'ஓர்ஏர்உழவர்' என்ற 'ஒக்கல் வாழ்க்கையார்'

 

முனைவர் இரா.மோகன்

 


ங்க இலக்கியம் என்பது செம்மையும் செழுமையும் தொன்மையும் தூய்மையும் சான்ற 2381 பாடல்களின் தொகை நூல் ஆகும். இதில் 102 பாடல்களை இயற்றிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. ஏனைய பாடல்கள் 473 புலவர் பெருமக்களுடைய சொல்லோவியங்கள் ஆகும். பெயர் அறியப்படும் சங்க காலப் புலவர்களுள் நூற்றுவர்க்குப் பதினெழுவர், அதாவது ஏறத்தாழ எண்பது புலவர்கள், இலக்கியச் சிறப்பால் பெயர் பெற்றவர்களாக விளங்குகின்றனர். இவர்களது பெயர்களில் இலக்கியச் சுவை மிளிரக் காண்கிறோம். பேராசிரியர் மொ.அ.துரை அரங்கசாமி குறிப்பிடுவது போல், 'இப் பெயர்கள் எல்லாம் முறையே புலவர்கள் இயற்றிய பாடல்களில் வரும் உணர்ச்சியை எழுப்பும் உருவகங்களாலும், விளக்கமான உவமைகளாலும், உள்ளத்தை அள்ளும் சொற்றொடர்களாலும் ஆனவை. புலவர்கள் தம் கற்பனையைக் கடைந்தெடுத்த வெண்ணெய் உருண்டைகளாக இவை இலங்குவனவாகும். இவர்களுடைய பாடல்களின் உயிரை இவை குறிப்பன. தாம் இயற்றிய கவிதையாம் வேள்வித் தீயில் மூழ்கித் தூய்மை பெற்ற எழுந்து இத் தூய பெயர்களை இவர்கள் எய்தினார்கள் எனலாம்' (சங்க கால இலக்கியச் சிறப்புப் பெயர்கள், பக்.1-2).

பாடலில் வரும் அழகிய உவமையால் பெயர் பெற்ற சங்க காலச் சிறப்புப் பெயர்களுள் ஒன்று 'ஓர்ஏர்உழவனார்' என்பது. 'பதிப்பு வேந்தர்' உ.வே.சாமிநாதையரின் குறுந்தொகைப் பதிப்பில்
131-ஆம் பாடலின் ஆசிரியராக இப் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் தெரியவில்லை.

'வினை முற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது' என்பது குறுந்தொகை
131-ஆம் பாடலின் துறைக் குறிப்பு. இதில் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தான் மேற்கொண்ட முயற்சி முற்றுப் பெற்ற நிலையில் தலைவிபால் மீள எண்ணுகிறான்ளூ கார் காலத்தின் தொடக்கத்தில் திரும்பி வருவதாகத் தலைவியிடம் தான் கூறிய உறுதிமொழியை நினைத்து வருந்துகிறான். 'அசைகின்ற மூங்கிலைப் போன்ற அழகினையும் பருமையையும் உடைய தோள்களையும், காண்பவருடைய நெஞ்சத்தோடு போர் புரியும் பெரிய கண்களையும் பெற்ற தலைவி இருக்கும் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது. மழை பெய்ததனால் ஈரம் உண்டாகி உழுவதற்குத் தக்க செவ்வியை அடைந்திருக்கும் பசிய வயலை உடைய உழவன், தன்னிடம் ஓர் ஏரை மட்டுமே பெற்றிருந்தால், எங்ஙனம் ஈரம் காயும் முன் உழுது முடித்துவிட வேண்டும் என்று விரைவானோ, அது போல என் நெஞ்சம் தலைவியிடம் செல்வதற்கு மிகவும் விரைகின்றது. அந்தோ! அதனால் எனக்கு உண்டாகும் வருத்தம் பெரிதாகின்றது' என்னும் தலைவனின் கூற்றாக அமைந்த நயமான குறுந்தொகைப் பாடல் வருமாறு:

'ஆடுஅமை புரையும் வனப்பின் பணைத்தோள்
பேர்அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுந்சேண் ஆர்இடை யதுவேளூ நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர்ஏர் உழவன் போலப்
பெருவிதுப்பு உற்றன்றால் நோகோ யானே.'


'ஓர்ஏர்உழவன்' (ஒற்றை ஏரை உடைய உழவன்) என்ற உவமை இப் பாடலின் மையமாக -இதயமாக - விளங்குகின்றது. உயர்வுப் பன்மை விகுதிகளான 'அர்', 'ஆர்' என்பன முறையே இவ்வுவமைத் தொடருடன் இணைந்து 'ஓர்ஏர்உழவர்', 'ஓர்ஏர்உழவனார்' என்னும் பெயர்களாக அமைந்துள்ளன.

