சங்கப்பெண் கவிதைகளும் கருத்தியல்
வளமும்
முனைவர்
பூ.மு.அன்புசிவா
இலக்கியம்
என்னும் கலைப் படைப்பை உருவாக்குவதிலும் புரிந்து கொள்வதிலும் இலக்கியக்
கோட்பாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அமைப்பியல், பின் அமைப்பியல்,
நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என்று நவீனக்
கோட்பாடுகள் பலவாகும். ஒரு படைப்பையும், அது படைக்கப்பட்டதன்
நோக்கத்தினையும் புரிந்து கொள்ளவும், படைப்பாளியின் எண்ண ஓட்டத்தையும்
சார்பினையும் அறிந்து கொள்ளவும் இலக்கியக் கோட்பாடுகள் துணை செய்கின்றன.
கோட்பாடுகளுக்காக இலக்கியம் படைக்கப்படுவதில்லை. ஆயினும், படைப்பாளி
என்பவன் ஏதாவது ஒரு கருத்தை/ கருத்தியலை சமூகத்திற்குச் சொல்ல வேண்டும்
என்ற உந்துதலால்தான் படைப்பையே உருவாக்குகிறான். அந்தக் கருத்திலை
அறிந்து கொள்ள வாசகனுக்கும் திறனாய்வாளனுக்கும் கைவிளக்காக அமைபவையே
இலக்கியக் கோட்பாடுகள். சுமகால இலக்கியங்களை மட்டுமல்லாது காலத்தால்
முற்பட்ட இலக்கியங்களையும் நவீனக் கோட்பாடுகளை முன்வைத்து மறுவாசிப்பு
செய்கின்ற போக்கு தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது.
பெண்ணியமும் பெண் எழுத்தும்
'பெண்ணியம்' என்பது அனைத்து வகையான அடிமைத்தளைகளிலிருந்தும் பெண்ணை
விடுவிப்பது; அவளுடைய உரிமைகளை நிலைநாட்டுவது; சுதந்திரத்தை
வலியுறுத்துவது என்பதாகப் பொருள்படும். சுருக்கமாகப் பெண் விடுதலையை
மையமிட்ட சித்தாந்தமே பெண்ணியம். இது தத்துவமாகவும், இயக்கமாகவும் (சமூகச்
செயற்பாடு), இலக்கியக் கோட்பாடாகவும் மேலை நாடுகளில் கி.பி18,19-ம்
நூற்றாண்டில் தோற்றம் கொண்டு வளர்ச்சி பெற்றது.
20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
இந்தியா மற்றும் தமிழ்ச் சூலில் அறிமுகமானதுடன், கலை இலக்கியப்
பிரதிகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது.பெண் எழுத்து என்பது பெண்ணியக்
கோட்பாட்டின் ஒருபகுதியாக அமைவது. எழுத்து என்பது பொதுவானது. இதில் ஆண்,
பெண்என்ற பால்பேதத்திற்கு இடமில்லை. ஆயினும், எழுத்தை ஆண்எழுத்து, பெண்
எழுத்து, தலித் எழுத்து, தலித் அல்லாதவர்எழுத்து என்று பிரித்துப்
பார்க்கும் எழுதும் போக்கு தற்போதுவளர்ச்சி பெற்று வருகிறது. பொதுவாக,
எழுத்து என்பது அனைத்துத்தரப்பு மக்களின் வாழ்க்கையினையும்
வலியினையும்வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். ஆனால் இதுவரைஎழுதப்பட்ட
எழுத்துக்கள் அப்படி அமையவில்லை. மாறாக,குறிப்பிட்ட ஒரு சாராரின் -
குறிப்பாக - மேல்தட்டு மக்களின்வாழ்க்கையை மட்டும் பதிவு செய்யும்
எழுத்தாக மேலோட்டமான எழுத்தாக மட்டுமே அவை அமைந்தன.இத்தகைய எழுத்தில்
மாற்றம் தேவை என்பதனை முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் வலியுறுத்த
ஆரம்பித்தனர்.அதன் விளைவாக இன்று எழுத்தானது, அதன் இலக்கு நோக்கிஆண்
எழுத்து, பெண் எழுத்து என்றும் தலித் எழுத்து, தலித்அல்லாதவர் எழுத்து
