பக்தி
இலக்கியத்தில் 'நாயக-நாயகி' வெளிப்பாட்டு உத்திகள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
பக்தி
என்பதற்கு, விசுவாசம், வழிபாடு, அன்பு என அகராதி பொருள் தருகிறது. பக்தி
என்பது பகவானிடத்தில் செலுத்தப்படும் அன்பேயாகும். 'பக்தி என்னும் சொல்
இறை என்னும் செம்பொருளிடத்து அடியவர் காட்டும் அன்பைக் குறிக்கிறது.
தெய்வ நெறியில் செல்லும் அடியவர் ஆண்டவனை நினைந்து நைந்துருகும்
திருக்காட்சியே பக்தி எனப்படும்.'1 பகவானிடத்தில் அன்பு உண்டாகும்
பொழுது அவரைப் பற்றிய சிந்தனை உண்டாகிறது. பக்தி முதிரும் பொழுது
இறைவனைப் பற்றிய நினைவு இடையீடில்லாமல் பக்தனின் உள்ளத்தில்
ஊற்றெடுக்கிறது.
பக்தியின் நோக்கம்:
இறைவனிடத்தில் ஆராக்காதல் உடையவர்கள் அவனை இடையறாது நினைத்துக்
கொண்டிருத்தலும், அவனைத் தனக்கு உயிராகக் கருதுதலும், அக்காரணத்தால்
இறைவனுக்கு மிகவும் பிரியமாகத் தன்னை ஆக்கிக் கொண்டு இறைவனது அருளைப்
பெறுதலும் பக்தியின் நோக்கம் ஆகும். 'அன்பினால் இறைவனை அடையத்
துடிக்கும் ஆன்மாவானது தன்னைப் பெண்ணாகப் பாவித்து அன்பு செலுத்துகிறது.
இதனையே நாயக-நாயகி பாவமாகக் கூறுவது என்றும், அடியவர்களின்
வாழ்க்கையிலுள்ள பாவனை தெய்வீக சாதனையின் தோற்றங்கள் என்றும்
ப.அருணாசலம் கூறுகின்றார்'2 பக்தி இலக்கிய காலத்தில் எழுந்த சைவ, வைணவ
இலக்கியங்களில் சில 'நாயக-நாயகி' பாவத்திலேயே பாடப்பட்டுள்ளன. ஆண்டாள்,
திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோர் பயன்படுத்திய 'நாயக-நாயகி' பாவ
உத்தியை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
பக்தி
இலக்கியம்:
இறைவனை நினைத்து நினைத்து இடையறா அன்பும் பற்றும் மேலோங்கி அவனை அடையும்
ஆவல் பெருக்கத்தால் உள்ளம் உருகி நோற்கும் தன்மையை பக்தி நிலை எனலாம்.
பக்தி நிலையில் உள்ளத்தில் கிளாந்;து எழும் உணர்ச்சிப் பெருக்கை
வெளிப்படுத்தும் வாயிலாகப் பக்தி இலக்கியங்கள் மலர்கின்றன. பிறசமயத்
தாக்குதலை முறியடிக்கும் முயற்சியாகத் தன் சமயச் சிறப்புக்களை உள்ளம்
உருகும் தன்மையாகவும், உணர்ச்சி கூட்டும் முறையாகவும் கூறிப் பிற சமயக்
கொள்கைகளை குன்றவுரைக்கும் இலக்கியங்களைப் பக்தி இலக்கியங்கள் எனலாம்.
பக்தி இலக்கியங்கள் எனப்படுபவை மக்களைப் பாடாது இறைவனைப் பற்றியும்,
இறையனுபவத்தைப் பற்றியும் பாடுவது.
