தமிழ் இசையா? கர்நாடகசங்கீதமா?
அவுஸ்திரேலியாவிலிருந்து பாடும்மீன்
சு.ஸ்ரீகந்தராசா
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகின்ற
பண்பட்ட மொழி நமது தமிழ் மொழி.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழுத்தமான இலக்கண வரம்புகள் அமைக்கப்பட்டு,
நுணுக்கமான இசைக் கோலங்கள் வகுக்கப்பட்டது தமிழ் இசை.
தமிழ்மொழி அதன் பயன்பாட்டின் அடிப்படையில் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது.
அவையே முத்தமிழ் என்று வழங்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
என்பனவாகும். இயற்றமிழ் என்பது உரைநடையும் செய்யுட்களும் ஆகும். இலக்கண
இலக்கியங்கள் அனைத்தும் இயற்றமிழ் என்கின்ற பிரிவின் கீழே வருகின்றன.
இசைத்தமிழ் எனப்படுவது இசையும் தாளமும் அமைந்த பாடல்களாகும். நாடகத்தமிழ்
என்பது நாட்டியம் அல்லது நடிப்பும் பாட்டும் அல்லது நடிப்பும் உரைநடையும்.
முத்தமிழிலும் தித்திக்கும் தேன்பாகாக இனிப்பதும், எத்தமிழையும்
அறியாதமக்களின் இதயங்களையும் கவர்ந்திழுப்பதும் இசைத்தமிழாகும்.
தமிழ் இசையின் தொன்மை
தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள்
சொல்லுகின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல்
அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல்
இப்போது இல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால்
எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.
இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பதால் அகத்தியத்திற்கு
முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்கவேண்டும். ஏனெனில்
இலக்கியத்திற்குப் பின்னர்தான் இலக்கணம் தோன்றியிருக்கமுடியும்.
அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு,
முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம்,
குலோத்துங்கன் இசைநூல் போன்ற அற்புதமான நூல்களும் அழிந்துபோய்விட்டன.
தமிழிசை பற்றிக் கூறுகின்ற நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத்
தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். அந்நூல் ஐயாயிரம் வருடங்களுக்கு
முன்னால் தொல்காப்பியரால் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றார்கள்.
இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை
என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ்
என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப்பற்றிக் குறிப்பிடும்
தொல்காப்பியர், முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்,பாலை ஆகிய ஐவகை
நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும,; இன்ப இசையையும் தெளிவாக வகுத்து
வைத்துள்ளார்.
'அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே' என்கிறது தொல்காப்பியம். (நூற்பா
எண் - 1268)
'இசைப்பு இசையாகும் என்கிறது' 793
ஆவது நூற்பா. இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும்
என்பது இதன் பொருள்.
அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று 33
ஆவது நூற்பா சொல்கிறது.
இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து
ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர்
என்பது இதன் கருத்து.
சங்க இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே
இப்போது கிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக்
கருதப்படுகின்றது. பரிபாடல்கள் அனைத்துமே இசைப்பாடல்களே என்று
தெரிவிக்கின்றார் பரிமேலழகர்.
திருமாற்கு இருநான்கு செவ்வேள் முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று – மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்
என்கின்ற வெண்பாவின் மூலம், திருமாலைப்பற்றி எட்டுப்பாடல்களும்,
முருகனைப்பற்றி முப்பத்தியொரு பாடல்களும், காளியைப்பற்றி ஒரு பாடலும்,
வைகை நதியைப்பற்றி இருபத்தியாறு பாடல்களும், மதுரையைப்பற்றி நான்கு
பாடல்களுமாக மொத்தம் எழுபது பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றிருந்தன என்பதை
அறிய முடிகிறது. எழுபது பாடல்களின் தொகுப்பான பரிபாடலில் இப்போது
கிடைக்கப்பெறுபவை இருபத்தியிரண்டு பாடல்கள் மட்டுமேயாகும். ஏனையவை
அழிந்துபோய்விட்டன.
பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும்
என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு
கிடைக்கப்பெறுகின்றன. பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார்,
பித்தாமத்தர் என்போர் பரிபாடலில் காணப்படும் பாடல்களுக்கு
பண்ணமைத்துள்ளனர்.
பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி,
இசைபற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டனவாகவும்
விளங்குகின்றன.