என்றும் பிரித்து எழுதப்பட்டும் ஆராயப்பட்டும்வருகின்றது. இது காலத்தின்
கட்டாயம். இதனைத் தவிர்க்கஇயலாது. இந்த அடிப்படையில் பெண்களை
முன்னேற்றவும்,அவர்தம் கருத்துக்களை எடுத்துரைக்கவும்
தனித்துவமானஎழுத்துப் போக்கு தேவையென்று பெண்ணியவாதிகள்
உணர்ந்ததன்காரணமாகவே பெண் எழுத்து தோற்றம் கொண்டது. பெண்ணின் சுயத்தை,
மனதை, உடலை, உணர்வை, வலியை, வாழ்வை பெண்ணே உணர்ந்து எழுதும் எழுத்து 'பெண்எழுத்து'
எனப்படுகிறது. பெண்கள் எழுதும் எழுத்துக்கள்அனைத்துமே பெண் எழுத்து
ஆகிவிடாது. ஏனெனில் பெண்களில் பலர் ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்களாக,
ஆணாதிக்கக் கருத்தியலை எவ்வித கேள்வியுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டு
எழுதுபவர்களாக உள்ளனர்.எனவே பெண் எழுத்து எது என்பது குறித்தும் அதன்
தன்மைகள் குறித்தும் பெண்ணியவாதிகள்விளக்கியுள்ளனர். அது குறித்து
இரா.பிரேமா அவர்களின்கருத்துக்கள் பின்வருமாறு அமைகின்றன.
'பெண் எழுத்து' என்பது பெண்களால் எழுதப்படுவது. பெண் தன்னைப் பெண்ணாக
உணர்ந்து கொள்வதுடன், தன்னைச்சுற்றியுள்ள பெண்களை அறிந்து கொள்வதும்,
அவர்களின் பிரச்சனைகளைத் தன் பிரச்சனைகளாகக் கருதி எழுதுவதுமானஎழுத்தே
பெண் எழுத்து. பெண் எழுத்தில் தீவிரம் இருக்கும். பூசிமெழுகும்
பாங்குஇருக்காது.
அந்தரங்கம் - பகிரங்கம்
(perranalis political)
என்ற கருத்து நிலைப்பாடு பெண்
எழுத்திற்கு மிக முக்கியம். இதுவரை பெண்கள்தங்களுக்கு மட்டுமே உரியது;
யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது;பெண்கள் தங்களுக்குள்ளேயே கூடப்
பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று ஆண்களால் கற்பிக்கப்பட்ட பண்பாட்டுக்
கூறுகளையெல்லாம் உடைத்தெறிந்து, 'எங்களை நாங்கள் முழுமையாக
வெளிப்படுத்தினால்தான் எங்கள் பிரச்சனைகளின் முழுமையும் வீரியமும்
வெளிப்படும்' என்பதை உணர்ந்து கொண்டு, அவ்வுணர்வுகளை எழுத்தில் வடித்தல்
என்பதாகப் பெண் எழுத்து அமையும். அதாவது பெண் எழுத்து என்பது கற்பித
எழுத்தாக இல்லாமல் சொந்த அனுபவத்தை எவ்வித கூச்ச உணர்வும் இல்லாது
உரத்த குரலில் சொல்வதாக இருக்கும்.
ஆண்களால் பெண்ணினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் பெண்
எழுத்து பதிவு செய்யும். அவ்வாறு பதிவு செய்யும் போது காயம்பட்ட
அனுபவங்களைக் கண்ணீராக வெளிப்படுத்துவதைத் தவிர்த்து கனத்த
வார்த்தைகளால் வெளிப்படுத்தும். வெறுமனே பதிவு செய்வதோடு நின்று விடாமல்
அவற்றை விமர்சிக்கவும் எதிர்க்கவும் செய்யும்.
தந்தை வழிச் சமூகம், அச்சமூகத்தின் படிநிலை அமைப்பு, குடும்ப அமைப்பு,
ஆணின் அதிகாரம், அதை நிலை நிறுத்தும் மதச் சடங்குகள், பழக்கவழக்கங்கள்,
மரபுகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கட்டுடைப்பதாகவும் புதிய
மதிப்பீடுகளுடன் தன்னைத் தானாக நிலை நிறுத்துவதாகவும் பெண் எழுத்து
அமையும்.
