ஒரு மாலைக்காட்சி
 

அனலை ஆறு இராசேந்திரம்


குடும்பன் அன்றன்றாடம் கூலி வேலை செய்து காலம் தள்ளும் தொழிலாளர்களில் ஒருவன். முறைப் பெண்ணாண மூத்தாள்; அவனுக்கு மனைவியாய் வாய்த்திருந்தாள். அவள்; கணவன் பாடு கண்டு, கை கொடுக்கும் காரிகையாய்க் குடும்ப வண்டி செம்மையுடன் நகரத் துணை நின்றாள். நாளைக்கு என்று பொருள் சிறிது சேர்த்து வைக்கும் நிலையில் இருந்தா ரல்லராயினும், அவர்கள் இல்வாழ்வின் மாண்பு அங்கு இல்லை என்பதே இல்லiயெனக் காட்டி நின்றது. ஒருவரை ஒருவர் புரிந்து வருவாய்க்குத் தக்க செலவு செய்து குடும்பத்திற்கு இழிவு வாராத் தகை சான்ற சொற்காத்து 'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' என ஊரார் போற்றுதற் கெடுத்துக் காட்டாய்ச் சிறந்து விளங்கியது அவர்கள் இல்வாழ்வு. 'மங்கலம் என்ப மனை மாட்சி' என்னும் வள்ளுவன் வாய்மொழிக் கொப்ப நடந்த அவர்கள் வாழ்வில்,வெள்ளை ஆடையிற் கரும்புள்ளி வீழந்தாற் போல் மறுவொன்று படிந்தது.
குடும்பனுக்கு இளையாள் என்பாளுடன் தொடர்பு ஏற்பட்டது. அவள் சோழ நாட்டினள். வயல் வேலை செய்து பிழைப்பதற்காக ஈழம் வந்திருந்தவளுடன் ஏற்பட்ட களவுறவு தொடர்ந்து அப்படியே நீடிப்பது அழகன்று என உணர்ந்தவனாய் அவளையும் வீட்டிற் கழைத்து வந்து விட்டான் குடும்பன். அமைதியான வாழ்வில் அலை அடிக்கத் தொடங்கிற்று. மனைவி ஒருத்தியுடன் வாழ்க்கையை ஓட்டுவதே வில்லங்கமான காலத்தே, இருவரைப் பெண்டிராகக் கொண்டவன் திண்டாட்டம் சொல்லித் தெரிய வேண்டியதில்லலை.

மூத்தாளுக்கு தான் மனைவியென இருக்க குடும்பன் இளையாளிடமே அன்பு காட்டுவதாகவும், இளையாளுக்குத் தன்னை ஆசைக்கிழத்தியாய் வைத்துக்கொண்டு மூத்தாளுக்கே அவன் மனைவி என்னும் உரிமையை கொடுத்திருப்பதாகவும் வேதனைகள் இருந்தன. இதனாற் பெண்டிர் இருவர்க்குமிடையே பகைமை வளர்ந்தது. நாளும் பொழுதும்; ஒருவரை ஒருவர் சொற்கணைகள் எறிந்து தாக்குவதும், மயிரை மாறி மாறிப் பிடித்து மற்போர் புரிவதும், குடும்பன் இடைப் புகுந்து விலக்குப் பிடிப்பதும் அங்கு இடம் பெறும் நிகழ்வுகளாயின. அவ்வேளைகளிற் குடும்பன் மனமொழி மெய்களாற் தன் தவறை ஒப்புக் கொண்டு இருவரையும் அமைதி காக்குமாறு கோருவான். இறுதியில் கறந்த பால் முலைக்கேறாதது போல் தன் தவறுக்குத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்தவனாய்த் தன்னை மன்னித்தருளுமாறு அவன் இறைவனை வேண்டுவான்.

அன்று குடும்பன் மனைவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு பண்ணையார் வயலிற் சூ10டு அடிப்பதற்குச் சென்றான். நடுப்பகல் தொடங்கி பொழுதுபட்டு இரவு தொடங்கும் வரை மூவரும் ச10டு அடித்தலில் ஈடுபட்டனர், பொழுதின்வெண்மையை அவ்வவ்போது பச்சை மரநிழலில் கழித்து தொடர்ந்து வேலையில் ஈடுபட்டனர். வேலையை அன்றோடு முடித்துவிடும் முளைப்புடன் மூவரும் இயங்கினர். சூட்டடி முடித்து கூலியாளர்க்கு நேல் அளத்து கொடுக்கும் நேரம் வந்தது. பண்ணையார் சொற்படி குடும்பனே நேல் அளந்தான். இளையாளுக்கு அவன் அளந்து போட்ட நேல் தனக்குப் போட்டதிலும் அதிகமாக இருப்பது தெரிந்தது மூத்தாளுக்கு. அவள் நெஞ்சு குமுறிற்று. முதல் நாட் சண்டையில், இளையாள் மார்பைத் தட்டியவாறு; தான் சோழ நாட்டுக்காரியென இறுமாந்து சொன்னது மூத்தாளின் நெஞ்சில் ஈட்டிபோல் பதிந்திருந்தது.

