கூடுகள் சிதைந்தபோது - சிறுகதைத்தொகுப்பு (அணிந்துரை)

 

கலாநிதி நா.சுப்பிரமணியன்


சிறுகதை:

'சிறுகதை' என்ற இலக்கியவகையானது நடைமுறைவாழ்க்கையின் அன்றாட அநுபவங்கள் சார்ந்த உணர்வுக்கோலங்களை மையப்படுத்தி உருவான கட்டிறுக்கமான ஒரு கலைவடிவமாகும். வாழ்வியல் தொடர்பான குறித்த ஒரு அநுபவநிலை அல்லது உணர்ச்சி அம்சமே அதன் உள்ளடக்கமாக அமைதல் அவசியம். அதனை சிந்தாமற் சிதறாமல் வளர்த்தெடுத்து நிறைவு செய்வதே அவ்வடிவத்தின் படைப்பாக்கச் செயன்முறையாகும். சிறுகதை பற்றி இலக்கியவியலார் தந்துள்ள பொது வரைவிலக்கணத்தின் முக்கிய அம்சங்கள் இவை.

சிறுகதைகள் உட்பட பொதுவாக கலை இலக்கியவகைகள் பற்றிய தர மதிப்பீட்டிலே இருமுக்கிய அம்சங்கள் கவனத்தைப்பெறுகின்றன. ஒன்று, அவற்றின் உள்ளடக்க அம்சங்களின் 'சமூகமுக்கியத்துவம்' ஆகும். அதாவது 'குறித்த ஆக்கம் முன்னிறுத்தும் உணர்வியல் அம்சம் சமூகத்தின் கவனத்துக்கு வரவேண்டிய அளவுக்கு முக்கியத்துவமுடையதா?' என்ற வினாவை மையப்படுத்திய பார்வை இது. இன்னொன்று, குறித்த படைப்பானது கலையாக்கமாகக் கட்டமைக்கப்படும் முறைமையிலுள்ள சிறப்பாகும். சிறுகதை பற்றிய இந்த முற்குறிப்புடன் திரு. அகில் அவர்களின் இக்கதைத் தொகுப்பில் அடிபதிக்கிறேன்;

அகில் என்ற படைப்பாளி :

திரு சாம்பசிவம் அகிலேஸ்வரன் (அகில்) அவர்கள் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடா மண்ணில், சூழலில் வாழ்பவர். ஒரு இலக்கியவாதி என்றவகையில் திரு அகில் அவர்கள் புனைகதையாளராகவும் ஊடகவியலாளராகவும் அறியப்பட்டவர். கனடாத் தமிழ்ச் சூழலின் தமிழிலக்கியச் செயற்பாடுகளுடன் தன்னை நெருக்கமாக இணைத்துக்கொண்ட இவர் ஈழம், தமிழகம் ஆகிய நாடுகளின் இலக்கியச் சூழல்களுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிநிற்பவர். இவற்றுக்குமேலாக அவுஸ்திரேலியா முதலிய ஏனைய புலம்பெயர்நாடுகளின் தமிழிலக்கியச் சூழல்களுடனும் தொடர்புகொண்டு செயற்பட்டுவருபவர்.
WWW.Tamilauthors.com என்ற இணையதள அமைப்பினூடாகத் தமிழ் இலக்கியவுலகை இணைத்துநிற்பவருங்கூட.
இவருடைய ஆக்கங்களாக திசைமாறிய தென்றல் (
2000), கண்ணின்மணி நீயெனக்கு(2010) ஆகிய நாவல்கள் நூலுருப்பெற்றுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள் பல தமிழகம், ஈழம் மற்றும் புலம்பெயர் சூழல்களின் தமிழிதழ்களில் அச்சேறியுள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கதொகையானவை இலக்கியப் போட்டிகளில் பரிசுகளை ஈட்டியவையுமாகும். (குறிப்பாக, இத்தொகுப்பில் இடம்பெறும் கூடுகள் சிதைந்த போது என்ற இவருடைய சிறுகதையானது ஈழத்தில் வெளிவரும் ஞானம் இதழின் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றதாகும்). இவ்வாறாக இவரால் எழுதப்பட்ட பல கதைகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுதிக்கதைகளின் தொகுப்பு இது.

இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் உள்ளடக்கங்களும் எடுத்துரைப்பு முறையும்:

இத் தொகுப்பிலுள்ள
14 கதைகளில் கிறுக்கன் மற்றும் அண்ணா நகரில் கடவுள் ஆகிய இரண்டைத்தவிர ஏனைய கதைகள் வாழ்வியல் சார் நேரடிப் பிரச்சினைகள் சார்ந்தவை. கிறுக்கன் என்ற கதை வளர்ப்புப் பிராணிகளிடம் நிலவும் பாசத் தொடர்பு பற்றிய பரிவுணர்;வின் வெளிப்பாடாகும். பொதுவான சமூக முரண்பாடுகள் பற்றியதான அண்ணா நகரில் கடவுள் என்ற கதை இறை பற்றிய கருத்தியல் சார்ந்த ஒரு அங்கதநிலை விமர்சனமாக அமைவதாகும்.

வாழ்வியல்சார் நேரடிப் பிரச்சினைகள் சார்ந்த ஏனைய
12 ஆக்கங்களில்; கண்ணீர் அஞ்சலி, பதவி உயர்வு மற்றும் கூடுகள் சிதைந்தபோது ஆகிய மூன்று ஆக்கங்கள்; ஈழத்தின் போராட்டச் சூழல் சார்ந்தவையாகும்.

கடந்த ஆண்டின் வன்னிப் போர்ச்சூழலில் உயிர்காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மருத்துவத் துறையினரின் மாண்பை நம் கண்முன் நிறுத்துவது கண்ணீர் அஞ்சலி கதை. புலம் வாழ்வில் கிடைக்கக்கூடிய எதிர்கால நலன்களை புறக்கணித்துத் தாய்மண்ணுக்காகத் தன்னை அர்ப்பணித்த 'தியாகத்திருவுரு'வான ஒரு மருத்துவ அதிகாரியின் குணநலன்களின் சித்திரமாக இக்கதை வடிவுகொண்டுள்ளது. தாய்மண்ணுக்காகத் தமது எதிர்கால நலன்களை மட்டுமன்றிக் காதலைக் கூடத் தியாகம் செய்தவராக இவர் இக்கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி போர்ச்சூழலில் முள்ளிவாய்காலிலிருந்து வவனியாநோக்கித் தப்பிவரும் சூழலில் குண்டுவீச்சுக்குத் தனது மனைவியை (வயிற்றிலிருந்த பிள்ளையுடன்) பறிகொடுத்துவிட்டுப் புலம்பெயர்ந்த ஒரு இளங்கணவனின் துயர நினைவலைகளின் பதிவு கூடுகள் சிதைந்தபோது கதை. இந்த ஆக்கம் மேற்படி போராட்டச் சூழல் சார்ந்ததேயெனினும் அது தொடர்பான நினைவலைகள் கனடாமண்ணிலிருந்து மீட்கப்படுகின்றன என்றவகையில் புலம்பெயர்வுடனும் தொடர்புடையதாகிறது.

மேற்படி போர்ச்சூழலில் தமிழரை அழிக்கும் பணியில் ஈடுபட்ட சிங்களக் கடற்படைத் தளபதியொருவரின் பாச உணர்வுசார் மனச்சான்றின் பதிவாக அமைவது பதவியுயர்வு கதை. அழிப்புத் தொழிலில் புகழ்வெறியோடியங்கும் தந்தையும், அவருக்கு நேரெதிரான நிலையில் தமிழ் நண்பனொருவனுடைய உயிர்காக்கும்பணியில் உயிர் நீத்த மகனும் என்ற இருவேறுபட்ட குணச்சித்திரங்களை முன்னிறுத்தி இக்கதை வளர்த்தெடுக்கப்படுகிறது. தொழிலில் புகழ்வெறியோடியங்கிய தந்தைக்கு அவருடைய பணியைக் கௌரவித்து அரசாங்கம் பதவியுயர்வையும் பதவிநீட்டிப்பையும் வழங்க முன்வருகின்றது. ஆனால் மகனை இழந்த சோகத்தின்முன்னே அப்பெருமைகள் அர்த்தமற்றுப்போவதை அத்தந்தை உணர்கிறார் என்பதுடன் கதை நிறைவுறுகிறது. இனப்பகை என்ற உணர்வுக்கு மேலாக மானுடநேயத்தை முன்னிறுத்தும் தொனிப்பொருள்கொண்ட ஆக்கம் இது.

