இன்றைய புதுக்கவிதையின் நோக்கு நிலைகள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்
மொழியில் புதுக்கவிதையின் தோற்றத்திற்குக் காரணமானவர் பாரதியார்.
பாரதிக்குப் பிறகுபுதுக்கவிதை எழுதும் முயற்சியில் முதன்முதலாக
ஈடுபட்டவர் ந.பிச்சமூர்த்தி ஆவார்.அதே காலத்தில் சி.சு.செல்லப்பா,
ராஜகோபாலன் ஆகியோரும் கலாமோகினி, எழுத்து, கிராமஊழியன் போன்ற இதழ்களில்
எழுதத் தொடங்கினர்.1940க்குப்
பிறகு புதுக்கவிதையில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத்திகழும்
இலக்கியமாகப் புதுக்கவிதை உள்ளது.மனிதனின் எதிர்காலம், காதல் உணர்வுகள்,
மனித நேய உணர்வுகள், அரசியல் போன்ற உள்ளடக்கங்களைக் கொண்டு இலங்குவது
தான் புதுக்கவிதை. மரபுகளை உடைத்துச் சமுதாயக் கருத்;துக்களைச்
சுதந்திரமாக உலா வரச் செய்த பெருமை புதுக்கவிதைக்கு உண்டு.
தோற்றமும் வளர்ச்சியும்
1910 ஆம் ஆண்டிற்கு மேல்
இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள கவிஞர்களுள் சிலர் ஒருங்கிணைந்து
மரபுக் கவிதையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திட விரும்பி „இமேஜிஸ்ட்கள்;...
என்ற கூட்டமைப்பை உருவாக்கினர்.இவர்கள் பிரெஞ்சு இலக்கியத்தைப்
பின்பற்றி வெர்ஸ்லிப்ரே
(verselebre) என்ற சுயேச்சைக்
கவிதை முறையினை ஆராய்ந்தனர். இவ்வாராய்ச்சியின் விளைவாகச்சொற்சிக்கனம்;,
சாதாரணநிலை, பேச்சுஅமைதி, செம்மை நிலை நூதனப் படிமப்பிரயோகம் ஆகிய
தன்மைகளைக் கவனித்துக் கவிதைகளை அமைக்கலாயினர். டீ.இ.ஹூம், எஸ்ரா
பவுண்ட், டி.எஸ்.எலியட் ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள் எஃப்.எஸ்.பிளின்ட் என்பார்,
'எதுகை மோனை மற்றும் மொழி நடை இவை அனைத்தும் செயற்கையாகவும்
வெளிப்படையாகவும் கவிதைக்கு சுவையை கொடுக்கின்றது. அதுமட்டும் அல்லாமல்
செய்முறையில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இவைகள் கவிதையின்
உயிர் ஓட்டத்தைத் தடைசெய்வதற்குக் காரணமாக இருக்கின்றன.'
என்று கூறுகிறார்.இக்கூற்று இன்றைய தமிழ் புதுக்கவிதைக்கு மிகவும்
பொருத்தம் உடையதாக உள்ளது.
இலக்கண விதிகளையும் தளைகளையும் மீறி, கட்டுப்பாடில்லாமல் எழுதப்படும்
கவிதையை பிரெஞ்சு மொழியில்
‘verselibre’
என்று கூறுகிறார்கள்.
Rhyme and meter artificial and external Addison to poetry and that
the various changes that can be rang upon them were worked out, they
grew more and more insipid until they have become contemptible and
encumbering.
இருபதாம் நூற்றாண்டில் தான் மரபுக்கவிதை,புதுக்கவிதை என்று புதிய
பெயர்களோடு தமிழ்க் கவிதைகள் இனம் பிரிக்கப்பட்டன. இதற்குக் காரணம்
வசனகவிதைகளைப் பின்பற்றி புதுக்கவிதை இலக்கியத்தில் நடை பயின்றதே ஆகும்.
