மயிலை சீனி. வேங்கடசாமி நோக்கில் தமிழகச் சமயங்கள்

 

முனைவர் க.துரையரசன்


முன்னுரை:
 

ஆராய்ச்சிப் பேரறிஞர், தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற சிறப்புகளுக்குரியவர் மயிலை சீனி.வேங்கடசாமி. இவர் 16.12.1900 இல் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவரது பெற்றோர் சீனிவாச நாயக்கர் – தாயார் அம்மையார். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளையும் அறிந்தவர். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழக வரலாறு, பண்பாடு முதலான பல துறைகளிலும் சிறந்த பணியாற்றியுள்ளார். இவர் முப்பத்து மூன்று நூல்களையும் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் படைத்துள்ளார். தமிழகச் சமயங்கள் பற்றிய இவரின் ஆய்வுக் கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
 

சமயங்கள் பற்றிய ஆய்வு:
 

பல்வேறு சமயங்களாலும் ஒருசேர வளர்க்கப்பட்ட மொழி என்ற பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. அவ்வகையில் பௌத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம், சைவம், வைணவம் உள்ளிட்ட பல சமயங்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளன. மயிலையார் இச்சமயங்களின் தமிழ்த்தொண்டு குறித்து ஆய்வு செய்து நூல்களை எழுதியுள்ளார். அவ்வகையில் கௌதம புத்தர், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், மகாபலிபுரத்து ஜைன சிற்பம், பௌத்தக் கதைகள், கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், புத்தர் ஜாதகக் கதைகள், சமயங்கள் வளர்த்த தமிழ்  ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் சமயம் பற்றிய தன் ஆய்வுக் கருத்துகளை ஆசீவக மதம், பௌத்த சமயம், தமிழும் சமண பௌத்த மதங்களும், நாட்டியமும் சைவ ஆகமங்களும், சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள், பௌத்த மதமும் திருக்குறளும், சைவ சமய வரலாறு, பௌத்த சமணத் தமிழிலக்கியங்கள், சிவன் திருமால் உருவ அமைப்பு, முப்புரம் எரித்த முதல்வன், நல்ல சிற்றம்பலமும் தில்லைச் சிற்றம்பலமும், திருக்குறளில் பௌத்தமும் சமணமும், பழந்தமிழும் பல்வகைச் சமயமும் முதலிய கட்டுரைகளாகவும் எழுதியுள்ளார். 
 

பகுத்தறிவுவாதி:

தமிழகக் கலைகள் குறித்தும் அதற்கு நிலைக்களமானக் கடவுளர் பற்றியும் இவர் ஆய்வு நிகழ்த்தி உள்ளார். இருப்பினும் இவர் ஒரு சமயவாதி அல்லர்; பகுத்தறிவுவாதி என்பதை, ‘’நடராசப் பெருமானின் சிற்ப உருவத்தைத் தாம் ஆராயப் புகுந்தது என் மனத்திலே பக்தி வெள்ளம் கரைபுரண்டோடியதனால் அன்று; மதம் என்னும் பேய் பிடித்து ஆட்டியதனாலும் அன்று’’ என இவர் கூறுவதன் மூலம் அறியமுடிகிறது.1
 

கடவுள், தெய்வம்:
 

இக்காலத்தில் கடவுள், தெய்வம் என்ற இரண்டு சொற்களும் முழு முதற்பொருளான இறைவன் என்ற பொருளில் வழங்கப்படுகின்றன. ஆனால் இச்சொற்கள் முற்காலத்தில் துறவிகளைக் குறித்ததாக மயிலையார் கூறுகிறார். சூளாமணி, சீவகசிந்தாமணி, குறுந்தொகை, திருக்குறள், மதுரைக்காஞ்சி, திருக்கலம்பகம், கலித்தொகை, சிலப்பதிகாரம், பெருங்கதை, கம்பராமாயணம், தேவாரம் முதலிய நூல்களில் கடவுள், தெய்வம் ஆகிய இரண்டு சொற்களும் முனிவர் என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளதை மயிலையார் எடுத்துக்காட்டி விளக்குகிறார்.2
 