ஏனைய கதைகளில் ஒரு வகையின புலம்பெயர் சூழலின் தளத்தில் நின்றவாறே தாயக மண் சார்ந்த பண்பாட்டம்சங்களின் 'நினைவு மீட்பு'களாகவும் அவை தொடர்பான 'விமர்சனங்'களாகவும் அமைவன. பெரிய கல்வீடு, வெளியில் எல்லாம் பேசலாம் ஆகிய கதைகள் இவ்வகையின. பெரிய கல்வீடு கதையானது அம்மண்ணின் சொத்துடைமையுணர்வு மற்றும் சாதியம் என்பவைசார் மனோபாவங்களைப் பற்றிய ஒரு விமர்சனமாகும்.

குடும்பநிலையைப் பேணும் சமூக அமைப்பிலே சொத்துடைமையுணர்வு மற்றும் சமூக அந்தஸ்துணர்வு என்பவற்றின் முக்கிய குறியீடாகத் திகழ்வனவற்றுள் ஒன்று வீடு எனப்படும் வாழ்வியல் தளம் ஆகும். ஈழத்தமிழர் சமூகத்திலே - குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசச் சமூகக்கட்டமைப்பிலே - அது இவ்வாறான உடைமைக்குறியீடாகவும் சமூக அந்தஸ்துணர்வுக் குறியீடாகவும் திகழ்கின்றமையை நாம் அறிவோம். இவற்றுக்கு மேலாக, ஒரு குடும்பமானது தனது சாதியம் சார்ந்த தனித்துவத்தைப் பேணிக்கொள்வதற்கான தளமாகவும்கூட யாழ்ப்பாணப் பிரதேசச் சூழலின் வீடு திகழ்கின்றதென்பதும் இங்கு நமது சிந்தனைக்குரிய குறிப்பிடத்தக்க சமூக அம்சமாகும். இவ்வாறான வீடு என்ற தளத்தை மையப்படுத்திய உணர்வுக்கோலங்கள் இக்கதையில் மறுமதிப்பீட்டுக்கு உள்ளாகின்றன. 'உறவுகளைப் பேணுவதைவிட உடைமைகளில் உரிமை கொண்டாடுவதையே முதன்மைப்படுத்தும் மனோபாவம்' என்ற மைய இழையிலே சாதிசார் தீண்டாமையுணர்வை ஊடுபாவாக்கி இந்த மறுமதிப்பீடு இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. போர்க்கால இடப்பெயர்வுச்சூழலை மையப்படத்திய கதையம்சம் மேற்படி மறுமதிப்பீட்டுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. புலம்பெயர்ந்துறையும் வாழ்வியற்சூழல் தந்த மனவிரிவுக்கூடாக ஆசிரியர் இக்கதையம்சத்தை கட்டமைத்து அணுகியுள்ள முறைமையும் பொருத்தமாக உளது.

வெளியில் எல்லாம் பேசலாம் என்ற கதையில் சாதியம் என்ற அம்சமே மையப்பொருளாகிறது. கதையின் நிகழிடம் யாழ்ப்பாணம் அல்ல. புகலிட – கனடா - மண் ஆகும். இங்கும் உணர்வுநிலையில் யாழ்ப்பாண மண்ணின் பாகுபாட்டுப்பார்வைகளின் தாக்கம் இன்னும் தொடர்கிறது என்பது சமூக யதார்த்தம். இதுபற்றிய விமர்சனமே இவ்வாக்கம். புதிய பல்லினப்பண்பாட்டுச் சூழலிலே எம்மவர்பலர் 'சமூக சமத்துவ சிந்தனை', 'முற்போக்குப் பார்வை' என்பனவாக எவ்வளவுதான் வெளியே பேசினாலும் குடும்ப உறவுநிலைகளில் தாயகமண்ணின் குறுகிய பார்வை வட்டத்துக்குள் நின்றுதான் இயங்குகின்றனர் என்பதை இக்கதையூடாக ஆசிரியர் முரண்சுவைபட உணர்த்த முற்பட்டுள்ளார்.