'அவளுக்கு அதே விதமான பதிலடி கொடுக்கும் நோக்கில்' நான் ஈழநாட்டவள.; எங்கள் நாட்டுக் கடற்கரைகளில் கிடக்கும் சிப்பிகளுக்குள் முத்துக்கள் காணப்படும்' என்று சண்டையை ஆரம்பித்தாள் மூத்தாள்.

பைப்பணிப் பகுவாய்ப் பட்ட திங்களிற்
பாயு மோதக் கடற்கரை தோறும்
இப்பி வாயின் முத்தம் இலங்கிய
ஈழ மண்டல நாடெங்கள் நாடே


இருவருக்குமிடையே சண்டை ஆரம்பமாயிற்று.
'எடியே, எங்கள் சோழ நாட்டு மலைச் சாரலில் மந்திகள் எடுத்து வந்து வைத்த பதுமராக மணிகள் ஞாயிற்றைப்போல்; ஒளி சிந்தி விளங்கும். அது உனக்குத் தெரியுமா?'
மாரி மேகம் தவழ் மலைச் சாரலில்
மந்தி வைத்த மணிப்பத்ம ராகம்
ச10ரியோ தயம் போல விளங்கிய
சோழ மண்டல நாடெங்கள் நாடே.


மூத்தாள் தன்நாட்டின் முத்துவளத்தைப் பெருமையாய் சொல்ல, இளையாள் தன் நாட்டின் மணி வளத்தைப் பெருமையாய் சொன்னாள்.

விடுவாளா மூத்தாள்? 'புணர்ச்சி விரும்பும் ஆடவர்கள் அதற்கு இணங்கி வராத காதலியரை (தம் வழிக்குக் கொண்டுவரும் பொருட்டு) இரந்து நிற்கும் இரப்பன்றி வேறு இரப்பு எம் நாட்டில் இல்லையடி என்றாள்.

ரப்பு மேகலை மங்கையர் போகம்
பயில வேண்டி இணங்கார் முகத்தை
இரப்பதே அன்றி வேறிரப் பில்லா
ஈழ மண்டல நாடெங்கள் நாடே


இளையாளின் சொல் அம்பு மூத்தாளை நோக்கி பாய்ந்தது.
'எடியே, எங்கள் வானில் விளங்கும் மதியிலன்றி, வேறு மறுவில்லாதது சோழநாடு. அறிவாயா நீ'

வாம மேகலைப் பாவையர் கோவை
வதனம் போல விளங்கிய விண்ணிற்
சோமன் மேலன்றி ஓர் மறுவில்லா
சோழ மண்டல நாடெங்கள் நாடே



மூத்தாள் ஈழநாட்டில் இரப்பு என்பதே இல்லை என்று இலக்கிய நயத்தோடு சொல்ல, இளையாள் சோழநாட்டில் மறு என்பதே இல்லை என்பதாய் இலக்கிய நயத்தோடு சொன்னாள்.
சண்டை தொடர்ந்தது 'ஓசை பொருள் என்னும் இன்பங்கள் பொருந்தி நிற்கும் கவிதைகளை யாக்கும் பாவலர்க்குப் பரிசாகக் கொடுப்பதற்காக, பொற்காசுகளை எண்ணி முடிப்பாகக் கட்டி வைத்திருக்கும் நாடு எனது ஈழநாடு'


பண்ணிற் றோயப் பொருண்முடிப் புக்கட்டிப்
பாடும் பாவலர்க் கீந்திட வென்றே
எண்ணிப் பொன்முடிப்புக் கட்டி வைத்திடும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே



'சேல் போலும் விழிகளையுடைய கடைசியர் குலப்பெண்கள் தங்கள் சேயர்க்குப் பயிற்றுதற்காகச் செந்தமிழ் சொற்களைத் திரட்டி சேர்த்து வைத்திருக்கும் சோழநாடு எனது நாடு'


செல்லுஞ் சென்முடிக் குந்தளக் கண்ணிரு
சேலைப் போன்ற கடைசியர் சேய்க்குச்
சொல்லுஞ் சொன்முடிப்புக் கட்டி வைத்திடும்
சோழ மண்டல நாடெங்கள் நாடே


