திருக்குறளில் எண்களின் ஆட்சி
முனைவர்
இரா.மோகன்
திருக்குறள் தேசியக் கருத்தரங்கம்:
இன்று
சீனா, ஜப்பான் முதலான உலக நாடுகளில் குமோன் (Kumon)
என்னும் கல்வி முறை வழக்கில் உள்ளது. இளம் பருவத்திலேயே தொடர்பியல்
திறனும் கணித அறிவும் நன்கு கைவரப் பெறுதல் அம் முறையின் இரு தலையாய
அடிப்படைகள் ஆகும். எந்தப் பொருளையும் விரைவாகவும் துல்லியமாகவும்
அறிந்து கொள்ள இவ்விரு ஆற்றல்களும் கை கொடுக்கும். எனவே இளமைப்
பருவத்தில் இருந்தே தொடர்பியல் திறனையும் கணித அறிவையும் வளர்த்துக்
கொள்ள குமோன் முறை கற்றுத் தருகின்றது. வள்ளுவர் ‘அவை அறிதல்’
அதிகாரத்தில் ‘செலச் சொல்லுதல்’ (722)
என்னும் தொடரால் தொடர்பியல் திறனைச் சுட்டுவார்; எந்தக் கருத்தையும்
எல்லோருக்கும் எளிமையாகவும் அதே நேரத்தில் ஆற்றலுடனும் சென்று சேரும்
வகையில் – கேட்போர் மனங்களில் பதியும் வண்ணம் – புலப்படுத்துவதை இத்
தொடர் உணர்த்தும். ‘சொல் வன்மை’ அதிகாரத்திலும் இத் திறன் தொடர்பான
கருத்துக்களை எடுத்துரைப்பார் வள்ளுவர்.
கணிதவியல் (Mathematics)
அடிப்படையில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஆராய்வதற்கு
மிகுந்த இடம் உள்ளது. பதச் சோறாக, 18 என்ற எண் தமிழ் இலக்கிய உலகில்
பெறும் இடத்தினை இங்கே எண்ணிப் பார்க்கலாம். சங்க இலக்கியம் பாட்டும்
(10) தொகையும் (8)
என இரு வகைப்படும்; இவற்றுள் 18 நூல்கள் அடங்கும்; பதினெண்மேல் கணக்கு
என இவற்றைச் சுட்டுவர். சங்க மருவிய காலத்தைச் சார்ந்தவை பதினெண்கீழ்க்
கணக்கு நூல்கள். தமிழ்ச் சித்தர் மரபிலும் பதினெண் சித்தர்கள் எனக்
குறிப்பிடும் வழக்கு உண்டு. அடுத்து, 12
என்ற எண்ணை எடுத்துக்கொண்டால் சைவ உலகில் வழங்குவன பன்னிரு திருமுறைகள்
என்றால், வைணவ உலகில் இடம்பெறுவோர் பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். குறிஞ்சி
மலரின் தனித்தன்மை 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை பூப்பது ஆகும். கணிதவியல் அறிவு கைவரப் பெற்றோர் தமிழ்
யாப்பினை (Tamil Prosody)
எளிதாகவும் விரைவாகவும் புரிந்து கொள்ள முடியும். காட்டாக,
தொல்காப்பியர் செய்யுளியல் நூற்பா ஒன்றில் (1358),
‘ஐஈர் ஆயிரத்து ஆறுஐஞ் ஞாற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூறு’
– அதாவது, ‘பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்று ஒன்பது’
(13,699) எனக் கணக்கிட்டுக் கூறுவது
நுண்மாண் நுழைபுலம் படைத்தவர்க்குக் கூரிய, சீரிய நல்விருந்து ஆகும்.
பேராசிரியர் தமிழண்ணல் குறிப்பிடுவது போல், “கணித நூல் வல்லாரும்
கண்டறியத் திகைப்புத் தரும் கணக்கு இது!” (தொல்காப்பியம், மூலமும்
கருத்துரையும், ப.466).
