிறாள். இதனை குறுந்தொகை.193 பாடல் வழி அறியமுடிகிறது.

தலைவி கூற்றில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைத் தலைவி சாடும் நிலையிலும் அவளது உள்ளத்தின்கண் புணர்ச்சியுவகையால் வெளிப்படுகிறது. இங்கனம் ஐந்து பாடல்களில் அமைந்துள்ளது. பரத்தையர் பால் பிரிந்து சென்ற தலைவன் வாயில் நேர்தற் பொருட்டு பாணன் முதலியேரைத் தூதனுப்ப அவர்கள் வாயில் மறுக்கப்பட்ட நிலையில். தானே மனைக்குச் செல்கிறான். அங்ஞனம் வந்த தலைவனைத் தலைவி

'புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்' (நற்.
340.1)

புணர்ச்சி உவகை வெளிப்படத் தழுவினாள் என்பது பெறப்பெறும்.

பரத்தையர் மாட்டு பிரிந்து பின் வந்த தலைவனை நோக்கி,
'இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே'
(குறுந்
.49.3-5)

இவ்வாறு கூறுவதன் மூலம் தலைமகனின் புறவொழுக்கத்தைக் கண்டு ஊடாமல் அவனே மறுமையிலும் கணவனாக வரவேண்டும் என்று கூறுவதால் அவள் தலைவன் மீது கொண்டுள்ள அன்பு புலனாகும். இதனால் தலைவிக்கு புணர்ச்சி உவகை தோன்றுகிறது.

இது போன்று பல்வேறு நிகழ்வுகளில் தலைவியின் புணர்ச்சி உவகை தலைவனின் வருகையிலும், ஊடலின் முடிவிலும் ஆங்காங்கே வெளிப்படுவதை உணரமுடிகிறது.

முடிவுரை:


தொல்காப்பியர் மெய்பாட்டில் உவகையை இறுதியாக கூறுவர். இவ்வுவகையின் நிலைக்களன்களாக செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கினை குறிப்பிடுவர். தலைவன் கூற்றுப் பாடல்களில் பிறக்கும் உவகையில் தலைவன் பெறும் உவகையே முழுவதுமாக அமைகின்றது.

தலைவன் இயற்கைப்புணர்ச்சியில் தலைவியை நினைந்து உவகை அடைதலும், தலைவியின் நலம் பாராட்டி உவகை கொள்ளுதலும், தலைவியின் ஊரினை வியந்து உவகை பெறுவதுமாகத் தலைவன் பெறும் உவகையே பாடல்களில் இடம்பெற்றுள்ளது.

தலைவியின் உவகை தலைவனின் வருகையினைச் சார்ந்ததாக அமைகின்றது. களவில் தலைவன் திருமணத்திற்கு முற்படுதலினாலும் கற்பில் வினை மீட்சியாலும் தலைவியிடத்து உவகை பிறக்கின்றது.

தோழி கூற்று, பிறர் கூற்று, என விரித்து நோக்குவதுக்கு இடனுண்டு என்ற போதிலும் தலைமக்களே உணர்வின் பாற்பட்டவர். என்ற உளவியல் நோக்கில் தலைவன் தலைவி கூற்றுவழி ஈண்டு உவகை வெளிக் கொணரப்பட்டுள்ளது.
துணைநூற்பட்டியல்

முதன்மைச் சான்றாதாரங்கள்
இலக்கியம்

காசிவிஸ்வநாதன் (
1947), அகநாநூறு, களிற்றியானை நிரை,
செட்டியார், வெ.பெரி.பழ.மு. கழக வெளியீடு, சென்னை.
(வெ.ஆ)

மேலது, (
1949), அகநாநூறு, மணிமிடைப்பவளம்
கழக வெளியீடு, சென்னை.

மேலது, (
1957), அகநாநூறு, நித்திலக்கோவை,
கழக வெளியீடு, சென்னை.

மேலது, (
1962), கலித்தொகை,
கழக வெளியீடு, சென்னை.
ஆறாம்பதிப்பு

சாமிநாதையர், உ.வே. (
1955), குறுந்தொகை மூலமும் உரையும்,
(உ.ஆ.), கபீர் அச்சுக்கூடம், சென்னை
மூன்றாம் பதிப்பு.

துரைசாமிபிள்ளை, (
1966), நற்றிணை மூலமும்
ஒளவை. சு., விளக்கவுரையும், (
1-200 பாடல்கள்)
அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

மேலது, (
1968), நற்றிணை மூலமும் விளக்கவுரையும்
(
201-400 பாடல்கள்),
அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
'...................' (
1966), ஐங்குறுநூறு, கழக வெளியீடு,
சென்னை.

துணைமைச் சான்றாதாரங்கள்
இலக்கணம்
வெள்ளை வாரணர், க., (
1986), தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், 327

ப.ஆ. (உரைவளம்), பதிப்புத்துறை, மதுரை
காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
'......................' (
1956), தொல்காப்பியம், பொருளதிகாரம்,
இளம்பூரணர் உரை,
கழக வெளியீடு, சென்னை.

அகராதி
சாமிநாதையர், உ.வே. (
1956), மதுரை தமிழ்ப் பேரகராதி, (முதல்பாகம்),
(ப.ஆ.), இ.மா.கோபாலகிருஷ்ணக்கோன்
வெளியீடு, திருநெல்வேலி