பழந்தமிழ் இலக்கியம் போற்றும் குடும்ப விழுமியங்கள்

 

கவிஞர் வி. கந்தவனம்

லகெங்கணுமே குடும்ப விழுமியங்கள் வீழ்ச்சியடைந்துவரும் இக்காலத்தில், தமிழர்தம் பாரம்பரிய குடும்ப ஒழுக்க முறைகளை அறியாதவருக்குத் தெரிய வைப்பதையும் மறந்தவருக்கு நினைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது இக் கட்டுரை. குடும்பம் என்பது இல்வாழ்க்கைக்குரியதென்றும் விழுமியம் என்பது சிறப்பான பயன்களைத் தரும் பண்பாட்டு ஒழுக்க முறை என்றும் கொண்டு இக்கட்டுரை வரையப்;படுகிறது. விழுமியத்தின் சீர்மைகள் பலவாகும் என்பதனைக் கட்டுரை முடிவில் வாசகர் உணர்வர்.

1. அன்புடைமை

குடும்பச் சிறப்புகளில் முதன்மையானது கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் அன்புடையவராய் இருத்தல். அன்புடைமைக்கு அடையாளம் இருவரும் இணைபிரியாது வாழ்தல். இதனை அகவாழ்வு பேசும் எல்லா நூல்களும் மிகவே வலியுறுத்தக் காண்கிறோம். குறுந்தொகையில் செவிலித்தாய் தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றாக வாழ்கின்றனர் என்று நற்றாயிடம் கூறுவதாக வரும் பாடல் இது:

கானங் கோழிக் கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதல்நீர் வாரும் பூநாறு புறவில்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.
(1)

|தலைவன் தலைவியைப் பிரியாது உறைகின்றான். எச்செயல் குறித்தும் பிரிந்து செல்வ தில்லை. தற்செயலாக அரசபணி காரணமாக வெளியூர் செலினும் விரைவாகவே மீண்டு விடுவான்| என்ற செய்தியை இப்பாடலின் பிற்பகுதி தெரிவிக்கின்றது.

நற்றிணையில் தலைவியே தரும் தகவல் இது:

நின்ற சொல்லர் நீடு தோன்(று) இனியர்
என்றும் என்தோள் பிரிபறி யலரே.
(2)

|தோழீ! நம் காதலர் நின்று நிலைக்கும் வாய்மையுடையவர். நெடிதாக நினைந்து இன்புறத்தக்க இனிய பண்புகளை உடையவர். என்றைக்குமே என் தோள்களைப் பிரிவதை அறியாதவர்| என்று பெருமையாகவே கூறும் தலைவியின் கூற்று இல்லற வாழ்க்கையின் சிறப்பு எப்பொழுதும் கணவனுடன் இணைபிரியாது இருத்தலே என்ற மரபு வழிவந்த எண்ணக்கருத்தைப் பிரதிபலிக்கின்றது.

2. அறஞ் செய்தல்

இல்லற வாழ்க்கையின் இன்றியமையாத நோக்கம் அறஞ் செய்தல். இல்லறம் என்ற சொல்லில் அறமும் கலந்திருப்பதைக் கவனித்தல் வேண்டும். |அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை|(3) என்ற வள்ளுவர் பெருமான் வாக்கு இல்வாழ்க்கையின் குறிக்கோளை நன்கு வலியுறுத்துகின்றது.

துறந்தவர்க்கும் வறியவர்க்கும் இறந்தவர்க்கும் இல்வாழ்க்கை நடத்துபவர் துணையாக இருத்தல்வேண்டும். இறந்தவர்க்குத் துணை செய்தலாவது அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் அவர்களால் நன்மை பெற்றவர்களுக்கு உதவுதல்.

3. பொருள் ஈட்டல்

அறஞ் செய்வதற்குப் பொருள் வேண்டும். பொருளைத் தேடுதல் தலைவனின் கடமை யெனக் கருதப்பட்டது. |ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லென|(4) பொருள் ஈட்டுதற்குரிய செயல்களிலே தலைவன் ஈடுபடுவான். அதாவது தொழில் ஒன்றை மேற்கொண்டு இல்லறத்துக்கு வேண்டிய வருவாய்க்கு வழிவகுப்பவன் கணவன். வருவாய்க்குத் தக்கவாறு குடும்பத்தை நடத்தும் பொறுப்பு மனைவிக்குரியதாக இருந்தது. மனைவி தொழில் பார்க்க வேண்டும் என்ற நிலை போற்றப்படவில்லை. சங்க இலக்கிய முறையிற் சொன்னால் மக்கள் வாழ்க்கை அக்காலத்தில் அக வாழ்க்கை புற வாழ்க்கையென இருவகைப்பட்டிருந்தது. அக வாழ்க்கைக்கு மனைவியும் புற வாழ்க்கைக்குக் கணவனும் உரியவர்களாகக் கருதப்பட்டனர்.