ஈழநாடு செல்வ வளம் மிக்கது என்று மூத்தாள் சொல்ல, சோழநாடு தமிழ்வளம் மிக்கது என்றாள் இளையாள்.
'பட்டுக்குப் பருத்தி குறைந்ததோ? என்பது போல இளையாள் தன் சொல்லடிக்குத் தக்க பதிலடி கொடுப்பது கண்டு மூத்தாள் கோபம் மேலும் கூடிற்று.
'எடியே, ஊஞ்சல் ஆடும்போது அணிந்திருக்கும் பொன் நகைகளிற் பதிந்திருந்த மணிகள் கழன்று சிதறியோடித்; காட்டில் உறங்கும் குயில்களை எழுப்பிடும் தன்மையுடையது எனது ஈழநாடு'

ஆட்டு மூசலி னாடு மின்னார்பொன்
அணிக லத்தின் மணித்தெறித் தோடி
ஏட்டுக் காவிற் குயிற்றுயின் மாற்றிடும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே

'அப்படியா...? என் சோழ நாட்டு வாவிக் கரைகளிற் கெண்டைமீன் துள்ள. அது கண்டு மண்டூகம் செந்தாமரை மலர் மேற் பாய்ந்து, அப்படுக்கையில் உறங்கும் அன்னத்தை எழுப்பிடுமே. அது உனக்குத் தெரியாதா?

வாவியின் கரைக் கெண்டை குதிக்க
மண்டூகம் பாய்ந்து செந்தாமரைப் பாயற்
றூவி அன்னத்தின் நித்திரை மாற்றிடும்
சோழ மண்டல நாடெங்கள் நாடே.


'மாவலி கங்கை பெருகி அதன் இரு கரைகளிலும் வலம்புரிச் சங்குகளை ஒதுக்க,அவை முத்துக்களை ஈனும் சிறப்புடையது ஈழநாடு'

கருவலம் புரிச்செங் கதிர்மா வலி
கங்கை யாறு பெருகிக் கரையி
னிரு மருங்கிலும் முத்தம் கொழித்திடும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே


வாளை மீன்கள் துள்ளிப் பாய,வள்ளன்மை மிக்கோர் கொடை போல் நுரை மண்டி வரும் காவிரியாறு பொன்னை நிறைத்திடும் சிறப்புடையது சோழநாடு'

வள்ளி யோரிற் கொடைநிறைந் தேநுரை
மண்டி யேவரு காவிரி யாறு
துள்ள வாளை பசும்பொ னிறைத்திடும்
சோழ மண்டல நாடெங்கள் நாடே


ஒருவர் ஏவும் கணைகளை மற்றவர் அதே கணைகளை ஏவித் தாக்கி அழித்துக் கொண்டிருந்தனரே அன்றி, சண்டையில் ஒரு பக்க வெற்றிக்கான வாய்ப்பு அரிதாகவே இருந்தது. இந்நிலையில் அவர்கள் வாயும் உளைய ஆரம்பிக்கவே, மேலும் சண்டையைத் தொடர்வது வீணானது என உணர்ந்தவராய் இருவரும் தீர்த்து வைப்பாரின்றியே சண்டையை நிறுத்திக் கொண்டனர்.
கண்டும் காணாதவன் போலவும், கேட்டும் கேளாதவன் போலவும், பெண்டிர் இருவரினதும் சண்டையை சுவைத்துக் கொண்டு நின்ற குடும்பன் மேலை வானை நோக்கினான். காலை தொடங்கிய தன் நீண்ட பயணத்தின களைப்புப்போக்க நீராடுவான் போல் ஆதவன் ஆழிக்கண் புகுந்தான். மஞ்சள்,நீலம்,சிவப்பு நிறங்கள் கொண்டு அடிவானத்தே தீட்டியிருந்த வண்ணக் கோலம் கண்ணைக் கவர்ந்தது.வழமையாகக் கண்ணுக்கு விருந்தளிக்கும் மாலைக் காட்சி, அன்று மனைவியர் இருவரதும் தீஞ்சுவை கொஞ்சும் தமிழ்ச் சண்டையின் பயனாய்க் கருத்துக்கும் விருந்தளித்த மாலைக் காட்சியாய் விளங்கிய திறம் அவன் நெஞ்சில் நிறைந்தது.

இருள் பரவுவதற்கு முன் வீடு சென்று சேர்ந்துவிடும் நோக்குடன் மனைவியரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான் குடும்பன்.

(குறிப்பு: ஈழத்தின் பெரும் புலவர்களில் ஒருவரான சின்னத்தம்பிப் புலவர் பாடிய பறாளை விநாயகர் பள்ளு என்னும் நூலைத் தளுவி எழுந்தது இக்கட்டுரை.)