ஆணாதிக்க மொழிக் கூறுகளான உடல் வர்ணனை,காதல் மொழிகள் முதலானவை பெண்
எழுத்தில் இடம்பெறாது. மாறாக, பெண் தனக்கென்று ஒரு தனித்த மொழியை -
புனைவுகளற்ற கலக மொழியான பெண் மொழியைக் கையாண்டு தன் உணர்வுகளை
வெளிப்படுத்துதல்;தன்னுடலையக் கொண்டாடி,அதன் தன்மைகளை உள்ள படியே
உணர்த்தும் உடல் மொழியைக் கையாளுதல் என்பதாகப் பெண் எழுத்து அமையும்.
இவையும், இவை போன்ற வேறு சில தன்மைகளையும் கொண்டதாகப் பெண் எழுத்து
அமையும். மேற்சுட்டிய பெண் எழுத்தின் கூறுகளை உள்ளடக்கிய இலக்கியப்
படைப்புகளைச் சமகாலப் பெண் கவிஞர்கள் படைத்து வருகின்றனர். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகளிலும் பெண்
எழுத்தின் கூறுகள் காணப்படுவதைத் தமிழத் திறனாய்வாளர்கள்
எடுத்துக்காட்டியுள்ளனர்.
சங்கக் கவிதைகளும் பெண் எழுத்தும் அகம் புறமென்று இருவகையாகப்
பாகுபடுத்தப்பட்ட சங்கக் கவிதைகளின் எண்ணிக்கை
2381. இவற்றை
473 கவிஞர்கள்
எழுதியுள்ளனர்.இதில் 41 பேர் பெண்கள் என்றும், அவர்கள் எழுதிய
கவிதைகளின் எண்ணிக்கை 181 என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.ஒளவை,
வெள்ளிவீதி, ஆதிமந்தி, அள்ளுர் நன்முல்லையார், அஞ்சில் அஞ்சியார்,
ஊண்பித்தனையார், ஒக்கூர் மாசாத்தியார், கச்சிப்பேட்டு நன்னாகையர்,
நப்பசலையார், நல்வெள்ளியார், நக்கண்ணையார், பூதப்பாண்டியன் தேவியர்,
பொன்முடியார், மாற்றோக்கத்து நப்பசலையார், பாரிமகளிர், வெறிபாடிய காமக்
கண்ணியர் முதலானோர் அப்பெண் கவிஞர்களாவர். இவர்கள் அகம், புறம் என்ற இரு
வகையிலும் கவிதைகள் படைத்துள்ளனர். இவர்தம் கவிதைகளில் பெண்ணின் சுயத்தை,
மனவுணர்வினை, காதலை, காமத்தை, வலியைப் பெண்ணின் மொழியில்
வெளிப்படுத்தியுள்ளனர். அது குறித்து விரிவாகக் காண்போம்.
மன உணர்வினை மொழிதல்
பெண் எழுத்து என்பது பெண் தன்னுடைய உள்ளத்து உணர்வினை அவள் உணர்ந்தபடியே
வெளிப்படுத்துவதாக அமைவது. இத்தகைய வெளிப்பாடு சங்கப்பெண் கவிதைகளில்
காணக் கிடைக்கிறது. 'காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி இரவுப் பொழுதொன்றில்
காதலுடன் தனித்திருக்கிறாள். அந்த இரவு இருவருக்கும் இன்ப இரவாக
நீள்கிறது. அவர்தம் இன்பத்திற்கு இடையூறாக வந்து சேர்கிறது
விடியற்காலையை உணர்த்தும் சேவலின் குரல். சேவலின் குரலினைக் கேட்ட
பெண்ணின் மனம் அச்சத்தில் திடுக்கிறது. அவளின் அச்சத்திற்கு, தலைவன்
தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவான். மீண்டும் அவனை என்று காண்போமோ?
என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம் அல்லது அவளுடைய காதல் வீட்டாருக்கு
ஊராருக்குத் தெரிந்து விடும் என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.
எதுவாகினும் அந்தப் பெண்ணின் மனவுணர்வினை அவள் உணர்ந்தபடியே பதிவு
செய்துள்ளார் அள்ளுர் நன்முல்லையார்.
