கட்டுரை வரையும் கலை
(The Art of Writing Essays)
கவிஞர் வி.கந்தவனம்
கட்டுரை
எழுதுவது எளிதென்று பலர் கருதுகிறார்கள்ளூ எழுதியும் வருகிறார்கள்.
வாசிக்கும் கட்டுரைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பவரும் குறைவு.
கவிதைகள்பற்றிக் கருத்துக்கள் தெரிவிப்பதுண்டு. அந்த அளவுக்குக்
கட்டுரைகளை யாரும் மதிப்பிடுவதில்லை. மதிப்பிட்டாலும் அது கட்டுரையில்
தெரிவிக்கப்பட்ட கருத்துப் பற்றியதாக இருக்குமே யன்றி, கட்டுரை
எழுதப்பட்டிருக்கும் முறைபற்றியதாக இருப்பதில்லை.
உண்மையில் கட்டுரை எழுதுவது கடினமான ஒரு வேலை. கடும் உழைப்பை வேண்டி
நிற்கும் ஒரு கலை. எனது ஆங்கில விரிவுரையாளர் கட்டுரைக் கலைபற்றிப்
பேசுகையில் கூறிய வாசகம் ஒன்று இப்பொழுதும் நினைவில் இருக்கிறது. அது,
“A good essay is the result of ten per cent inspiration and
ninety per cent
perspiration”
என்பது. இக் கூற்று கட்டுரை
எழுதுவதற்கு உந்துசக்தியாக இருக்கக்கூடிய காரணிகளிலும் அதனைச் செவ்வனே
எழுதி முடிப்பதற்கு அதிக உழைப்பு வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்து
கின்றது.
இந்த உழைப்புக் குறித்த சில கூறுகளை எடுத்துக் கூறுவதே இக் கட்டுரையின்
குறிக்கோளாகும்.
1.சிந்தித்துத்
தெளிதல்: எவ்வளவுதான்
அறிவு இருந்தாலும், அனுபவமிருந்தாலும் ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு புது
முயற்சியாகவே சிறந்த கட்டுரையாளர் கருதுவர். ஒரு பொருள் குறித்து
கட்டுரை எழுதவேண்டும் என்று துணிந்தபின், ஏன் எழுதுதல் வேண்டும்,
யாருக்கு எழுதுதல் வேண்டும், எப்படி எழுதுதல் வேண்டும், எவ்வளவு
எழுதுதல் வேண்டும் என்பனபற்றிய சிந்தனைகள் அத்தகைய கட்டுரையாளரின்
முதற்கட்ட முயற்சியாக அமைதல் வழக்கம்.
பொருளை வேறு யாராவது தந்து அதுபற்றி ஒரு கட்டுரை எழுதும்படி
கேட்டிருந்தாலுங் கூட, அதனை எவ்விதம் எழுத வேண்டும் எத்தகைய வாசகருக்கு
எழுத வேண்டும் என்றெல்லாம் சிந்திப்பது பொருளை வரையறை செய்யவும் அது
குறித்த நோக்கத்தைத் தீர்மானிக்கவும் உதவும்.
கட்டுரையின் நோக்கம் -
- சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்வது
- ஒரு பொருளை விளக்குவது
- ஒன்றன் நன்மை தீமைகளை விவாதிப்பது
- அறிவுரை கூறுவது
- ஆராய்ந்து கண்ட ஒரு முடிவை அறிவிப்பது
- பிறிதொருவரின் ஆக்கத்தை அல்லது ஒரு நிகழ்ச்சியை மதிப்பிடுவது
- இரு விடயங்களை ஒப்பீடு செய்வது
- செய்திகளைத் தெரிவிப்பது
- நிகழ்ச்சிகளை அல்லது செய்திகளை அறிக்கையாக்குவது
என்பனபோன்று பலவகைப்படும்.
