கூடுகள் சிதைந்தபோது - சிறுகதைத்தொகுப்பு (முன்னுரை)

 

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி


முன்னுரை

திரு.சாம்பசிவம் அகிலேஸ்வரனின் (அகில்) இச்சிறுகதைத் தொகுதி முன்னுரை ஒன்றுக்காக என்னிடத்தில் தரப்பட்டது. அகில் ஏற்கெனவே நாவல்கள் இரண்டினை வெளியிட்டுள்ளார் என அறிகிறேன். துரதிஷ;டவசமாக அவரது நாவல்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. தமிழில் எழுதும் ஒருவரின் படைப்பு ஒன்றுக்கு சர்வதேசப் பரிசு கிடைப்பது எத்துணை தெரியப்பட்டதாயினும் அல்லாதாயினும் போற்றிப் பேசப்பட வேண்டிய விடயமே.


ஆக்க இலக்கியத் துறையில் ஏற்கனவே பல இலக்கிய வகைகளைக் கையாண்டுள்ள அகிலின் சிறுகதைத் தொகுதி நமது பாராட்டைக் கோரி நிற்கின்றது. அகில் அவர்கள் இப்பொழுது கனடாவிலேயே வசிப்பதால் நான் விரும்பிய அளவிற்கு அவருடன் ஆக்க இலக்கியம் பற்றி ஊடாட முடியவில்லை.

இத்தொகுதியில் வெளிவந்துள்ள சிறுகதைகள் எல்லாமே மிக அண்மையில் எழுதப்பட்டுள்ளன. இத்தொகுதியிலுள்ள கதைகளில் காலத்தால் முந்தியன அண்ணா நகரில் கடவுள், கிறுக்கண். இவை
2008 இற்குரியனவாகும். ஏனைய சிறுகதைகள் அதன் பிறகானவை. இதனாலேயே இச்சிறுகதைகளில் வரும் விடயப் பொருட்கள் சமகாலத்துக்குரியனவாக இன்று நம்மிடையே காணப்படுகின்ற பிரச்சினைகளாக உள்ளன. இலங்கைத் தமிழர் பற்றிக் குறிப்பிடவேண்டிய அனுபவங்களையும் கனடாவிலுள்ள இலங்கைத் தமிழ் புலம் பெயர்ந்தோரின் வாழ்க்கைப் பிரச்சினைகள் சிலவற்றையும் இத்தொகுதியிலே தந்துள்ளார். இச்சிறுகதைத் தொகுதியினை வாசிக்கும் பொழுது ஏற்படும் பதிற்குறி, அவை சமகால வாழ்க்கையின் முக்கிய கணங்கள் சிலவற்றை அல்லது வாழ்க்கை ஓட்டங்களில் சிலவற்றைக் கதைப்பொருளாகக் கொண்டுள்ளமையாகும்.