வசன கவிதை என்பதற்கு உருவம்,அணி,தளை,மோனை எல்லாம் உண்டு.செய்யுள்
எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம் என்றால்
மிகையல்ல. வசன கவிதைக்குக் கருத்தின் வேகமும்உணர்ச்சியும் சொல்லில்
மெருகூட்டினால் தான் கொஞ்சமாவது கவர்ச்சி ஏற்படும் சொல்லில் கவிதையின்
அச்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது வெறும் வசனம் தான்.
பாரதியார்,பாரதிதாசன் போன்றோரின் வாயிலாக கவிதை மாற்றுருவம் பெற்றது
என்றுதுணிந்து கூறலாம்.தொடக்க காலத்தில் பாரதியும்,பாரதிதாசனும்
பழமையைப் பின்பற்றிப் பாடினர் என்றாலும் சிறிது காலத்திலேயே தங்களின்
பாடுபொருளை மாற்றிக் கொண்டனர்.இவர்களுக்குப் பின்னால் இவர்களின்
பெயர்களைச் சொல்லிக் கொண்டு கவிதை படைக்க வந்தவர்களும் இவர்களின் புதிய
பாடுபொருள்களையே எடுத்துக் கொண்டு பாடினர்.இவ்வாறாக 19,20 - ஆம்
நூற்றாண்டுகளில் தொடங்கிய இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆராயப்பட்டுள்ளது.
காலமும் காரணமும்
19 -ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கவிதை
பாடிய கவிஞர்களை நோக்கும் போது நான்கு நிலைகளில் நின்று அவர்கள்
பாடல்கள் இயற்றியுள்ளனர் என்று புலனாகின்றது.
1. பழம் புலவர் வட்டம்
2. பாரதி பரம்பரை
3. பாரதிதாசன் பரம்பரை
4. பொதுவுடமைக் கவிஞர்கள்
என்பவையே இந்நான்காம்.இவ்வாறு கவிஞர்கள் நான்கு நிலைகளில் நின்று
பாடுவதற்கு,கருத்துரு மாறுவதற்க்குக் காரணம் சூழல் என்ன என்பதையும்
அறிதல் வேண்டும். ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் இந்திய நாட்டில்
மட்டுமல்லாமல் இலக்கியம், பொருளாதாரம்,அறிவுநிலை போன்றவற்றிலும் ஒரு
புதிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு பக்கம் ஆங்கிலேயரின் வருகையினால்
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டது. எனவே,ஆங்கிலேயர்களால்
பதவியும் வருமானமும் பெற்றவர்கள் அவர்களது ஆட்சியையும், கொள்கைகளையும்
போற்றுபவர்களாக இருந்தனர்.
'தீதில் ஆங்கிலேயே மன்னர் செங்கோல் எஞ்ஞான்றும் வாழ்க'
என்று பாடும் நிலையில்இருந்தனர். காரணம் ஆங்கிலேயர்களால் அவர்கள் பெற்ற
ஆதாயமே எனக் கூறலாம்.
இன்னொரு பக்கம் பார்க்கும் பொழுது 'பக்தி... என்ற கொள்கையைப்
போற்றுபவர்களாகச் சில கவிஞர்கள் இருந்தனர்.இவர்கள் அந்நியர் ஆட்சி,
அடிமைத்தனம்,விடுதலைவேட்கை என்பவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் சக்தியைப்
போற்றுவது என்று தங்கள் போக்கில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுள்
பாரதியும்,பாரதிதாசனும் உட்பட்டவர்கள் என்றாலும்,சிறிது
காலத்திற்குள்ளாகவே தங்களை மாற்றிக் கொண்டனர். இவர்களோடு வள்ளலார்
போன்றவர்கள்' ஆன்மீகம்... என்ற நிலையில் நின்று பாடல்களைப் பாடி வந்தனர்.