'குக்கூ' என்றது கோழிளூ அதன் எதிர்
துட்கென் றன்றுஎன் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே' (குறுந்தொகை:157)
பாடலில் இடம் பெற்றுள்ள 'துட்கென்ற்றன்று', 'வாள்போல் வைகறை' என்ற
இரண்டு சொல்லாட்சிகளும் முக்கியமானவை. பெண்ணின் மனவுணர்வை மிக
நுட்பமாகப் படம் பிடிப்பவை. இத்தகைய பாடலையும் சொல்லாட்சியையும் பெண்
எழுத்தில் மட்டுமே தரிசிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
பிறிதொரு பாடலில் தலைவனின் அரவணைப்பை விரும்பும் தலைவிக்கு அது
கிடைக்காமல் போய்விடுகிறது. தன்னுடைய உணர்வினைத் தலைவன் புரிந்து
கொள்ளவில்லையோ என்று ஐயம் கொள்கிறாள். 'பெண்களின் மனதை ஆண்களால் அவ்வளவு
எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், ஆண்களின் மனம் உணர்வு -
உலகம் வேறு; பெண்களின் மனம் - உணர்வு - உலகம் வேறு' என்கிற முடிவுக்கு
வந்து சேர்கிறாள். இதனை ஒளவையின் பின்வரும் அகநானூற்றுப் பாடலடிகள்
உணர்த்துகின்றன.
'விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்
.......................................................................
நலம்கவர் பசலை நலியவும், நம்துயர்
அறியார் கொல்லோ, தாமே? அறியினும்
நம் மனத்து அன்னமென்மை இன்மையின்
நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ?
யாங்கு என உணர்கோ, யானே?......
......................................................'(பா.273)
பெண்ணின் மனவுணர்வானது பெண் மொழியிலேயே வெளிப்பட்டுள்ளமை
குறிக்கத்தக்கது. உடலை - உடல் வேட்i;கையை மொழிதல் ஒரு பெண் தன்னுடைய
உடலை, உடல் சார்ந்த உணர்வுகளை வெளிப்படையாகப் பேசவோ, எழுதவோ, ஆணாதிக்க
சமூகம் அனுமதிப்பதில்லை. அச்சம், மடம், நாணம், கற்பு முதலான ஒழுக்கப்
போர்வையை பெண்ணுடல் மீது திணித்து, அவளுடைய உணர்வுகளையும் நடத்தை
முறைகளையும் ஆணாதிக்கம் கட்டுப்படுத்தியதென்றால் பெண்ணின் உடலைப் 'பாவப்பிண்டம்'என்றும்,
'தீட்டுக்குரியது' என்றும் கூறி மத நிறுவனங்கள் ஒதுக்கிஃ விலக்கி
வைத்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளையும்,ஒதுக்குதல்களையும் முறியடிக்க
வேண்டுமெனில் பெண்கள் தங்கள் உடலைக் கொண்டாட வேண்டும் என்பது,
அந்தரங்கமானது என்று ஆணாதிக்கம் அடக்கி வைத்த உடல் சார்ந்த உணர்வுகளை
வெளிப்படையாகப் பேச வேண்டும் என்பதும் பெண்ணியவாதிகளின் கருத்தாக
அமைகின்றது. அதன் பொருட்டு கலை இலக்கியப் பிரதிகளில் பெண்கள் தங்களுடைய
உடலை முழுமையாகப் பெய்து வைக்க வேண்டும் என்றும் கூறுகின்றன.
'உன்னையே நீ எழுது. உன் உடம்பின் குரல்களுக்குச் செவிசாய.; அப்பொழுது
தான் வகுத்துரைக்க முடியாத உனது நனவிலி மனத்திலுள்ள மூலவளங்கள் எல்லாம்
பொங்கிப் புறப்பட்டு வெளிவரும்.' 'ஒரு பெண்ணின் உடம்பு, தன்னுடைய
ஆயிரக்கணக்கான உணர்ச்சி வெப்பத்தை மூல நெருப்பாகக் கொண்டு பலப்பல
மொழிகளை ஒலி அதிர்வுகளாய் உருவாக்கி விடக் கூடிய தனிச்சிறப்பு மிக்க
மூல மொழியை உருவாக்கும்.(ப.62)'
எந்த விதமான தணிக்கை உணர்விற்கும் செவி சாய்க்காமல் தன் உடம்பின்
அதிர்வுகளுக்கு உண்மையானவர்களாக இருந்து பெண் எழுத்தாளர்கள் செயல்பட
வேண்டும் என்பது ஹெலன் சீக்சு என்ற பெண்ணியத் திறனாய்வாளரின் கருத்தாக
அமைகிறது.
