கங்காரு நாட்டு காகிதம் ----- 2

லெ.முருகபூபதி

கறிவேப்பிலை

நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் வீட்டுக்கு வீடு ரோஜா செடிகள் நிச்சயமாக இருக்கும். இலங்கையரைப்பொறுத்தவரையில் பல வண்ணங்களில் மலரும் ரோஜாவை விட அதிகம் மவுசான செடி கறிவேப்பிலைதான்.

இங்கு கறிவேப்பிலை செடியை நட்டு ஆரோக்கியமாக வளர்த்து வீட்டில் கறிக்கும் பறித்து- வீட்டுக்கு வரும் தமிழ் விருந்தினருக்கும் கொடுத்துவிடமுடிந்தால் அது ஒலிம்பிக் சாதனைக்கு நிகரானதுதான்.

கறிவேப்பிலையில் பல மருத்துவகுணங்கள் இருப்பதாக எமது முன்னோர்கள் எப்பொழுதோ கண்டுபிடித்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் தாவரவியல் விஞ்ஞானம் படிக்கவுமில்லை ஆய்வுகூட சோதனைகளிலும் ஈடுபடவில்லை.

கறிவேப்பிலை கலந்த உணவுக்கு விசேடமாக தனிச்சுவை இருக்கும். ஆனால், பெரும்பாலானவர்கள் உண்ணும்போது அதனை கறியிலிருந்து நீக்கி எடுத்துப்போட்டுவிடுவார்கள்.

கறிவேப்பிலையில் பல உயிர்ச்சத்துக்கள் இருப்பதாக பெரியவர்கள் எவ்வளவுதான் எடுத்துச்சொன்னாலும் இளம் தலைமுறையினர் காதில் போட்டுக்கொள்வதில்லை.

ஒரு சமயம் இலங்கைக்கு தமிழகத்திலிருந்து வந்திருந்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 'குமரன்' கணேசலிங்கன் வீட்டு விருந்தில் கறிவேப்பிலையை சுவைத்துச்சாப்பிட்டதைப்பார்த்த பின்னர்தான் மல்லிகை ஜீவாவுக்கும் அதன் மருத்துவ குணங்கள் தெரியவந்ததாம். முத்தமிழ் காவலர் கறிவேப்பிலைக்காம்புகளை ரசித்து சுவைத்ததை ஜீவா எங்கேயோ எழுத்தில் பதிந்து நான் படித்ததாக ஞாபகம்.

கங்காரு நாட்டில் கறிவேப்பிலைக்கு நல்ல மரியாதை இருப்பதற்கு இலங்கை, இந்திய, மலேஷியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய நாட்டவர்கள் இங்கு புலம்பெயர்ந்திருப்பதுதான் முக்கிய காரணம்.

நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் மட்டுமல்ல கறிவேப்பிலையின் பயன்பாடுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பலசரக்குக்கடைகளில் பிலாஸ்ரிக் பக்கட்டுகளில் விற்பனைக்கு நிச்சயம் இருக்கும்.
நண்பர் கவிஞர் அம்பி முன்பொருசமயம் பாப்புவாநியுகினியில் பணியாற்றியபொழுது அங்கே தமது உணவில் அடிக்கடி கறிவேப்பிலை சலாட் சேர்த்துக்கொண்டார். அதன் பலனையும் விரைவில் உணர்ந்தார். அவருக்கு இரத்தத்தில் கொலஸ்ரோல் வீதம் திடீரென குறைந்திருந்தது. இந்தத்தகவலை அமெரிக்காவிலிருந்து பாப்புவாநியுகினிக்கு ஒரு மகாநாட்டுக்காக வந்திருந்த ஆங்கிலேய டொக்டரிடம் தெரிவித்தார். ஆச்சரியமுற்ற அந்த டொக்டர் மாநாடு முடிந்து அவசரமாக நாடுதிரும்ப நேரிட்டது. அமெரிக்கா சென்றதன் பின்னர் அம்பிக்கு கடிதம் எழுதிய குறிப்பிட்ட டொக்டர் தமக்கு குறிப்பிட்ட கறிவேப்பிலைத்தாவரத்தில் இரண்டு கிலோ வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். பாப்புவாநியுகினியில் கறிவேப்பிலைக்கு குறைவில்லை. வெப்பவலயப்பிரதேசம் கறிவேப்பிலையின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. அம்பி அந்த அமெரிக்கா டொக்டரின் வேண்டுகோளை ஏற்று தபால்பொதியில் கறிவேப்பிலை அனுப்பினார். அதற்கான சன்மானத்தை டொக்டரும் அம்பிக்கு அனுப்பியிருந்ததோடு தாம் கறிவேப்பிலையில் ஆராய்ச்சி மேற்கொள்வதாகவும் வெற்றி கிட்டினால் அதற்கான ரோயல்டியும் அனுப்புவதாக தெரிவித்திருந்தார். அம்பியும் அவுஸ்திரேலியாவுக்கு பின்னர் புலம்பெயர்ந்துவிட்டார்.