2.கட்டுரையின்
அளவு: கட்டுரையின் அளவைத் தீர்மானித்துக் கொண்டு கட்டுரையை
எழுதத் தொடங்குவது ஒரு சிறந்த முறை. எந்த அளவுக்குக் கட்டுரையை எழுத
வேண்டும் என்ற தீர்மானம் கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்பதையும்
நிர்ணயிக்கும்.. நோக்கம் வரையறுக்கப்பட்டால் கட்டுரையின் அளவும்
தெளிவாகும். எனினும், அடுத்துள்ள யாருக்கு எழுதுதல் வேண்டும் என்ற
வினாவும் கட்டுரையின் அளவைக் கூட்டலாம், குறைக்கலாம். இந்த வினா
முக்கியமானதொன்று. இதன் விடை கட்டுரையின் அளவை மட்டுமல்லாது பொருளை
எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வல்லது. உதாரணமாக,
கட்டுரை பத்திரிகை வாசகருக்கா, மாணவ உலகத்துக்கா, ஆராய்ச்சி
மாநாட்டுக்கா என்பதைப் பொறுத்து அதன் அளவும் பாணியும் வேறுபடும்.
பொதுவாக, ஒரு கட்டுரையின் அளவு கணினி எழுத்தமைப்பில் நான்கு
பக்கங்களுக்கு மேலாகாதிருப்பது விரும்பத் தக்கது. மாணவருக்குரியவை
இன்னுஞ் சிறிதாக இருப்பது நல்லது. ஆய்வுக் கட்டுரைகளின் அளவு அதிகமாக
இருக்கும். எந்தக் கட்டுரை யாயினும் அளவுக்கு மீறி நீண்டிருத்த லாகாது.
கட்டுரையின் அளவுபற்றிய தீர்மானம் நீட்டிமுழக்காமல் அதனை
இறுக்கமாக(செறிவாக) எழுதுவதற்குத் தேவையானதொன்று.
3.
தகவல்களைச் சேகரித்தல்:
கட்டுரைப் பொருள்குறித்த சிந்தனையால்
எழுந்த
கருத்துக்களோடு மேலும் அதுபற்றி ஆய்ந்து தகவல்களைத் திரட்டல் வேண்டும்.
அதன்பொருட்டு நூல்நிலையம் ஒன்றைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படின்
அதனையும் செய்தல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளுக்கு இத் தேவை
இன்றியமையாதது.
4.திட்டமிடல்:
திரட்டிய தகவல்களைக்
குறித்துக் கொண்டபின் அவற்றை ஒழுங்காக எழுதவேண்டிய முறை குறித்த திட்டம்
ஒன்றை வகுத்தல் வேண்டும்.
கட்டுரை என்ற சொல்லே அதனை எப்படி எழுதவேண்டும் என்பதை எடுத்துக்
கூறுகிறது. கட்டுரை என்றால் கட்டி உரைத்தல் என்று பொருள். கட்டுரைக்
கருத்துக்களை ஒன்றோடொன்று பொருந்த எழுத வேண்டும் என்பதை 'கட்டி உரைத்தல்'
குறிக்கின்றது. பொருளைக் கட்டியுரைப்பதற்குத் திட்டமிடல் வேண்டும்;.
திட்டத்தை மனத்திலும் வைத்துக் கொள்ளலாம், எழுத்திலும் போட்டுக்
கொள்ளலாம்.
பொதுவாக, (1) முன்னுரை (2)
பொருள் விரிவு (3) முடிவுரை
என்னும் மூன்றும் ஒரு கட்டுரையின் உறுப்புக்களாக இருக்குமெனினும் பொருள்
விரிவு குறித்தே நுணுக்கமாத் திட்டமிடல் வேண்டும். பல்கலைக் கழகங்களில்
இத் திட்டமிடலைப் புறம்பாகக் காட்ட வேண்டும் என்று சில விரிவுரையாளர்
வலியுறுத்துவதற்குக் காரணம் திட்டமிடும் பழக்கத்தை மாணவரிடத்தில்
வளர்க்க வேண்டும் என்பதுதான். அவ்வளவுக்குத் திட்ட மிடலை அவர்கள்
முக்கியமாகக் கருதுகிறார்கள்.
பொருள் விரிவில் செய்யப்பட வேண்டியதொன்று பொருளைச் சிறு அலகுகளாக்குதல்.