'கி.பி.650
முதல்
950
வரையுள்ள முந்நூறு ஆண்டு காலத்தைப் பக்தி இயக்ககாலம் என்பர் அறிஞர்'3
இக்காலக் கட்டத்தில் பக்தி இயக்கத்தை முன்னின்று நடத்திச் சென்ற சைவமும்,
வைணவமுமே தமிழ்ப் பக்தி இலக்கியத்துக்குப் பெருங்கொடை நல்கியுள்ளன. 'பக்தியியக்கத்தின்
செல்வாக்கு தமிழ்க்கவிஞரை மூன்று வழிகளில் ஆட்கொண்டது எனலாம்.'4
அடியார்களின் வாழ்க்கைச் சம்பவங்களை வியந்து பாடினர்; இறை வழிப்
பாட்டினைத் தூண்டும் தோத்திரப் பாடல்களை யாதத்னர்; பக்தி நலங்கனிந்த
பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற காவியங்களை இயற்றினர். தோத்திரப்
பாடல்களுள் ஊனுருகி உளமுருகி ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் தொகுப்பே
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். தமிழில் பக்தி இலக்கியம் என்னும் போது
சைவ நூல்களான பன்னிருதிருமுறையும் வைணவ நூலான நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தமும் முதன்மையானவைகளாகத் திகழ்கின்றன. வைதிக சமயப் பிரிவுகளில்
பக்தி வைதிக சமயப் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலும் நாயக-நாயகி
பாவச் செய்யுள்கள் உள்ளன. இறைவன் மேல் தமக்குள்ள அன்பின் வேகத்தையும்,
ஆழத்தையும் புலப்படுத்துவதற்கு இறைவனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும்
பாவித்துக் கொண்டு அஃறிணைப் பொருள்களைத் தூது விடுகின்றனர். தலைவன்
தன்னுடைய எழில், சிந்தை, நிறை, வளை, நீர்மை என்பனவற்றைக் கவர்ந்து
விட்டதாகவும், தலைவனால் தமக்குப் பசலை நிறம், வளைகழலுதல், களை சோர்தல்
முதலியவை ஏற்பட்டதாக ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியுளள்னர்.
'காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்'
5
என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு எடுத்துக்காட்டாய் இவர்கள்
பாடியுள்ளனர். பக்திப் பாடல்களைப் பாடிய இவர்கள் இறையருளைப் பெற்றவர்கள்
இறையோடு கலந்தவர்கள். பக்தி அனுபவத்தையே காதல் அனுபவமாகப்
பாடியிருக்கின்றனர். பக்தியைக் காதலாக உருவகித்திருக்கின்றனர்.
இறைவனுடைய காதலைப் பெறுதல் என்பது இறையனுபவத்தைப் பெறுவதுதான். இறைவனோடு
இரண்டறக் கலக்கும் பக்தி அனுபவத்தை காதல் அனுபவமாகப் பாடியுள்ளனர்.
இலக்கிய உத்திகள்:
ஒரு கலைஞன் தன் துறையின் வெளியீட்டிற்குப் பயன் கொள்ளும் ஆற்றலும்
ஆக்கமுறையும் உத்தி எனப்படுகிறது. இலக்கிய ஆக்கத்தைப் புனைதற்கு கலைஞன்
கண்ட பல நோக்க முறைகளும் மறைந்தும் வெளிப்பட்டும் சிறுகூறிலும்,
முழுமையிலும் சொல்லாகவும் கருத்தாகவும் பொருந்தி அமைவது உத்தியாகும்.
உத்தி என்னும் சொல் தொல்காப்பியம் முதலே ஆளப்படுகிறது. நன்னூல் என்னும்
இலக்கண நூல்,
'நுதலிப் புகுத லோத்துறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடங் கூறல்
.....................................................................
.....................................................................
உய்த்துணர வைப்பென வுத்தி யென் னான்கே'
6
என முப்பத்திரண்டு உத்தி வகைகளைக் கூறுகிறது. உத்திகளின் வகையும்,
தொகையும், நிலையும் காலந்தோறும் மாறுபடுவது, படைப்போற்கேற்பவும்,
பாடலின் நோக்கம், பயன், அமைப்பு போன்ற பிற பலவற்றிற்கேற்பவும் அமையக்
கூடியது. உத்திகளின் வகையும், தொகையும் பலவாறாக இருந்தாலும் பக்தி
இலக்கியத்தை ஆராயும் போது பக்தி இலக்கியத்தின் முதன்மையான உத்தி எனப்து
'நாயக-நாயகி' பாவனை ஆகும்.