எழுத்துக்களால் அறியப் பெறுவது இலக்கியம்
எனில், எண்களால் அறியப் பெறுவது கணிதம் ஆகும். எழுத்தெண்ணிப் படிப்பது
போல, எண்களைக் கொண்டு கணக்கிட்டுக் கூறுவதும் ஒரு வகையான திறமையே ஆகும்.
வெறுமனே பொத்தாம் பொதுவில் கூறாமல், எண்களின் அடிப்படையில் கணக்காக –
புள்ளி விவரத்தோடு – ஒரு கருத்தைக் கூறும் போது, அக் கருத்து பயில்வோரை
எளிதாகச் சென்று சேரும்; பயில்வோர் மனதில் கல்வெட்டுப் போல் பசுமையாகப்
பதியும்; நினைவிலும் நிலையாகத் தங்கும். இதனை நன்கு உணர்ந்த
திருவள்ளுவர் ஒல்லும் வகை எல்லாம் தம் நூலில் எண்களைப் பயன்படுத்திக்
கருத்துக்களைத் திறம்படப் புலப்படுத்தியுள்ளார். வேறு சொற்களில்
குறிப்பிடுவது என்றால், எண்களோடு விளையாடுவது என்பது அவருக்கு
விருப்பமான படைப்பாக்க நெறி அல்லது உத்தி ஆகும். இவ்வியலில் ஒன்று
முதலாகக் கோடி வரையிலான எண்களைப் பயன்படுத்தி வள்ளுவர் தம் கருத்துக்களை
அழகுடனும் ஆற்றலுடனும் புலப்படுத்தி இருக்கும் பான்மை குறித்துக்
காணலாம்.
எண்ணும் எழுத்தும்
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக்
கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர் அறிஞர்.
“எண்என்ப ஏனை எழுத்துஎன்ப
இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு” (392)
என்பது ‘கல்வி’ அதிகாரத்தில் இடம்பெறும் இரண்டாவது குறட்பா ஆகும்.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்னும் முதுமொழி இங்கே நினைவுகூரத்
தக்கதாகும்.
“அறம் முதலிய நாற்பொருளாயமையும் எல்லாக் கலைகளும் அறிவியல்களும்,
எண்ணூலும் இலக்கியமும் என இரு வகுப்பாக வகுக்கப்பெறும். எண்ணூலென்பது
கணக்கும் (Arithmetic) கணிதமும்
(Mathematics). அது சிறப்பாக எண்களால்
அறியப்பெறும். இலக்கியமென்பது மற்றெல்லா அறிவுத் துறைகளும் ஆம். அது
பெரும்பாலும் எழுத்தை உறுப்பாகக் கொண்ட சொற்களால் அறியப்பெறும்.
இவ்விருவகை நூல் வகுப்புக்களும், எல்லாப் பொருள்களையும் அறிதற்குக் கண்
போல் அல்லது கண்ணாடி போல் உதவுதலாற் கண்ணெனப்பட்டன” (திருக்குறள் தமிழ்
மரபுரை, ப.230) என இக் குறட்பாவுக்கு எழுதிய உரை விளக்கத்தில்
குறிப்பிடுவர் மொழி ஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர்.
ஒன்று
எண்களின் வரிசையில் முதலில் வருவது ஒன்று. ‘ஒன்றே செய்க – ஒன்றும் நன்றே
செய்க – நன்றும் இன்றே செய்க – இன்றும் இன்னே செய்க’ என்பது ஆன்றோர்
அமுத மொழி. ‘நூற்றில் ஒரு வார்த்தை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்பன போன்ற
பேச்சு வழக்குகளும் மனங்கொளத் தக்கன. வள்ளுவர் ஒன்று என்ற எண்ணைப்
பத்துக்கு மேற்பட்ட குறட்பாக்களில் கையாண்டு கருத்துக்களைப்
புலப்படுத்தியுள்ளார். அவற்றுள் இன்றியமையாத ஓரிரு இடங்களை இங்கே
சுட்டிக் காட்டலாம்.