ஒத்தகுழலின் ஒலி எழ, முழவு இமிழ்
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி
ஒத்து அளந்து, சீர்தூக்கி, ஒருவர் பிற்படார்
(பாடல்: 12,
வரி 40-43)
என்ற பாடலில் சில இசைக் கருவிகளின் பெயர்களைக் காணலாம்.
மாறுகின்ற பல்வேறு ஒலிகளை உடையது பரங்குன்றம் எனப் பகர்கின்ற பின்வரும்
பாடல்களில் இசைதோன்றுவது பற்றியும், குழல் யாழ், முழவு முதலிய
இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக்
கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.
ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ
ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ
ஒருதிறம், கண்ணார குழலின் கரைபு எழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை ஊத
ஒருதிறம், மண்ணார் குழவின் இசை எழ
ஒருதிறம், அண்ணல நெடுவரை அருவிநீர் ததும்ப
ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க
ஒருதிறம், வாடை உளவயின் பூங்கொடி நுடங்க
ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
ஒருதிறம், ஆடுசீர் மஞ்சை அரிக்குரல் தோன்ற
மாறுமாறு உற்றனபோல் மாறெதிர் கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து
(பாடல்: 17, வரி 9-21)
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க
பாணிமுழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று
(பாடல்: , வரி 33-38)
எட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண்,
மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண்,விளரிப்பண் என்னும்
பண்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல்,
ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக்கருவிகளைப்பற்றி
விளக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக
வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில்
அறியத்தரப்பட்டுள்ளது.
மற்றொரு எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்
துறை, வண்ணம், தூக்கு(இசை), பெயர் என்பன குறித்து வைக்கப்பட்டுள்ளன.
பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப்பற்றிச்
சொல்லப்படுகிறது. இசைக் கலைஞர்களைப்பற்றிச் சொல்லப்படுகிறது.
இளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரம் தமிழ் இசையின் வளர்ச்சிக்குச்
சான்றாக அமைந்துள்ள அற்புதமான நூலாகும். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும்,
அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக்
கூறி நிற்கின்றன.
சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல்,
உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்று யாழை மீட்டுனின்ற
எட்டுவகைத் திறன்பற்றி எடுத்தியம்பப்படுகிறது. ஏழிசைபற்றியும்,
நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பது வகையான தோற்கருவிகளைப் பற்றியும்
சிலப்பதிகாரம் கூறுகின்றது.
சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் காலத்திலே
கிடைக்கப்பெற்று, அதன்பின்னர் அழிவுற்ற இசை நூல்கள் பல. முறுவல், குணநூல்,
சயந்தம், செயிற்றியம், சிகண்டி முனிவர் எழுதிய இசை நுணுக்கம்,
யாமளேந்திரர் எழுதிய இந்திர காவியம், ஆதிவாயிலார் எழுதிய பரதசேனாபதீயம்,
மதிவாணன் எழுதிய நாடகத் தமிழ்நூல் ஆகியவை அவற்றிற் சில என
அறியக்கிடக்கின்றது.
அடியார்க்கு நல்லார் காலத்தில் வாழ்ந்தவரான அறிவனார் இயற்றிய பஞ்சமரபு
இப்போது கிடைக்கப்பெறும் பழந்தமிழ் இசைநூல்களில் ஓன்றாகும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவரான, தெய்வப்புலவர்
திருவள்ளுவரின் திருக்குறளிலும் பண், குழல், யாழ் என்றெல்லாம் இசைபற்றிய
செய்திகள் காணப்படுகின்றன.
தென்னாட்டு மக்கள் பாடுவதிலும், பல்வேறு இசைக் கருவிகளை வாசிப்பதிலும்,
கூத்துக் கலையிலும் மிகவும் திறமையுள்ளவர்கள் என்று நாட்டிய சாஸ்திரம்
என்ற தனது நூலிலே பரத முனிவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அவ்வாறு
குறிப்பிட்டுள்ளது தமிழ் இசையைப்பற்றியே என்பது ஆராய்ச்சியாளர்களின்
முடிவாகும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ந்து வந்தது தமிழ் இசை
என்பதும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய தென்னிந்திய
மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கர்நாடக இசை என்ற பெயரில்
வழங்கிவருவது தமிழ் இசையே என்பதும் இசை ஆய்வாளர்களது கருத்தாகும்.
