மானுடக்கவி பாரதியும் மகாகவி பாரதியும்
 

முனைவர் பூ.மு.அன்புசிவா


விஞர்களைத் தனித்தனியாகப் பீடத்தில் நிறுத்தி, அவர் மகாகவியா, இவர் மகாகவியா, எவர் மகாகவி என்றெல்லாம் வர்ணம் பூசி வரிசையில் வைக்க முயல்வது, ஒருபுறம் வீணான செயலாக எனக்குத் தோன்றுகிறது! ஆயினும் தமிழ்நாட்டில் பாரதியின் திறமைப் புலமைக்கு ஓர் இடத்தை அளிக்கத் தமிழறிஞர்கள் முற்பட்டிருப்பதால், அதைப் பற்றி எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த ஆய்வுக்குச் சில கவிஞர் வால்மீகி, வியாசர், காளிதாசர் ஆகியோர் ஆக்கங்களைச் சிறிது ஆராய முயல்கிறேன்.

கவிஞர்கள் பலவிதக் கனி வகைகளைப் போன்றவர்கள்! கவிஞரின் தனித்துவப் படைப்புகள் எல்லாம், தனித்தனிக் கனிகளின் அரிய பழச்சுவை போல, முற்றிலும் வேறுபட்டு உள்ளத்தில் உணர்ச்சி அளிப்பவை! பலவிதக் கனிகளான மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பீச், பியர் ஆகியவற்றுள் எப்பழம் சுவையில் உயர்ந்தது, எப்பழம் சுவையில் மட்டமானது என்று கேட்டால் எவ்விதம் பதில் அளிக்க முடியும் ? அவரவர் காலத்தின் கோலங்களை அவரவர் காவியத்தில், கவிதைகளில் வானவில் போல ஓவியம் தீட்டுகிறார், படைப்பாளிகள்!|

முப்பத்தி ஒன்பது வயதில் காலமான மக்கள்கவி பாரதி படைத்த காவியப் பாக்கள் அளவில், எண்ணிக்கையில் சிறிதே ஆயினும், நயத்தில் உயர்ந்து, உணர்ச்சி ஊட்டலில் மகாகவிகளுக்கு இணையாக இடத்தைப் பெறுகிறார். நோபெல் பரிசு பெற்ற தேசீயக் கவியோகி ரவீந்திரநாத் தாகூருக்கு நிகரானவர் பாரதியார். 'சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே ' என்று தினமும் தொழுது, சுதந்திரம் அடையப் போவதை முழுமையாக நம்பிய போது, அவரது நிழலாகக் காட்டிக் கொண்ட புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு இந்திய விடுதலையில் அறவே நம்பிக்கை யில்லை! பாரத தேச விடுதலையை வீரர்களைப் பாராட்டியோ, பாரத சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ, பாரதம் விடுதலை பெற்றதைப் பற்றியோ பாரதிதாசன் எந்த ஒரு கவிதையும் எழுதியதாகத் தெரியவில்லை! வாலிபராய் இருந்தபோது மகாத்மா காந்தியைப் பற்றிப் பாடிய பாரதிதாசன், அவர் கொலை செய்யப்பட்டு மாண்ட போது ஓர் இரங்கல் பா கூட எழுதவில்லை.

'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் ' என்று பாரதி தீர்க்க தெரிசியாய்
1908 இல் கனவு காணும் போது, விடுதலை இயக்கத்தைப் பாரதிதாசன் ஒரு பாட்டில் நக்கல் புரிந்து கேலி செய்வதைப் பலர் அறிய மாட்டார்கள்! கூண்டுக் கிளியைப் பற்றி எழுதும் போது பாரதிதாசன், 'அக்கா! அக்கா! என்றாய், அக்கா வந்து கொடுக்க சுக்கா, மிளகா, சுதந்திரம் கிளியே? ' என்று எள்ளி நகையாடுகிறார்! இதை நான் இங்கே குறிப்பிடு வதற்குக் காரணம், வரப்போகும் மெய்ப்பாடுகளை முன்கூறும் மகாகவிக்குரிய தீர்க்க தரிசனம், மெய்ஞானம், பாரதிக்குத்[Futuristic Intuition]தெளிவாக இருந்தது என்பதைக் காட்டுவதற்குத்தான்!

