உயிர்களின் நேசர் திருவள்ளுவர் !

கவிஞர் இரா.இரவி.



லகப்பொதுமறை வழங்கிய திருவள்ளுவர், மனிதகுலத்தின் செம்மைக்கு மட்டும பாடவில்லை. உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் குறள் மூலம் குரல் தந்தவர் திருவள்ளுவர்.

கொல்லாமை
(33) என்று ஓர் அதிகாரம் படைத்து அதில் உள்ள பத்து திருக்குறளிலும் உயிர்நேசத்தை உரக்க உரைத்து உள்ளார்.

நவீன யுகத்தில் உணவுக்காக விலங்குகளை, பறவைகளை கொல்வது மட்டுமன்றி சாதி, மத, இன சண்டைகளின் காரணமாக மனிதனே மனிதனைக் கொன்று குவித்து வருகின்றான். உலக அமைதியே கேள்விக்குறியாகி வருகின்றது. தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகின்றது. அப்பாவி பொதுமக்கள் பலர் தீவிரவாதத்திற்கு பலியாகி வருகின்றனர். தீவிரவாதிகள் மூளைச்சலவைச் செய்து உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் சிந்திக்கும் திறன் இழந்து கொடூரங்கள் நிகழ்த்தி வருகின்றனர். தீவிரவாதிகளின் கையில் திருக்குறளை வழங்கி படிக்க வைத்தால் திருந்திட வாய்ப்பு உண்டு.

திருவள்ளுவர் எந்த ஒரு உயிரையும் கொல்லுதல் கூடவே கூடாது என்று அறம் பாடி உள்ளார். பாருங்கள்.

அறவினை யாதெனில் கொல்லாமை கோறள்
பிறவினை எல்லாம் தரும்.
321

அறச்செயல் எது என்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே. அவ்வாறு கொல்லுதல் பிற தீவினைகளை எல்லாம் தானே கொண்டு வரும்.
உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சக உயிர்களை மதிக்க வேண்டும். தன்னுயிர் போல பிற உயிர்களையும் கருதிட வேண்டும். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று சொன்ன வள்ளலார் போல, பிற உயிர்கள் மீது இரக்கம் காட்டு, எந்த உயிரையும் கொல்லும் உரிமை மனிதனுக்கு இல்லை, காரணம், எந்த ஒரு உயிரையும் படைக்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. இருக்கின்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து, பேணிக்காத்திடு என்ற உயர்ந்த நற்குணத்தை மனிதகுலத்திற்கு கற்பித்த பேராசான் திருவள்ளுவர்.

பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
. 322

கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்து, தானும் உண்டு, பல உயிர்களைக் காப்பாற்றுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாகும்.
மனிதன் தனக்கு கிடைத்தவற்றை தன்னலமாக, தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல், பதுக்கி வைக்காமல் பிறருக்கு பகிர்ந்து வழங்கி, வாழ்வாங்கு வாழு. என்று அறிவுறுத்தி உள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

சென்னையில் பெய்த அடைமழை காரணமாக மக்கள் இன்னலில் தவித்த போது சாதி, மத வேறுபாடு பாராமல் உதவிய உள்ளங்கள் அனைவருமே திருக்குறள் வழி வாழ்ந்திட்ட நல்லவர்கள் எனலாம். இசுலாமிய சமயத்தை சேர்ந்த இளைஞர்கள், குறிப்பாக தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளிவாசல்களை திறந்து வைத்து மத வேறுபாடு இன்றி எல்லா மதத்வரும் வாருங்கள் என்று வரவழைத்து, உணவளித்து, காத்திட்ட பணி மகத்தான பணி. பாராட்டுக்குரிய பணி, போற்றுதலுக்குரிய பணி.

முகமது யூனுஸ் என்ற தொழில்அதிபர் முகநூல் செய்தி அறிந்து மீனவர்களிடம் படகுகளை வாங்கி பயணித்து கர்ப்பிணிப்பெண் உள்பட பல உயிர்களைக் காப்பாற்றி அரும்பணி ஆற்றி உள்ளார். தனக்கு நீச்சல் தெரியாவிடினும் துணிவுடன் தண்ணீரில் பயணித்து பிற உயிர்களைக் காப்பாற்றி உள்ளார். ஒரு முறை தண்ணீரில் தவறி விழுந்த போது மீனவர்கள் அவரைக் காப்பாற்றி உள்ளனர். கர்ப்பிணிப் பெண் பிறந்த பெண் குழந்தைக்கு முகம்மது யூனிஸ் என்று பெயரை சூட்டி உள்ளார். இதனை அறிந்த அவர், குழந்தையின் கல்விச்செலவு முழுவதையும் தான் ஏற்பதாக அறிவித்து உள்ளார். இவற்றை எல்லாம் ஊடகங்களில் பார்த்த போதும், படித்த போதும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு என்றும் அழிவில்லை. அவரின் அறிவுரை மனிதர்களின் மனங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்தி மனித நேயத்தை விதைத்து உள்ளது என்பதை நன்கு உணர முடிந்தது.