'ஓரேருழவன், ஈரம் வீண் படாமல் உழுதற்கு விரைதலைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்றதென்றான். பல ஏருடையான் சிறிது சோம்பியிருப்பினும் ஏவலாளர் உதவி கொண்டு குறுகிய கால அளவில் உழுது விடல் கூடும்ளூ ஓரேருழவனோ அவ்வோரேரைக் கொண்டே ஈரம் வீண்படாமல் உழ வேண்டியவனாதலின் விரைவான். ஆதலின் அவனை உவமை கூறினான். ஓரேருழவனென்றது ஓரேரும் அதனால் உழப்படும் சிறு நிலமும் உடையவனைக் குறித்தது' (குறுந்தொகை மூலமும் உரையும், பக்.
255-256) என இவ்வுமையின் நயதினையும் நுட்பத்தினையும் எடுத்துரைப்பார் 'பதிப்பு வேந்தர்' உ.வே.சாமிநாதையர்.

புறநானூற்றிலும் ஓர்ஏர்உழவர் பாடியதாக ஒரு பாடல்
(193) இடம் பெற்றுள்ளது. ஆயின் அப் பாடலில் அச்சொற்றொடர் இடம் பெறாதது வியப்பாக உள்ளது.

ஓர்ஏர்உழவர் தம் புறப்பாடலில் நான்கே அடிகளில் இல்வாழ்க்கையின் இயல்பினை உள்ளது உள்ளபடி எடுத்திரைத்திருக்கும் பாங்கு பயில்வார் நெஞ்சை அள்ளுவதாகும். மனைவி மக்களுடன், உற்றார் உறவினருடன் கூடி வாழும் இல்லற வாழ்க்கை ஒரு வகையில் துன்பமானது தான்ளூ ஆனாலும், அதில் இருந்து விடுபட்டுத் தப்பி ஓடி விடுவது என்பது எவருக்கும் அரிதினும் அரிதே. உலக வழக்கில் 'கால் கட்டு' என்னும் சொற்றொடரால் திருமண வாழ்க்கை சுட்டப் பெறுவதும் இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

'தோலை உரித்துத் திருப்பிப் போட்டது போல் உள்ள வெண்ணிறமான நெடிய நிலத்தில் தன்னை விரட்டிவரும் வேட்டுவனிடம் இருந்து தப்பி ஓடும் மான் போல் இல்-வாழ்க்கையில் இருந்து விடுபட்டு எங்கேயாவது தப்பி ஓடிப் பிழைத்துக் கொள்ளலாம் என்று தான் தோன்றுகிறதுளூ ஆனால், அங்ஙனம் தப்பிச் செல்லவிடாமல் மனைவி, மக்கள் போன்ற சுற்றத்தாருடன் கூடிய இல்வாழ்க்கை அதற்குத் தடையாக அமைந்து காலைத் தடுத்து நிறுத்துகின்றது' என்பது உண்மை ஒளி சுடர்விட்டு நிற்கும் ஓர் ஏர் உழவரின் அனுபவ மொழி ஆகும். இதனைத் தன்னகத்தே பொதிந்து வைத்துள்ள அழகிய புறப்பாடல் வருமாறு:

'அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்டுமா காலே!'


இப் பாடலில் ஓர்ஏர்உழவர் இல்வாழ்க்கையை வெறுத்துப் பாடி இருக்கிறார் என்றோ, இல்வாழ்க்கை பல துன்பங்கள் உடையது என்பதால் அதை விடுத்துத் துறவு நெறியை நாடுமாறு மனித குலத்திற்குக் கோடி காட்டி இருக்கிறார் என்றோ பொருள் கொள்ள வேண்டியதில்லை. மூதறிஞர் தமிழண்ணல் எடுத்துக்காட்டுவது போல, 'திருமணத்தில் திருப்பூட்டும் போது கெட்டி மேளம் கொட்டுவர். அகப்பட்டுக் கொண்டான் எனத் திரும்பத் திரும்பச் சொல்வது போல, ஓர் ஓசை ஒலிக்கும். அதிலும் ஓர் இன்பம் காண்பதனால் தானே, மாந்தரினம் மீண்டும் மீண்டும் அதையே நாடுகிறது. இதனை உலக இயல்பு கூறி, மனிதரை ஆற்றுப்படுத்துவதாகக் கொள்ளுதலே சிறப்பாகப் படுகிறது' (புறநானூற்றுக் குறும்படங்கள், பக்
.121-122).

தடை ஓட்டம்
(Hurdle Race) போல் அமைந்த இல்லற வாழ்வின் இயல்பினை உணர்த்தும் இப் பாடலைப் பொருள் உணர்ந்து பயிலும் நமக்கு 'ஒக்கல் வாழ்க்கையார்' என்னும் சிறப்புப் பெயரால் புலவரை அழைக்கலாம் போல் தோன்றுகிறது.
 

.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021