நாயக - நாயகி பாவனை உத்தி:
இறை வழிபாட்டு நெறியைப் பாடவந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் 'நாயக-நாயகி
பாவம்' என்னும் புதிய இலக்கிய உத்தியைப் பாடல் நெறியாக்கிப் பக்தியை
வளர்த்தனர். இதன் விளைவால் மக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கம்
அதிகமாகியது. பக்தி உணர்வு செழித்தது. இறைவனை அடையும் நெறிகளுள் 'நாயக-
நாயகி பாவனை' ஒன்றாகும். இவ்வுறவின் அடிப்படை அன்பு. ஆணும், பெண்ணும்
ஊழ்வினையாலும் சூழ்வினையாலும் கொள்ளும் அன்பு காதல் ஆகும். இக்காதலை
அடிப்படையாகக் கொண்டு சைவ சமய அடியார்களும,; வைணவ சமய ஆழ்வார்களும்
இறைவனைத் தலைவனாகவும் தம்மை அவ்விறைவன் மீது காதல் கொள்ளுகிற
தலைவியராகவும் ஆக்கிக் கொண்டு பக்திப் பாடல்களைப் பாடினர். 'பாகவதத்தில்
கோபிகைகளின் உபாக்கியானங்கள் எல்லாம் நாயக-நாயகி பாவத்தைத் தழுவி
எழுதப்பட்டனவே' என்றும், மகா புத்திமதியான மீராபாய் உலகில் உள்ள
ஜீவகோடிகள் அனைத்தும் ஸ்திரீ பிராயம் என்றும், பகவான் ஒருவனே புருஷன்
என்றும் பாவித்து பக்தி செய்திருக்கிறார். பரமஹம்ஸ ஸ்ரீராம கிருஷ்ணத்
தேவரும் தம்முடைய அனுபவங்களுள் நாயகி அனுபவத்தையும் அனுபவிக்க எண்ணி
சேலை தரித்துக் கொண்டு இராதை என்கிற பாவத்தால் கண்ணனை வழிபட்டார் என்று
சொல்லப்படுகிறது' 7 என்றும் வ.வே.சு.ஐயர் எழுதுவதிலிருந்து அறியலாம்.
காதல் உணர்வின் வலிமையை உணர்ந்தே இவர்கள் தம்பாடல்களில் நாயக-நாயகி பாவ
உத்தியைப் பயன்படுத்தினர்.
நாயன்மார்களின் பாடல்களில் நாயக - நாயகி பாவனை தேவாரத்தில்
திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரின் பாடல்களில் நாயகநாயகி பாவனை
இடம்பெறக் காணலாம். ஜீவன் தன்னைப் பெண்ணாகவும் இறைவனை ஆணாகவும்
உருவகித்துக் கொள்ளல் இயல்பான ஒன்றாகும். சைவ சித்தாந்தத்திலும் இதே
கருத்து அமைந்துள்ளது. 'நாயக-நாயகி' பாவத்தில் உள்ள சிறப்பு என்னவெனில்
நாயகி தன் உடல், பொருள், ஆவி யாவற்றையும் ஒளிவு மறைவின்றித் தான்
அவனுடைய போகத்திற்காகவே இருப்பவள் என்று கருதுவது ஆகும். ஆண்டாள் பாடிய
திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரங்களில் 'நாயக-நாயகி' பாவம்
சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. மாணிக்கவாசகரும் நாயக-நாயகி பாவத்தை மிகச்
சிறப்பாகக் கையாண்டுள்ளார். மூவர் பாடிய பதிகங்களுள் திருநாவுக்கரசர்
தேவாரத்தில் நாயக-நாயகி பாவனை தெளிவாக அமைந்துள்ளது.