சிறுகதை எனும் இலக்கிய வகையின் மிக மிக முக்கியமான தனித்துவமான அம்சம் அவை மனித வாழ்க்கையில் வரும் சில கணங்களை
(moments), அந்த மனிதனை அல்லது மனிதர்களைப் பற்றிய அசைவியக்கத்தினைச் சித்தரிப்பதன் மூலம் முழு வாழ்க்கையையுமே விளங்கிக் கொள்ள உதவுவதாக அமையும். இருட்டில் வரும் திடீர் மின்னல் சூழ இருப்பவற்றை நன்கு காட்டி விட்டு திடீரென மறைந்து போவது போல நல்ல சிறுகதையும் அதன் கடைசி வாக்கியம் வாசித்து முடிக்கப்படும்பொழுது உணர்வு நிலை ஒன்றினை வாசிப்பவர்களிடத்;து ஏற்படுத்திவிடும். எந்தவொரு நல்ல சிறுகதையும் அதன் கடைசி வாக்கியத்துக்கு அப்பாலே உடனடியான ஒரு திகைப்புணர்வையோ தெளிவுணர்வையோ அன்றேல் அதுவரை இல்லாதிருந்த ஒரு புரிதல் உணர்வையோ ஏற்படுத்தும். அகிலின் இச்சிறுகதைகளுள் எல்லாமே ஒரே தரத்தின அல்லவெனினும் பெரும்பாலானவை கலைப்பூரணத்துவமுள்ள சிறுகதைகளாக அமைந்துள்ளன. பாம்பு கடித்துச் செத்துப்போன தனது வளர்ப்பு நாயையும் பூனையையும் பார்த்து அழுது கொண்டிருக்கிற அந்தப் பையனது மனநிலையை அறியாது வழிப்போக்கர்கள் சொல்லும் குறிப்புரைகள் மானுட அவலத்தின் ஒரு முக்கிய அம்சத்தைச் சுட்டி நிற்கின்றன. வளர்ப்புப் பிராணிகள் மீது உயிரை வைத்திருப்பவர்களின் அன்புடமையின் உச்சத்தை அந்தக்கதை காட்டி நிற்கின்றது. இதிலுள்ள ஒரு சோகமே என்னவென்றால், குழந்தையாய் இருக்கும் நிலையிலேதான் அத்தகைய நிகழ்ச்சிகள் ஆழமான சோகத்துக்குரியனவாகின்றன. வயது செல்லச் செல்ல இவை போன்றவை ஏன் உறவினர்களின் மரணங்கள் கூட தவிர்க்கப்படமுடியாத நியமங்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அந்தச் சிறுவன் தனது வளர்ப்புப் பிராணிகளின் மேல் வைத்திருந்த வாச்சலியத்திலேதான் மானுடத்துவம் தெரிய வருகிறது.

சினிமாவின் முக்கிய உத்திகளில் ஒன்று மொன்ராஜ்
(montage) என்பதாகும். இதற்கான சரியான தமிழ்ப் பதம் எனக்குத் தெரியவில்லை. சினிமாவில் மொன்ராஜ் என்பது ஒரு பாத்திரத்தின் மனநிலையைக் காட்டுவதற்கு அடுத்து வரும் நிகழ்ச்சியை ஒரு ளாழசவ ஆக ஒரு இயற்கை நிகழ்ச்சி ஒன்றினைக் காட்டுவதாகும். சொற்கள் தரமுடியாத விளக்கப்புரிதலை அது தரும். தமிழ் சினிமாக்களில் ஹீரோ அல்லது ஹீரோயினின் கவலையைக் காட்டுவதற்கு அவர்களை அலையடிக்கும் கடற்கரைகளிலே நிற்கவிடுவார்கள். சத்யதிஸ்ராயின் பதர்பஞ்சலியில் அந்தக் குடும்பம் தங்கள் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் செல்கின்றபொழுது சற்றுத் தொலைவில் அவர்கள் நடப்பதைக் காட்டிக்கொண்டே அந்த வீட்டுக்குள் பெரிய பாம்பு நுழைவதைக் காட்டுகிறார்கள். பாம்பு நுழைந்த வீடு பாழடைவது திண்ணம் என்பது முந்திய நம்பிக்கைகளில் ஒன்று.

அகிலின் 'கூடுகள் சிதைந்த பொழுது' எனும் சிறுகதையில் இந்த மொன்ராஜ் உத்தியின் இலக்கிய வலுவைக் காண்கிறேன்.

கனடாவில் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கும் ஒருவர் சோடிப்பறவைகளில் ஒன்று விபத்துக்கு உட்படுவதையும் பின்னர் இறப்பதையும், தனது துணையின் நிலையைப் புரிந்து கொள்ளமுடியாமல் மற்றைய பறவை அதனைப் பிரிய முடியாது தவிப்பதையும் காட்டுகின்ற அகில், பின்னர் அவனுடைய சொந்த ஊரில் அவனது மனைவிக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துக் கூறுகிறார். மௌன சோகம் நம்மையும் ஆட்கொண்டுவிடுகிறது.
வாசிப்பு என்பதன் உண்மையான முக்கியத்துவம் அல்லது பயன்பாடு என்னவெனில் வாசிக்கப் பெறும் பொருளுடன் வாசிப்பவர் மனம் இயைந்துவிட வேண்டும் என்பதுதான். அது தாவரவியல் ஆக இருக்கலாம், தொல்லியலாக இருக்கலாம், வாசக ஒன்றிணைவு எங்கும் எதிலும் அத்தியாவசியம்.