பெண் தன் உடலை எழுதுதல், கொண்டாடுதல் என்பது ஒரு வகை அரசியல். பெண் உடல்
குறித்த ஆண் நோக்கிலான மதிப்பீடுகளைக் குலைப்பதும், சிதைப்பதும், பெண்
நோக்கிலான மாற்று மதிப்பீடுகளை உருவாக்குவதும்தான் உடலரசியலின்
நோக்கமாகும். பெண்ணின் உடல், அதன் தன்மை, பெண்ணிற்குரிய பாலியல் உணர்வு
குறித்தெல்லாம் எதனையும் உணர்ந்திராத ஆண்கள் அவை குறித்து சுதந்திரமாக
எழுதலாம்; கற்பனை கலந்து வருணிக்கலாம். ஆனால் தன்னை, தன்னுடலை அதன்
உணர்வுகளை உணர்ந்த ஒரு பெண் அது குறித்து வெளிப்படையாகப் பேசக் கூடாது;
எழுதக் கூடாது. அவ்வாறுபேசினால், எழுதினால் அதனைக் கடுமையாக
விமர்சனம்செய்வதும், அவர்தம் நடத்தையைக்
கேள்விக்குட்படுத்துவதும்ஆணாதிக்கவாதிகளின் செயற்பாடாக அமைகிறது. ஒரு
பெண், தன் உடல் சார்ந்த உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும்என்று
தொல்காப்பியர் வரையறை செய்துள்ளமை இங்கு கவனத்தில்கொள்ளத்தக்கது. எந்த
இடத்தில் மொழி வெள்ளமாகப்பெருக்கெடுத்து ஓடுமோ அந்த இடத்தில் பெண்
மொழியாடக் கூடாது என்கிறார் தொல்காப்பியர்.'தன்னுறு வேட்கை கிழவன்
முற்கிளத்தல்எண்ணுங்காலைக் கிழத்திக்கு இல்லை
'பிறநீர் மரக்களின் இன்றிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப' (தொல்-களவு -1064)
தலைவி தன்னுடைய பாலியல் வேட்கையைத் தலைவனிடம் வெளிப்படையாக மொழிதல்
கூடாது. மொழிந்தே ஆக வேண்டிய சூழலில் 'புதுமண் பானையுள் பெய்து வைத்த
நீர் புறம் பொசிந்து காட்டுவதைப்போல' மொழிதல் வேண்டும் என்பது
மேற்சுட்டிய நூற்பாவின் பொருளாகும். ஆணுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள்
எதனையும் தொல்காப்பியர் சுட்டவில்லை. ஒரு ஆண் தன்னுடைய வேட்கையை எந்த
நிலையிலும் வெளிப்படுத்தலாம்; அதனை நிறைவு செய்து கொள்ளலாம். அதனைக்
கேள்வி கேட்பாரில்லை. இதனையே ஒரு பெண் செய்தால் அவளை 'அலைகிறவளாக',
நடத்தை கெட்டவளாக' இந்த சமூகம் சித்திப்பதுடன், அவமானப்படுத்தவும்
செய்யும். இவ்வாறு தொல்காப்பியர் காலம் முதற் கொண்டே பெண்களின் மொழியும்
உணர்வுகளும் ஒடுக்கப்பட்டு ஆண்களின் மொழியும் உணர்வுகளும் முன்னிலைப்
படுத்தப்பட்டுள்ளன. அந்த மரபுதான் சங்க காலம்தொடங்கி இன்று வரைத்
தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கியமரபில் நிலை பெற்றுள்ளது. இந்த
மரபையெல்லாம் அடித்து நொறுக்குவதாக சங்கப் பெண் கவிதைகள் அமைந்துள்ளன.
பெண்ணின் பாலியல் வேட்கையினையும்,அது தணிக்கப்படாமையால் அவளுடைய உடலில்
ஏற்படும் மாற்றத்தினையும், உள்ளம் அடைகிற அவஸ்தையினையும் ஒளவை மற்றும்
வெள்ளிவீதியின் பாடல்கள் சுதந்திரமாகவெளிப்படுத்தியுள்ளன. காதல்
உணர்வால் பெண்ணின் உடலில்பெருகும் காம வேட்கையின் தீவிரத் தன்மையை
துடிப்புமிக்க பெண் மொழியில் வெளிப்படுத்துகிறது ஒளவையின் பின்வரும்
குறுந்தொகைப் பாடல்:
'முட்டுவேன் கொல்? தாக்குவேன்
கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
'ஆஅ ஒல்' எனக் கூவுவேன் கொல்?;?