மூன்றாம் நிலையில் இருந்தவர்களே அந்நியர் ஆட்சியை எதிர்ப்பவர்களாகவும்,
சுதந்திர தேவியை விடுதலை பெறச் செய்பவர்களாகவும் இருந்தனர். அரசியல்
விடுதலை, சமூக விடுதலை என்ற பாடு பொருளைக் கொண்டு கவிதை எழுதி
ஆங்கிலேயர்களால் தண்டனைக்கு உட்பட்டவர்களும் ஏராளம். நாமக்கல்லார்
போன்றவர்கள் காந்திய வழியைப் பின்பற்றியவர்களாகவும், அந்நிய ஆதிக்கத்தை
எதிர்ப்பவர்களாகவும் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டனர். அவற்றைத்
தொடர்ந்து சமய மறுமலர்ச்சி, ஒருமைப்பாடு, கல்வி, பண்பாடு என்பவற்றையும்
தங்களின் பாடுபொருளாகக் கொணடு பாடினர். காந்தியக் கொள்கையை ஏற்றுக்
கொண்டவர்களும் ஒரு வகையில் சமயம் சார்ந்தவர்களாகவே இருந்தனர். அதாவது
ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் என்று இரண்டு பிரிவுகளில் நின்றே
காங்கிரசாரோடு இனணந்து இந்திய விடுதலையில் ஈடுபட்டனர்.
காந்தியின் அரசியல் நுழைவைத் தொடர்ந்து தீண்டாமை,சாதிஒழிப்பு, வறுமை,
மதுவிலக்கு, பெண் விடுதலை, அந்நிய மோகம் போன்றவைகளும் பாடுபொருளாக
அமைந்தன. இந்தப் பின்னணிகளை வைத்துக் கொண்டு புதுக் கவிதைகள் வளர்ந்த
வரலாறு ஆராயப்பட்டுள்ளது.
மரபுக் கவிஞர்களுக்குப் பின் நவீன உத்திகளுடன் கூடிய தமிழ்ப்
புதுக்கவிதைகளுக்குத் தந்தை எனக் கருதும் ந.பிச்சமூர்த்தி, யாப்பற்ற
புதிய முறையில் கவிதைகளை எழுத முயன்றுள்ளார். விமர்சனத்திற்காகவே
தோன்றிய „எழுத்து... இதழ் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வித்திட்டது.
சி.சு.செல்லப்பா,ந.பிச்சமூர்த்திஎழுதிய „பெட்டிக்கடை நாரணன்...,„பூக்காரி...
ஆகிய புதுக்கவிதைகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தருமு. சிவராமு,
பசுவய்யா போன்றோர்„எழுத்து... இதழில் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினர்.
இந்த இதழில் வெளிவந்த தேர்ந்தெடுத்த புதுக்கவிதைகளின் தொகுப்பு „புதுக்குரல்கள்...
என்னும் பெயரில் 1962இல்;
வெளியாகின. இதுவே தமிழில் வெளியான முதல் புதுக்கவிதைத் தொகுதியாகும்.
புதுக்கவிதைகளின் தோற்றத்தால் இளைய தலைமுறைக் கவிஞர்களிடம் சிறைபட்டுக்
கிடந்த சிந்தனைச் சக்தி வீறு கொண்டு எழுகிறது.மனத்திற்குள் முடங்கிக்
கிடந்த கற்பனைகள் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன. இது இன்றைய
புதுக்கவிதையின் உண்மையான நிலையாகும்.
புதுக்கவிதையின் இலக்கணம்
புதுக்கவிதைக்குரிய இலக்கணம் இதுவரை வகுக்கப்படவில்லை. இருப்பினும்
புதுக்கவிதைக்கும் ஓர் ஒழுங்குமுறை இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள்
இருக்கின்றனர்.
'விருந்தே தானும்புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'
என்று தொல்காப்பியர் கூறிய வனப்பு எட்டனுள் விருந்து என்பதும் ஒன்று.
