சக்தி ஜோதியின் கவிதைகளில் மனித மொழியும், மனவலியும்

முனைவர் பூ.மு.அன்புசிவா
 

 

வாழ்க்கையின் இயங்குதளத்தின் கடந்து செல்லும்போது ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கின்றது. அதை விட்டு வெளியேறமுடியாமல் அதுவாகவே கருத்தரித்து வெளிவந்து மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புக்களையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக்கொண்டு ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மன வெளியைக் கொண்டிருப்பது கவிதைத்தளம்.இன்னும் கூடுதலாகச் சொல்வதானால் மனித அழகியலின் உள்ளுணர்வுகளைக் கிளர்த்துவது கவிதை. கவிதையின் இறுக்கமான நடை குலைந்து எளிமை ஓர் அழகாகப் பரிணமித்தும் பேச்சு மொழியில் கிடைக்கும் கலகக் கூறுகளை உள்ளடக்கிய அரிய சொல்லாட்சிகள் கவிதையின் பிரதான அலகுகளாகியின. தமிழ்ச் சமூகத்தின் பன்முகச் சிறப்பம்சம் இக்கவிதைகளின் வெளிப்பட்டன. கவிதை எழுதுவதே ஒரு கலகச் செயல்பாடுகள்.

சக்திஜோதியும் கவிதையும்


கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும் எங்கு வேண்டுமானாலும் தோன்றமுடியும். ஆக உயிரை-உணர்வை-உடலைக்-கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கைத்தளத்தில் தான் பிணமாவதைத் தவிர்த்துக் கொள்ள பரிமாணம் அடைந்து கொண்டிருக்கின்றன சக்திஜோதியின் கவிதைகள். ஏனெனில் கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது. கவிதை என்பது மனித மொழி, மனவலி இவைகளை எதார்த்தமாக விதைத்திருக்கிறார்.


'என்னை முத்தமிடுகையில் உனது பிரச்சினை என்ன வென்பது எப்பொதும் புரியவில்லை உனக்கான முத்தத்தில் புதைந்திருக்கும் பிரியங்களின் இரகசியங்களை நீ அறிந்து கொள்ள முயல்வதேயில்லை' என்ற அடிகளில் புரிந்துகொள்ள உணர்ச்சிகளால் ஆன இவரின் கவிதைகள் முத்தங்களின் தேன் கூடாக அமைகிறது. நம் வாழ்வின் அன்றாடப் பழக்கத்தில் உள்ள மொழியானும் கவிதைக்கான மொழி தனியானது என்பதை சக்திஜோதியின் கவிதைகள் காட்சி தருகின்றன.

'நிறைவேறாத கனவுகளோடு நான் மரணத்தைத் தழுவு விரும்புவது குறித்து துக்கமில்லை ஆசைகள் இலட்சியங்கள் கனவுகள் உன் முன் அணிவகுக்கின்றன மரணத்தருவாயில்' கவிதைகளைப் புரிந்து கொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும்.பின்பு அதற்கான ரசனை வேண்டும்.இவ்விடத்தில் ஒன்றை நினைவு கொள்ளலாம். 'அமெரிக்க படைப்பாளியான வர்ஜினியா வூல்ப் என்பவரிடம் ' ஒரு வாசகர் கேட்டார் 'உங்கள் படைப்புகளை மூன்று முறை வாசித்தும் புரியவில்லையே 'என்றாராம். அதற்கு வூல்ப் நான்காவதுமுறை வாசியுங்கள் என்றாராம்.

புரிந்து கொள்ள முடியாது என சக்திஜோதியின் கவிதைகளைத் தள்ளி வைக்க முடியாது 'வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஓர் அம்சத்தைத்தான் தம் படைப்புக்களில் எங்கும் சொல்லியிருக்கிறார். சிறு சிறு நிகழ்வுகளைக் கூடத் தம் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

'ஒவ்வொரு மரணமும் விதைத்து
போகின்றது இன்னும் இன்னும் கனவுகளை'


என்றும் கவிதைகளைக் காணும்போது கனவுகளை விதைத்து அது சாத்தியப்படாதபோது அதை மரணம் என்று சொல்லிவிடுகிறார் என்றாலும் இருண்மை என்பது கவிதையில் மட்டுமல்லாமல் தம் வாழ்க்கையிலும் இருப்பதைத் தெளிவாக்குகிறார். ஒருவருக்கு வாய்க்கிற தனிமைச் சூழல் அதனுள் முளைத்திருக்கும் மவுனத்தின் கனவுகளை வெளிக் கொணர்வதே கவிதை என்பதை ஆழமாகக் புரிந்து வைத்திருக்கிறார். எதிர்பாராத தருணத்தில் கவிஞன் தனக்குள் புதைந்திருக்கும் அனுபவத்தைக் கவிதையாக்கி விடுகிறான். அந்தக் கவிதைனுள்ளே நுழைந்து அனுபவங்களையும் வலியையும் அசைபோடும்போது அது கவிதையாக வெளியேறுகிறது.