அலமலரல் அசைவளி அலைப்ப' (பா:28)
ஒரு பக்கம் பெருக்கெடுக்கும் காமம்; இன்னொரு பக்கம், அதனைப் புரிந்து
கொள்ளாமல் அடக்கியொடுக்கும் சமூகம். இவ்விரண்டிற்குமிடையே சிக்கித்
தவிக்கும் பெண்ணின் நிலை என்பதாகப் பாடல் அமைந்துள்ளது. கட்டுப்பாடு
எனும் பெயரில் பெண்ணின் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த இயற்கையான
உணர்வுகளைக் கூட வெளிப்படுத்தக் கூடாது என்ற சமூகத்தடைக்கு எதிரான
பெண்ணின் குரலாக பெண்ணியக் குரலாக இக்கவிதையை நாம் புரிந்து கொள்ள
முடியும். புணர்ச்சியை விரும்பும் பெண்ணின் உணர்வினையும், அது
நிறைவேறாமையால் அவளுடைய உறுப்பின் நலன் அழிவதையும் வெளிப்படையாகப்
பேசுகிறது வெள்ளிவீதியின் பின்வரும் குறுந்தொகைப் பாடல் :
'கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆ;ஆன் தீமீம்ப்பால் நிலத்து;து உக்க்கா அங்கு;கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீயர் வேண்டும்
திதலை அல்குல் என்மாமைக் கவினே' (பா: 27)
காதல் கலந்த காமம் ஆணுடன் பெண்ணையும், பெண்ணுடன் ஆணையும் இணைக்கக்
கூடியது. இந்த இணைவு -இரண்டறக் கலத்தல் என்பது நிறைவேறாமல் போனதால்
பெண்ணின்உணர்ச்சி வீணாகிறது. பெண் குறியின் அழகு குறைகிறது என்று
கூறுவதன் வழி, ஒரு பெண்ணின் அகவுணர்வு - அந்தரங்க உணர்வுஎவ்விதத்
தணிக்கையுமின்றி சுதந்திரமாகவெளிப்பட்டுள்ளது.
'என்னைக் கடிந்து கொள்ளும்
கேளீரே!
நான் கொண்ட காமநோயினால் என்னுடல் அழிந்து
போவதற்கு முன் அதனைத் தடுக்க முயன்றால் நல்லது.
கதிரவன் காய்ந்த வெம்மையான பாறையில் கையிழந்த
ஊமையன் ஒருவன் தன் கண்ணில் காக்கும் வெண்ணை
உருண்டையானது, அவன் கட்டுக்குள் நில்லாமல் உருகிப்
பரவுவது போல் காமநோய் என்னுனுனுடலுள் பரவுகிறது. இனியும்
அதனை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது' (குறு.58)
என்று பொருள்படும்படியாக அமைந்த வெள்ளிவீதியின் பாடலில், ஒரு பெண்ணின்
உடல் எழுப்பும் காமத்தின் குரல் மிகத் தீவிரமாக வெளிப்பட்டு;ள்ளது. இப்
பாடல் குறித்து, 'ஒடுக்ப் பட்ட பெண்ணுடல் எத்தகைய நிலைக்குச் செல்லும்
என்பதை இவ்வளவு நுட்பமாக, கவித்துவமாக மொழிப்படுத்த இயலும்போதுபெண்
எழுத்து;து என்க்கிற வகையொன்று;று தோன்ற்றி விடுகிறது' (ப.644)
என்று க.பஞ்சாங்கம் குறிப்பிட்டிருப்பதும் இங்கு சுட்டத்தக்கது.
தன்னுடைய காமத்தைத் தணிக்காத தலைவனைச் 'சான்றோன் அல்லன்' என்று குறை
சொல்லிக் குட்டுகிறாள் ஒளவையின் தலைவி,
'உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான்தோய் வற்றே, காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீ இயரே' (குறு:102)
ஆண் துணையின் மீதான ஏக்கமும், அதனால் உண்டான காமமும் விண்ணளவு வளர்ந்து
நிற்கிறது. ஏக்கத்தை நிறைவு செய்யாத - காமத்தைத் தணிக்காத ஆண்துணையின்
மீதான கோபத்தை 'சான்றோர் அல்லர்' எனும் சொல்லாட்சி மூலம்
வெளிப்படுத்துகிறாள் தலைவி.