இன்றைய புதுக்கவிதைகள் அனைத்தையும் தொல்காப்பியார் கூறியுள்ள 'விருந்து'
என்னும் இலக்கிய வகைக்குச் சான்று காட்டலாம். மேலும்,பாரதி வகுத்த
'சுவை புதிது, பொருள் புதிது, வளம்புதிது,
சொற்புதிது, சோதிமிக்கநவகவிதை,
யெந்நாளும் அழியாதமகா கவிதை'
என்பதையும் புதிய இலக்கணமாகக் கருதமுடிகிறது.
திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒருதரம் படிப்பவர்களுக்கு ஒரு
வேகம், ஒரு எதிரொலிக்கும் தன்மை விடாபிடியாக உள்ளத்தைப் பிடித்துக்
கொள்ளும் ஒரு குணம் இருக்கவேண்டும் புதுக்கவிதையிலே என்று
க.நா.சுப்ரமண்யம் புதுககவிதைக்கு இலக்கணம் கூறுகின்றார்.இலக்கணங்கள்
எதுவும் இல்லாத புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை என்று மு.மேத்தா
கூறுகின்றார். இவ்வாறு உள்ளத்து உணர்வுகளை வெளிப்படையாகச் சொற்களில்
வடித்துக்காட்டுவதும் யாப்பு மரபுகளுக்குக் கட்டுப்படாமல் இருப்பதையும்
புதுக்கவிதையின் இலக்கணமாகக் கூறுகின்றனர் என்பதை மேற்கூறிய
கருத்துகளின் வாயிலாக அறியலாம்.
கவிதையாக்கம் என்பது பல்வேறு பண்புகளைக் கொண்ட ஒரு சொற்கலை ஆக்கம்.
இதனைக் கரு,உரு என இரண்டாகப் பிரித்துத் திறனாய்வாளர்கள் ஆராயினும்
இரண்டறக் கலந்து நிற்கின்ற சொற்கலையாக்கமே இது. இதன்கண் எத்தனையோ
உத்திகள் நடனமாடி இறுதி வடிவம் கொடுக்கின்றன. கருவும்,உருவும் ஏதோ
தனிப்பட்ட நிலையில் உருவாகிப் பின்னர் இனைந்து நிற்கின்றன என்றோ
கவிஞரால் இணைக்கப்படுகின்றன என்றோ கருதுதல் கூடாது. கவிஞன் உள்ளத்தில்
கவிதையாக்கம் பற்றிய சிந்தனை எழும் போது ஒன்றாகவே அவை இணைந்து
உள்ளத்தில் எழுகின்றன என்றும் ஒன்றாகவே அவை ஆக்கம் பெறுகின்றன என்றும்
எண்ணலாம்.
கவிதையின்கண் காணப்படும் மொழியமைப்புக்கு இவை ஒரு அடித்தளமாக அமைகின்றன.
இவற்றை லாவகமாக பயன்படுத்துவதில் கவிஞனின் கவித்துவம்
வெளிப்படுகின்றது.கவிதையின் சிறப்பு மிளிருகின்றது
பழகு தமிழ்ச் சொற்களே கவிதைப் படைப்புக்கு மிகவும் உகந்தவையாகவும்
பரந்த பயன் தருவனவாகவும் இருக்கின்றது.
தமிழனுக்கு இராண்டாயிரம் ஆண்டுகால இலக்கிய மரபு இருக்கின்றது என்றாலும்
ஒருபக்கம் மேலைக் காற்றும்,மறுபக்கம் கீழைக்காற்றும் ஜன்னல் திறந்து
விட்ட உலக இலக்கிய மரபறிவும் கிடைத்திருக்கின்றது. தொன்மையான தமிழ்
இலக்கிய மரபும் உலக இலக்கியம் பற்றி இன்று கிட்டியுள்ள அறிவும் பின்னிப்
பிணைந்து புதிய வாழ்க்கை முறை உருவாக்கும் புது வரவும் இந்த வகையில்
தான் அமைகின்றது.