'அனுமதிக்கப்படுவதும் மறுதலிப்பதும் அனைத்துச் சந்திப்புகளிலும் நிகழ்ந்தேறி விடுகிறது நிகழ்த்தப்படாத சந்திப்புகளில் ஏற்படுகின்ற நினைவின் அத்துமீறல்'

கவிதைகளின் சந்திப்பு என்பது ஓர் நிகழ்வு என்பதை மையமாகக் கொண்டு நினைவோடு மறுதலிப்பது என்பதை சொற்களில் உறைய வைக்கிறார்.

ஒரு கவிதையைப் புரிந்தேதான் ஆக வேண்டும் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் படிப்பவரின் மனதை பொறுத்துத்தான் புரியும்படியாக இருக்க வேண்டும் .கவிதை என்பது படைப்பாளியின் சுதந்திரத் தன்மையோடு தொடர்புடையது. சக்திஜோதியின் கவிதைகளின் நவீனக் கவிதை மொழியைக் குறித்துப் பேசலாம்.இவரின் கவிதைகள் இப்படித்தான் நவீனக் கவிதை மொழி இருக்க வேண்டும் என்ற வரையறைகளைக் கொண்டிருக்கின்றன.

'அது என் அந்தரங்கங்களை இருட்டுப் போர்வையினால் போர்த்திப் பாதுகாக்கிறது பகலின் முகமூடிகளைக் கழற்றிய பின்பும்கூட என் முகத்தைப் பாதுகாக்கின்றது' என்னும் கவிதையைக் காணும்போது தம் அனுபவத்தைப் படைப்பாக ஆக்கித் தருகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

'நீ வந்து நீங்கியபின் உடல் தணலாகக் கொதிக்கின்றது பின் உன் நினைவுக் காற்று என்னக் குளிர்விக்க என்னை மீட்டுக் கொள்கிறேன்' போன்ற கவிதைகள் தணலாக வீசுகின்றன.

கவிஞர்கள் பலர் பெரும்பாலும் சுதந்திர உணர்வும் முற்போக்கு எண்ணமும் கொண்டவர்களாகவும் இதம்மைக் தொடக்க நிலையில் அறிமுகப்படுத்திக் கொள்பவராகவும் இருக்கிறார்கள்.அது போன்று சக்திஜோதியின் கவிதைகளும் அமைகின்றன.

'அந்த இரட்டைத் தென்னை மரங்களின் இடை மேலுயரும் பளிச்சிடும் வெள்ளி எதற்க்குச் சொந்தமானது'

இரு மலைகளுக்கிடையே உதிப்பது வெள்ளி. இங்கு இரட்டைத் தென்னை மரங்களிடையே அதைக் காட்டுவதில் புதுமை என ஒரு கவிஞர் கூறுகிறார்.

காதலிப்பது ஒருவரை, மணப்பது ஒருவரை எனஎண்ணும்போது எந்தக்கவிஞனுக்கும் வெறுப்போ, சினமோ வருவதில்லை. இளைஞர்கள் பேரிழப்பாகக் கருதிச் சுமக்க முடியா சோக வாழ்விற்கு அடிமையாகி நினைத்தவாறு கவிதை எழுதி மனம் புழுங்கித் தவிப்பது வேடிக்கை. 'மறந்து விடுங்கள் உங்கள் மனசு சுமக்கமுடியாதபடி மணக்கும் என் நினைவுகள் கனக்கத் தொடன்கிருந்தால் என்னை மறந்துவிடுங்கள்' கோபக் கனல் தெறிக்க வேண்டிய வயதில், சோகக் கவிதை வாசிப்பது வேதனை.