அதுவும் கட்டுரையின் நோக்கத்துக்குப் பொருந்தும் வகையில் பிரிக்கப்படல்
வேண்டும்.
5.பந்திபிரித்தல்:
பொருளைச் சிறு அலகுகளாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பந்தியிற்
கையாளுதல் கட்டுரையாளரின் மரபாகும். இந்தப் பந்தி பிரித்தல் தொடர் பான
நுணுக்கம் பலருக்கு விளங்குவதில்லை.
நெல்லை வீசி விதைப்பதுபோலப் பொருளை ஒழுங்கில்லாமற் கொண்டு செல்லும்
கட்டுரை வாசகரைக் கவராது. ஒரு வீடு கட்டுகின்ற பொழுது தேவைக்கேற்ப
அறைகளை அமைத்துக் கட்டுதல்போல கட்டுரையும் பந்திகளாகிய அறைகளைக்
கொண்டிருத்தல் வேண்டும். அவ்வித அமைப்பில் ஒவ்வொரு பந்தியும் பொருளின்
தனித்த கூறுகளின் வதிவிடமாக இருக்கும்.
6.தரிப்புக்
குறியீடுகள்:
வாக்கியங்களின் கருத்து விளக்கத்துக்கு உதவியாக இருப்பவை தரிப்புக்
குறியீடுகள். கட்டுரையாளர் எந்தெந்தக் குறியீடுகளை எந்தெந்த இடங்களிற்
பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். தவறான
குறியீடுகள் வாசிப்பவரைக் குழப்பவல்லன. வீதி விளக்குகளும் சின்னங்களும்
வாகனங்களை ஒழுங்காகச் செல்ல வைப்பதுபோல, சரியான தரிப்புக் குறியீடுகளால்
வாசகரை வழிப்படுத்த வேண்டிய பொறுப்புக் கட்டுரையாளருடையது.
7.நடை:
கட்டுரை எழுதுகையிற்
கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயம் அதன் நடை. கட்டுரைப் பொருளுக்கேற்ப
நடையும் வேறுபடுவது இயல்பு. அறிஞருக்குரிய கட்டுரையாயின் சுருங்கக் கூறி
விளங்க வைத்தல் அழகுடைதாக இருக்கும்.
மாணவருக்குரியது அவ்விதம் இருக்க முடியாது. அதுபோலவே இலக்கியக்
கட்டுரைகள் மற்றும் தற்காலச் சமூகச் சிக்கல்கள் பற்றிய கட்டுரைகளும்
அவைக்கேற்ற நடைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
கட்டுரைக்குரிய நடையைக் கையாளும் மொழியே பெரிதும் தோற்றுவிக்கும்
என்பதைக் கவனத்திற் கொள்க. அதனாற் கட்டுரையாளர் சிறந்த மொழிவளம்
உள்ளவராதலும் வேண்டும்.
தமிழ்மொழி இனிமையானது. இந்த இனிமையையும் கட்டுரையிற் கலந்து எழுதுவது,
வாசனை காட்டி வண்டுகளைக் கவரும் மலரைப்போல வாசகர்களைக் கவரும் ஓர்
உத்திமுறையாகும்.
8.பிழைகளற்ற
தமிழ்: மொழியழகுக்கு
உயிர்நாடியாவது செம்மை. பிழைகளற்ற செம்மையான தமிழுக்கே செந்தமிழ் என்று
பெயர். வடமொழி எழுத்துக்களைத் தவிர்த்தல் வேண்டும். அவற்றைத் தமிழ்
வடிவமாக்கி எழுதவேண்டும் என்பதே இலக்கண விதி. உதாரணமாக, நஷ்டம் நட்டம்
என்றும் நிஷ்டை நிட்டை என்றும் தமிழ் வடிவம் பெற வேண்டும்.
வளரும் எழுத்தாளர் சிலர் சொற்களின் சரியான வடிவங்களையே அறியாதவர்களாக
உள்ளனர். நடத்தல் என்பதை நடாத்தல் என்றும் முயல்தல் என்பதை முயற்சித்தல்
என்றும் மங்கல நாளை மங்கள நாள் என்றும் பலர் எழுதிவருகின்றார்கள். சிலர்
எழுத்துப் பிழைகளும் விடுகின்றனர்.