பண்டைத் தமிழ் இசை அறிஞர்கள் ஏழுவகை இசைக்குறியீடுகளைக் கொண்டு, நூற்றுக்
கணக்கான பண்களைக் கண்டுபிடித்தனர். பலநூற்றாண்டுகளாக அவற்றைப்
பயன்படுத்திப் பாதுகாத்துவந்தனர். பன்னாட்டு மக்களும், இசை ஆர்வலர்களும்
அவற்றை அறிந்து வியந்தார்கள். கற்று மகிழ்ந்தார்கள்.
அகத்தியர் காலத்தில் 108 பண்கள்
இருந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். பண்டைத் தமிழகத்தில்
11,999 பண்கள் இருந்தமையை அடியார்க்கு
நல்லார் உரை பதிவுசெய்திருக்கின்றது. முன்னூற்றுக்கும் குறைவான பண்களே
இப்போது இசைக் கலைஞர்களின் அறிவுக்கு எட்டுவனவாக உள்ளன.
பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசைநூல்கள் தமிழிசையின் பெருமைக்குச்
சான்றாக அமைகின்றன.
தௌ;ளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் பன்னிரு திருமுறைகளில் உள்ள
18,350 பாடல்களும், கல்லும் கசிந்துருகும்
கனிவான பக்தி இசைப்பாடல்களாகும்.
தேவார திருவாசகங்கள் பல்வேறு பண்களுடனும், தாளங்களுடனும் அமைந்து,
தமிழிசையின் மேன்மையைப் பறைசாற்றிக்கொண்டருக்கின்றன. இவை தோன்றிய பக்தி
இலக்கிய காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே இலங்கிநின்றது தமிழ்
இசை மட்டுமேயாகும்.
பன்னீராழ்வார்கள் பாடியருளிய அழகான பிரபந்தங்கள், அருணகிரியாரின்
திருப்புகழ், சித்தர் பாடல்கள், கும்மி, சிந்து, குறவஞ்சி, பள்ளு,
தெம்மாங்கு, நாட்டுப்பாடல்கள், கீர்த்தனைகள், நல்ல தழிழில் வல்ல
புலவர்களால் கொள்ளை கொள்ளையாக எழுதிக் குவிக்கப்பட்டுள்ள தனிப்பாடல்கள்,
முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான பண்ணிசைப் பாடல்கள்,
நித்தமும் தோன்றிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய இசைப் பாடல்கள், ஆகிய
எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக்கொண்டிருக்கின்
றன.
சிலப்பதிகாரத்தின் இசை நுணுக்கங்களை ஆராய்ந்த முத்தமிழ் வித்தகர்
விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச்
சூட்டப்பட்ட இணையற்ற மகுடமெனத் திகழ்கிறது.
இவ்வாறு பல்லாயிரம் பல்லாயிரமாக இசைப்பாடல்கள் தமிழ்மொழியில் குவிந்து
கிடக்க, அவை மறந்து, நிலை குலைந்து தமிழ் இசை மேதைகளும், நாட்டியக் கலை
மேதை களும் கருத்துத் தெரியாத வேற்று மொழிகளிலே பாடுகிறார்கள், பாட்டுக்கு
ஆடுகிறார்கள், தமிழ் மொழியைச் சாடுகின்றார்கள், தமிழ் இசைக்குத் திரையை
மூடுகின்றார்கள்.
கர்நாடக இசை என்பது என்ன?
கர்நாடக இசை கர்நாடக இசை என்று எல்லோரும் களிநடம் புர்pகின்றார்கள்.
கர்நாடக இசையென்றால் அது கன்னட மொழிக்குச் சொந்தமானது என்றும் கர்நாடக
நாட்டுக்கு உரியது என்றும் சிலர் நினைக்கிறார்கள். வடமொழியே அதற்கு மூவம்
என்று பொய்யான வாதங்களைப் புரிகின்றார்கள்.
தெலுங்கிலே பாடிக்கொண்டு கர்நாடக இசை என்றால் அது தெலுங்கு மொழிக்குச்
சொந்தமானதுதான் என்று எண்ணுகின்ற தமிழர்களுக்கோ எண்ணிக்கையில்லை.
உண்மையிலே கர்நாடக இசை என்று இப்போது சொல்லப்படுவது தமிழ் இசையே. அது
தமிழ் மொழிக்குச் சொந்தமானது. தமிழ் மொழியிலேயே தோன்றியது.
