அரியவர் அரங்கம்
(Disabled Theatre)
கவிஞர் வி. கந்தவனம்
விளக்கம்
அரியவர்
என்ற சொல் மனநலம் பாதிக்கப்பட்டவரையும் உடல் ஊனம் உற்றவரையும் குறிக்க
இக்கட்டுரையிற் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைவரைக் குறிக்க ஒலிம்பிக்
குழு பயன்படுத்திவரும் Special
என்ற சொல் பிரபலியமானது. அவர்களுக் கென்றே Special Olympics
என்ற பெயரில் விளையாட்டுக்களை ஒலிம்பிக்
குழு நடத்திவருகின்றது. குறைபாடுள்ளவரது இயலாமையை முன்வைக்கும் எந்தச்
சொல்லையும் மருத்துவரோ உளவியலாளரோ விரும்புவதில்லை. அவர்களைத் தெய்வக்
குழந்தைகள், வளர்மதிகள், அரியவர் என்று வேறு விதமாகக் குறிப்பிடுவதே
பண்புடைமையாகும். இவற்றுள் அரியவர் என்ற சொல்லே மிகவும் பொருத்தமானதாக
எனக்குத் தெரிகிறது.
ஏன் அரியவர்?
அரியவர் என்போர் பொதுமைக்குப் புறம்பானவர்ளூ நாளாந்தம் நாம் காணாதவர்ளூ
காணுகின்றபோது எமது கவனத்தை ஈர்க்கின்றவர். மனிதாபிமானத்தின் பொருளை,
அதன் தேவையை எமக்கு உணர்த்துகின்றவரும் அவர்களே! மலர்கள் எவ்விதம் அழகு
உணர்ச்சியை ஊட்டுகின்றனவோ அவ்விதம் அன்பிலார்க்கும் அன்பை ஊற்றெடுக்கச்
செய்பவரை அரியர் எனல் தகுமன்றோ!
யாழ்ப்பாணத்தில் அரியவர் அரங்கம்
அரியவரின் கலையார்வத்தை வளர்க்கும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரங்கம்
அரியவர் அரங்கம் ஆகின்றது. இத்தகைய அரங்கத்தை நான் முதல்முதலில்
தாயகத்தில் யாழ்ப்பாணத்திற் காண நேர்ந்தது.
செஞ்சொற் செல்வர் திரு. ஆறு திருமுகன் அவர்களது முயற்சியால்
ஆரம்பிக்கப்பெற்ற சிவபூமி அறக்கட்டளை கடந்த பல ஆண்டுகளாகப்
புற்றுநோயாளருக்கு நிதியுதவி, காது கேளாதவருக்குச் செவிப்புலக்கருவி
வழங்கல், ஏழைச் சிறார்களுக்குக் கல்வி உதவி, கண்தானம் மற்றும்
இரத்ததானச் சேவைகள் போன்றவற்றைச் செய்து வருவதைப் பலரும் அறிவர்.
2009 நவம்பர் மாதத்;தில் இப்பணிகளை
நேரிலேயே கண்டறியும் வாய்ப்புக் கிடைத்தது. அவற்றுள் சிவபூமிப்
பாடசாலைப் பணி செயற்கருஞ் செயலாக விளங்குகின்றது.
இது ஒரு சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. வெளிநாட்டுப் பரோபகாரிகளின்
நன்கொடைகளாலும் அன்னை சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா
அப்பாக்குட்டி அவர்களுடைய வழிப்படுத்தலாலும் கோண்டாவில் கிழக்கில்
கட்டப்பெற்று 02.07.2004ல் திறப்புவிழா நடத்தப்பட்டிருக்கின்றது.
14.11.2009 சனிக்கிழமை
செஞ்சொற்செல்வர் என்னையும் எனது துணைவியாரையும் அழைத்துச் சென்று
பாடசாலையைக் காட்டினார். திருமதி கமலாதேவி சண்முகராஜா அதிபராகப்
பணியாற்றுகின்றார். பிள்ளைகள் தொகை 172.
அவர்களைப் பதினொரு ஆசிரியர்கள் அன்பு பாராட்டிக் கவனித்துவருகிறார்கள்.
பாடசாலைப் பிள்ளைகளுடன் கட்டுரை ஆசிரியரும்
துணைவியார் தவமணியும்.
திரு.தி.வேற்பிரசாதம் நிருவாக அலுவலராகவும் திரு.சி.கதிரவேல்
காவலராகவும் பணிபுரிகின்றனர். அழகான இயற்கைச் சுழலில் அமைந்திருக்கும்
இப் பாடசாலை இரண்டு மாடிக்கட்டிடத்தில் நடைபெறுகின்றது.
பாடசாலையைத் திரு. ஆறு திருமுருகன் தலைமையில் சிவபூமி அறக்கட்டளைப்
பணிப்பாளர் சபை ஒன்று நிருவகித்து வருகின்றது.