'புதுக்காற்றின் முன்னால் மரபு'
ஒருஅப்பளத்தின்; மரணம்...
போல நொறுங்கிப் போகிறது' என்கிறார் பாலா.
சமுதாய நோக்கில் புதுக்கவிதை
இன்றைய புதுக்கவிதை என்பது இன்றைய மனிதரின் கவிதை கவிஞர் அவரது வாழ்க்கை
சொல்லும் அனுபவங்கள், அவரது உணர்ச்சிகள் அவர் கையாளும் மொழியின் சொற்கள்
ஆகியவற்றை அவர் கையாளும் மொழியின் சொற்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டே கவிதைகளைவடிக்கின்றனர் புதிய வாழ்க்கைக் களங்கள், சமூகப்
பொருளாதார மாறுதல்கள்,மாறிவரும் மனித உறவுகள் பண்பாட்டுச் சிக்கல்கள்,
புதிய சமூக அங்கீகாரங்கள்,திரைப்படமும்,செய்தித்தாள்களும் ஏற்படுத்த
நினைக்கும் சமூக கலாச்சார நடைமுறை, அரசியல் ஆகியவற்றிலிருந்து இன்றைய
வாழ்கை பிறப்பெடுக்கிறது இவற்றின் விளைவாகவும் எதிர் விளைவாகவுமே
இன்றைய புதுக்கவிதை என்னும் இலக்கியப் படைப்பு திகழ்கிறது.
பாரதி
பாரதி தம் எண்ணங்களை எழுத்தாக உருவாக்குவதற்குப் பல சோதனைகளை
மேற்கொண்டுள்ளார் என்பதை அவரது படைப்புகளின் மூலம் அறியலாம். வசனத்தில்
தராசு,ஞானரதம்,நவதந்திரக் கதைகள் போன்ற புதிய முயற்சிகளை அவர்
செய்திருக்கிறார். வசனத்தை மீறியதாயினும் கவிதையின் பூரணத்துவத்தை
எய்தாத ஒரு முயற்சியாக அவரின் „காட்சிகள்... என்னும் கவிதை அமைந்துள்ளது.
மேலும் பாரதி „வடிவம்... பற்றி தெளிவாக சிந்தித்துள்ளார் என்பது
கீழ்கண்ட கவிதையின் மூலம் அறியலாம்.
'என் முன்னே பஞ்சத் தலையணை இடக்கிறது. அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒரு
நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை,அறியாதபடி சக்திபின்னே
நின்று காத்துக் கொண்டிருக்கிறாள்.மனித ஜாதி இருக்குமனவும் இதே
தலையணைஅழிவெய்தாதபடி காக்கலாம் அதனை அடிக்கடி புதுப்பித்துக்
கொண்டிருந்தால்அந்த வடிவத்திலே சக்தி நீடித்து
நிற்கும்.புதுப்பிக்காவிட்டால் அவ்வடிவம் மாறும்,வடிவத்தைக்
காத்தால்,சக்தியை காக்கலாம்'
இதனை வெறும் வசனம் என்பதா? அல்லது கவிதை என்பதா? இது வசனத்தின் வறண்ட
அறிவு பூர்வமான சாதாரண இயல்பை மீறியதாகக் காணப்படுகிறது. கவிதையின்
தன்மையை முழுமையாகப் பெறாமையினால் இது „வசன கவிதை... என்று
அழைக்கப்படுகிறது. வசனகவிதை என்னும் புதிய வடிவத்தைத் திரும்பத்
திரும்பப் படித்துச் சுவைத்தால் அதன் உயர்வையும் தனித்தன்மையும்
உணரமுடியும்.