புறத்தே சென்று பொருள் தேடிவந்த கணவன், கொண்டுவந்த செல்வத்தைத் தன் மனைவியிடம் கொடுத்துக் கூறிய கூற்று ஒன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. குடும்ப வாழ்க்கையின் விழுமியத்துக்குக் கிடைத்த நன்கொடைபோல் அமைந்த அப்பாடல் இது:

நின் நயந்து உறைந்தார்க்கும் நீ நயந்து உறைந்தார்க்கும்
பன்மாண் கற்பின் நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேற் குமணன் நல்கிய வளனே.
(5)

இந்தக் குடும்பத் தலைவர் ஒரு புலவர். பெருஞ்சித்திரனார் என்று பெயர். அவர் வள்ளல் குமணன் அளித்த பரிசுப் பொருள்களைத் தன் மனைவியிடம் கொடுத்து, |என் மனைக்கு உரியவளே! தொங்கும் பழங்களையுடைய பலா மரங்கள் செறிந்த முதிர மலையின் தலைவனாகிய சிறந்த வேற்படை தாங்கிய குமண வள்ளல் தந்த இச் செல்வத்தை, நின்னை விரும்பி வாழ்பவருக்கும் நீ விரும்பிப் பழகுகின்றவருக்கும் கற்பிற் சிறந்த நின்றன் உறவினருக்கும் என எல்லா வகையான சுற்றத்தவருக்கும் பசி தீருமாறு கொடுப்பாயாக! நின்னுடைய அன்பு குறித்து நினக்கு உதவிசெய்தவருக்கும் மற்றும் இன்னார் இனியார் என்று நோக்காது, என்னைக் கேட்க வேண்டும் என்றும் கருதாது, பிற்காலத்துக்கு உதவும் என்று சேர்த்து வைக்கவும் விரும்பாது நீ எல்லோருக்கும் இதனைக் கொடுத்து உதவுவாயாக!| என்று கூறுகின்றார்.

இந்தப் பாடல் உணர்த்தும் குடும்ப விழுமியங்களைப் பின்வருமாறு பட்டியற்படுத்தலாம்:

1. குடும்பம் என்பது கருத்து ஒருமித்து வாழ்தல்.
2. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தாங்கிச் சமத்துவ உரிமையுடன் இல்லறத்தை நடத்துதல்.
3. ஈதலுக்கே பொருள் ஈட்டுதல் வேண்டும்.
4. கொடுத்து எஞ்சியதே துய்த்தலுக்குரியது.
5. அறஞ் செய்வதற்கே இல்வாழ்க்கை.
6. அறஞ் செய்வதால் வரும் இன்பமே இன்பம்.
7. சுற்றத்தவர் பசியால் வாடுகையில் செல்வத்தை வீட்டில் பதுக்கி வைத்தலாகாது.
8. பொருளைத் தேடுவது கணவனின் கடன்.
9. அதனைத் தக்கவாறு செலவு செய்தலும் வீட்டு அலுவல்களை நிருவகித்தலும் மனைவியின் பொறுப்பு.

4. விருந்தோம்பல்

வீட்டுக்கு வந்தவரை மலர்ந்த முகத்துடன் வரவேற்று இருக்கை அளித்து இன்சொற் பேசி விருந்தளித்து மகிழ்வித்தல் தமிழர் கண்ட இல்லற விழுமியங்களிற் சிறப்பாகப் போற்றப் படுவதொன்று.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வெளாண்மை செய்தற் பொருட்டு


என்பது வள்ளுவர் பெருமான் வாக்கு.
(6)

5. இன்பம் துய்த்தல்

அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களில் மூன்றாவதாகப் பேசப்படுவது இன்பம். இல்லறம் முழுவதும் இழையோடுவது இன்பம் துய்த்தலுக்குரிய செயற்பாடுகள். உலகத்திலே பிறக்கும் உவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இன்பம் அனுபவிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளனர். இன்பங்கள் யாவற்றிலும் சிறந்தது அறத்தால் வரும் இன்பம் எனத் தமிழர் கண்டனர். அறம் செய்வதற்குத் தகுந்த வாழ்க்கை இல்லற வாழ்க்கை என்றும் கருதினர்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது


என்றார் வள்ளுவர் பெருமான்.
(7) அவர் குறிப்பிடும் பயனுக்குள் இந்த இன்பமும் அடங்கும். அதாவது அன்பை வளர்த்து, அறத்தைப் புரிந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது பொருள். எனவே குடும்ப இன்பம் என்பதைப் பண்டைய தமிழர் வெறும் காம உணர்ச்சி இன்பமாகக் கருதவில்லை என்பது புலப்படும். அது அன்பாகிய மனைவியும் அறமாகிய கணவனும் கலந்து அனுபவிக்கும் நல்வினைப் பயன் கருதிய இன்பம். இதுவே இல்லற இன்பத்துக்கான விளக்கமாகும்.