தமிழ் மொழியிலேயே வேர் ஊன்றியது. தமிழ் மொழியிலேயே தழை விட்டது, இலை
விட்டது, கிளை விட்டது. தமிழ் மண்ணிலே பூத்து மணம் பரப்பியது. அந்த
மணத்தினால் கவரப்பட்ட வட நாட்டார் மணம்வந்த திசையைப் பார்த்தார்கள்.
அந்தத் திசையிலே தமக்கு அண்மையில் இருந்தது கர்நாடக தேசம். எனவே கர்நாடக
தேசத்திலிருந்தே அது வருவதாக எண்ணி அதனைக் கர்நாடக இசை என்று அழைத்தார்கள்.
தென்னாடு முழுவதுமே தமிழ்நாடாக இருந்த காலத்திலே செழிப்புற்று இருந்தது
தமிழ் இசை. தமிழ்மொழியிலிருந்து கன்னடமும், தெலுங்கும் பிறந்த பின்னரும்,
தனித்தனி நாடுகளாய்ப் பிரிந்த பின்னரும் தமிழ் இசை தழைத்தோங்கி வளர்ந்தது.
ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம்
நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.
அப்பரும், சம்பந்தரும், சுந்தரரும், மணிவாசகரும், பன்னீராழ்வார்களும்,
அருணகிரிநாதரும் பாடிய பல்லாயிரக்கணக்கான பக்தி இலக்கியங்களிலே
தமிழிசையின் புகழ் இந்திய துணைக் கண்டத்தையும் தாண்டி எல்லை விரிந்து
பரவியது.
12ஆம் நூற்றாண்டில் கி.பி.
1116 முதல் 1127
வரை மகாராட்டிர நாட்டினை சோமேஸ்வர
புல்லோகமால் என்ற அரசன் ஆட்சிசெய்தான். இசையிலே மிகுந்த ஈடுபாடு கொண்ட
அவன் 'மானச உல்லாசம்' என்ற நூலை எழுதியவன்.
தென்னிந்தியாவில் சிறப்புற்றோங்கிய செந்தமிழ் இசையால் கவரப்பட்ட அவன்
அங்கிருந்து இசைவாணர்களை அழைப்பித்து அந்த இசையின்பத்திலே மூழ்கி
இன்புற்றான். அவனது நாட்டுக்குத் தெற்குத்திசையிலேயுள்ள தென்னிந்தியாவிலே
வளர்ந்து பரவிநின்ற தமிழிசையை, அவனுக்குத் தென்திசையிலே அருகேயிருந்தது
கர்நாடகம் என்பதாலும், கர்நாடகத்திலும், தெலுங்கு தேசத்திலும்கூட
அக்காலத்தில் தமிழிசையே வழக்கத்தில் இருந்தமையாலும் அந்த இசைக்குக்
கர்நாடக இசையென்று பெயரிட்டு அழைத்தான்.
தென்னாடுகளெல்லாம் அந்நாளிலே திகழ்ந்திருந்தது தமிழிசை ஒன்றுதான் என்பது
அந்த மன்னனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் கர்நாடக இசையென்று அவன்
அழைத்த பெயரோடு, தென்னாட்டு இசை வடநாட்டாருக்கு அறிமுகமானது. கர்நாடக
சங்கீதம் என்று வடநாட்டில் விளங்கியது.
கர்நாடக சங்கீதம் என்று அழைக்கப்படும் தமிழிசையானது உண்மையிலேயே
வடநாட்டிலேயே தோன்றியிருந்தால், வடமொழிக்கே அது சொந்தமானதாக
இருந்திருந்தால் அந்த இசை வடநாடுகளிலல்லவா செழிப்புற்று
வளர்ந்திருக்கவேண்டும். அதன் சான்றுகளாக வானுயர்ந்த கோபுரங்களும், அழகிய
சிற்பங்களும் வடநாட்டிலல்லவா அமைந்திருக்க வேண்டும். அந்த இசையோடு
தொடர்புடைய ஆடற்கலையின் முத்திரைகளைக் காட்டும் அழகிய சிற்பங்கள்
வடநாட்டிலல்லவா நிறைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லையே. எல்லாமே
தமிழ் நாட்டிலும் தமிழ் வாழ்ந்த அண்டை மாநிலங்களிலுமல்லவா தோன்றி,
வளர்ந்து, சிறந்து, புகழ்பட ஓங்கியிருக்கின்றன.