ந.பிச்சமூர்த்தி
இவ்வழியில் பாரதியின் புதுக்கவிதை முயற்சி 1930-களின் பிற்பகுதியில்தான்
துளிர்விடத் தொடங்கியது.இவருக்குப் பின் புதுக்கவிதையில் முதன் முதலில்
ஆர்வம் காட்டியவர் ந.பிச்சமூர்த்தி என்றே கூறலாம். இவரே புதுக்கவிதை
இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார்.
'பகுத்தறிவுச் சந்தையில்
ஒவ்வொருவரும் கையில்
முற்றுப் புள்ளிகளை
மூர்க்கமாய் வைத்துக் கொண்டு
மனதில் பட்ட துறையில்
முளையடித்துக் கொண்டிருந்தார்
சிலர் சுருதியுடன்சிலர் வருணாசிரமத்துடன்
சிலர் சங்க இலக்கியத்துடன்
சிலர் கம்பருடன்
சிலர் விஞ்ஞானத்துடன்
சிலர் மார்க்ஸ் எங்கல்சுடன்
..................................................................
வேறு சிலர் எதனுடனோ
திடீரென்று என்கையைப் பார்த்தேன்
கமாத்தான் இருந்தது'
என்ற கவிதையில் பகுத்தறிவினை ந.பிச்சமூர்த்தி வலியுறுத்துகின்றார். இவர்
ஆழமான சிந்தனைகளை வைத்துக் கவிதையுலகில் புத்தியாக்கம் கண்டவர். இவரே
புதுக்கவிதைக்குத் தந்தை ஆவார்.
கு.ப.ரா
ந.பிச்சமூர்த்தியின் காலகட்டத்தில் வாழ்ந்த கு.ப.ரா. வும் கவிதை எழுதும்
முயற்சியில் ஈடுபட்டார். இவரின் கவிதைகள் ந.பிச்சமூர்த்தியின்
கவிதைகளிலிருந்து தொனியிலும்,சொல்லும் பொருளிலும்
மாறுபட்டிருந்தன.அதுமட்டுமல்லாமல் பெண்மையை வியக்கும், பெண்ணை எண்ணி
ஏங்கும் அகத்துறைக் கவிதைகளை அதிகமாக எழுதியுள்ளார்.
எடுத்துக்காட்டாக,„கருவளையும் கையும்... பெண்ணின் பிறவி ரகசியம்...விரகம்...
போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
'குட்டி அவ என்ன சோக்கு
என்ன „சோரு... தெரியுமா?
தீண்டாத சாதியவ
கலியன் சாம்பான் பொண்ணுடா?
...................................................................
கெட்ட பயமவடா அவ
என்ன மயக்கு மயக்கரா?
மவராசி போலே அவ
மவா ராங்கிக்காரி'.
என்ற 'ராக்கிநெனப்பு... என்னும் கவிதையை கு.ப.ரா 1939-ஆம்
ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி
மணிக்கொடி இதழுக்காக எழுதியுள்ளார். பாரதியின் வசனக் கவிதைகள், கவிதைகள்
என்று மறுக்கப்பட்டன. பின்பு ந.பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகளும்
மறுக்கப்பட்டன. ஆனால் புதுக்கவிதையின் இயக்கம், எழுத்து... இதழின் மூலம்
தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன் ஆகியோரின் மூலம்
அடித்தளமிடப்பட்டு, ஒன்று சேர்த்து பின்னர்; தி. சோ. வேணுகோபாலன்,
டி.கே.துரைஸ்வாமி, தருமு சிவராமு, சி.மணி, திருலோக சீதாராம்,
சி.சு.செல்லப்பா, பசுவய்யா, எஸ்.வைத்தீஸ்வரன் போன்றோரின் மூலம்
வளப்படுத்திக் கட்டப்பட்டது புதுக்கவிதை ஆகும். இவர்களை அடுத்து
சிற்பி,மீரா,தமிழன்பன், அப்துல்ரகுமான், புவியரசு, மேத்தா, வைரமுத்து,
மீனாட்சி, முதலாகப் பல புதுக் கவிஞர்கள் அதனைப் புதிய மெருகுடன் கட்டிக்
காக்கின்றனர்.