6. சீரிய ஒழுக்கம்

அன்பாகிய மனைவி தன்னையும் காத்துத் தற்கொண்டானையும் பேணிச் சொற்காத்துச் சோர்விலாது குடும்பத்தைக் கவனிப்பவள். அவள் கற்பெனும் திண்மை மிகுந்தவள்.
கற்பு எனப்படுவது 'மகளிர்க்கு மாந்தர்மாட்டு நிகழும் மன நிகழ்ச்ச' என்று இளம்பூரணரும்
(8) 'தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள' என்று நச்சினார்க்கினியரும் (9) 'சொற்றிறம்பாம' என்று அவ்வையாரும் (10) விளக்குவர்.

கற்பொழுக்கம் குடும்ப விழுமியங்களுட் கண்ணெனப் போற்றப்பட்டது. அதனை |தீதிலா வடமீனின் திறத்து|(11) கண்ணகி பாத்திரத்தால் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்புறக் காட்டிப்போந்தார். கற்பின் திறத்தைச் சிலப்பதிகாரம் காட்டியதுபோல் வேறெக் காப்பியமும் வலியுறுத்தவில்லை.

பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்
விற்பொலியும் சேனையும்மா வேழமும் - கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடல் தெய்வக் கடவுளரும்
மாத்துவத் தான்மறைந்தார் மற்று


என வரும் பாடலில்
(12) கற்பானது மதுரைமா நகரை உண்ண(எரிக்க) தெய்வங்களும் அதனைத் தடுக்கவொண்ணாது வெளியேறின என்று கூறிக் கற்புக்குப் பேராற்றல் உண்டு என்ற கருத்தை மிக அழுத்தமாவே பதிவு செய்கிறார் இளங்கோ அடிகள்.

பெண்களுக்குக் கற்பைப்போல ஆண்களுக்கும் நிலையில் திரியாத் தோற்றமுண்டு. அறமாகிய கணவன் எனப்படுபவன் பிறன்மனை நோக்காப் பேராண்மை வாய்ந்தவன். ஆண்கள் பரத்தையர் வழிச்சேறல் சங்க இலக்கியங்களிற் பேசப்பட்டிருப்பினும் ஊரவர் அலர் தூற்றுவதால் அதனை ஒரு விழுமியமாக ஆன்றோர் ஏற்றுக்கொண்டதி;ல்லை. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படல் வேண்டும் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது.

7. மக்கட் பேறு

இல்லற இன்பத்தின் விளைவுகளிலே தலையாயது மக்கட் பேறு. இதனை

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற


என்ற வள்ளுவர் பெருமான் வாக்காலும்
(13) அறியலாம். பிள்ளைச் செல்வ இன்பத்தைப் பின்வரும் பாடல் பேசும் விதம் கிளுகிளுப்பானது:

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழு நாளே.
(14)

பிள்ளைகளை வளர்த்தெடுப்பதிலும் விழுமிய முறைகளை நம் முன்னோர் பின்பற்றி வந்தனர்.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
(15)

என்ற பொன்முடியார் பாடல் மக்களை வளர்ப்பதில் தாய்க்கும் தந்தைக்கும் உள்ள பொறுப்புக்களை முன்வைக்கின்றது.

8. சான்றாண்மை

புலவர் பொன்முடியாரின் |சான்றோன் ஆக்குதல்| என்ற சொற்றொடர் வலுவானது. பிறந்த குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வசதிகளை அளித்தல் தந்தையின் கடன். அந்தக் கல்வியானது அவர்களை அவையத்து முந்தியிருக்கச் செய்தல் வேண்டும்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
(16)

என்று வள்ளுவர் பெருமான் சொல்கையில் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வழங்கப்பட வேண்டுமென்பதே பொருளாகின்றது. ஏனெனில் சாதாரண கல்வியால் அவையத்து முந்தி யிருத்தல் சாலாது.