ஒன்றாக நல்லது கொல்லாமை  மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
. 323


ஆராய்ந்து பார்த்தால், உயிர்களைக் கொல்லாதிருத்தல் ஒப்பற்ற அறமாகும். உண்மை பேசுவது இரண்டாவது அறமாகக் கருதப்படும்.

சைவம் என்று ஒரு திரைப்படம் வந்தது. வீட்டில் வளர்த்த சேவலை கோவிலுக்கு பலி கொடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த சிறுமி வீட்டின் சேந்தியில் சேவலை ஒளித்து வைத்து விடுவாள். தேடி அலைவார்கள், சில நாட்கள் கழித்து கண்டுபிடித்து விடுவார்கள். அப்போது அந்தச் சிறுமி வீட்டாரிடம் வேண்டுவாள். பாவம் சேவல் பலியிட வேண்டாம் என்று அவளின் விருப்பத்திற்கு இணங்க விட்டு விடுவார்கள். இந்தத் திரைப்படம் பார்த்த போது என் நினைவிற்கு வந்தது இந்தத் திருக்குறள் தான்.
உண்மை பேசுவது அறம். ஆனால் திருவள்லுவர் அந்த அறம் கூட இரண்டாவது அறம் தான். முதல் அறம் என்பது எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

நல்லாறு எனப்படுவது யாதுஎனின், யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
324


நல்லொழுக்கம் எனப்படுவது யாதெனில், எந்த ஓர் உயிரையும் கொல்லாத ஆற்றலைப் போற்றும் நெறியாகும்.


திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாக உரைத்தவர். அவர் நல்ல ஒழுக்கம் என்பது எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் வாழ்பவர்களை போற்றுவது என்கிறார்.
எந்த ஒரு உயிருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதே மனிதருக்கு உயர்ந்த அறமாகும். கொலை செய்தல் என்பது மிகப்பெரிய குற்றம். அக்குற்றத்தை ஒருபோதும் யாரும் எப்போதும் செய்யாதீர்கள் என்று வள்ளுவ அறிஞர் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறார்.

அதனால் தான் அறிஞர்கள் பலரும் திருக்குறளுக்கு இணையான ஒரு அற இலக்கியம் உலகில் இல்லவே இல்லை என்று அடித்துக் கூறி உள்ளனர். திருவள்ளுவர் பாடாத பொருள் இல்லை. அனைத்துப் பொருளிலும் அற்புதமாகப் பாடி உள்ளார். மண்ணில் நல்லவண்ணம் வாழ, பிறர் போற்றிட வாழ்வாங்கு வாழ்ந்திட திருவள்ளுவர் வழி சொல்லி உள்ளார். உலக மொழிகள் யாவினும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். உலக மனிதர்கள் யாவரும் திருக்குறள் வழி நடந்தால் உலகில் அமைதி நிலவும்.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை
. 325

கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுத் துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் ஆவான்.

திருவள்ளுவர் புரட்சியாளர், மனதில் பட்டதை துணிவுடன் எழுதியவர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துறவறம் பூண்டவர்களை மிக உயர்வாகக் கருதிய காலம். இன்றும் துறவறம் பூண்டவர்களைக் கண்டு மிகவும் மதிப்பவர்கள் உண்டு. ஆனால் இன்று துறவறம் பூண்டவர்கள், கோடிகளுக்கு அதிபதிகளாக வலம் வருகிறார்கள். ஆனால் அன்று உண்மையாக துறவறம் பூண்டவர்கள் இருந்திருப்பார்கள். அவர்களை எல்லாம் விட உயர்ந்தவர் யார் என்றால் எந்த ஒரு உயிரையும் கொல்லாமல் நடக்கும் அறவழியாளன் தான் என்கிறார். இத்தகைய துணிவு திருவள்ளுவரைத் தவிர வேறு யாருக்கும் அன்றைக்கு வரவில்லை.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிர்உண்ணும் கூற்று
 326

கொல்லாமை என்னும் அறவழியில் நிலையாய் வாழும் ஒருவனுடைய வாழ்நாள் கூடிக்கொண்டே இருக்கும். இந்தத் திருக்குறளை இன்றைக்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவியல் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பிற உயிர்களைக் கொன்று கிடைக்கும் அசைவ உணவு என்பது உடல்நலத்திற்கு கேடாக அமையும். நோய் வரும் வாழ்நாளை குறைத்து விடும். எனவே அசைவம் விடுத்து சைவத்திற்கு மாறுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுரை நல்கி வருகின்றனர். நாற்பது வயதைக் கடந்த பலரும் மருத்துவரின் அறிவுரைக்கு இணங்க அசைவத்திலிருந்து சைவ உணவிற்கு மாறி வருவதைப் பார்க்கிறோம். இந்தக் கருத்தை திருவள்ளுவர் நீ எந்த ஒரு உயிரையும் கொன்று உண்ணாமல் இருந்தால் நீண்ட காலம் நீடுழி வாழ்வாய் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை
. 327

உயிரினங்கள் மூலம் தனக்கு மரணபயம் வந்தாலும், தன்னைக் காத்துக் கொள்வதற்காக உயிர்களைக் கொல்லக் கூடாது.