அந்த அமெரிக்க டொக்டரின் ஆராய்ச்சிக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

இச்சந்தர்ப்பத்தில் தமது அனுபவம் ஓன்றை எங்கள் கரிசல்காட்டு இலக்கியவாதி கி.ராஜநாராயணன் தமது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

அவர் குறிப்பிட்டது தலைக்கும் உடம்புக்கும் தேய்த்துக்குளிப்பதற்கு உதவும் ஒருவகை அரப்பு இலை. ஒரு நண்பர்தான் கி.ரா.வுக்கு இந்த அரப்பு இலையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அந்த இலையை காயவைத்து அரைத்தெடுத்து குளியலின்போது பாவித்திருக்கிறார். அவரது குடும்பத்தினரிடமும் அது பாவனைக்கு வந்துவிட்டது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியாக இருந்ததாம் அந்த அரப்பு இலை.

கட்டுரையின் இறுதியில் கி.ரா. இப்படி எழுதுகிறார்:- 'எனக்குக் கவலை எல்லாம் - இப்போது - இந்த அரப்பு இலையை எவனும் வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்து அருவமில்லாமல் உரிமைப்பதிவு செய்துகொண்டுவிடுவானோ என்கிற பயம்தான்.'

சரி இனி மீண்டும் கறிவேப்பிலைக்கே வருகிறேன்.

எங்கள் வீட்டிலும் ஒரு கறிவேப்பிலை செடியை வளர்த்துவிடவேண்டும் என்று நீண்ட நாட்களாக மனைவி நச்சரித்துக்கொண்டே இருந்தா. எனக்கோ அதில் ஆர்வம் இல்லை.

கறிவேப்பிலைசெடியை மிகவும் பக்குவமாக வளர்க்கவேண்டும். இந்த மாநிலத்தின் குளிர் அதற்கு ஜன்ம விரோதி. குளிருக்கு காண்பிக்காமல் குளியல் அறையிலோ அல்லது சமையலறையிலோ முடிந்தால் படுக்கை அறையிலே பக்குவமாக சாடியில் வைத்து வளர்க்கவேண்டும். கோடைகாலம் வரும்போது வீட்டின் வளவில் பொருத்தமான இடத்தில் சாடியிலிருந்து கவனமாக வேர் அறுந்துவிடாமல் எடுத்து நடவேண்டும். தினமும் அதன் வளர்ச்சியை கணவனும் மனைவியும் காலையில் பரஸ்பரம் முகத்தில் விழிப்பதுபோன்று இந்தச்செடியின் வளர்ச்சியைப்பார்ப்பதற்காக அதன் முகத்தில் விழிக்கவேண்டும்.

அது வாடிவிட்டால் முகமும் வாடிவிடும்.