புதிய வாழ்க்கைக் களங்கள், சமூகப் பொருளாதார மாறுதல்கள், மாறிவரும்
மனித உறவுகள், பண்பாட்டுச் சிக்கல்கள், புதிய சமூக அங்கீகாரங்கள்,
திரைப்படங்கள் செய்தித் தாள்கள் இவற்றிலிருந்து இன்றைய புதுக்கவிதை
பிறக்கிறது. புதுக்கவிதையின்கண் காட்சி, கருத்து, கற்பனை, குறியீடு,
படிமம், தொன்மம் ஆகியவை உள்ளடங்கியள்ளன.
குறியீடுகள்:
ஒளி, இருள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, பயணம் போன்றவை குறியீடுகள்
ஆகும். உதாரணமாக, கவிஞர் வைரமுத்து தம்முடைய கவிதையில் சொர்க்கம், நரகம்
என்ற குறியீடுகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.
'காதலித்துப் பார்
சொர்க்கம்
நரகம்
இரண்டிலொன்று
இங்கேயே நிச்சயம்'
என்பார். இதில் சுட்டிக் காட்டப்படும் சொர்க்கமும், நரகமும் முறையே
ஒப்பற்ற மகிழ்ச்சி, சொல்ல முடியாத துயரம் ஆகியவற்றிற்கான குறியீடுகள்
ஆகும். „இந்தியக் குறியீட்டிய வளத்திற்குக் கிடைத்த மற்றொரு
பெருஞ்செல்வம் இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் ஆகும்...என்று அப்துல்
ரகுமான் குறியீடு பற்றிக் கூறுகிறார்.கலை மகள் இதழில், மேற்கண்ட
கூற்றிற்குச் சான்றாக அலைய வைத்த கருணை என்னும் தலைப்பில் கவிஞர்
ர.அய்யாசாமி எழுதிய கவிதையை சான்றாகக் கூறலாம்.
'தூயவனே, அயோத்திநகர் இறைவன் மெச்சும்
தூதுவனே, மறை உணர்ந்த ஞானக் குன்றே,
தீயவினை இருள்நீக்கித் தெளிவு நல்கும்
திருவிளக்கே' என நெகிழ்ந்து நெடிது வீழ்ந்தேன்'
என்று கூறுவதிலிருந்து ராமன் மெச்சும் சிறந்த தூதுவனாகவும்,
தீவினையைக்களைய வந்தவனாகவும் அனுமனைக் கூறுவது புலனாகிறது.
மேலும் சுதேசமித்திரனில்,
'உள்ளத்திருந்தாள் ஒளியானாள்-பின்
உவந்து எழுந்தாள் களியானாள்
மௌ;ள எழுந்தாள் மென்மையளாய்- உடன்
மேவிக் கண்ணின் மணியானாள்'
என்று கவிஞர் மணி,ஆற்றலின் குறியீடான பராசக்தியை மனித மனவளத்திற்குக்
குறித்திருப்பது புலனாகிறது. சக்தி களஞ்சியம் இதழ்த்; தொகுப்பில்,
'காமனைப் போன்ற அழகினாள்- பொல்லாக்
காமத்தை வென்று பழகினோன்'
என்று ஆசிரியர் நாமக்கல் வெ.ராமலிங்கம் கூறுவதும், „காளியாட்டம்...
என்னும் கவிதையில் காளியை இயற்கைக்கும், பச்சை நிறத்திற்க்கும்
குறியீடாக,
'உயிர்களை ஊக்கும் பச்சை
உயிர்களை பெருக்கும் பச்சை'
..............................................