“கொன்றன்ன
இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்” (109)
என்பது ‘செய்ந்நன்றி அறிதல்’ அதிகாரத்தில் வரும் ஒரு குறட்பா. இதில்
ஒன்று என்ற எண்ணைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர். ‘தமக்கு
முன்பு ஒருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற
பெருந்தீமைகளைச் செய்தாராயினும், அவை எல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றையே
நினைத்த அளவில் நன்றியறிதல் உடையார் மனத்தில் இல்லாமல் மறைந்து போகும்’
என்பது இக் குறட்பாவின் பொருள். இது உண்மையான அல்லது தலையாய நன்றியறிதல்
உடையவரிடம் காணப்பெறும் ஓர் உயரிய பண்பு ஆகும்.
காமத்துப் பாலில் ‘அலர் அறிவுறுத்தல்’ அதிகாரத்தில் அலர் பரவிய
வேகத்தைக் குறிக்கும் போதும் ஒன்று என்ற எண்ணைத் திறம்படக்
கையாண்டுள்ளார் வள்ளுவர். காதலரைக் கண்டது என்னவோ ஒருநாள் தானாம்! ஆனால்
அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் உலகம்
எங்கும் பரந்துவிட்டதாம்!
“கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று”
(1146)
என்பது குறட்பா.
‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்’ (156)
எனப் ‘பொறை உடைமை’ அதிகாரத்தில் வரும் குறட்பாவிலும் ஒன்று என்ற எண்ணின்
ஆட்சியைக் காணலாம்.
இரண்டு
‘நாலும் இரண்டும்
சொல்லுக்கு உறுதி’ என்னும் முதுமொழியில் ‘நாலு’ என்பது நாலடியாரைக்
குறிக்கும்; ‘இரண்டு’ என்பது ஈரடிக் குறள் வெண்பாவால் அமைந்த
திருக்குறளைச் சுட்டும். திருக்குறளில் பத்துக்கு மேற்பட்ட
குறட்பாக்களில் இரண்டு என்ற எண் ஆளப்பெற்றுள்ளது. உடன்பாடும்
எதிர்மறையும் ஆக இரண்டிரண்டு அதிகாரங்களை அடுத்தடுத்து அமைத்துக்
கருத்துக்களைக் கூறிச் செல்லும் போக்கு திருக்குறளில் பயின்று
வருகின்றது. கல்வி x கல்லாமை
(41, 42), பெரியாரைத் துணைக்கோடல்
x சிற்றினம் சேராமை (46, 47),
செங்கோன்மை x கொடுங்கோன்மை
(55,56), மடிஇன்மை x
ஆள்வினை உடைமை (62, 63),
இரவு x
இரவு அச்சம் (106, 107)
என்னும் அதிகாரங்கள் இவ்வகையில் கருதத்தக்கவை. ‘குறிப்பு அறிதல்’
(71, 110) என்னும் தலைப்பு பொருட்பாலில்
ஒரு முறையும் காமத்துப் பாலில் ஒரு முறையும் என இருமுறை திருக்குறளில்
வருவதும் குறிப்பிடத்தக்கது.
“தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்” (19)
என்பது ‘வான் சிறப்பு’ அதிகாரத்தில் வரும் ஒரு குறட்பா. இதில், ‘மழை
பெய்ய-வில்லையானால், இந்தப் பரந்த உலகத்தில் பிறர் பொருட்டுச் செய்யும்
தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் ஆகிய இரு வகை நல்வினைகளும்
இல்லையாகும்’ என்கிறார் வள்ளுவர். ‘தானம் பிறர்க்குக் கொடுப்பது; தவம்
தன்னை ஒடுக்குவது’ (திருக்குறள் தமிழ் மரபுரை, ப.65)
என்பது பாவாணர் தரும் அரிய விளக்கம்.
காமத்துப் பாலில் ‘குறிப்பு அறிதல்’ அதிகாரத்தில் இடம்பெறும் ஒரு
குறட்பாவில் இரண்டு என்ற எண்ணைச் சுவையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்
வள்ளுவர். காதலனின் கூற்றாக வரும் அக் குறட்பா வருமாறு:
“இருநோக்கு இவள்உண்கண் உள்ளது; ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து”
(1091)
‘இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட நோக்கம் ஆகும்.
