வளர்ந்த நாடுகளிலும் ஆண் ஆதிக்கம்

 

எஸ்.பாலசுந்தரராஜ


லகத்தில் பல தொழில்புரட்சிகளும், தொழில்நுட்பங்களும் வளர்ந்து வந்தாலும், ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் என்ற பேச்சு மட்டும் குறையவே இல்லை. ஏன் இந்தநிலை? தற்போது பெண்களாலும் முடியும் என பல சாதனைகளைப் பெண்கள் செய்து வருவதோடு, பல துறைகளிலும் ஜொலித்து வருகிறார்கள். எனினும் ஏன் இந்த பாலின வேறுபாடு? இது விடைகாணமுடியாத கேள்வியாக உள்ளது எனலாம்.
 

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் .ராமலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியை ஆர்.ரமாதேவி, பெண்கள் குறித்து இந்தியாவில் பல மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும், .நா.சபையில் இருமுறையும் பேசிவந்துள்ளார். இவர் 1.25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (பெண்கள் வளையம்) மாநிலத் தலைவராகவும், 24லட்சம் பேர் உறுப்பினராக உள்ள அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அமைப்புச் செயலாளராகவும், ஸ்ரீலங்கா, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான்,

 பூட்டான், மாலத்தீவு உள்ளிட்ட 9 நாடுகளின் சார்க் அமைப்பில், ஆசிரியர் அமைப்பில் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

பெண் கல்வி, விழிப்புணர்வு குறித்து பல இடங்களில் பேசிவரும் ரமாதேவியிடம் கேட்டோம்:

 

பெல்ஜியத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது உலக கல்வி அமைப்பு. இதில் 188 நாடுகள் உறுப்பினராக உள்ளது. 402 சங்கங்கள் இதில் இணைந்துள்ளன.

 

இந்த உலக கல்வி அமைப்பு கற்பித்தலை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்த பயிற்சி, சங்கம் சார்ந்த பயிற்சி, சங்கத்தை வலுப்படுத்துவது குறித்த பயிற்சி ஆகியவற்றைப் பெண்களுக்கு அளிப்பதே ஆகும். நான் 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் (பெண்கள் வளையம்) உறுப்பினராகச் சேர்ந்தேன். ஆசிரியர் நியமனம், சம்பளப் பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு 2002, 2003 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டேன்.

 

உலக கல்வி நிறுவனம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் உள்ள பல பெண் ஆசிரியைகளுக்கு,பெண்கள் சார்ந்த சட்டம், மருத்துவம், கல்வி, காவல்துறை, நீதித்துறை குறித்த பயிற்சியை 2003ஆம் ஆண்டில் நடத்தியது. அந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதைத் தொடர்ந்து பல கூட்டங்கள், மாநாடுகளில் கலந்து கொண்டேன்.

 

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் நிலைகுறித்து உலக கல்வி நிறுவனம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் பேசினேன். அப்போது பல மாநிலங்களில் இருந்தும் ஆசிரியைகள் தலா இருவர் வந்திருந்தனர். நான் கூட்டங்களில் சிறப்பாக பேசியதாலும், போதிய பயிற்சி பெற்றிருந்ததாலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆசிரியைகளுக்கு 2004ஆம் ஆண்டு முதல் பயிற்சி அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கேரளா, மத்தியப்பிரசேதம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியைகளுக்குப் பயிற்சி அளித்தேன்.

 

2007இல் தமிழ்நாடு கல்வித்துறையும் மலேசியக் கல்வித்துறையும் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

 

அதன்படி இங்கிருந்து 25 ஆசிரியர்களும், அங்கிருந்து 25ஆசிரியர்களும் வந்திருந்துகல்விமுறை குறித்த அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தனர். மலேசியாவிற்குச் சென்ற 25 பேர் கொண்ட குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். பின்னர் உலக கல்வி அமைப்பு சார்பில் சுவீடன், பாங்காக், நேபாளம், ஸ்ரீலங்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று கலாசாரப் பரிமாற்றம், கல்வி முறைகுறித்த பரிமாற்றம், பெண்கள் முன்னேற்றம் குறித்து பேச சென்று வந்தேன். நான் சிறப்பாகச் செயல்பட்டதால் உலக கல்வி அமைப்பு, அவர்கள் செலவிலேயே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது.

 

 .நா.சபையில் பெண்கள் பிரிவுக்கான தலைவி திருமதி சூசன் ஆவார். 2014 செப்டம்பர் மாதம் .நா.சபையில் பல நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்ட பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பல நாட்டு பிரதமர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

 இதில் பேசுவதற்கு உலக அளவில் 7 ஆசிரியர்கள் உலக கல்வி அமைப்பால் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் நானும் பங்கேற்றேன்.

 

 அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி, .நா.சபை பிரதிநிகள்,

 பல்கலைக் கழக மாணவர்கள் என பலர் வந்திருந்தனர். இதில் நான் வகுப்பறைச் சூழல் கல்வித்தரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்ற தலைப்பில் பேசினேன். இதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. பலரும் பாராட்டினார்கள்.

 

 2015ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று மீண்டும் நான் .நா.சபையில் பேச சென்றேன்.

 

.நா.சபையின் பொது செயலாளர் பான்கீமுன் சிறப்புரையாற்றினார்.மறுநாள் ஆண் பெண் சமத்துவத்திற்காக ஊர்வலம் நடைபெற்றது. இதில் 95 நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பாலின சமத்துவம், பெண்கள் நிலை ஒவ்வொரு நாட்டிலும் எப்படி உள்ளது, அவர்கள் முன்னேற்றத்திற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்த மாநாட்டில் பேசப்பட்டது.

 

பின்னர் "பெண்களுக்கு ஏன் வன்கொடுமை நடைபெறுகிறது?' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள்,பெண்கள் இடம் பெயர்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்பிலான பயிலரங்கம் மார்ச் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. மார்ச் 9,10,11 ஆகிய தேதிகளில் யுனிசெப் கருத்தரங்கினை நடத்தியது. இதில் பல நாட்டு தொண்டு நிறுவன பிரதிநிதிகள், .நா.சபை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதில் வளர்ந்த நாடுகளிலும் ஆண் ஆதிக்கம் உள்ளது எனவும், ஸ்ரீலங்காவில் பெண் ஆதிக்கம் உள்ளது எனவும் அந்த நாட்டில் பெண்கள் 99.4 சதம் கல்வி அறிவு பெற்றிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது நடைபெற்ற கருத்தரங்கில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்கல்வி மறுக்கப்படுதல், பெண் சிசுக் கொலை, பாலியல் வன்முறை, வேலைக்காக இடம் பெயர்ந்து செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டன.

 

இதில் நான் "ஆண் பெண் சமத்துவம்' என்ற தலைப்பில் பேசினேன். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் ஆண் ஆதிக்கம் உள்ளது. வேலை பார்க்கும் பெண்கள் பல நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாகப் பார்க்கப்படுகிறார்கள். பல நாடுகளில் பெண்களின் திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துகிறார்கள். தற்போது பெண்களிடையே பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களின் நிலை பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

 

ஆனால் சிலர் நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை மறந்துவிட்டு நடப்பதுதான் நவீன உலகம் என நினைக்கிறார்கள். இது அறியாமையால் எனக் கூறலாம்.

 

ஆண்களை எதிர்ப்பது மட்டுமே பெண்களின் சுதந்திரமாகாது. பொருளாதார சுதந்திரம், கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். தமிழகப் பெண்களுக்கு என உள்ள தனித்தன்மையை விட்டு விலகக்கூடாது''

என்றார் ரமாதேவி.