சிவபெருமான் யானைத் தோல் போர்த்தியமை:
 

திராவிடரின் முக்கியமானப்  பழந்தெய்வமாக சிவபெருமான் விளங்குகிறார். சிவபெருமான் யானைத் தோலை உரித்துப் போர்த்திய செயல் பற்றி மயிலையார் கூறுவதாவது: புலித்தோலை உரித்துப் போர்த்திய சிவபெருமானைக் கண்டு உமையம்மை அஞ்சவில்லை. ஆனால், யானைத்தோல் உரித்துப் போர்த்திய சிவபெருமானைக் கண்டு உமையம்மை அஞ்சி நடுங்கினாள். இதற்குக் காரணம் யானைத் தோலை உரித்துப் போர்த்தியவர் அழிவது உறுதி என்பதேயாகும். இதனை சீவகசிந்தாமணியை மேற்கோள்காட்டி மயிலையார் குறிப்பிடுகிறார். ஆயினும் சிவபெருமான் அழியாமல் இருக்கிறான் என்று தத்துவார்த்தமானப் பொருளில் குறிப்பிடுகிறார்.3
 

தமிழ்த்தெய்வங்கள்:
 

வடநாட்டுச் சமயங்களான சமணம், பௌத்தம் மற்றும் வைதீக மதங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு தமிழர்கள் மாயோன் என்கிற திருமால், சேயோன் என்கிற முருகன், வேந்தன், வருணன், கொற்றவை, சிவபெருமான் ஆகிய தெய்வங்களை வழிபட்டனர். இவற்றுள் வேந்தன், வருணன் ஆகிய தெய்வங்கள் ஆரிய தெய்வங்கள் போலத் தோன்றினாலும் அவை ஆரியத் தெய்வங்கள் அல்ல; தமிழரின் தெய்வங்களே என்பது மயிலையாரின் முடிபாகும்.
 

வேந்தன் வழிபாடு:

வேந்தன் என்பது பண்டைத் தமிழ்நாட்டில் மருதநிலக் கடவுளாக வழிபடப்பட்டது. அக்கால மருதநில மக்கள் பிற நில மக்களைக் காட்டிலும் செல்வந்தர்களாக இருந்தனர். இவர்களுக்குப் பாதுகாப்புத் தேவைப்பட்டது. எனவே பழந்தமிழர்கள் வேந்தர்களை உருவாக்கி அரசாட்சியை ஏற்படுத்தினர். இவ்வேந்தர்கள் வணங்கிய தெய்வம் வேந்தன் எனப்பட்டத்து. இவ்வேந்தன் என்பது தமிழ்க் கடவுள் ஆகும். வேந்தராகிய மன்னருக்குத் தெய்வம் என்பது பொருள். பிற்காலத்தில் தமிழ்-ஆரியக் கலாச்சாரக் கலப்பு ஏற்பட்ட பிறகு தமிழ்த் தெய்வமான வேந்தனுடன் ஆரியத் தெய்வமான இந்திரன் இணைக்கப்பட்டது. உரையாசிரியர்களான் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோர் தொல்காப்பியர் குறிப்பிடும் தனித்தமிழ்க் கடவுள வேந்தனை இந்திரன் என்று குறிப்பிடுகின்றனர்.4
 

வருணன்:
 

சங்க நூல்களில் வருணன் பற்றிய செய்திகள் மிகுதியாக இடம்பெறவில்லை. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் மட்டும் வருணன் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இருக்கு வேதத்தில் ஆரியர்கள் வழிபட்ட வருணன் என்ற தெய்வம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தெய்வத்தைத்தான் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார் என்பது தவறு. ஆரியர்கள் வருணனைக் கடல் தெய்வமாக மட்டுமின்றி வானத்துக்கும் தெய்வமாக வழிபட்டனர். ஆனால் தமிழர்கள் வருணனைக் கடல் தெய்வமாக மட்டுமே வழிபட்டனர்.
 