பாரதி பாரத விடுதலைப் போரின் ஆரம்ப காலங்களில், அதைப் பாக்களில் முரசடித்துப் பறைசாற்றிய நாட்டுக் கவி. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று உறுதியாக நம்பிப் பாடிய விடுதலைக் கவி. ஷேக்ஸ்பியர், காளிதாசர் போல அநேக நாடகங்கள் எழுதா விட்டாலும், 'பாஞ்சாலி சபதம் ' என்னும் ஒரு நாடகக் காவியம் படைத்த ஓர் நாடகக்கவி. 'ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி ' என்று ரஷ்யப் புரட்சியைப் பாராட்டிய புரட்சிக் கவி. 'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே ' என்று படை வீரர்களுக்கு உச்ச சக்தி ஊட்டிய போர்க்கவி. கவிதையில் சிலேடை புகுத்திய நக்கல் கவி. கவிதையில், பாடல்களில் புதுமையாக இசையைப் புகுத்திய இசைக்கவி. திரைப்படங்களில் அவரது இனிய பாடல்கள் பல இடம் பெற்றுள்ளதால் அவர் ஒரு திரைக்கவி.

வள்ளுவர், ஒளவையாரைப் போல அறவழி காட்டும் 'புதிய ஆத்திச்சூடியை' ஆக்கியதால், அவர் ஓர் அறக்கவி. பைரன், ஷெல்லி போல காதல், காமத்தை எழுதாவிட்டாலும், பாரதியின் பாடல்களில் காதல் காவியச் சுவைகளைக் காண முடிகிறது. வறுமை, ஏழ்மை, தாழ்மை, கீழ்மை, பழமை, மடமை, பெண்மை ஆகியவற்றைப் பற்றி உணர்ச்சியோடு பல பாக்கள் எழுதிய மானிடக்கவி. வீட்டுக் குள்ளே பூட்டி வைத்து அடிமைப்பட்ட பெண்களுக்கு விடுதலை அளித்துப் புதுமைப் பெண்களை உருவாக்கிய புதுமைக்கவி. 'ஜாதி, மதங்களைப் பாரோம்' என்று மதச்சார்பற்ற பண்பைப் போதித்த மானிடக் கவி. தெய்வ நம்பிக்கை கொண்டு, சக்தியைப் பற்றிப் பல பாடல்கள் பாடிய பக்திக்கவி. அவரது தோத்திரப் பக்திப் பாடல்கள் பல யாப்பிலக்கணப் பண்புகளைப் பின்பற்றியும், பல இசைக் கீதங்களாகவும் எழுதப் பட்டவை.

'தமிழ்த்திரு நாடுதனைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா ' என்று சின்னஞ் சிறு மதலைகளுக்கு நாட்டுப் பற்றை ஊட்டுகிறார். 'வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு ' என்று தமிழ், தமிழர், பாரத நாடு மூன்றையும் ஒருங்கே பிணைக்கின்றார், பாரதி. கண்ணன் பாட்டில் பாரதி கண்ணன் பிறப்பில் ஆரம்பித்துக் கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காதலியாக, ஆண்டானாக, குல தெய்வமாகக் காண்பது ஒரு புதுமுறைக் கவிதை ஆக்கம்.