ஆண்டாளின் பிரிவாற்றாமை:
பெரியாழ்வாரின் வளர்ப்புப் பெண்ணான ஆண்டாள் பெண்ணுள்ளத்தின் காதல்
தவிப்பைப் பக்தியோடு கலந்து உணர்ச்சியின் எல்லையைக் காணுகிறாள்.
தன்னிடம் காதல் கொண்ட தன் உள்ளத்தில் புகுந்த கண்ணன் வந்து தன்
உருவத்தைக் காட்டினால் தான் உயிர் வாழ முடியும் என எண்ணுகிறாள். தான்
வாழ அந்தத் தோணி வேண்டும் என்று புலம்புகிறாள். கண்ணனை நினைத்துத்
தன்னுடைய கண்கள் தூங்காமல் இருப்பதாகக் கூறுகிறாள்.
'என்புருகிஇன வேலைநெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்'
8
கண்ணன் அரையில் அணிந்துள்ள பட்டாடையைக் கொண்டு என்னுடைய வாட்டம் தீரும்
படியாக வீசுங்கள் என்றும் அவன் அணிந்துள்ள மாலையைக் குழலில் சூட்டவும்
என் மார்பில் புரட்டவும் செய்யுங்கள் என்றும் கூறுகிறாள். இவ்வாறு
செய்தால் என் நோய் தீர்ந்து விடும். ஆனால் அவன் சுலபமாக இவற்றை எனக்குத்
தரமாட்டான். ஏனெனில் அவன் பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் தன்னுடைய
கடைக்கண்ணாகிய கோல் கொண்டு; என்னுடைய நெஞ்சில் ஊடுருவி நைவித்து என்னைத்
தளரச் செய்து விட்டான். இத்துயரம் மாற அஞ்சேல் என்று சொல்வதற்கு அவன்
முன்வரவில்லை. தான் உயிர்வாழ வேண்டுமெனில்,
'அஞ்ச லென்னான் அவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில்
மார்விற் கொணர்ந்து புரட்டீரோ'
9
இதில் தலைவி தான் உயிர் வாழ இறைவன் வந்து அஞ்சாதே எனறு; கூற
விரும்புகிறாள். மாணிக்கவாசகரும் நீத்தல் விண்ணப்பத்தில்,
'அரைசே அறியாச் சிறியேன்
பிழைக்கு 'அஞ்சல்' என்னின் அல்லால';
10
என்று கூறுகிறார். இறைவன் வந்து தன்னை அஞ்சாதே என்று அருள்செய்தாலன்றி
நசான் உய்யேன் என்கிறார். திருநாவுக்கரச நாயகி தன் பசலை வண்ணம்
தீருவதற்கும், கைவளையானது நன்கு பொருந்தியிருப்பதற்கும் செய்ய வேண்டிய
தென்னவெனில் ஈசனார் பொலிவுடன் அணிந்திருக்கும் கொன்றை மலரைத் தனக்குக்
கொடுக்குமாறு கூறுகிறாள்.
'சித்தம் தேறும் செறிவளை சிக்கெனும்
பச்சை தீரும்என் பைங்கொடி பால்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே'
11
இவ்வாறு மாலை வேண்டல் தேவாரத்தில் காணப்படுவதை அறியலாம். இறைவனை அடையும்
நெறிகளுள் 'நாயக-நாயகி பாவனை' ஒன்றாகும். இவ்வுறவின் அடிப்படை அன்பு.
ஆணும், பெண்ணும் ஊழ்வினையாலும் சூழ்வினையாலும் கொள்ளும் அன்பு காதல்
ஆகும். இக்காதலை அடிப்படையாகக் கொண்டு சைவ சமய அடியார்களும், வைணவ சமய
ஆழ்வார்களும் இறைவனைத் தலைவனாகவும் தம்மை அவ்விறைவன் மீது காதல்
கொள்ளுகிற தலைவியராகவும் ஆக்கிக் கொண்டு பக்திப் பாடல்களைப்
பாடியுள்ளனர்.