மாயோன்:
 

திராவிடக் கடவுளான மாயோன், திருமால், நெடுமால், பெருமாள் என்றும் அழைக்கப்பட்டார். திராவிடரின் தெய்வமான மாயோனைத் தங்களுடைய கடவுளான விஷ்ணுவுடன் இணைத்துக் கொண்டனர் வைதிக ஆரியப் பிராமணர்.5  திருமால் வழிபாடு மிகப் பழைய காலத்தில் இருந்து இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கையில் திருமால் விஷ்ணு என்னும் பெயருடன் வழிபடப் படுகிறான். சிங்கள மொழியில் விஷ்ணுவை மாவிஸ் உன்னானெ என்று கூறுகின்றனர். விஷ்ணுவைப் பௌத்தக் கோயில்களில் வைத்து வழிபடுகின்றனர். கருட வாகனம், சங்கு சக்கரம் ஏந்திய திருமாலைச் சிங்களர் இன்றும் வழிபட்டு வருகின்றனர்.
 

சேயோன்:
 

தமிழகத்தில் முருகன் வழிபாடு சிறப்பானது. தொடக்கத்தில் முருகனை ஆரியர்கள் இகழ்ந்து பேசினாலும் பிறகு தங்கள் தெய்வமானக் கந்தனைத் தமிழ்த் தெய்வமான முருகனோடு இணைத்துக் கொண்டனர். இக்கலப்பினால் முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்னும் இரண்டு மனைவியர் ஏற்பட்டனர்.6
 

இலங்கையில் தமிழ்நாட்டுத் தெய்வங்கள்:
 

முருகன், திருமால், வருணன், இந்திரன் ஆகிய தெய்வங்களைப் பழந்தமிழர்கள் வழிபட்டனர். இந்திரன் தவிர மற்ற மூன்று தெய்வங்களை இலங்கையில் தமிழர்கள் வழிபட்டனர். ஆனால் இந்திர வழிபாடு இலங்கையில் இல்லை. நாளடைவில் தமிழ்நாட்டில் வருணன் வழிபாடு மறைந்து விட்டதைப் போலவே இலங்கையிலிம் மறைந்தவிட்டது. இன்றும் தமிழ்நாட்டில் முருகன், திருமால் வழிபாடு இருப்பது போலவே இலங்கையிலும் இவ்விரு தெய்வங்களை இன்றும் வழிபடுகின்றனர். முருகனைக் கொலாதவியோ,  ஸ்கந்தன், கந்தன் என்ற பெயரிலும் திருமாலை விஷ்ணு, மாவின் உன்னானே என்றும் இலங்கையில் வழிபடுகின்றனர். தமிழரல்லாத சிங்கள பௌத்தர்களும் இன்றும் வழிபட்டு வருகின்ளனர்.7
 

கடவுள் சிற்பங்கள்:

கடவுள் சிற்பங்கள் அமைப்பதில் சைவ, வைணவ, சமண, பௌத்த மதங்களிடையே காணலாகும் ஒற்றுமை வேற்றுமைகளையும் மயிலையார் ஆய்ந்து சில முடிவுகளை வெளியிட்டுள்ளார்.8

மேற்படி மதங்களின் சிற்ப அமைப்பு முறையை உற்று நோக்கும்பொழுது சைவ மதமும் சமண மதமும், வைணவ மதமும் பௌத்த மதமும் ஒரு வகையில் ஒற்றுமையும் பிறிதொரு வகையில் வேற்றுமையும் உடையனவாக உள்ளன.

·       சைவ சமண சமயங்களில் ஒற்றுமை: சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளான சிவபெருமானுக்கும் சமணக் கடவுளான அருகப்பெருமானுக்கும் திருவுருவங்களை நின்ற வண்ணமாகவும், இருந்த வண்ணமாகவும் அமைப்பதுதான் வழக்கம். கிடந்த வண்ணமாக அமைப்பது வழக்கமில்லை.              