படைப்பிலக்கியங்களைப் பொறுத்தவரையில் இந்த ஒன்றிணைப்பு, உணர்வுநிலைப்பட்ட ஒன்றாக இருக்கும். வாசித்ததை இடையில் நிறுத்திவிட முடியாமல் சஞ்சலப்படும் அனுபவங்கள் நமக்கே ஏற்படவில்லையா?. இத்தகைய ஓர் அனுபவம் இச்சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் பொழுதும் ஏற்படுகிறது.

'பதவி உயர்வு' எனும் சிறுகதை சிங்களத்திலே மொழிபெயர்க்கப்படவேண்டியது அவசியம். குறைந்த பட்சம் அது ஆங்கிலத்திலாவது மொழிபெயர்க்கப்பட்டு நமது சிங்களநிலை, தமிழ்நிலை நண்பர்கள் அதனை வாசித்தல் வேண்டும். கடலுக்குக் குளிக்கச் சென்ற மகன் தனது தமிழ் நண்பனைக் காப்பாற்றப் போய் இரண்டு பேருமே இறந்துவிட அந்தப் பையனின் தகப்பனுக்கு இலங்கையின் வடபிராந்தியத்தில் ஈட்டிய போர்ச்சாதனைகளுக்காக மேஜர் ஜெனரல் ஆகப் பதவி உயர்த்தப்படுவதாக வருங் கடிதத்தையே கிழித்துவிடுகிறார். அப்படைப் பிரதானி போரிலே எத்தனை உயிர்கள் அநியாயமாக மாண்டு போகின்றன என்பதை உணர்ந்து கடிதத்தைக் கிழிக்கின்றார் எனும் அந்த முடிவு இலங்கையின் ஆட்சி அதிகார நிலையில் உள்ளவர்களின் முகத்திலே அடிப்பது போன்ற சிலிர்ப்பையே ஏற்படுத்துகின்றது. தமிழில் இத்தகைய விடயங்களை இத்தகைய மானுட அவலங்களை இத்துணை சிறப்பாக எழுதுகிறார்கள் என்பது சாதாரண சிங்கள வாசகர்களுக்குத் தெரிவது அத்தியாவசியமாகும்.

இவ்வாறு கதை ஒவ்வொன்றும் பற்றிய எனது புரிதல்களை அவை என்னகத்துள்ளே ஏற்படுத்தும் 'கதவு திறப்புகளை' பற்றி நான் தொடர்ந்து கூறத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

கனடாவிலுள்ள தமிழர்களின் வாழ்க்கை நமது பண்பாட்டின் தளங்களை சுட்டுவனவாகவுள்ளன. பன்றிகளை ஏற்றிச் செல்லும் வண்டியிலே பன்றிகளுடன் பன்றியாய் இருந்துவிட்டு கனேடிய எல்லைப்புறத்திலே இறக்கி விடப்பட்ட மனிதனும், தானே சகோதரியைக் கனடாவிற்கு அழைத்துவிட்டு பிறகு அவர்களோடு ஏற்பட்ட பிணக்குக் காரணமாகத் தங்கையின் வீட்டுக்கு அதுவும் அவளின் மகள் பெரியபிள்ளை ஆன வைபவத்திற்குச் சென்ற தாயை ஏசுகின்ற மகன் யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவிற்கு நாற்றுநடுகை
(Trans Planting) செய்யப்பட்டவனே. dating என்பதை விளங்கிக் கொள்ள முடியாத தாய் தனது மகள் Boyfriend ஒருவனிடம் விடுமுறைக்கு செல்வதை புரிந்துகொள்ள முடியாதவளாய் தத்தளிப்பது போன்றவை யாழ்ப்பாணத் தமிழரின் கனேடிய வாழ்க்கை அவலங்களை நன்கு காட்டுகின்றன. இதிலுள்ள மானுடசோகம் என்னவென்றால் தாங்கள் இத்தகைய தவறுகளைச் செய்கின்றோமே என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான். எங்கு சென்றாலும் அங்கு யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறைகளை கொண்டு செல்ல விரும்பும் அவலம் நிறைந்த ஆசை.