தமிழிசையின் மகத்துவம் நிலைத்து வாழவேண்டும் என்று பண்டைத்தமிழ் மக்கள்
நினைத்தார்கள். ஆலயங்களிலே இசைத்தூண்களை அமைத்தார்கள். அந்தத் தூண்களை
தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும். மதுரை, திருநெல்வேலி, திருக்குறுங்குடி,
சுசீந்திரம் ஆகிய இடங்களிலே இசைத்தூண்களிலே இன்றைக்கும் இசை எழுகின்றது.
தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக ஒலிக்கின்றது.
சுசீந்திரம், தாராசுரம், திருவட்டாறு, திருவெருக்கத்தப்புலியூர்,
கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலே உள்ள கோவில்களில் பண்டைய
இசைக்கருவிகளையும் அவற்றை வாசித்த இசைக்கலைஞர்களையும் சிற்பங்களாகச்
செதுக்கிவைத்துள்ளனர்.
திருவாரூர், திருவையாறு, தஞ்சை ஆகிய கோயில்களிலும், திருவண்ணாமலை,
திருச்செந்துறை, திருவிடைமருதூர், திருவீழிமிழலை, திருவல்லம், செங்கம்,
சந்திரகிரி ஆகிய ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்களில் இசையைப்பற்றியும்,
இசைக் கலைஞர்
களைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளன.
சாரங்கதேவர்
கி.பி. 13 ஆம் நூற்றாண்டில்
சாரங்கதேவர் என்பவர் கஸ்மீர நாட்டிலிருந்து தென்னாடு வந்தார். தமிழிசையை
ஆராய்ந்தார். 'சங்கீதரத்னாகரம்' என்ற நூலை எழுதினார். வடமொழிப் பெயர்கள்
இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக
இசைக்கு முதல்நூல் அதுதான் என்று அறியப்படுகின்றது. தேவாரங்களின் பண்களைப்
பற்றியும் அந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சாரங்கதேவர் தமிழில் இருந்த ஒலிக்குறியீடுகளுக்கு வடமொழிப்
பெயர்களைப் புகுத்தியதோடல்லாமல், அவை வடமொழியிலிருந்தே தமிழுக்கு வந்தன
என்ற தவறான கருத்தையும் பொய்யாக விதைத்தார். அக்காலத்தில் அரசியல்
மாற்றங்களால் வடமொழியின் செல்வாக்கு தென்னாடெங்கும் வளரத் தொடங்கியது
அதனால் இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின. வடமொழிப்
பெயர்களோடு தமிழிசை கர்நாடக இசையாகத் தமிழ் நாட்டிலும் வழங்கத் தொடங்கியது.
அராகம் என்ற தமிழ்ச் சொல் இராகமாயிற்று.
செம்பாலையை அரிகாம்போதி என்றார்கள்.
படுமலைப்பாலையை நடனபைரவி என்றார்கள்.
கோடிப்பாலையைக் கரகரப்பிரியா என்றார்கள்.
விளரிப்பாலைக்குத் தோடி என்றார்கள்.
செவ்வழிப்பாலை இருமத்திமத் தோடியானது.
முல்லைத் தீம்பாணி மோகனம் ஆனது.
செந்துருத்திக்கு மத்தியமாவதி என்று பெயரிட்டார்கள்.
இந்தளம் என்பதை மாயாமாளவ கௌளை என்று மாற்றினார்கள்.
கொன்றையந் தீங்குழலை சுத்தசாவேரி ஆக்கினார்கள்.
ஆம்பலந் தீங்குழலை சுத்த தன்யாசி ஆக்கினார்கள்.
அரும்பாலைக்குச் சங்கராபரணம் என்றார்கள்.
மேற்செம் பாலையைக் கல்யாணி என்றார்கள்.
செவ்வழியை யதுகுலகாம்போதி என்று மாற்றினார்கள்.
புறநீர்மைக்குப் பூபாளம் என்றார்கள்.
தக்கேசிக்குக் காம்போதி என்றார்கள்.
இவ்வாறு தமிழ் இசையின் பெயர்களையெல்லாம் மாற்றியமைத்துவிட்டு, அதிலிருந்தே
இது வந்ததென்று ஆராய்ச்சிக் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்துஸ்தானி இசை
கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசை என அழைக்கப்பட்ட
தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது.
தென்னிந்தியாவில் வளர்ந்து நின்ற தமிழிசை வடஇந்தியாவெங்கும்பரவி மாறுபட்ட
பெயர்களோடு வழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள்
இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின்
இசையின் வரவால் தனித்துவம் இழந்தது. இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி
இசை என்று இப்போது வழக்கத்தில் உள்ளது. பிற நாட்டு இசைக்கலப்பால்
புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை. ஆனால் அடிப்படை மரபு
மாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருவது தென்னிந்திய இசை. அதுவே
கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.