·       வைணவ பௌத்த சமயங்களில் ஒற்றுமை: வைணவ சமயத்தின் முதன்மைக் கடவுளான திருமாலுக்கும் பௌத்தக் கடவுளானப் புத்தர் பெருமானுக்கும் திருவுருவங்களை நின்ற வண்ணமாகவும், இருந்த வண்ணமாகவும், கிடந்த வண்ணமாகவும் அமைத்துள்ள வழக்கத்தைக் காணமுடிகிறது.

·       சைவ, வைணவ, சமண, பௌத்த சமயங்களில் வேற்றுமை: சைவ, வைணவ சமயத்தார் தத்தம் முதன்மைக் கடவுளர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகளையும் துணைமைக் கடவுளர்களுக்கு இரண்டு கைகளையும் அமைக்கின்றனர். ஆனால் சமண, பௌத்த சமயத்தார் தத்தம் முதன்மைக் கடவுளர்களுக்கு இரண்டு கைகளையும் துணைமைக் கடவுளர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகளையும் அமைக்கின்றனர்.
 

சைவ, வைணவ சமயங்களின் தெய்வங்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் அமைப்பதன் நோக்கம் அக்கடவுளர்கள் மனிதர்களைக் காட்டிலும் அதிக ஆற்றல் படைத்தவர்கள் என்பதையும் எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கிறார்கள் என்பதையும் காட்டுவதற்காகவே ஆகும்.

சமண, பௌத்தர்கள் தங்கள் முதன்மைத் தெய்வங்களுக்கு இரண்டு கைகளை மட்டுமே படைத்ததன் நோக்கம் அருகப் பெருமானும், புத்தர் பெருமானும் மனிதராக இருந்து தத்தம் தவத்தால் இறைநிலையை அடைந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக ஆகும். ஆனால் அச்சமயத்தின் சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகள் படைக்கப்பட்டதன் நோக்கம் புரியவில்லை என்றாலும் ஒருவேளை அச்சமயத்தாரின் முதன்மைக் கடவுளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் சிறு தெய்வங்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகளைப் படைத்திருக்கலாம் என்று மயிலையார் கருதுவது பொருத்தமுடைத்தாகத் தோன்றுகிறது.

அம்மனும் இலக்குமியும்:
 

சிவனின் சக்தியாகிய அம்மனும் திருமாலின் சக்தியாகிய இலக்குமியும் முறையே சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் பக்கத்தில் சிற்பமாக அமைக்கப்படும்பொழுது ஆண் கடவுளர்களைவிட ஆற்றலில் குறைந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக இரண்டு கைகளுடனும் தனியாக அமைக்கப்படும்பொழுது இரண்டுக்கு மேற்பட்ட கைகளை உடையவர்களாகவும் படைக்கப்படுவது வழக்கம் என்று மயிலையார் குறிப்பிடுகிறார்.9
 

கிறித்துவமும் தமிழும்:

சமயம் குறித்த ஆய்வு நூல் வரிசையில் மயிலை சீனி.வேங்கடசாமி கிறித்துவமும் தமிழும் என்ற நூலை 1936இல் வெளியிட்டார். இதுவே இவரது முதல் நூலாகும். இதில் கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு குறித்து மயிலையார் ஆய்ந்துரைக்கிறார்.