'சக்தி எல்லை யற்றது, முடிவற்றது, கூட்டுவது, கலப்பது, பிணைப்பது, வீசுவது, சுழற்றுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது, சக்தி குளிர் தருவது, அனல் தருவது, எழுச்சி தருவது, கொல்வது, உயிர் தருவது என்று வசன கவிதையில் சக்தியைப் பற்றி விளக்கிய விஞ்ஞானக் கவி. 'சக்தி முதற்பொருள் ' என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பளு-சக்தி சமன்பாட்டைக்
[Mass Energy Equation] காட்டிப் பண்டமும் சக்தியும் ஒன்று எனக் கூறிய பௌதிகக் கவி. பாரதியின் நீண்ட வசன கவிதைகள் அனைத்திலும் அவரது பௌதிக, இரசாயன, உயிரியல் விஞ்ஞானக் கருத்துக்களை எளிதாகக் கூறும் கவித்துவத் திறமையைக் காணலாம். மகாசக்தியைப் பற்றி எழுதிய பாவொன்றில் 'விண்டுரைக்க அறிய அரியதாய், விரிந்த வான வெளியென நின்றனை, அண்ட கோடிகள் வானில் அமைத்தனை, அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை, மண்டலத்தை அணு அணுவாக்கினால் வருவதெத்தனை, அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை ' என்று பிரபஞ்சத் தோற்றத்தைக் காட்டுகிறார்.

பல்சுவைப் பகுதியில் பாரதியின் சுயசரிதை உள்ளது. பாரதி அறுபத்தாறுக் கவிதைக் கொத்தில் ஷேக்ஸ்பியரின் சானெட்கள்
[Sonnets (14 Lines)] போன்று பலவிதத் தலைப்புகளில் எட்டு வரிகளில் தனது உயர்ந்த கருத்துகளைப் பாக்களாக அருளியுள்ளார். அடுத்து பாஞ்சாலி சபதம் படித்தின்புற வேண்டிய ஓர் அழகிய நாடகக் காவியம். உலகப் புகழ் பெற்ற நூல் பகவத் கீதையைத் தமிழில் எழுதியிருக்கிறார்.

பாரதத்தின் மாபெரும் இரண்டு இதிகாசங்களான வியாச முனிவர் எழுதிய மகாபாரதமும், வால்மீக முனிவர் எழுதிய இராமாயணமும் இந்தியா வெங்கும் மற்றும் தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் அறியப்பட்டவை. பாக்கள்
90,000 எண்ணிக்கை கொண்ட மகாபாரதம், உலக இதிகாசங்களில் மிகப் பெரிதாகக் கருதப்படுகிறது! இரண்டிலும் பெரியது மகாபாரத மாயினும், இராமனை விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டும் இராமாயணமே இரண்டிலும் மிக்க புகழ்பெற்றது. வால்மீகி இராமாயணம் எட்டுக் காண்டங்களுடன் எழுதப்பட்டு, அதன் பாக்கள் மகாபாரத்தின் எண்ணிக்கைக்குக் கால் பங்கிற்கும் ஜசுமார் 25,000) மேலாகச் சிறிது கூடியவை. இந்துக்களில் பலர் இராமனைக் கடவுளாகவே தொழுது வருவதற்கு வால்மீகி இராமாயணம் வழி வகுத்தது!

இராமனைப் போன்று நியாயத்துக்குப் போரிட்டு இறுதியில் வென்ற பாண்டவரில் யாரையும், வியாசர் வால்மீகியைப் போல் கடவுள் அவதாரமாக காட்டவில்லை! பாண்டவர்களும், கௌரவர்களும் போரிடும் மகாபாரத யுத்தத்தின் இடையே பிறக்கிறது வியாசரின் உன்னத படைப்பான பகவத் கீதை. தேரோட்டியாக வரும் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பரமாத்மா அர்ஜனனுக்குக் கீதையை ஓதுவதாக வியாசர் எழுதியதால் மகாபாரதமும் மக்களிடையே பெரிதும் பரவியது. கிளைக் கதைகளும் இடையிடையே எழுந்து இரண்டையும் மாபெரும் இதிகாச நூலாக்கி விட்டன.