மீண்டும் ஒருமுறை 18.11.2009
புதன்கிழமை சிவபூமிப் பிள்ளைகளைப் பார்க்கச் சென்றிருந்தோம். முதற்
சென்றதிலும் அதிக நேரம் பிள்ளைகளுடன் பழகமுடிந்தது. ஒரு கட்டத்தில்
ஆசிரியரின் ஏற்பாட்டில் பிள்ளைகள் சிலர் தாங்கள் கற்ற பாடல்களைப்
பாடிக்காட்டினர். இன்னும் சிலர் பாடலுக்கு நடனங்கள் ஆடிக் காட்டினர்.
மாணவர் ஒருவர் நடனம் ஆடிக் காட்டுகின்றார்.
வாழ முடியாதவர்களென வழக்கமாகப் பொதுமக்களால் பறக்கணிக்கப்படும் வளர்ச்சி
குன்றிய பிள்ளைகளுக்கு வாழ்வளிக்க மேற்கொள்ளும் முயற்சியானது கருணை,
இரக்கம், பொறுமை, மனிதாபிமானம் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையிற்
சிறப்புற நடைபெறுவதைக் கண்டு மகிழ்ந்து நன்கொடையும் வழங்கிப்;
பாராட்டினோம்.
பிள்ளைகளின் கலையாற்றலைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்ததுளூ கண்களும்
கலங்கின.
Theatre Hora
அரியவர் அரங்கத்தை முன்னிலைப்படுத்திய பெருமை சுவிஸ் நாட்டு
Theatre Hora வுக்குரியது. இவ்வரங்கம்
இக்காலத்தில் அரியவர்களுக்கென்றே நடத்தப்படுகின்றது. 1993ஆம்
ஆண்டிலிருந்து மரபுக் கலைஞருடன் சேர்த்து அரியவரையும் இவ்வரங்கம்
நடிக்க வைத்தது. ஆனால் 2012முதல்
Disabled Theatre என்ற பெயரில்
முழுமையாக அரியவர்களை வைத்தே
அரியவர் அரங்க
நடிகர் Damien. Credit: Torstar News Service
நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளிக்கைசெய்து வருகின்றது. புகழ்பெற்ற
பிரான்சு நாட்டு நடன அமைப்பாளர் Jerome Bel
என்பவர் அரியவர் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.
அரியவர் அரங்கத்தின் முதல் காட்சி 2012
பிரசல்ஸ் நகரில் நடத்தப்பெற்றது. எனினும் அதே ஆண்டில் யேமனியில் நடந்த
கலை விழாவில் அரியவர் அரங்கத்துக்குப் பெரு அங்கீகாரம் கிடைத்ததைத்
தொடர்ந்து, அரியவர் காட்சிகள் உலகின் பல பகுதிகளிலும் நடத்தபட்டு
வருகின்றன. இதுவரை 150க்கும்
அதிகமான அரங்கங்களில் அரியவர் ஆடியிருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் நாம் பார்த்த அரியவர் நிகழ்ச்சிகள் முறையான அரங்கத்தில்
நடத்தப்படவில்லை. எமக்காக எழுந்தமானத்தில் ஒரு மண்டபத்தில் அவை
ஒழுங்குசெய்யப்பட்டன என்பதையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
Jerome Bel அவர்களது ஆரம்பகால நடன
அமைப்புகளும் முறைசாராப் பாங்கிலேயே இருந்தன. அதனால் அவை பலரைக்
குழப்பமடையவும் வைத்தன. அவரது முறையில் நடிகர் ஒவ்வொருவராக வந்து
தங்களைப் பற்றியே பேசுவர். போகப்போக அவர்களது பேச்சு, தமது இயலாமை
மற்றும் நோய்கள் பற்றியதாக மாறும். பேச்சு அவர்களது தாய்மொழியாகிய
சுவிஸ் யேமனில் இருப்பதால், காட்சி வேகத்தைச் சிலசமயங்களில்
மொழிபெயர்ப்புத் தடங்கல் செய்வமுண்டு.
அரியவர் அரங்கம் நடிகரின் அனுபவங்களை வெளிப்படுத்துவதை இலக்காகக்
கொண்டது.
இப்பொழுதெல்லாம் Jerome Bel இன்
பாணி பலருக்கும் விளங்கக்கூடியதாக உள்ளது. அவற்றைப் பார்க்கும் அவையினர்
உணர்ச்சிவயப்பட்டுக் கண்ணீரும் வடிக்கின்றனர்.
அண்மையில் ஒன்ராறியோவில் முகத்துவார மையத்தில் (Harbourfront
Centre) ஹோரா அரங்க அரியவர் தொடர்ந்து
நான்கு நாட்கள் தங்கள் கலைவண்ணத்தை அவையோருக்கு அளிக்கை செய்து
பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றனர். பார்க்கப்படவேண்டிய காட்சி என்று
பலரும் பரிந்துரை செய்துள்ளனர்.
|