அவற்றுள் ஒரு நோக்கம் என்னிடத்து நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று
அந்நோய்க்கு மருந்தாகும்’ என்பது காதல் வயப்பட்ட ஒரு தலைவனின் கூற்று
ஆகும்.
‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தின் ஐந்தாம் குறட்பாவில் ‘இருள்சேர்
இருவினையும் சேரா’ (5) எனப் பொது நிலையில் வள்ளுவர் இரண்டினை
ஆண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று
தமிழ் இலக்கிய உலகில் மூன்று என்ற எண்ணுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு.
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களால் ஆனது;
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களைத் தன்னகத்தே
கொண்டது; சிலப்பதிகாரம் புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று காண்டங்களால்
உருவானது. சங்க இலக்கியம் முதல், கரு, உரி என்னும் முப்பொருள்களால்
அமைந்தது. சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்கள்
சிறப்பிடம் பெறும்; ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் பேசப்படும்.
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வடிவமான ஹைகூ கவிதையின் அடிகள் மூன்று
என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்குறளை ‘முப்பால்’ எனச் சுட்டுவது இலக்கிய மரபு. வலி அறிதல், காலம்
அறிதல், இடம் அறிதல் (48-50);
கல்வி, கல்லாமை, கேள்வி (40-42);
வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை (66-68); புலவி, புலவி
நுணுக்கம், ஊடல் உவகை (131-133)
என்றாற் போல் மூன்று மூன்றாக அதிகாரங்களை ஒருசேர அமைத்துச் செல்வதில்
வள்ளுவருக்குத் தனி ஈடுபாடு உண்டு.
‘மருந்து’ அதிகாரத்தின் முதல் குறட்பா, ‘நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று’
(941) என மருத்துவ நூலார் குறிப்பிடும் வாதம், பித்தம், சிலேத்துமம்
ஆகிய மூன்றினையும் சுட்டுகின்றது.
அறத்துப்பால் ‘மெய் உணர்தல்’ அதிகாரத்தின் இறுதிக் குறட்பா, ‘விருப்பு,
வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு
ஒழுகினால், துன்பங்கள் வராமல் அறவே கெடும்’ என மொழிகின்றது.
“காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.” (360)
பொருட்பாலில் ‘குடிமை’ அதிகாரத்தில் வரும் ஒரு குறட்பா உயர்குடியில்
பிறந்தவர்களின் பண்புகளாக மூன்றனைச் சுட்டும். அக் குறட்பா வருமாறு:
“ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்”
(952)
‘உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம்
மூன்றிலிருந்தும் ஒருபோதும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்’
என்பது இக் குறட்பாவின் பொருள். ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய மூன்றும்
முறையே மெய், மொழி, மனம் என்னும் முக்கரணம் பற்றியன ஆகும்.
காமத்துப்பால் ‘தகையணங்குறுத்தல்’ அதிகாரத்தில் வரும் ஒரு குறட்பாவில்
மூன்று என்ற எண் சுவைபட ஆளப்பெற்றுள்ளது. ‘என்னைக் கொல்வது போல
வருத்துவதால் காலனோ? இடையிடை மருண்டு பார்ப்பதால் பெண் மானோ? இவ்விரு
தன்மையும் இல்லாது சில வேளைகளில் இருப்பதால் இயல்பான மானுடக் கண்தானோ?
இந்தப் பெண்ணின் பார்வை இம் மூவகைத் தன்மையும் உடையதாக இருக்கின்றது!’
என ஐயுற்று உரைக்கிறான் வள்ளுவர் படைக்கும் காதலன் ஒருவன்:
“கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து”
(1085)
இக் குறட்பாவில் வந்துள்ள அணி ஐயவுவமை ஆகும்.