வண்ணான் சொல் வலுப்பெற்று வனாந்தரத்தில் விடப்பட்ட கர்ப்பவதி சீதாவைக் காப்பாற்றிய வால்மீகி, அவளது அனுதாபக் கதையை அவள் வாயால் கேட்டு இராமகதை என்னும் இராமாயணத்தைக் காவியமாக எழுதினார். ஆனால் இராமாயணத்தில் இராமனை விஷ்ணுவின் அவதாரமாகவும், இராவணனைப் பத்துத்தலை அரக்கனாகவும், அனுமார், சுக்கிரீவன் ஆகியோரை வானரமாகவும் காட்டியிருப்பதால், மெய்யான மனிதரின் நிஜமான நடைமுறைகளையோ, நிகழ்ச்சிகளையோ காண முடிவதில்லை. இராமாயணத்தில் குரங்குகள் பறக்கின்றன! அனுமார் மருந்துள்ள மரத்தின் கிளையைக் கொண்டு வருவதற்குப் பதிலாகச் சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கடல்மேல் பறந்து வருகிறார்! இவ்விதம் நிஜமற்ற கற்பனைச் சம்பவங்களை வாரி வழங்கி யிருக்கிறார் வால்மீகி!

இராமாயணத்தில் பூசப்பட்டுள்ள பொய் வேடங்களையும், தெய்வீகப் புளுகுப் பூட்டகங்களையும் நீக்கி, வால்மீகி இராமன், இராவணன், அனுமான் அனைவரையும் வெறும் மனிதராகக் காட்டியிருந்தால், மெய்யாக நிகழ்ந்த இராம கருக்கதை இன்னும் அழகாகத் தோற்றம் அளித்து மகிழ்ச்சி தரும்! மனித ஆற்றலை மீறிய தெய்வீகத் திறமைகள், அசுரப் பண்புகள், வானர வடிவங்கள் போன்றவற்றை வடிகட்டி எடுத்து விட்டால் இராம கதைக்கரு பலமடங்கு வலுபெற்று படிப்போர் மனதைக் கவருவதுடன் வரலாற்று மெய்ப்பாட்டைக் காட்டும் தகுதியையும் பெற்றிருக்கும்! இல்லாத தெய்வாம்சங்களை இராமன், இராவணன், அனுமான் ஆகியோருக்குச் சூட்டி, இராமர் கதையை ஒரு போலிப் பொய் இலக்கியமாக ஆக்கிவிட்டார், மகாகவி வால்மீகி! அந்தக் காலத்தில் கடவுள் அவதாரமாகக் காட்டினால்தான் இராமனைப் பற்றி மக்கள் படிப்பார்கள் என்பது வால்மீகி ஒரு முக்கிய குறிநோக்கமாகக் கொண்டு இராமாயணத்தைப் படைத்திருக்கலாம்! இவ்விதம் இரண்டு இதிகாசங்களிலும் நம்ப முடியாத பல கற்பனை நிகழ்ச்சிகளை வால்மீகியும், வியாசரும் காட்டியுள்ளார்கள்.

ஐந்தாம் நூற்றாண்டில்
(375-455) இரண்டாம் சந்திர குப்தா காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் காளிதாசர் எழுதிய, சாகுந்தலம் என்னும் கவிதை நாடகத்தில் துர்வாச முனிவர் போட்ட சாபத்தால் துஷ்யந்த ராஜா கந்தருவ மணம் புரிந்த சகுந்தலையை மறந்து விடுவதே கதையின் முக்கிய திருப்பம்! மேலும் காளிதாசர் குமாரசம்பவம், ரகுவம்சம், மேகதூதம், ரிதுசம்காரம் போன்ற நூல்களையும் ஆக்கியுள்ளார். ஆனால் ஜெர்மன் மாமேதை காய்தே ஜபுழநவாநஸ முதல் மேலை நாட்டு அறிஞர்கள் சிலர், காளிதாசர் நாடகங்களில் செயற்கைத் தன்மைகள் மிகுந்துள்ளன என்று புறக்கணித்து, உலக நாடக மேதைகளுக்கு இணையாக அவரை ஒப்புக் கொள்ளவில்லை!