பொழுதுபோக்கிற்காகக் காதலிக்கத் தொடங்கியவர் பலர். பெண்களின் பார்வைக் கூடக் கரைசேராக் கப்பல் போலும். மனமெங்கும் கனம்.காதலின் நினைவால் அழுத்தும் சுமை.வேறிடம் நோக்கிக் காதல் பயணம்.சுட்டால் தானே நெருப்பு. ஒரு பெண்ணின் அழகையும் அவள் வருகையும் கண்டு .ஆடவர்களின் சலனப்படுத்தப்படுவதைக் கவிதையாக்கிய நிலை பெண்களைக் காணும் இளைஞர்கள் அவ்வளவு பலவீனமாக்குவது பயனற்ற செயல். 'பனியில் இரவு முழுக்க நனைந்த மலர்போல குளிர்ந்து கிடக்கின்ற அன்பு என்மேல் முத்தங்களாய் பொழிகிறது' தாஜ்மகாலை அழகியல் பார்வையில் பலர் படம் பிடித்து காட்டியுள்ளனர்.காதலன் காதலியிடம் கூறுவதாக அமைந்துள்ள கூற்று உண்மையின் வெளிப்பாடே.

'நானருகில் இருக்கையில் கார்மேகம் கனிந்து பெய்யும் மலையென என் மீது முத்தமழை பொழிய '

கவிதைக்கு கற்பனையைப் போலவே உணர்ச்சியும் ஓர் இலக்கியக் கூறு எனலாம்.


'கடல் நிலம் மலை பாலை என எங்கும் காணோம் நமதன்பின் வெளியை'

என்ற அர்த்தமுள்ள வரிகளில் அன்பு ஒளிர்கிறது .தீவிர போராட்டத்திற்குப் பின்பு அன்பு மலரும்போது மானுட வாழ்க்கை மலர்ச்சி பெறுகின்றது.

தொகுப்புரை:

கவிதை மொழி உருவாக்கத்தில் இரு குறித்தன்மையில் அமைந்த சொல்லின் பொருள் உறைந்த நிலையிலிருந்து கவிதையில் இயக்கம் கொள்ளாத நிலைக்களன்களாக அமைகின்றது. எந்தப் படைப்பாளியைவிடவும் இலக்கியப் படைப்பாளிக்கு சமூகத்தில் கூடுதல் பொறுப்புண்டு. எழுதுபவர் கலைஞர்களில் சிறப்பானவர் என்பது என் கருத்து. பிக்காசோவின் ஓவியங்களை விடவும் பித்தோவானின் இசைக் கோளங்களை விடவும் வான்கோவின் ஒரு வார்த்தை, கதையின் ஒரு சொல் மக்களை ஆட்டிபடைத்துவிடும்' என்கிறார் ஜெயகாந்தன். இன்று கவிதை மொழி வியக்கத்தகு வண்ணம் மாற்றம் அடைந்திருக்கிறது. அரசியல், சமூக நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றம் கலாசாரத் துறைகளிலும் பிரதிபலிக்கிறது. தண்ணீர் கொடுத்து உபசரிப்பது தமிழ் மரபு. பாட்டில் தண்ணீரைக் கேட்கவும் இகொடுக்கவும் சங்கடப்படுமளவு பண்பாடு மாறிவிட்டது. ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றையக் கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. பழைய மரபுகளைக் கடந்து புதியன வருகின்றபோது அது நவீனமாகிப்போகிறது.அந்தந்தக் காலக்கட்டத்தில் தோன்றக்கூடிய இலக்கியங்கள் அந்தந்தக் காலத்தின் நவீன இலக்கியமாகிக் கொள்கின்றன. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான கவிதைகள் அதற்கான மொழி அடையாளங்களோடு அமைந்திருக்கின்றன .ஆகக் கவிதைக்கான மொழி என்பது பல்வேறு தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளைத்தான் நவீன கவிதைகள் என்கின்றனர். தற்காலக் கவிதைகள் யாவும் புதுக்கவிதை என்கின்ற வடிவத் தோற்றத்தில் இருந்தாலும் அதனுள் பொதிந்திருக்கும் மொழிப்புழங்கல் நவீனமாக அமைந்திருக்கிறது. தற்காலத்திய வாழ்க்கை நவீனமாகிக்கொண்டிருக்கும் சுழலில் நவீன வாழ்வின் பிரதிபலிப்பாக இன்றையைக் கவிதைகள் இருப்பதனால் அவற்றை நவீனக் கவிதைகள் ' எனச் சுட்டலாம் .நவீனக் கவிதை மொழியாய் வடிவம் கொண்டு சக்தி ஜோதியின் கவிதைகள் தமிழைச் செழுமைப்படுத்திக் கொள்ளும் என்பதே சாத்தியம்.




முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-
641 028
பேச:
098438 74545.