பாயும் பருவங்களினிடையில்,
சாயும் ஒளிக்கதிர்களின் தடையில்,
பொங்கும் கடலலையின் சிலம்பில்'
என்று இயற்கையின் சீற்றத்திற்கும் காளியின் உருவத்தைக் குறியீடாகப்
பயன்படுத்தியுள்ளமை அறியவருகிறது. உள்ளும் புறமும் என்னும் கவிதையில்
'அஞ்செழுத்தும் ஆறெழுத்தும் ஓதமாட்டோம்'
என்று கவிஞர் சுரபி இறை வழிபாடு செய்ய மாட்டோம் என்பதை அஞ்செழுத்து
ஆறெழுத்து என்று குறியீடாகக் குறிப்பிடுகிறார்.
தொன்மம்:
தொன்மம் என்ற சொல் புராணத்தைக் குறிக்கும். புராணக் கதையை 'ஆலவா' எனக்
குறிப்பிடுவார்.
'தொன்மை தானேஉரையோடு புணர்ந்த பழமை மேற்றே'
எனத் தொல்காப்பியர் குறிப்பிடும் தொன்மையின் வளர்ச்சியடைந்த நிலையைத்„தொன்மம்...
எனக் கூறலாம். தொன்மம் பழமையானது ஆனால் புதுக்கவிதையில்
பயன்படுத்தப்படும் போது அது புதுத் தன்மை பெறுகிறது தொன்மங்கள்
பழங்கதையை நினைவூட்டுவதோடு நின்றுவிடுவதில்லை. அவற்றின் அடிக்கருத்து
இக்கால வாழ்வுக்குப் பயன்படுவதாக அமைந்துள்ளது. தொன்மங்கள் தனி
மனிதர்களால் உருவாக்கப்படுபவை அல்ல. மக்கள் தொகுதியினரால்
காலங்காலமாய்ப் பேசப்பட்டும் நம்பப்பட்டும் வருபவை. இத் தொன்மக்
கருத்துக்கள் மனிதனின் மனதில் பதிந்துகிடந்து தக்க தருணங்களில்
கிளர்ந்து எழுகின்றன.தொன்மத்திற்கும் சமயத்திற்கும் மிக நெருங்கிய
தொடர்பு உள்ளது. ஒரு சமயத் தொன்மம் தம் சமயத்தினருக்கு மாத்திரம்
பயன்படும்படி தன் எல்லையைச் சுருக்கிக் கொள்வதில்லை. அதிலிருந்து
பெறப்படும் உண்மை அனைவருக்கும் பொதுவானது. சான்றாக,
'நான் அலங்காரத்தின் ஆண்டாளாய்
ஆனால்ஆடை கொண்டும் ஏவாளாய்'
முதிர் கன்னியைப் பற்றிப் பேச வந்த வைரமுத்து ஆண்டாள், ஏவாள் என்னும்
இரு தொன்மங்களை இணைக்கிறார்.இத்தகைய தொன்மங்களைப் புதுக் கவிஞர்களில்
கடவுள் நம்பிக்கை உடையோரும், கடவுள்
நம்பிக்கையற்றோரும்எடுத்தாளுகின்றனர். சமய நம்பிக்கையுடையோர் தம் சமயத்
தொன்மம் என்றும் பிற சமயத் தொன்மம் என்றும் பாகுபடுத்திப் பார்க்காமல்
அனைத்து சமயத் தொன்மங்களையும் பயன்படுத்தின்றனர்.சான்றாக பௌத்த,
கிறித்துவ சமயத் தொன்மங்களும் இணைத்துக் காட்டப்படுகின்றன. போதிமரம்
என்ற பௌத்த சமயத் தொன்மத்தையும் சிலுவைமரம் என்ற கிறித்துவ சமயத்
தொன்மத்தையும் இணைத்து ஆளுவதையும் பார்க்க முடிகிறது.
முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 028
பேச:098424 95241.
|