பாரதியாரின் பேத்தியான டாக்டர் விஜயா பாரதி, பாரதியாரின் புதல்வி தங்கம்மாளின் மகள். பாரதியாரைப் பார்த்திராத விஜயா, அவரைப் பற்றி தாய் தங்கம்மாளும், பாட்டி செல்லம்மாவும் சொல்லக் கேட்டுப் பரவசம் அடைந்தவர். தமிழ் இலக்கியத்தில் மேற்கல்வி பயின்று, பாரதியின் சரிதையை ஆங்கிலத்தில் 'பாரதி படைப்புகளைப் பற்றிய ஓர் திறனாய்வு
‘ [A Critical Study of Bharathi 's Works] என்னும் ஆய்வுத்தாளை எழுதி Ph.D. பட்டம் பெற்றவர். அந்த ஆய்வுரை மற்ற மொழிகளிலும் பெயர்க்கப் பட்டுள்ளது. அவர் 10 நூல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். அவற்றில் அநேகம் தமிழில் எழுதியவை.

கவிதைப் படைப்பில் தனக்கு ஈடுபாடும், திறமைப்பாடும் இல்லாததால் பாரதியாரைப் போல் தான் பாக்கள் எழுத விரும்ப வில்லை என்று விஜயா சொல்கிறார். கனடாவின் லண்டன் நகரில்
30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து 'லண்டன் ஆசிய ஆஃபிரிக்கக் கலாச்சாரப் பள்ளியில் ‘ [London School of Oriental & African Studies], தமிழ் இலக்கியத்தைப் புகட்டி வந்தவர். பாரதி பிறந்த நினைவு நாளில் ஜ2002 டிசம்பர் 11ஸ அவரது நூல் 'அமரன் கதை ' வெளியிடப்பட்டது. நாவலாக எழுதப்பட்ட அந்த நூலில் மெய்யான பாரதியாரை இலக்கியச் சுவையோடு நிஜமும், கற்பனையும் பிணைந்து விஜயா எடுத்துக் காட்டியுள்ளதாகக் கூறுகிறார்.

சுப்ரமணிய பாரதி
1882 டிசம்பர் 11 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயர், லட்சுமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். பாரதி என்னும் பட்டப் பெயர் அவரது கவித்துவத் திறமையை மெச்சி 1893 இல் அவர் பதினொரு வயதாகும் போது, அரசவைக் கவிக் குழுவினரால் அளிக்கப் பட்டது. பிறகு அந்தப் பட்டப் பெயரே நிஜப் பெயராக ஒட்டிக் கொண்டது! 1894-1897 ஆண்டுகளில் திருநெல்வேலி இந்து கல்லூரியில் பயின்றார். ஏழு வயதுப் பெண்ணான செல்லம்மாவை 1897 ஜூன் 15 ஆம் தேதியில் மணந்தார். பாரதிக்கு 7 வயதாகும் போது தாயார் 1889 ஆண்டிலும், பதினாறு வயதாகும் போது தந்தையார் 1898 ஆண்டிலும் காலமாயினர். 1898-1902 ஆண்டுகளில் பெனாரஸக்குச் ஜகாசிஸ சென்று அத்தை ஜசித்தி?) வீட்டில் தங்கி சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைக் கற்று, அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வில் பங்கு கொண்டார். பாரதியாருக்கு நன்கு ஆங்கிலம், வங்காளம், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகள் தெரியும்.

பாரதி பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கைத் தொகுப்பாளியாகவும் பலமுறைப் பணி புரிந்திருக்கிறார். அவர் இந்துவானாலும், ஏசுக் கிறிஸ்து, அல்லாவை இறைவனாகப் பாக்களில் எழுதினார். 'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் ', என்று ஏசு நாதரைப் பற்றிப் பாடுகிறார். அல்லாவைப் பற்றிப் பாடும் போது 'பல்லாயிரம் கோடி அண்டங்கள் எல்லாத் திசையிலும் ஓர் எல்லை யில்லா வெளி வானிலே, நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன், சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி ' என்று வாழ்த்துகிறார்.

பிறகு தமிழகத்துக்கு மீண்டு
1902-1904 ஆண்டுகளில் எட்டயாபுரத்தில் அரசுக் கவிஞராகப் பணி புரிந்தார். மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில மாதங்கள் (ஆகஸ்டு-நவம்பர் 1904) தமிழாசிரியராக வேலை பார்த்தார். 1904 நவம்பரில் சென்னைக்குச் சென்று பெயர் பெற்ற தமிழ்த் தினசரி சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக வேலை செய்தார். அதே சமயத்தில் 'பால பாரதம் ' ஆங்கில இதழுக்கு ஆசிரியராகவும் பணி புரிந்தார். அத்துடன் 1907 இல் 'இந்தியா ' என்னும் தமிழ் வார இதழுக்கும் ஆசிரியராகவும் இருந்தார்.