இனி, பொன்முடியார் |சான்றோன்| என்றும் வள்ளுவனார் |மகன்| என்றும் ஆண்களையே குறிப்பிட்டிருத்தலையும் கவனித்தல் வேண்டும். அந்தக் காலத்தில் இன்று நாம் கருதுவது போன்ற ஆரம்பக் கல்வி அல்லது இடைநிலைக் கல்வியுடன் பெரும் பான்மையான பெண்கள் திருமணமாகி இல்லறத்தில் இருந்துவிடுவதனாலும் பிள்ளைப் பராமரிப்பு மற்றும் வீட்டு அலுவல்களுக்கு அவர்களே பொறுப்பு என்கின்ற சமூக வழக்கம் மேலோங்கி இருந்ததாலும் அவர்களால் மேற்படிப்பைத் தொடர முடியாத நிலை இருந்தது. மேலும் அவர்கள் தொழில் பார்க்க வேண்டும் என்கின்ற நியதியும் இருக்க வில்லை. அதனால் பெருவழக்குக் கருதிப் பெண்பாலைக் குறியாது ஆண்பாலைக் குறித்தனரே யன்றிப் பெண்கள் கற்கக்கூடாது என்ற கருத்தால் அன்று என்று கொள்வதே பொருந்தும். சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண்பாற் புலவர்களின் ஆக்கங்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்புக்கள் பெண்களுக்கும் இருந்தன என்பதனையே காட்டுகின்றன. அவ்வைப் பிராட்டியார் நல்ல உதாரணம்.

கல்வி கேள்விகளாற் சான்றாண்மை இயல்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமே பழந்தமிழர் மத்தியிற் பரவலாக இருந்துவந்துள்ளது. இந்த இயல்புகளை
|அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு ஐந்து|(17) என்று வரையறை செய்வார் ஐயன் வள்ளுவனார். ஆக, குடும்ப விழுமியங்கில் ஒன்று பெற்ற பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுத்தல் என்பதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தக்
காண்கின்றோம்.

9. ஏவா மக்கள்

பிள்ளைகளும் பெற்றோர்களை மதித்து நடத்தல் வேண்டும். தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் இல்லையாதலால் தந்தை சொல்லை அவர்கள் தட்டாது கேட்டு நடத்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர். தாயிற் சிறந்தொரு கோயில் இல்லை. அதனால் பெற்ற தாயைத் தெய்வமாகப் பிள்ளைகள் போற்றுவது விரும்பப்படுகின்றது. பெற்றோர் பெருமையை எடுத்துரைக்கும் 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்| என்ற அறிவுரை அவ்வைப் பிராட்டியாரின் கொன்றைவேந்தனில் முதலாவது வாக்கியமாக அமைந்துள்ளது.

பெற்றோர் மற்றும் பெரியவர்களின் குறிப்பறிந்து நடக்கும் பிள்ளைகள் சிறந்த பிள்ளைகளாகக் கருதப்படுகின்றனர். அத்தகைய ஏவா மக்கள் பெரியவர்களுக்கு மூவா மருந்தாவர் என்று இலக்கியங்கள் போற்றுகின்றன.

பிசிராந்தையார் என்ற புலவர் ஆண்டுகள் பலகடந்த முதுமையிலும் தமக்குத் தலை நரையாமைக்கு,

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர் என் இளைஞரும்
(18)

என்று காரணம் கூறுவது கவனிக்கத்தக்கது.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்(19)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்
(20)

ஆகிய குறள்களும் பெற்றோருக்குப் பெருமைதரும் வகையில் பிள்ளைகள் நடத்தல் வேண்டும் என்ற விழுமியத்துக்கு விளக்கேற்றுகின்றன.

10. நிறைவுரை

இதுகாறும் கூறியவற்றால் காதலர் இருவர் இணைபிரியாது கருத்தொருமித்து இல்லறம் இருத்தலும் திரைகடல் ஓடியும் திரவியந் தேடி அறஞ் செய்தலும் ஒழுக்கத்தை ஓம்புதலும்
நல்வினைப் பயன் கருதிய இன்பந் துய்த்து நன்மக்களைப் பெறுதலும் அவர்களைச் சான்றோர்களாக வளர்த்தெடுத்தலும் பிள்ளைகளும் பெற்றோர் மகிழும்வகை குடும்பப் பெருமையைப் பேணி உலகத்தவர் போற்ற நடத்தலும் தமிழர் கண்ட குடும்ப விழுமியங்களெனப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுவதைக் காணலாம்.

------------------------------
1. குறுந்தொகை 242.
2. நற்றிணை 1.
3. குறள் 49.
4. குறுந்தொகை 63.
5. புறம் 163.
6. குறள் 81.
7. குறள் 45.
8. தொல்காப்பியம் பொருளியல் - நூற்பா 51.
9. தொல்காப்பியம் பொருளியல் - நூற்பா 53.
10. கொன்றைவேந்தன் 14.
11. சிலப்பதிகாரம்: மங்கலவாழ்த்துப் பாடல் - அடி 27.
12. சிலப்பதிகாரம்: வழக்குரை காதை - வஞ்சின மாலை வெண்பா
13. குறள் 61.
14. புறம் 188.
15. புறம் 312.
16. குறள் 67.
17. குறள் 983.
18. புறம் 191.
19. குறள் 69.
20. குறள் 70.