நான்கு
எண்களில் நான்கு தனிச்சிறப்பு உடையது; 1, 2, 3, 4
என்னும் நான்கு எண்களையும் கூட்டினால் வருவது பத்து. எனவே, நான்கு
நிறைவை – முழுமையைக் குறிக்கும் ஓர் எண் என்பர் அறிஞர். தமிழ் இலக்கிய
உலகிலும் மூன்றைப் போலவே நான்கும் செல்வாக்குடன் திகழ்கிறது. அறம்,
பொருள், இன்பம், வீடு என உறுதிப் பொருள் நான்கு. சைவ சமயத்திற்குப்
பெருமை சேர்த்தவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்,
மாணிக்கவாசகர் என இறையடியவர் நால்வர். கார் நாற்பது, களவழி நாற்பது,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது என நாற்பதில் அமைந்த பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள் குறிப்பிடத் தக்கவை. அகநானூறு, புறநானூறு என
நானூறு பாடல்களால் இயன்றவை சங்கத் தொகை நூல்கள். நாலாயிர திவ்யப்
பிரபந்தம் நாலாயிரம் பாடல்களைத் தன்னகத்தே கொண்ட வைணவப் பக்தி இலக்கியம்.
‘செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது, தீது எனக்குப் பல்லாயிரம்
சேர்ந்தன, நலம் ஓர் எட்டுணையும் கண்டிலேன், இதை நாற்பதாயிரம் கோயிலில்
சொல்வேன்’ என்பது பாரதியார் தம் சுயசரிதையில் தரும் ஒப்புதல்
வாக்குமூலம். இங்ஙனம் நான்கு என்ற எண் தமிழ் இலக்கிய உலகில்
செல்வாக்குடன் ஆட்சி செலுத்தக் காணலாம். பேச்சு வழக்கிலும் ‘நாலு
எழுத்து படிக்க வேண்டும்’, ‘நாலு காசு சம்பாதிக்க வேண்டும்’, ‘நாலு பேர்
போன வழியில் போக வேண்டும்’ என்றாற் போல் நான்கு என்ற எண் பயின்று
வருவதைக் காணலாம்.
வள்ளுவர் கருத்தில் அறம் என்பது பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய
இந்த நான்கு குற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் அவற்றைக் கடிந்து
ஒழுகுவதே ஆகும்.
“அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்” (35)
என ‘அறன் வலியுறுத்தல்’ அதிகாரத்தின் ஐந்தாம் குறட்பாவில் நான்கு என்ற
எண்ணைப் பயன்படுத்தி உரைப்பார் வள்ளுவர்.
வள்ளுவரின் பழுத்த மருத்துவ நூற்புலமையைப் பறைசாற்றும் அதிகாரம் ‘மருந்து’.
அதன் இறுதிக் குறட்பாவில், ‘நோய் உற்றவன் (நோயாளி), நோய் தீர்க்கும்
மருத்துவன், மருந்து, மருந்தை அருகிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ
முறை நான்கு வகைப் பாகுபாடுகளை உடையது’ என மொழிவார் வள்ளுவர்.
“ உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்
செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.”
(950)
ஐந்து
ஐம்பூதங்கள், ஐம்புலன்கள், ஐம்பெருங்குற்றங்கள் என்றாற் போல் ஐந்து
என்ற எண் பயின்று வரும் இடங்கள் உலக வழக்கில் உண்டு. இலக்கிய உலகிலும்
ஐந்தின் அடிப்படையில் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
உள்ளன. வள்ளுவரும் தம் நூலில் ஏறத்தாழப் பத்து இடங்களில் ஐந்து என்ற
எண்ணைக் கையாண்டு கருத்தினைப் புலப்படுத்தியுள்ளார். நல்ல நட்பின்
உயர்வையும், தீ நட்பு, கூடா நட்பு ஆகியவற்றின் கேடுகளையும்
வெளிப்படுத்தும் வகையில் திருக்குறளில் ஐந்து அதிகாரங்கள்
(79-83)
வரிசையாக இடம்பெற்றிருப்பது
குறிப்பிடத்தக்கது. வள்ளுவரின் கருத்தில் இறைவன் ‘பொறிவாயில்
ஐந்தவித்தான்’ (6) ஆவான்.