'ஒடுக்கப்படும் இடத்தில்தான் மொழி வீரியமுடன் வெளிப்படும்' என்ற
கருத்துக்கேற்ப மேற்கூறிய பாடல்களில்அடக்கியொடுக்கப்பட்ட பெண்ணின்
உணர்வுகள் பெண் மொழியாக வீரியம் பெற்று ஒலிப்பதைக் காணமுடிகிறது. ஆண்
மட்டும் தன்னுடைய காதல் உணர்வினையும், காம வேட்கையினையும் சுதந்திரமாக
வெளிப்படுத்தலாம். பெண் அவ்வாறு வெளிப்படுத்துதல் கூடாது என்கிற
இலக்கிய, இலக்கண மரபினையும் சமூகத் தடையினையும் மீறுபவர்களாக ஒளவை
மற்றும் வெள்ளிவீதியின் பாடற் தலைவிகள் அமைந்துள்ளனர்.
தொகுப்புரை:
சங்க காலத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் கவிஞர்களாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர். இதன்வழி பெண்கள் ஓரளவு கல்வியறிவு பற்றவர்களாகவும்,
படைப்பாற்றல் மிக்கவர்களாளவும் வாழ்ந்துள்ளமையை அறிய முடிகிறது.
பெண்ணியக் கோட்பாடோ, பெண் எழுத்து என்ற வகைப்பாடோ தோற்றம் பெறாத
காலகட்டத்தில் எழுதப்பட்டவை சங்கப் பெண் கவிதைகள். ஆயினும்
அக்கவிதைகளில் பெண்ணின் மனவுணர்வு மற்றும் பாலியல் வேட்கை குறித்த
சுதந்திரமான வெளிப்பாடு, ஒழுக்க விதிகளுக்கு எதிரான குரல், கைம்மை
மறுப்பு, பரத்தமை எதிர்ப்பு, ஆண்களுக்கான ஒழுக்கத்தை வலியுறுத்தல்
என்பதான நிலைகளில் பெண் எழுத்தின் தன்மைகள் இடம் பெற்றுள்ளன.
நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் கவிதை எழுதியிருப்பினும், பெண் என்ற
உணர்வோடும் புரிதலோடும் பெண்ணின் சுயத்தை, காதலை, வலியை,பாலியல்
உணர்வுகளை, பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிப்படையாகப்
பேசியவர்களாக ஒளவை, வெள்ளிவீதி, நன்முல்லையார், நப்பசலையார், பெருங்கோப்
பெண்டு போன்ற ஒரு சிலரை மட்டுமே அடையாளம் காண முடிகிறது. இவர்கள்
தவிர்த்த பிற பெண் கவிஞர்கள் யாவரும், பெண் என்ற உணர்வோ, புரிதலோயின்றி
ஆணாதிக்கக் கருத்தியல்களை எவ்விதக் கேள்வியோ, விமர்சனமோயின்றி அப்படியே
ஏற்றுக் கொண்டு கவிதை எழுதியவர்களாகக் காணப்படுகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வேறு எந்த மொழிகளைக் காட்டிலும்
தமிழ் மொழியில் அதிக அளவிலான பெண்கள் கல்வியறிவு பெற்றுக் கவிஞர்களாகத்
திகழ்ந்திருப்பது தங்களுடைய உணர்வுகளை - அனுபவங்களைக் கவிதையாகப்
படைத்திருப்பது; அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராகக் குரல்
கொடுத்திருப்பது; சுதந்திரத்தை, உரிமைகளை வலியுறுத்தியிருப்பது
பெண்ணுக்கான என்ற நிலையில் பெண் கவிதைகள் போற்றத்தக்கவையாக அமைகின்றன.
மேலும் சங்க காலத்திலேயே பெண் எழுத்தின் தேவையைப் பெண் கவிஞர்கள்
உணர்ந்திருந்தமை, எந்த நிலையிலும் சுயத்தையும் தன்மானத்தையும் இழக்காது
ஒளவை போன்றவர்கள் வாழ்ந்திருந்தமை போன்றனவும் சிறப்பாகக்
குறிக்கத்தக்கவை.
|