பதச்சோறாக சிலவற்றை இங்கு காட்டியுள்ளேன்.

அகிலின் மொழிநடை போதுமானதாகவே உள்ளது. இச்சிறுகதைத் தொகுதி தமிழகத்து விமர்சகர்கள், வாசகர்களிடத்து சேர்ப்பிக்கவேண்டிய பொறுப்பு இதன் பிரசுரிப்பாளருக்கு உண்டு. தமிழகத்திலே அச்சிடப்பெறும் இவ்வகை தமிழர்களது படைப்பிலக்கியங்கள் தமிழகத்து இலக்கிய ரசிகர்களாலும் வாசகர்களாலும் மிக மிகக் குறைவாகவே விளங்கிக் கொள்ளப்படுகின்றன. இலங்கைத் தமிழர்கள் உலகில் பரந்து வாழும் இடங்களில் எல்லாம் தங்கள் சஞ்சிகை அன்றேல் பிரசுர நிறுவனம் தெரியப்படவேண்டும் என்பதற்காகவே பலர் இலங்கைத் தமிழர் ஆக்கங்களை வெளியிடுகின்றனர்.

சரஸ்வதி, சாந்தி காலத்தில் நிலவிய உண்மையான ஆக்க இலக்கிய பரிமாற்றம் இப்பொழுது நடைபெறுவதே இல்லை. இந்திய அரசு நூல் நிலையங்களுக்கென வாங்கப்படும்
600 பிரதிகளுக்குள்ளே கூட இவை பெரிதும் வருவதில்லை. இதனால் இன்றைய நிலையில் நமது எழுத்துக்கள் குறிப்பாக புலம் பெயர் எழுத்துக்கள் தமிழகத்தில் தெரியப்படவேண்டியது அவசியமாகிறது.

இலங்கையில் வரலாற்றுக்காலம் முதலே தமிழர்கள் வாழுகின்றனர். அதன் வடகிழக்கு பகுதிகள் தமிழ் கூறும் நல் உலகத்தின் பண்பாட்டு அலகுகள். (அரசியல் அல்ல).

சிங்கப்பூர், மலேசியா, தென் ஆபிரிக்காவில்
19ம் நூற்றாண்டின் நடுக்கூறு முதல் வாழ்கிறார்கள், இப்பொழுது வுயஅடை னயைளிழசய எனும் தமிழர் சிறுகதை முற்றிலும் ஈழத்தமிழர் நிலைப்பட்டதே. அந்த அளவில் இன்றைய புகலிட இலக்கியங்களும் ஈழத்தமிழ் இலக்கியத்தின் விஸ்தரிப்புகள்தான். அகில் போன்றவர்களுக்குரிய பெரிய வாய்ப்பு யாதெனில், இங்கு நமக்கு ஏற்பட்ட அவலங்களை உள்ளூரில் எழுத முடியாது. ராஜதுரோகம் வரை செல்லும் ஒரு குற்றமாகும். அந்த வகையில் அகிலின் இச்சிறுகதைத் தொகுதி போன்ற நூல்களுக்கு அவ்வப் பிரசுரங்களுக்கு அப்பாலே மிக நீண்ட அல்லது ஆழமான முக்கியத்துவமுள்ளது.

இறுதியாக ஒரு கூற்று. நவீன கால தமிழ் இலக்கியத்திலே சிறுகதை பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்று கூடச் சொல்லலாம்.

அகிலிற்கு அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையான இடம் வேண்டுமானால் தொடர்ந்து இத்தொகுதியிலே உள்ளன போன்ற சிறுகதைகளை எழுதுதல் வேண்டும்.

மிக்க அன்புடன்,
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
இலங்கை.