தன்னைக் காத்துக் கொள்வதற்காகக் கூட பிற உயிரைக் கொல்லாதே என்கிறார். ஆனால் ஒன்றுமே செய்யாத உயிரினங்களான ஆடு, கோழி, மீன் போன்றவற்றை மனிதன் கொன்று உண்டு வாழ்வது முறையா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலக உயிரினங்கள் மீது அன்பு செலுத்துக. கொல்வது கொடிய செயல். அதனை ஒருபோதும் செய்யாதீர்கள் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் இன்று மற்ற உயிரினங்களைக் கொல்வது மட்டுமன்றி தன் இனமான மனித இனத்தையே மனிதன் கொல்லும் கொடூரங்கள் நிகழ்ந்து வருகின்றன. மனிதநேயமற்ற மனித விலங்குகள் திருந்த வேண்டும். மனிதநேயம் மட்டுமல்ல விலங்குகள் நேயமும் பறவைகள் நேயமும் மொத்தத்தில் உயிர்கள் நேயம் மலர வேண்டும்.

நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை
. 328

¬உயிரினங்களைக் கொல்வதால் செல்வம் சேர ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம். அவ்வாறு வரும் செல்வத்தை நல்லோர்கள் சிறந்ததாகக் கருத மாட்டார்கள்.

இந்தத் திருக்குறளை கூலிக்காக மனிதர்களை கொலை செய்யும் கூலிப்படையினருக்கும் பொருத்திப் பார்க்கலாம். நேரடியாக பகை எதுவும் இல்லாத போது, ஒருவன் பணம் தருகிறான் என்பதற்காக அவன் சொன்னவனைக் கொலை செய்யும் கொடூரம் பல இடங்களில் நடந்து வருகின்றது. இந்த நிகழ்வுகள் விலங்கிலிருந்து வந்த மனிதன் திரும்பவும் விலங்காகவே மாறி விட்டானோ என்று எண்ணத் தோன்றுகிறது. கூலிப்படை கொன்று விடுகிறது. அவ்வாறு கொல்லப்பட்டவரின் குடும்பம் இன்னலில் தவிக்கின்றது, சபிக்கின்றது. கொலை செய்ததற்காக பெற்ற கூலிப்பணம் கோடிகள் என்றாலும் அவற்றை வைத்து அவனால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியுமா? மனச்சாட்சி அவனை தினம் தினம் தூங்கவிடாமல் கொன்று கொண்டே இருக்கும்.

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
329

கொலைகாரன் என்றால் குற்றம் புரிந்தவன், கெட்டவன், நல்லவன் அல்லன் என்று சமூகத்தில் யாருமே மதிக்க மாட்டார்கள். இது போன்ற கேவலம் கொலைகாரனுக்கு மட்டுமல்ல அவனது குடும்பத்திற்கும் வந்து சேரும். இழிவான தொழில் கொலை செய்தல். எப்போதும் யாரையும் எதற்காகவும் கொலை செய்யாதே என்கிறார் வள்ளுவர்.

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
. 330

பிணி, வறுமை இயற்கையாக வந்தால் கூட இவன் ஏற்கெனவே உயிர்களைக் கொலை செய்து இருப்பன். அதன் காரணமாகவே இந்தத் துன்பம் வந்தது என்று கூறுவதற்கு வாய்ப்புண்டு.

இறவாத இலக்கியம் படைத்த திருவள்ளுவர் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களின் நேசர். அவர் எந்த ஓர் உயிருக்கும் மரணம் என்பது இயற்கையாக வர வேண்டுமே தவிர, செயற்கையாக மரணம் வரவே கூடாது. உலகில் பிறந்த அனைத்து உயிரிகளுக்கும் வாழும் உரிமை உண்டு. அதனை தட்டிப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை. சக உயிர் மீது அன்பு செலுத்துங்கள். யாரும், யாரையும் கொல்லாதீர்கள். ஒருவர் மற்றவரைக் கொன்றால் மற்றவர் குடும்பத்தில் இருந்து கொன்றவரைக் கொல்ல புறப்பட்டு விடுவார்கள். பலிக்கு பலி, பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்ற விலங்கு குணம் விடுத்து, மனிதாபிமானத்தோடு வாழுங்கள். விலங்குகளை நேசியுங்கள். பறவைகளை நேசியுங்கள். உலகில் அமைதி நிலவிட மனிதன் மனிதனாக வாழ்ந்திட ஒப்பற்ற உயர்ந்த திருக்குறளை படிப்பதோடு நின்று விடாமல் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ்வோம் வாருங்கள்.
.