ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்

 

வித்யாசாகர்

சீர்மிகு செந்தமிழில் யாக்கப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரம்.உள்ளத்தை வசப்படுத்தும் கதையம்சமும் ,உள்ளத்தோடு ஒன்றிக் கலந்துவிடும் கதைமாந்தர்களும் உலவுகின்ற ஒப்பற்ற காப்பியம். தமிழகத்தின் வளம்,தமிழர்களின் ஒன்றுகலந்து வாழும் பண்பு,தமிழர் தம் வாழ்வியல் நெறிகள் எல்லாமே சிலம்பில் ஒளிவிட்டு மிளிர்கின்றன.
ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல் என்று கலித்தொகைகாட்டும் மேற்கோள் ,சிலம்பில் பயின்று வருவதை இக் கட்டுரை சிந்திக்கிறது.(அலந்தார்=வறியவர்)
காப்பிய நாயகன் கோவலன், போற்றா ஒழுக்கம் புரிந்தும்,பொருளைத் தொலைத்தும் அலந்தவனாகி மீண்டு கண்ணகியிடம் சேர்கிறான்.

கோவலனும்
பாடு அமை செர்க்கையுள் புக்குத்,தன் பைந்தொடி
வாடியமேனி வருத்தம் கண்டு,"யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்,
குலமதரு வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும்" எனக்கு என்ன
(சிலப்-கனாத்திறம் உரைத்த காதை-
66-71)

வந்தவன்,ஏதும் பேசாமல் நேரே கண்ணகியின் பள்ளியறைக்குள் சென்று புகுந்து கொள்கிறான்.அங்கே,தன்ஆருயிர்க் கண்ணகியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான்;வஞ்சகம் பொருந்திய கொள்கையினை உடைய பொய்த்தியோடும் கூடியிருந்தமையால்,நம்குலத்தவர் தந்த மலைபோலும்பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின;அதனால் வந்த இல்லாமை நிலை எனக்கு இங்கே வரவும், வெட்கத்தை தருகிறது"என்கிறான்.கம்பீரமான ஆண்மை வெட்கப்படும் இடங்களில் ஒன்றாக இந்நிகழ்வை ஒளிவின்றி இளங்கோவடிகள் சுட்டுகிறார்.

ஆயினும் கண்ணகி,"நலம் கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்பு உள,கொண்ம்"என்று ஆற்றுப்படுத்துவதைக் காண்கிறோம்.

இக் சிலம்பினையே வணிக முதலாகக் கொண்டு ,நின் இழந்த கலன்களோடு போயின பொருளையும்இனித் தேடத் துணிந்துள்ளேன்;பரந்த புகழுடைய மதுரை நகரினுள் சென்று அதனைத் தேடுவேன்;இங்கிருந்து,என்னோடு நீயும் இப்பொழுதே புறப்படுவாயாக!என்றான்;

வீட்டை விட்டும் புகாரை விட்டும் நீங்கிய கோவலனும் கண்ணகியும் மாதவத்தார் கவுந்தியடிகளைச் சந்திக்கின்றனர்.அவர் வழிகாட்ட மதுரையை நோக்கி நடந்தனர்.

மதுரையை நெருங்குவதற்கு முன்னதாக கண்ணகியை,அடிகளிடம் அடைக்கலப் பொருளாக போற்றக் கேட்டுக்கொள்கிறான்;அப்போது,"வாழ்வுப் பாதையினின்றும் தவறிச் சென்ற இழிதன்மையினை உடையவன் ஆயினேன்;நறுமலர் மேனியினளான இக் கண்ணகி நடுங்கும் அளவு பெருந்துயர் எய்த அருவழியிலே அழைத்து வந்து வருந்தச் செய்த சிறுமையினையும் அடைந்தேன்;செய்தவத்தீர்! மதுரை சென்று யான் தக்க ஏற்பாட்டுடன் வரும் வரையில் இப் பைந்தொடி
தங்கள் பாதக் காப்பினள், கொள்க".என்றனன்.
இவ் வுரை கேட்ட கவுந்தியடிகள் கோவலனை ஆற்றுப்படுத்துகிறார்.