தொகுப்புரை:
*
பக்தி என்பது
பகவானிடத்தில் செலுத்தப்படும் அன்பேயாகும். 'பக்தி' என்னும் சொல் இறை
என்னும் செம்பொருளிடத்து அடியவர் காட்டும் அன்பைக் குறிக்கிறது. தெய்வ
நெறியில் செல்லும் அடியவர் ஆண்டவனை நினைத்து நைந்துருகும்
திருக்காட்சியே பக்தி எனப்படும்.
*
இறைவனிடத்தில் ஆராக்காதல் உடையவர்கள் அவனை இடையறாது நினைத்துக்
கொண்டிருத்தலும், அவனைத் தனக்கு உயிராகக் கருதுதலும், அக்காரணத்தால்
இறைவனுக்கு மிகவும் பிரியமாகத் தன்னை ஆக்கி இறைவன் அருளைப் பெறுதலும்
பக்தியின் நோக்கம் ஆகும்.
*
இறைவனை
நினைத்து நினைத்து இடையறா அன்பும் பற்றும் மேலோங்கி அவனை அடையும் ஆவல்
பெருக்கத்தால் உள்ளம் உருகி நோற்கும் தன்மையைப் 'பக்தி நிலை' எனலாம்.
பக்தி நிலையில் உள்ளத்தில் கிளர்ந்து எழும் உணர்ச்சிப் பெருக்கை
வெளிப்படுத்தும் வாயிலாகப் பக்தி இலக்கியங்கள் மலர்கின்றன.
*
ஒரு
கலைஞன் தன் துறையின் வெளியீட்டிற்குப் பயன் கொள்ளும் ஆற்றலும்
ஆக்கமுறையும் உத்தி எனப்படும். இலக்கிய ஆக்கத்தைப் புனைதற்கு கலைஞன்
கண்ட பல நோக்க முறைகளும் மறைந்தும் வெளிப்பட்டும் சிறு கூறிலும்,
முழுமையிலும் சொல்லாகவும் கருத்தாகவும் பொருந்தி அமைவது உத்தியாகும்.
*
தலைவன்
ஒருவன்பால் காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலை தலைவனுக்கு உரைக்குமாறு
தூது அனுப்புவது இலக்கியங்களில் காணப்படும் ஒன்று. தூது அனுப்புவதற்கு
அன்னம், மயில், கிளி, குயில், வண்டு; நெஞ்சம், முகில், தென்றல், மான்
முதலிய அஃறிணைப் பொருட்களைப் பயன்படுத்துவர்.
அடிக்குறிப்புகள்:
1. எம்.வின்சுலோ, தமிழ் ஆங்கில
அகராதி, ப. 726
2. ப. அருணாசலம், பக்தி இலக்கியம்
, பக். 106-108
3. T.P.
Meenakshi Sundram “The Tamil litertany Theory of Bhakthi
periods’,Journal of
Madurai University Dec 1970, vol II, No:2 Pg.1.
4. ஆ.வேலுப்பிள்ளை,
தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும,; ப.75
5. தொல்காப்பியம், செய்யுளியல்,
நூ.81
6. நன்னூல், நூ. 14
7. ஐயர்,வே.சு., 'பாரதியின்
கண்ணம்மா பாட்டு' அமுதசுரபி (செப்டம்பர் 1975)ப.6
8. நா.தி.பி., பா. 548
9. நா.தி.பி., பா. 629
10. திருவாசகம், நீத்தல்
விண்ணப்பம், பா.37
11. திருநாவுக்கரசர் தேவாரம்,
5-39-2
முனைவர் பூ.மு.அன்புசிவா
149,உறரிஸ்ரீ காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்
கோயம்புத்தூர் -
641 007
பேச:098424
95241.
|