‘நீத்தார் பெருமை’ அதிகாரத்தில் ‘அறிவு என்னும் துறட்டியினால்
ஐம்பொறிகள் ஆகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை
போன்றவன்’ என நிறைமொழி மாந்தரின் உயர்வினை எடுத்துரைப்பார் வள்ளுவர்.
“உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து”
(24)
என்பது குறட்பா.
ஒரு சிறந்த நாடடிற்கு உரிய அழகுகளாகப் பின்வரும் ஐந்தினைக்
குறிப்பிடுவார் வள்ளுவர்: 1. நோய்
இல்லாதிருத்தல், 2. செல்வம்,
3. விளை-பொருள் வளம், 4.
இன்ப வாழ்வு, 5. நல்ல காவல்.
“பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து”
(738)
என்பது ஐந்து என்ற எண் அமைந்த அழகிய குறட்பா. இவ் ஐந்து அழகுகளும்
பொருந்திய நாடு மண்ணுலகில் விண்ணுலகம் போன்றது என்பது வள்ளுவரின்
கருத்து.
காமத்துப் பாலிலும் ஐந்து என்ற எண் சிறப்பாக ஆளப் பெற்றுள்ள ஓர் இடம்
உண்டு. ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகாரத்தில் வரும் முதல் குறட்பா வருமாறு:
“கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும்
ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.” (1101)
‘கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் சுவைத்தும் மூக்கால்
முகர்ந்தும் உடம்பால் தீண்டியும் அறிகின்ற ஐந்து புலன்களால் ஆகிய
இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் ஒருங்கே
அமைந்துள்ளன’ என்பது ஒரு தலைவன் புணர்ச்சிக்குப் பின் மகிழ்ந்து கூறும்
கூற்று ஆகும்.
ஆறு
திருவள்ளுவர் ஆறு என்ற எண்ணை ஒரே ஓர் இடத்தில் மட்டும்
பயன்படுத்தியுள்ளார்.
பொருட்பாலின் முதல் அதிகாரம் ‘இறைமாட்சி’. அதன் முதல் குறட்பாவில் ஓர்
அரசனின் மாண்பினைக் கூற ஆறு என்ற எண்ணைக் கையாண்டுள்ளார் வள்ளுவர்.
“படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.” (381)
‘படை, குடி, பொருள் (உணவு),
அமைச்சு, நட்பு, அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே
அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்’ என்பது வள்ளுவரின் கருத்து.
ஏழு
ஏழு பிறவிகளைக் குறிக்கும் ‘எழுபிறப்பு’ என்னும் சொல்லாட்சியே
திருக்குறளில் பயின்று வருகிறது.
‘பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு
பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா’ என்பது
வள்ளுவரின் அழுத்தமான கருத்து.
“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.” (62)
“ஏழு என்பது ஒரு நிறைவெண்; ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது” (திருக்குறள்
தமிழ் மரபுரை, ப.87) என்பர்
பாவாணர்.
வள்ளுவர் கல்விக்குத் தரும் முதன்மை சிறப்பு மிக்கது. அறத்துப் பாலில்
‘கடவுள் வாழ்த்து’க்குப் பிறகு ‘வான் சிறப்பு’ இடம்பெறுவது போல்,
பொருட்பாலில் ‘இறைமாட்சி’யைத் தொடர்ந்து ‘கல்வி’ வருவது
குறிப்பிடத்-தக்கது. ‘ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்
பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை
உடையதாகும்’ என்பது வள்ளுவரின் அசைக்க முடியாத நம்பிக்கை
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.”
(398)
“கல்வியறிவு வினைகள் போல உயிரைப் பற்றித் தொடர்தலின், ‘எழுமையும்
ஏமாப்புடைத்து’ என்றார்” (திருக்குறள் தமிழ் மரபுரை, ப.235) என்பது
பாவாணர் தரும் நுண்ணிய விளக்கம்.