14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்,
ஹரிபாலர் என்பவர் எழுதிய 'சங்கீத சுதாகரம்' என்ற நூலிலேயே முதன்முதலாக,
கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள்
குறிப்படப்பட்டுள்ளன.
கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100
ஆண்டுகளே ஆகின்றன.
தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே
ஆகின்றன.
ஆனால் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு
முன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன.
திகட்டாத அந்தத் தீஞ்சுவைப் பாடல்களைக் கேட்டின்புற்று, அப்பரும்,
சுந்தரரும், ஆளுடைய பிள்ளையும் எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்பதைப்
பார்த்து அப்படியே பின்பற்றி, கன்னட நாட்டுப் புரந்தர தாசரும், தெலுங்கு
தேசத்து அன்னமாச்சாரியாரும் கீர்த்தனைகளை அமைத்தார்கள். அந்தக்
கீர்த்தனைகளை தலையிலே தூக்கி வைத்துக்கொண்டு தமிழ் வித்துவான்கள் என்று
சொல்லப்படுவோர் ஆடுகின்றபோது நமக்கு வேடிக்கையாக இருக்கின்றது.
பதினாறாம் நூற்றாண்டு முதல் தெலுங்குமொழி பேசும் விஜயநகரத்து வேந்தர்கள்
தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தார்கள். தெலுங்குமொழிக்கும்
தமிழர்கள் அடிமையாகவேண்டி ஏற்பட்டது.
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தியாகையர் என்பவருக்கு நாரதமுனிவர்
இசைச்சுவடிகளைக் கொடுத்ததாகவும், அவற்றைக்கொண்டே அவர் தெலுங்கில்
கீர்த்தனைகளைப் பாடியதாகவும் கட்டுக்கதையொன்றும் உள்ளது. நாரதர் கொடுத்த
சுவடி எங்கேயும் கிடைக்கப்பெறவில்லை. அதற்கு ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.
அறிவுக்கு உகந்ததாகவும் அந்தக் கதை இல்லை.
தியாகையரின் காலத்தில் அருணாசலக்கவிராயரின் தமிழிசைப் பாடல்கள்
புகழ்பெற்று விளங்கின. அந்தப் பாடல்களை நன்கு அறிந்திருந்த தியாகையர்
அவற்றின் அடிப்படையிலே கீர்த்தனைகளைத் தெலுங்கில் எழுதினார் என்பதுதான்
அறிஞர் கருத்து.
தியாகையரும், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என் போரும்
தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றை மேடைகளில்
பாடினார்கள். தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டன. தமிழ் இசை கர்நாடக இசை
என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்து கொண்டிருந்தது. தமிழ்ப்
பாடல்களே பாடப்படாமையால் அந்த இசை தமிழ் இசைக்கு அந்நியமானது என்று மக்கள்
எண்ணத் தொடங்கினர். இசையறிஞர்களே மக்களிடம் அந்தக்கருத்தை விதைத்தனர்.
செந்தமிழ் இசைக்குக் குந்தகம் செய்தனர். இன்றுவரை அந்தநிலை தொடர்கிறது.
வேற்று மொழிகளிலே பாடுவதில் நமக்கு வெறுப்பு இல்லை. பாடக்கூடாது என்பது
நமது கொள்கையுமில்லை. தமிழ்மொழிப் பாடல்களைப் புறக்கணிப்பது தகுமா
என்பதுதான் நமது கேள்வி. தமிழில் பாடுவதைத் தமிழர்களே தவிர்க்கிறார்களே
என்பதுதான் நமது கவலை.
தமிழ்நாட்டிலே உள்ள திருவையாறு என்னுமிடத்தில் ஓருமுறை தியாகராசர் விழா
நடைபெற்றிருக்கிறது. அந்த விழாவிலே தண்டபாணி தேசிகர் அவர்கள் 'தாமரை
பூத்த தடாகத்திலே' என்ற தமிழ்ப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். உடனேயே
விழாவுக்கு வந்திருந்த வித்துவான்களும், பாகவதர்களும் வெகுண்டு
எழுந்திருக்கிறார்கள். தமிழ்ப் பாடல்களைப் பாடியதால் தியாகராசர் வளாகமே
தீட்;டுப்பட்டுவிட்டதென்று சீறிப்பாய்ந்திருக்கிறார்கள். தீட்டுக்
கழிக்கப்பட்டாலன்றி இனிமேல் அந்த மேடையில் பாடமாட்டோம் என்று வெளிநடப்புச்
செய்திருக்கிறார்கள். தண்டபாணிதேசிகர் தெலுங்கிலோ, கன்னடத்திலோ
பாடியிருந்தால் இந்தக்கண்டனம் எழுந்திருக்காது. இது நடந்தது எங்கே?