பாரதத்தில் உரிமைப் புயல் வீச ஆரம்பித்த காலத்தில் பாரதி விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். பாரதியாரின் தீவிரத் தேசீயத் தொண்டு 1905 ஆண்டு முதல் ஆரம்பித்தது! அவரது கனல் தெறிக்கும் விடுதலைப் போர்க் கவிதைகள் யாவும் அப்போது உதித்தவைதான்! கப்பல் ஓட்டிய தமிழர், சிறையில் செக்கிழுத்துச் செத்த சிதம்பரம் பிள்ளையைப் பாரதியார் 1906 இல் முதலில் சந்தித்தார். அந்த ஆண்டு கல்கத்தாவில் நிகழ்ந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடந்த அந்த மாநாட்டில்தான் இந்தியருக்கு 'வேண்டும் சுதந்திரம் ' என்னும் ஏகோபித்த கோரிக்கை முதன்முதலில் எழுந்தது!

அந்த விடுதலை முழக்கத்தை முழுமனதுடன் ஆதரித்த பாரதி, திலகர், அரவிந்தர் கையாண்ட இந்திய தேசிய காங்கிரஸின் தீவிரப் போக்குக் கிளையில்
[Militant Wing of the Indian National Congress]இணைந்து பணி புரிந்தார்! சகோதரி நிவேதிதாவைப் பாரதியார் சந்தித்ததுவும் அந்த ஆண்டில்தான்! 1907 ஆம் ஆண்டில் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் புகுந்த முன்னணித் தீரர்கள் பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி, லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ், வா.வே.சு. ஐயர், காஞ்சி வரதாச்சாரியார் ஆகியோருடன் தொடர்பு கொண்டார். திலகர் ஆயுதம் ஏந்திய படைப்பலத்தைக் கொண்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் போரிடத் தயாராக வேண்டும் என்று வெளிப்படையாகவே பறைசாற்றினார்.

1908 ஆம் ஆண்டில் சென்னையில் 'விடுதலை நாளைக் ' கொண்டாட ஒரு பெருங் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்தார். அப்போது அவரது தீப்பறக்கும் 'வந்தே மாதரம் என்போம்', 'விடுதலைப் பாட்டு ', 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே ', 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு ', 'ஜய ஜய பாரதம் ' ஆகிய தேசீயப் பாடல்கள் அச்சிடப்பட்டுக் கூட்டத்தில் யாவருக்கும் வினியோகிக்கப்பட்டன.

பாரதியாருக்கு
26 வயதாகும் போது 1908 ஆம் ஆண்டில் அவரது தேசப் பற்றுக் கவிதைகளின் தொகுப்பான முதல் நூல் 'சுதேசக் கீதங்கள் ' வெளியானது. இந்தியா செய்தித்தாள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெறுப்புக்குள்ளாகிக் கண்காணிப்புக்கும் ஆட்பட்டது! அதனால் சிறைப்படாமல் தப்பிட பாரதி பிரென்ச் கைவசமான பாண்டிச்சேரியில் சரண்புக நேரிட்டது. 1908-1910 ஆண்டுகளில் இந்தியா இதழ் பாண்டிச்சேரியிலிருந்து பதிவாகி வெளியிடப் படுகிறது. 1909 ஆண்டில் பாரதியாரின் 'ஜன்மபூமி ' கவிதைத் தொகுப்பு வெளியானது. 1910 இல் அரவிந்தரும், வா.வே.சு. ஐயரும் பாண்டிச்சேரிக்கு வந்தார்கள். பிரிட்டிஷ் அரசு கைது செய்வதைத் தவிர்க்க பாரதியார் 1908 முதல் 1918 வரை பாண்டிச்சேரியிலே தங்கி அரசியல் கட்டுரைகளையும், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றைப் படைத்தார். 1912 இல் பாரதி பகவத் கீதையைத் தமிழில் எழுதி வெளியிட்டார். 1917இல் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் வெளியிடப்பட்டன.