காதலி தன்னொடு
தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்!

மறத்துறை நீங்குமின்;வல்வினை ஊட்டும் ("சிலப்-ஊர்காண் காதை-பா-
25)
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீ அறிந் திலையோ?நெடுமொழி அன்றோ!

வல்லோடு ஆயத்து மண் அரசு இழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்
காதலிற்பிரிந்தான் அல்லன்:காதலி
தீதொடு படூஉம்சிறுமையன் அல்லன்;

அடவிக் கானத்து ஆய்-இழை தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது
வல்வினையன்றோ?மடந்தை தன் பிழையெனச்
சொல்லலும் உண்டேல்,சொல் லாயோநீ!
அனையையும் அல்லை;ஆய்-இழை -தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே!
வருந்தாது ஏகி,மன்னவன் கூடல்,
பூருந்துழி அறிந்து,போது ஈங்கு...(சிலப்-ஊர்காண் காதை-
46-60 )

பெண்டிரும் உணவுமே இன்பம் என்று கொண்டு இவ்வுலகிலே வாழ்ந்தோர் அளவற்ற துன்பத்தினையே முடிவில் காண்பார்கள்.காமமே பற்றுக்கோடாகக் கொண்டு ,காதலிலே உழந்து ,அமிழ்ந்து கரைகாணவியலாத துன்பத்தினையே அவர்கள் அடைவர்;இன்று மட்டும் இந் நிலையன்று;தொன்றுதொட்டே வருகின்ற பழமையினை உடையது தான்;நீ கண்ட நிலையும் அதுவே.

திருமாலின் வடிவமான இராமன் பட்ட துயரம் குறித்து நீ அறிந்ததில்லையா?தந்தையின் ஏவலுக்கிணங்க தன் மனைவியோடு கானகம் சென்றான்;காதலியைப் பிரிந்தான்;கடுந்துயரிலே வருந்தினான்;வேதமுதல்வனான அவனுக்கே இத்தனை சோதனைகள்.

சூதாடு களத்திலே நாடாட்சியை இழந்தான்;தன மெல்லியலாளுடன் கூடி வெம்மையான கானகத்தை அடைந்த நளன்,அடர்ந்த காட்டிலே,இருளின் நடுச்சாம வேளையிலே,தனியாக காதலியை விட்டுப் பிரிந்தான்.இவையெல்லாம் வலிய தீவினையின் பாற்பட்டது அன்றோ!நீ அவர்களைப் போன்றவனுமல்லன்;நின் மனைவி யோடு பிரியாத வாழக்கையினைப் பெற்றனை;

எனவே,வருந்தாது மதுரைக்குச் சென்றுவிரைந்து மீண்டு வருக!என்று ஆற்றுப்படுத்துகிறார்.

முடிவுரை:
ஆறுதலும் தேறுதலும் மனதை இதப்படுத்தக்கூடியது.பகிர்ந்து கொள்ளும்போது துன்பம் தணிகிறது;இன்பம் இரட்டிப்பாகிறது என்பது உலகியல் உண்மை; இயலாமையின் உச்சத்திலிருந்த கோவலனின் துன்பத்தை ஆற்றியதை கவுந்தியடிகளின் வாயிலாக இளங்கோவடிகள் எடுத்தியம்புகிறார்.

பயன் கொண்ட நூல்:
புலியூர்க் கேசிகன் - சிலப்பதிகாரம் தெளிவுரை-பாரிநிலையம்,சென்னை-
108, 16-ஆவது பதிப்பு=1995

கவிஞர்.மா.உலகநாதன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
திருநீலக்குடி
-612 108,
கும்பகோணம்-வழி
அலைப்பேசி:
9442902334