தெலுங்கு தேசத்திலா? கர்நாடக மாநிலத்திலா? இல்லை. தமிழ் நாட்டில்! எவ்வளவு
கொடுமை இது! அந்த அளவுக்கு அந்நியர்களுக்கு தமிழர்கள் அடிமையாகிக்
கிடக்கிறார்கள். தாங்களும் அடிமையாகித் தமிழ் மொழியையும்
அடிமையாக்குகிறார்கள்.
தமிழ் இசையின் பெருமை
இசையை ஏழுவகையாக பகுத்தவர்கள் தமிழர்களே. குரல், துத்தம், கைக்கிளை, உழை,
இளி, விளரி, தாரம் என்பனவே அந்த ஏழுவகைகளாகும்.
இத்தகைய ஏழு சுரங்களும் பண்டைத் தமிழகத்தில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற
ஏழுகுறியீடுகளாலேயே வழங்கப்பட்டிருந்தன.
'ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்றேழும்
ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்' என்று பின்கல நிகண்டு நூலில்
குறிப்பிடப்படுவதிலிருந்து அதை நாம் அறிய முடிகிறது.
காலத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இசைக் குறியீடுகள் சரிகமபதநி என்று
மாற்றப்பட்டன. சூழலை அடிப்படையாகக் கொண்டு இசையின் ஒலிக்குறிப்புக்கள்
தமிழில் சரிகமபதநி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்பட்டன என்பதை,
சரிகம பதநி யென்றேலெழுத் தாற்றானம்
வரிபந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை
என்கின்ற சிகண்டி முனிவரின் பாடலின் மூலம் அறிய முடிகிறது.
;குரல்;' என்பது வண்டின் ஓசை அதுவே 'ச'
'துத்தம்' என்பது கிளியின் கொஞ்சல் ஓசை அதுவே 'ரி'
'கைக்கிளை' என்பது குதிரையின் கனைத்தல் ஓசை அதுவே 'க'
'உழை' என்பது யானையின் பிளிறல் ஓசை அதுவே 'ம'
'இளி' என்பது தவளையின் கத்தல் ஓசை அதுவே 'ப'
'விளரி' என்பது பசுவின் கதறல் ஓசை அதுவே 'த'
'தாரம்' என்பது ஆட்டின் கத்தல் ஓசை அதுவே 'நி'
(சூடாமணி 10-37)
'சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை' என்று
ஏழுவகைச் சுரங்களையும் எடுத்தியம்புகின்றது சேந்தன் திவாகரம் என்ற
செந்தமிழ் நூல்.
சவ்வும் என்றால் 'ச', ரிவ்வும் என்றால் 'ரி', கவ்வும் என்றால் 'க',
மவ்வும் என்றால் 'ம' பவ்வும் என்றால் 'ப', தவ்வும் என்றால் 'த', நிவ்வும்
என்றால் 'நி' (ச ரி க ம ப த நி)
ஒவ்வொரு வகை இசையும் அவை உடலின் எந்ததெந்தப் பாகத்திலே பிறக்கின்றன
என்பதையும் நுணுகி ஆராய்ந்து சொல்லிவைத்திருக்கிறார்கள். மிடற்றிலே
பிறப்பது குரல், நாவிலே பிறப்பது துத்தம், அண்ணத்திலே கைக்கிளை, சிரசிலே
உழை, நெற்றியிலே இளி, நெஞ்சிலே விளறி, மூக்கிலே தாரம் என்றிப்படிப்
பிறக்கும் இசையைத்தான் ஏழுசுரங்களுக்குள் அடக்கிவைத்தார்கள்.
'குரலடு மிடற்றில் துத்தம் நாவில்
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
தாரம் நாசியில் தம்பிறப்பென்ப' என்று பின்கல நிகண்டு என்ற நூலில்
கூறப்பட்டுள்ளது.