விருப்பமானவருடன் இருக்கும் பொழுது நெடிய ஊழிக் காலமும் ஒரு நாள் போல
வேகமாகக் கழியும்; விருப்பமானவரைப் பிரிந்து வாடும் போது ஒரு நாளும் ஏழு
நாள் போல நெடிதாகக் கழியும். இது மனித உளவியல். இதனைக் காமத்துப்பாலில்
ஒரு குறட்பாவில் நயமாக வெளிப்படுத்தியுள்ளார் வள்ளுவர். ஏழு என்ற எண்
இடம் பெற்ற அக் குறட்பா வருமாறு:
“ஒருநாள் ஏழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.”
(1269)
‘தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை
நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒரு நாள் ஏழு நாள் போல நெடிதாகக் கழியும்’
என்பது இக்குறட்பாவின் பொருள்.
எட்டு
இறைவன் எண் வகைப்பட்ட குணங்களை உடையவன் என்னும் பொருள் தோன்றும் வகையில்
‘எண் குணத்தான்’ (9) எனச்
சுட்டுவர் வள்ளுவர். எண் குணங்களாவன:
1. தன்வயத்தம், 2.
தூய்மை, 3. இயற்கையறிவு,
4. முற்றறிவு, 5.
கட்டின்மை, 6.
பேரருள், 7. எல்லாம் வன்மை, 8.
வரம்பிலின்பம்.
ஒன்பது
ஒன்பது என்ற எண்ணைத் திருவள்ளுவர் தம் நூலில் எங்கும் எடுத்தாளவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து
திருவள்ளுவர் பெரியாருக்குத் தரும் இடம் பெரியது. ‘நல்லார்’, ‘தக்கார்’,
‘இடிக்கும் துணையார்’, ‘அறன் அறிந்து மூத்த அறிவுடையார்’ என்னும் பொருள்
பொதிந்த தொடர்களால் அவர்களுக்குப் புகழாரம் சூட்டுவார் அவர்.
வள்ளுவரின் கருத்தில் ‘நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல்
என்பது, பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை
பயப்பதாகும்’.
“வல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.” (450)
நூறு
சூதாட்டம் பொல்லாத பழக்கம்; பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும்
விருப்பத்தை வளர்ப்பது அது. ‘இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல்’
(940) என்னும் உவமை வடிவில் அளபெடையைக்
கையாண்டு இக் கருத்தினை ஆற்றலோடு உணர்த்துவார் வள்ளுவர். சூதாட்டத்தில்
பெறும் பொருள் ஒரு மடங்கு இருக்கும்; ஆனால் சூதாடிகள் ஆட்டத்தில்
முடிவில் இழப்பதோ நூறு மடங்காக அமையும்.
“ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும்
உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு” (932)
என்னும் குறட்பாவில் ஒன்று, நூறு என்னும் எண்களைத் தொடர்புபடுத்தித் தம்
கருத்தினைத் திறம்பட எடுத்துரைப்பார் வள்ளுவர். ‘ஒரு பொருள் பெற்று நூறு
மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு
வழி உண்டோ?’ என்பது அவர் தொடுக்கும் ஒரு கூரிய வினா.
ஆயிரம்
புலால் மறுத்தல் – மற்றோர் உயிரின் உடம்பை உண்ணாமை – வள்ளுவர் உயிரெனப்
போற்றும் கொள்கைகளுள் ஒன்று. அதன் இன்றியமை-யாமையைப் புலப்படுத்தும்
இடத்தில் அவர் ஆயிரம் என்ற எண்ணைத் திறம்படப் பயன்படுத்திக்
கொண்டுள்ளார். அவரது கருத்தில், ‘நெய் முதலிய உணவுப் பொருள்களைத் தீயில்
சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட, ஒரு விலங்கின் உயிரைக் கொன்று
அதன் உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது ஆகும்’.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று”
(259)
என்பது ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது குறட்பா ஆகும்.