இந்தக்கவலையை ஜீரணிக்க கஷ்டமாக இருக்குமே என்று நானும் மனைவியின் விருப்பத்தை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தேன். நண்பர்களின் வீடுகளுக்குப்போனாலும் அங்கே அவர்கள் வளவில் கறிவேப்பிலை செடி நிற்கிறதா? என்பதைப்பார்ப்பதற்காகவே மனைவியின் கண்கள் சுழலும். இருப்பது தெரிந்தால் எங்கே எடுத்தீர்கள் ? எப்படி வளர்க்கிறீர்கள்? என்ன பசளை? முதலான கேள்விகளை அடுத்தடுத்து அடுக்குவா.

வீடு திரும்பும்போது மீண்டும் நச்சரிப்பு தொடங்கும்.

சமீபத்தில் நண்பர் தெளிவத்தை ஜோசப்பும் தமிழகத்திலிருந்து ஜெயமோகன் தம்பதியரும் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்தசமயம் எங்கள் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அவர்களிடமும் மனைவி தனது கறிவேப்பிலைக்கனவை சொல்லிவிட்டாள்.

'எங்கே கிடைக்கும் சொல்லுங்க.... நாங்க நிற்கும்போதே வாங்கி மரம் நாட்டுவிழாவும் நடத்திவிடுவோம்.' என்று சொன்ன தெளிவத்தை ஜோசப்பின் குரல் மனைவிக்கு பக்கபலமாகிவிட்டது.

ஒரு நாள் இலங்கை-இந்திய மளிகைச்சாமான்கள் விற்கும் கடையொன்றுக்கு சென்றிருந்தோம். கடையைச்சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தெளிவத்தை அங்கு விற்பனைக்கிருந்த கறிவேப்பிலை கன்றுகளை பார்த்துவிட்டார். அவர் ஊடாக மீண்டும் எனக்கு விண்ணப்பம் மனைவியிடமிருந்து வந்தது.

பிறகென்ன, கறிவேப்பிலைக்கன்று ஒன்றும் எனது காரின் பின் ஆசனத்தில் மனைவிக்கு அருகே ஆரோகணித்து அமர்ந்துகொண்டது.

அன்று தான் ஒரு சாதனையை நிலைநாட்டிவிட்ட புளகாங்கிதத்துடனேயே மனைவி வீட்டுக்குள் வலம்வந்தாள்.

' தெளிவத்தை இனி எப்போது மரம் நாட்டு விழா? ' என்று கேட்டேன்.

அவரை முந்திக்கொண்டு மனைவி இப்படிச்சொன்னா:- 'இப்ப குளிர் தொடங்கிட்டுது. வெய்யில் காலம் வரும்வரையும் அது வீட்டுக்குள்ளேயே சாடியில் வளரட்டும். அது என்ர பிள்ளை. இனி நான் பார்த்துக்கொள்ளுவேன்.'

தெளிவத்தை, நாடு திரும்பிய பின்னரும் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பங்களில் கறிவேப்பிலைக்கன்று எப்படி இருக்கிறது ? என்று மறக்காமல் கேட்பார். அவர் இங்கு வந்த நேரம் எங்கள் குடும்பத்தில் கறிவேப்பிலைக்கன்றும் ஒரு அங்கத்தவராகிவிட்டது.

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்த மக்கள் எப்போது தங்கள் ஊருக்கு போய்ச்சேருவோம் என்று ஏக்கத்துடன் காத்திருப்பதுபோன்று- எங்கள் கறிவேப்பிலைக்கன்றும் சூரிய வெளிச்சத்திற்காக மண்ணுக்கு (எங்கள் வீட்டு பின் வளவுக்கு) இடம்பெயர ஏக்கத்துடன் காத்திருக்கிறது.

வெளிச்சம் அனைவருக்கும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நானும் காத்திருக்கிறேன்.

                                                                      ( தொடரும்........)

காகிதம் 1 ஆவது பார்க்க


mpoopathy@yahoo.com.au