ஏனைய கதைகள் புகலிட வாழ்வின் புதுவகைப் பண்பாட்டுச் சூழல்களுடன் இசைவாக்கம் பெறுவதான நிலைகளில் எதிர்கொள்ளும்; உணர்வுத்தாக்கங்கள் சார்ந்து வெளிப்பட்டனவாகும். இவற்றுட்சில சமூக விமர்சனங்களாகவும் அமைந்துள்ளன அம்மா எங்கே போகிறாய்?, இது இவர்களின் காலம், ஓர் இதயத்திலே..., வலி, உறுத்தல் மற்றும் தேடல் ஆகிய கதைகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

புகலிட வாழ்வியல் ஏற்படுத்தும் உணர்வுத் தாக்கங்களில் முக்கியமானவை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான பாசப்பிணைப்பு தொடர்பானவையாகும். இவற்றுளொன்று முதியவர்கள் ஆகிவிட்டநிலையில் 'சீனியர் ஹோம்' என்ற விடுதிக்கு அனுப்புவதான நடைமுறை சார்ந்தது. இது குடும்ப உறவுநிலையில் எத்தகு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது என்பதை அகில் அவர்கள் உறுத்தல் மற்றும் அம்மா எங்கே போகிறாய்? ஆகிய கதைகள் மூலம் நமது கவனத்துக்கு இட்டுவருகிறார்.

வீட்டுப் பணிகளுக்குப் பயன்படாத அளவுக்கு முதுமையடைந்த பெற்றோரை முதியோரில்லத்துக்கு அனுப்பமுற்படுவதான ஒரு சராசரி குடும்பக் காட்சி உறுத்தல் கதையில் இடம்பெறுகிறது. முதலில் இத்தீர்மானத்தை மேற்கொண்ட அக்குடும்பத்தினர் இறுதிக் கட்டத்தில் அத்தீர்மானத்திலிருந்து மனம்மாறுகின்றனர் என்பதன் மூலம் பாசமும் பற்றும் இன்னமும் இங்கு (கனடாவில்) முழுதாக வற்றிவிடவில்லை என்பதை அகில் அவர்கள் காட்ட விழைந்துள்ளமை தெரிகிறது. மேற்படி மனமாற்றம் நிகழ்வதற்குக் குழந்தையொன்றின் கேள்வியொன்றை அவர் நுட்பமாகப் பயன்டுத்தியுள்ளார்.

'அப்பம்மா! அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உங்களை மாதிரி வயசானபிறகு நானும் அவையள இங்கதான் கொண்டுவந்து சேர்க்கவேணும் என்ன?'
என்ற அந்த வினா அவர்களின் உள்ளத்தில் அடைபட்டுக்கிடந்த பாசத்தின் ஊற்றுக்கண்ணைத் திறந்துவிடுகின்றது என்பதாக இக்கதையை நிறைவுக்கு இட்டுவிடுகிறார், அவர்.

பிள்ளைகள் இருவரின் முரண்பாடுகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் ஒருதாய்; தானே தேர்ந்துகொண்ட முடிவாக அமைகிறது அம்மா எங்கே போகிறாய்? கதை காட்டும் 'சீனியர் ஹோம்' வாழ்வு. இங்கு பிள்ளைகளின் முரணுக்கான அடிப்டையாக அமைவது கனடாச் சூழலின் பொருளியல் தேவைகளாகும். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்குத் தாயின் ஓய்வூதியப் பணத்தில் உரிமைகொண்டாடும் பிள்ளைகளின் எதிரெதிர் நிலைப்பாடுகள் தாயுள்ளத்தில் விளைவித்த தாக்கத்தின் அடிப்டையிலான முடிவாகவே இங்கு 'முதியோரில்ல வாழ்வுத் தேர்வு' காட்டப்படுகிறது. பொருளியல் சார் நிர்ப்பந்தங்களும் நெருக்குதல்களும் பாசப்பிணைப்பை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது என்பதான சமூக யதார்த்த அம்சமே இக்கதையின் தொனிப்பொருளாகும். 'முதியோரில்ல வாழ்வுத்தேர்வு' என்பது ஒரு மாற்றுத் தீர்வு - மாற்றுவழி - என்ற வகையிலேயே இக்கதையில் முன்வைக்கப்படுகிறது. அது கூட முழுமனதோடு அல்லாமல் ஒரு தற்காலிக முடிவாகவே மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கதையின்,