பாண்டிச்சேரியை விட்டுக் கடலூரில்
1918 ஆம் ஆண்டு கால் வைத்ததும், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியாரைக் கைது செய்து 34 நாட்கள் சிறையிலிட்டுப் பின்னால் விடுவித்தது! 1919 இல் எட்டயாபுரத்துக்கு ஏகிய பாரதி வறுமையில் துன்புற்றதாக அறியப்படுகிறது. 1919 இல் மீண்டும் சென்னைக்குச் சென்று போது மகாத்மா காந்தியை பாரதி சந்தித்தார். அங்கே மறுபடியும் (1920) பாரதி திருவல்லிக்கேணி சுதேசமித்திரன் தினத்தாளில் ஆசிரியராகச் சேர்ந்து பணி புரிந்தார். 1921 ஆம் ஆண்டில் புரட்சிக்கவி பாரதியார் தனது 39 ஆவது வயதில் பூவுலகை விட்டு புகழுலகுக்கு ஏகினார். பாரதம் விடுதலை பெற்றதும் எட்டயாபுரத்தில் பாரதிக்கு நினைவாக ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டது. இன்னும் பல்லாண்டுகளுக்கு வாழ்ந்து தமிழ்க் காவியங்களைப் படைத்து, தமிழன்னையின் ஆரங்களாக ஆக்குவதற்குள் பொறுமையற்று, இறைவன் அவரது இனிய உயிரை அபகரித்துக் கொண்டான்!

பாரதியார் நமக்கெல்லாம் இரண்டு கட்டளைகள் இட்டுப் போயிருக்கார்! முதற் கட்டளை: 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் '. இரண்டாம் கட்டளை: 'தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ' இவற்றின் உட்பொருள் என்ன ? புதிய இந்தக் கணனி யுகத்தில் அகிலவலையில் உலக நாடுகள் யாவும் இணைக்கப் பட்டுள்ளதால் இப்பணிகளைச் செய்வது நமக்கு எளிது. உலகத்தில் உள்ள உயர்ந்த கலைக் களஞ்சியங்களையும், விஞ்ஞானப் படைப்புகளையும் தமிழில் ஆக்குவதற்கு யாவரும் முற்படுமாறு நம்மை வேண்டுகிறார். அதே போல் தமிழில் படைக்கப் பட்டுள்ள அரிய காவியச் செல்வங்களை அன்னிய மொழிகளில் எழுதி, தமிழ் இலக்கியங்களை உலகோர் அறியும்படி முயலவேண்டும் என்று ஆணை யிடுகிறார்.

திருக்குறள் பன்னாட்டு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது போல், தமிழ்க் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை அறநூல்களான ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நாலடியார், பாரதியின் கவிதைகள், தமிழறிஞரின் கதைகள், கட்டுரைகள் ஆகியவை அன்னிய மொழிகளில் ஆக்கப்பட வேண்டும். கவியோகி இரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலம் கற்றுத் தனது கீதாஞ்சலியை மொழிபெயர்த்த பிறகுதான் உலகத்தாரால் அறியப்பட்டு, இலக்கிய நோபெல் பரிசு கிடைக்க அவருக்கு வழியேற்பட்டது.

'வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ' என்று வீர சக்தியிடம் வரம் கேட்கும் போது, நிமிர்ந்து கேட்கிறார் பாரதி! 'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருத்தல் ' என்று தனது கடமைகளை எளிமையாக, இனிமையாக எடுத்துக் கூறுகிறார் பாரதி! பாரதியின் படைப்புகள் எடையிலோ, எண்ணிக்கையிலோ சிறுத்திருந்தாலும், கருத்திலும் காவிய நயத்திலும் அவர் தொட்டு எழுதாத மனிதத் தலைப்புகளோ, பிரச்சனைகளோ இல்லை என்று அழுத்தமாகக் கூறலாம்.