ஏழுவகைத் தமிழ் இசையினை ஒவ்வோர் இசையின் தகுதிக்கேற்பவும் நான்காகப்
பாகுபாடு செய்துள்ளார்கள் நமது பண்டைத் தமிழறிஞர்கள். இடம், செய்யுள்,
குணம், காலம் என்பனவே அந்த நான்கு தகுதிகளாகும். இடம் என்பது நிலத்தைக்
குறிப்பது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஜவகை
நிலங்களுக்கும் உரிய பண்களாக முறையே குறிஞ்சிப்பண், சாதாரி, செவ்வழி,
மருதம், பாலை என்னும் ஜந்து பண்களும் இடத்துக்குரிய பண்கள் (இராகங்கள்)
என்று வகுக்கப்பட்டுள்ளன.
செய்யுள் என்பது பாடல்பற்றிய இசையைக்குறிக்கிறது. எந்தெந்த வகைப்
பாடலுக்கு எந்தெந்த இசை பொருத்தமானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில்
அமைத்துள்ளார்கள்.
வெண்பாவிற்கு சங்கராபரணம், அகவப்பாவிற்கும், தாழிசைக்கும் தோடி,
கலிப்பாவிற்கு பந்துவராளி, கலித்துறைக்குப் பைரவி, விருத்தப்பாவிற்கு
கல்யாணி, காம்போதி, மத்தியமாவதி என்பன, உலாப் பாடலுக்கு சௌட்டிரம்,
பிள்ளைத்தமிழுக்கு கேதாரகௌளம், பரணிக்குக் கண்டாரவம் என்று பல்வகைச்
செய்யுள்களுக்கும் இசைவகுத்துள்ளனர்.
இவ்வாறே குணம் பற்றிய இசையும் வகுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக துன்பம் அல்லது தக்கத்திற்கு ஆகரீ, நீலாம்பரி, பியாகடம், வராளி,
புன்னாகவராளி என்னும் பண்கள் உரியவையாகின்றன.இன்பம் அல்லது மகிழ்ச்சிக்கு
உரிய பண்கள் காம்போதி, சாவேரி, தன்னியாசி என்பவையாகும். நாட்டை என்பது
போருக்குரிய பண்ணாகும்.
அடுத்ததாகக் காலம் பற்றிய இசை என்பது பல்வேறு காலங்களுக்கும்
வேளைகளுக்கும் உரியதான பண்களைவகுக்கின்றது.
வசந்தகாலத்திற்கு காம்போதி, தன்னியாசி மாலைநேரத்திற்கு கல்யாணி, காபி,
காம்போதி, நள்ளிரவுக்கு ஆகரி, அதிகாலையில் இந்தோளம், இராமகலி, நாட்டை,
பூபாளம், நண்பகலுக்கு சாரங்கயம், தேசாட்சரி என்று வகுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முத்தமிழுக்கும் இனிமைசேர்க்கும் இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து,
முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோர் நமக்கு விட்டுச்
சென்றிருக் கிறார்கள்.
பண்டைத் தமிழகத்தில் அவ்வாறு வகுத்தபொழுது தமிழ் இசைப் பெயர்களே ஒவ்வொரு
பண்ணுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழிசையைத் தத்தெடுத்த வடவர்களால்
தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டன. மாற்றப்பட்ட பெயர்களையே தென்னிந்திய
மொழிகளெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டன. அரசியல் செல்வாக்கினாலும், வடமொழி
மோகங்கொண்ட தமிழர்களாலும் அந்தப் பெயர்களே தமிழ்மொழியிலும் இடம்பிடித்தன.
தமிழ் இசைப் பெயர்கள் வழக்கொழிந்தன. அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்மொழியிலேயிருந்து தத்து எடுத்துக்கொண்ட இசை நுணுக்கங்களை
வைத்துக்கொண்டு வேற்று மொழியினர் இன்று வித்தை
காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அறிந்தவர்களும் அறியாதவர்களுமாக சில தமிழ்
இசை வல்லுனர்களும், கலைஞர்களும் அவையெல்லாம் வடமொழியிலிருந்தும்,
தெலுங்கிலிருந்தும் இறக்குமதியானவை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆலாபனை செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழிசையில் தமிழ்ப்பாடல்களைப் பாடத்
தயங்குகின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும். தமிழ் இசையின் மகத்துவத்தைத்
தரணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சிசெய்யவேண்டும்.
srisuppiah@hotmail.com
|