'என்றாவது ஒருநாள் தன்னை அழைத்துச்செல்ல தன்னுடைய மகனும் மகளும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்காகக் காத்திருக்கிறாள் விசாலாட்சி'
என்ற நிறைவு வாசகம் மூலம் உணர்த்திவிடுகிறார் ஆசிரியர்.

பாசப்பிணைப்பு தொடர்பான மற்றொரு அம்சம் பிள்ளைகளின் திருமண உறவு தொடர்பான நடைமுறைகளில் பெற்றோரின் உணர்வுசார் பங்கு தொடர்பானதாகும். பெற்றோரின் உளப்பூர்வமான சம்மதத்துடனும் சமூக அங்கீகாரத்துடனுமான திருமண நிகழ்வுகளின் பின்னரே ஆண்-பெண் இணைந்து வாழ்வதென்பது தமிழரின் பாரம்பரிய நடைமுறையாகும். இவற்றை மீறி, பெற்றோர் சம்மதத்துக்கு உரியவாய்ப்புகள் வழங்காமல் வாழ்க்கைத்துணைகளைத் தாமாகவே தேர்ந்தெடுத்தல், திருமணமாகாமலே கூடிவாழ்ந்து ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயலல் என்பனவாக இளைய தலைமுறையினரிடத்தில் உருவாகிவரும் நடைமுறைகள் பெற்றோரையும் உற்றோரையும் பெருமளவு மனரீதியில் பாதிக்கின்றன. இப்பிரச்சினையை அகில் அவர்கள் இது இவர்களின் காலம் என்ற கதை மூலம் நமது கவனத்துக்கு முன்வைக்கிறார். கனடாச் சூழலில் பெற்றோர் பலரின் பெருமூச்சுகள் இக்கதை மூலம் நமது செவிப்புலனில் பதிகின்றன. 'முதிய தலைமுறையானது கால மாற்றங்களை அநுசரித்துச் செல்லத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் அது தவிர, அத்தலைமுறைக்கு மாற்றுவழி எதுவும் இல்லை என்பதுமே இக்கதையின் தொனிப்பொருள் அம்சமாகும்.

புகலிட வாழ்வியலில் தமிழர் எதிர்கொள்ளும் முக்கிய பண்பாட்டுநிலைச் சிக்கல்களிலொன்று பாரம்பரிய குடும்ப அமைப்பானது கட்டிறுக்கம் குறைந்து சிதைவுறும் நிலையாகும். மிதமிஞ்சிய பண வரவு, குடி, ரேஸ் முதலிய தீய பழக்கவழக்கங்கள் ஆகியன இவ்வாறான சீரழிவு நிலைமைகளை நோக்கி வழிநடத்துவனவாக உள்ளன. இவற்றுக்கு மேலாக, இந்நிலைமைகளுக்கான அடிப்படைக்காரணியாக அமைவது வாழ்க்கைத்துணையாக அமைபவர்களின் மனம் பொருந்தாநிலை ஆகும். இந்நிலைமைகளை நோக்கி நமது கவனத்தை ஈர்க்கிறது தேடல் கதை. நண்பனொருவனுடைய வாழ்வின் சீரழிவுநிலை பற்றிய பார்வையாக அகில் அவர்கள் இக்கதையை நம்முன்வைத்துள்ளார்.