மேல்நாட்டு, கீழ்நாட்டுக் கிறித்துவப் பெரியோர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மைகளைக் கூறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின்கண் ஐரோப்பியர் வருகை, உரைநடைநூல் வரன்முறை, அச்சுப்புத்தக வரலாறு, தமிழறிந்த ஐரோப்பியர், தமிழ்ப்புலமை வாய்ந்த நம் நாட்டுக் கிறித்துவர் முதலானத் தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. தமிழறிந்த ஐரோப்பியர் 14பேர், நம் நாட்டுக் கிறித்துவர்கள் 17 பேர் ஆக 31 கிறித்துவப் பெரியோர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளன. 10
 

சமணமும் தமிழும்:
 

மயிலையார் இந்நூலை  இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிடத்  திட்டமிட்டிருந்தார் என்பதை அறியமுடிகிறது. ஆயினும் முதற்பகுதி மட்டுமே வெளிவந்துள்ளது. இரண்டாம் பகுதி கையெழுத்துப் பிரதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்பகுதயில் முழுக்க முழுக்க சமண சமய வரலாறு மட்டும் கூறப்பட்டுள்ளது.11 சமணர்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் இரண்டாம் பகுதியில் விவரிக்கப்படும் என்கிறார் மயிலையார்.
 

பௌத்தமும் தமிழும்:
 

சமய இலக்கிய வரலாற்றில் மயிலையார் எழுதிய இரண்டாவது நூல் இதுவாகும். கிறித்துவமும் தமிழும் என்ற நூலை எழுதி நான்கு  ஆண்டுகள் கழித்து இந்நூலை மயிலையார் எழுதியுள்ளார். இது பௌத்தர்களது சமயம், தமிழ்த்தொண்டு ஆகியன பற்றிக் கூறும் முதல் நூலாகும்.12
 

முடிவுரை:
 

மேலே விவரிக்கப்பட்டுள்ள செய்திகளை ஆய்ந்து பார்க்கும்பொழுது மயிலையார் ஒரு ஆன்மீக வாதியாகவோ அல்லது சமயவாதியாகவோ இல்லாமல் பகுத்தறிவுவாதியாக நின்று சமயக் கருத்துகளை நடுநிலையோடு நன்கு விளக்கி உள்ளார். அவரது கட்டுரைகளிலும் நூல்களிலும் சமயக் கருத்துகளை ஆய்ந்துரைப்பதைக் காட்டிலும் அச்சமயத்தார் தமிழுக்கும் தமிழ்மொழிக்கும் ஆற்றியுள்ள பணிகள் மகத்தானது என்பதை மயிலையார் நன்கு ஆய்ந்து விவரித்துள்ளார்.

 

 

அடிக்குறிப்புகள்:

 

1.     1) மயிலை சீனி.வேங்கடசாமி, இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், ப.x.
 

2.     2) மயிலை சீனி.வேங்கடசாமி, அஞ்சிறைத் தும்பி, ப.13-24
 

3.     3) மயிலை சீனி.வேங்கடசாமி, யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 22, பரல்12,
    பக்.365-    366.
 

4.     4) மயிலை சீனி. வேங்கடசாமி, சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பக்.72-76.
 

5.     5) மயிலை சீனி. வேங்கடசாமி, பழந்தமிழும் பல்வகைச் சமயமும், பல்கலைப் பழந்தமிழ், ப. 26.
 

6.     6) மயிலை சீனி. வேங்கடசாமி, பழந்தமிழும் பல்வகைச் சமயமும், பல்கலைப் பழந்தமிழ், பக்.26-27.
 

7.     7) மயிலை சீனி. வேங்கடசாமி, சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பக்.86-87.
 

8.     8) மயிலை சீனி. வேங்கடசாமி, சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள், கழகத்தின்
    ஆயிரத்தெட்டவாது வெளியீட்டு விழா மலர், பக்.101-105.
 

9.     9) மயிலை சீனி. வேங்கடசாமி, சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள், கழகத்தின்
   ஆயிரத்தெட்டவாது   வெளியீட்டு விழா மலர், ப.103.
 

110110)  முனைவர் க.துரையரசன், மயிலை சீனி.வேங்கடசாமியின் தமிழாய்வுப் பணி, ப. 196.
 

11.  11) மேலது
 

12.   12) மேலது


 

முனைவர் க.துரையரசன்

தேர்வு நெறியாளர்

அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)

கும்பகோணம் – 612 002.