கோடி
வள்ளுவருக்குக் கோடி
என்ற பேரெண் மீது ஒரு தனி ஈர்ப்பு உள்ளது. அவர் அதனை எட்டுக்
குறட்பாக்களில் கையாண்டுள்ளார்; ஒரு கோடியை மட்டுமன்றி, பத்து கோடி,
எழுபது கோடி என்று அதன் விரிவாக்க எண்களையும் அவர் இரு குறட்பாக்களில்
பயன்படுத்தியுள்ளார்.
அறத்துப் பாலின் இறுதி அதிகாரம் ‘ஊழ்’ (38).
அதில் வரும் ஏழாவது குறட்பாவில், ‘ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல்
முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர
முடியாது’ என்கிறார் வள்ளுவர்.
“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”
(377)
என்ற குறட்பாவில் ‘கோடி’ என்ற எண்ணின் ஆட்சியைக் காணலாம். ‘எடுத்து
வைத்தாலும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்ற பழமொழி இங்கே
ஒப்புநோக்கத் தக்கதாகும்.
‘நிலையாமை’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறட்பா ஒன்றிலும் கோடி என்ற
எண்ணின் ஆற்றல்மிகு ஆட்சியைக் காணலாம்:
“ஒருபொழுதும் வாழ்வது அறிவார் கருதுப
கோடியும் அல்ல பல” (337)
அறிவில்லாதவர்கள் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து
அறிவதில்லையாம்; ஆனால், அவர்கள் வீணில் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல,
மிகப் பல எண்ணங்களாம்!
“உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன”
என்னும் ஔவையார் வாக்கு இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும்.
உயர்குடிப் பிறந்தவர்களின் மேன்மையை உரைக்கும் இடத்தில் ‘அடுக்கிய கோடி’
என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர். பல கோடிப்
பொருளைப் பெறுவதாக இருந்தாலும், உயர்குடியில் பிறந்தவர்கள் தம் குடியின்
சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களை ஒருபோதும் செய்வதில்லை.
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்” (954)
‘அடுக்கிய கோடி’ என்னும் சொல்லாட்சி பிறிதொரு குறட்பாவிலும்
(1005) வள்ளுவரால் ஆளப்பெற்றுள்ளது.
வாழ்வில் தீ நட்பால் விளையும் தாக்கத்தைப் புலப்படுத்தக் கருதும்
வள்ளுவர், ‘அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில் நகைக்கும் தன்மை
உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மை ஆகும்’
என்கிறார்.
“நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும்” (817)
‘பத்து அடுத்த கோடி உறும்’ என்பது வலியுறுத்தல் பற்றி வந்த உயர்வு
நவிற்சி ஆகும்.
தீ நட்பை விடப் பல மடங்கு பொல்லாதது பழுது எண்ணும் மந்திரியால்
மன்னனுக்கு விளையும் கேடு. ‘தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை
விட எழுபது கோடிப் பகைவர் பக்கத்தில் இருத்தலும் நன்மை ஆகும்’ என்பது
வள்ளுவரின் கருத்து. இதனை,
“பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்” (639)
என்னும் குறட்பா தெளிவுபடுத்தும். ‘நன்மை செய்கிறவன் போல் அருகிலிருந்து
கொண்டு தீமையை எண்ணும் அமைச்சன் ஒருவனில் அரசனுக்குப் பக்கமாகவே எழுபது
கோடி பகைவர் அமைவர்’ (திருக்குறள் தமிழ் மரபுரை, ப.348)
என்பது பாவாணர் இக் குறட்பாவுக்குத் தரும் உரை விளக்கம் ஆகும்.
இங்ஙனம் ஒல்லும் வகைகளில் எல்லாம் எண்களைப் பயன்படுத்தித் தம்
கருத்துக்களைப் பயில்வோர் மனங்களில் தெளிவாகப் பதியுமாறு
புலப்படுத்தி-யுள்ளார் திருவள்ளுவர்.
.
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை 625 021
|