காலஞ்சென்ற கணவனின் குரலொலியில் அவரை தன்நினைவில் பேணும் ஒரு மனைவியின் உணர்வுநிலையின் பதிவாக அமைவது ரேடியோப் பெட்டி என்ற கதை. இங்கே ரேடியோப் பெட்டி கணவன் மனைவியுறவின் ஒரு குறியீடாக அமைகிறது. கணவன் மனைவியுறவில் புறநிலையிற் புலப்படும் முரண்களுக்கு நேரெதிராக அகநிலையில் அமைந்திருக்கவேண்டிய அன்பை அழுத்திப் பேசுவது, வலியுறுத்தி நிற்பது ஓர் இதயத்திலே கதை. இவ்விரண்டுகதைகளும் பாரம்பரிய குடும்ப உறவின் புனிதம் பற்றியன என்றவகையில் பண்பாட்டுணர்வின் வெளிப்பாடுகளாக அமைவன.

புலப்பெயர்வுக்கான பயணங்களின் துன்பியல் அநுபவங்களிலொன்று நினைவில் மீட்கும் படைப்பாக வலி என்ற கதை அமைந்துள்ளது.

இக்கதைகள் பலவற்றிலும் ஆசிரியர் தாமே ஒரு முக்கிய பாத்திரமாக அமைவதால் பிரச்சினைகள் நேரடி அநுபவங்களூடாக முன்னிறுத்தப்படுகின்றன. இவ்வாறு 'தான்கலந்து' நிற்கும் எடுத்துரைப்பு முறைமையானது பிரச்சினைகளின் 'மெய்ம்;மை'க்கு வலுவூட்டுவதாகும்.

நிறைவாக:
இத் தொகுப்பிலமைந்த கதைகளிற் பலவும் சமகால – கடந்த சில ஆண்டுகள் சார்ந்த சமூகப் பிரச்சினைகள் சார்ந்த உணர்வோட்டங்கள் மற்றும் அநுபவங்கள் என்பவற்றின் பதிவுகளாக அமைந்தமை வெளிப்படை. ஈழத் தமிழர்கள் - குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்கள் - சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பலவற்றை இவை நமது கவனத்துக்கு இட்டுவந்துள்ளன. இப்பிரச்சினைகள் சமூகமுக்கியத்துவமுடையன என்பதை இக்கதைகளை வாசிப்போர் உணர்வர். இக்கதைகள் பலவற்றின் ஊடாகவும் அகில் அவர்கள் தமது சமகால சமூகநோக்கை இயன்றவரை நமக்குப் புலப்படுத்தியுள்ளார். சில கதைகளில் தமது விமர்சனங்களையும் அவர் தெளிவாகவே பதிவுசெய்துள்ளார்.

சிறுகதைக்குரிய கட்டமைப்பு முறைமையிலும் சில கதைகள் குறிப்பாக, பெரிய கல்வீடு, வெளியில் எல்லாம் பேசலாம் , அம்மா எங்கே போகிறாய், இது இவர்களின் காலம் மற்றும்; தேடல் என்பன ஓரளவு சிறப்பாக உருவாக்கம் பெற்றுள்ளன என்றே நான் கருதுகிறேன். எனினும் இத்தொடர்பில் அகில் அவர்கள் இன்னும் தனது புனைதிறனைச் செப்பனிட்டுக்கொள்ள இடம் உள்ளது என்பதே எனது கருத்தாகும். இது அவருடைய முதல் தொகுதி. இனிவரும் தொகுதிகளில் அவர் இன்னும்பல பரிமாணங்களை எய்தக் கூடியவர் என்பதை இக்கதைகளூடாக என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஈழத்துத் தமிழ் இலக்கியம் கடந்த ஒரு தலைமுறைக் காலத்தில் எய்தியுள்ள புதிய 'நீட்சி'யாக அமைவது 'புலம்பெயர் இலக்கியம்' என்ற புதிய வகைமை. இப் புதுவகைமையின் வரலாற்றை முன்னெடுக்கும் ஒரு புதுவரவாக அகில் அவர்களின் இத்தொகுதி அமைகின்றது. இதனைத் தமிழ் இலக்கிய உலகம் வாழ்த்தி வரவேற்கும் என்பது எனது நம்பிக்கை.

நண்பர் அகில் அவர்களது இலக்கியப்பயணம் சிறப்புடன் தொடரவேண்டும் என்ற வாழ்த்துடன் இந்த அணிந்துரையை நிறைவுசெய்கிறேன்;.

கலாநிதி நா.சுப்பிரமணியன்
கனடா.

24-05-2011