கட்டுரையிற் கடும் புணர்ச்சிகளைத் தவிர்த்தல் நல்லது. உதாரணமாக, 'அவன்தான்
செய்தான்' என்று எழுதுவது இக்காலத்திற் பொதுவாகிவிட்டது.
இலக்கணத்தின்படி அவன்தான் என்பது அவன்றான் என்றே வரல்வேண்டும். இதனை
அவனே செய்தான் என்று எழுதிப் புணர்ச்சியைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
தமிழ் நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய மொழி. அதனை வளைப்பதற்கு வல்லமை
வேண்டும்.
9.
உதாரணங்களும் மேற்கோள்களும்
கட்டுரைப் பொருளை உதாரணங்களைக் கொண்டு விளக்குவது பொதுவானவோர்
உத்திமுறையாகும். உவமைகளையும் புலமைசான்றோர் கையாள்வர். உதாரணங்கள்
பொருத்த மானவையாகவும் அளவானவையாகவும் இருத்தல் வேண்டும். பிள்ளை பாதி
புராணம் பாதி என்பதுபோல உதாரணம் பாதி கட்டுரை பாதி என்றிருத்தலாகாது.
அவ்வாறே மேற்கோள்களையும் அளவோடு வைத்துக்கொள்ளுதல் வேண்டும். அவர்
சொன்னார் இவர் சொன்னார் என்பதிலும் கட்டுரையாளர் என்ன சொல்கிறார் என்பதே
முக்கியம். அதற்காகவே கட்டுரையே எழுதப்படுகிறது.
ஆய்வுக் கட்டுரைகளில் பிறருடைய கருத்துக்களைக் கையாள்கையில் முதல்நூல்
அல்லது வழிநூலின் விவரங்களை அடிக்குறிப்பாக வழங்குவது வழக்கம்.
10.குற்றங்கள்:
கூறியது கூறல்,
மிகைபடக் கூறல் ஆகிய இரண்டும் கட்டுரைகளிற் பொதுவாகக் காணப்படும்
குற்றங்கள். சிலர் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் விடுவதுமுண்டு. இது
குன்றக் கூறல் என்னும் குற்றத்தின்பாற்படும். கருத்தை நேரடியாகச்
சொல்லாது சுற்றிவளைத்தல், மாறுபடக் கூறுதல், தெளிவாக்காது வாசகரை மயங்க
வைத்தல் போன்ற குற்றங்களையுந் தவிர்த்தல் வேண்டும்.
வாசகருக்கு நன்கு தெரிந்த பொதுவான கருத்துக்களை வலியுறுத்துவது, புதுமை
என்ற பெயரில் பயனற்றவற்றைப் பாராட்டுவது, பிறரைப் புண்படுத்தும் வகையில்
எழுதுவது போன்றவையும் குற்றங்களாம்.
இவை எல்லாவற்றிலும் கேடான குற்றம் பிறரது ஆக்கங்களிலிருந்து
எடுக்கப்பட்ட
விடயங்களைத் தம்முடைய சொந்தக் கருத்துக்களைப்போல எழுதுதல். இந்த
எழுத்துக் களவு
plagiarism)
மூலக் கட்டுரையாளரால்
வழக்குத் தொடரப்படக்கூடிய
குற்றத்துக்கு உட்பட்டதாகும்.
இதுவரை நல்ல கட்டுரை ஒன்றை எழுதுவதற்கு உதவக்கூடிய வழிவகைகளுள்
முக்கியமான பத்து வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. இவற்றைப்
பின்பற்றிக் கட்டுரையை எழுதிய பின்னரும் கட்டாயமாகச் செய்யவேண்டியது
ஒன்றுள்ளது.
எழுதிய கட்டுரையைத் திருப்பிப் படித்தல் வேண்டும். அவசரத்திற் படிக்காது
ஆறுதலாகப் படித்து வேண்டிய திருத்தங்களைச் செய்தல் வேண்டும். ஒரு முறையோ
இருமுறையோ, வேண்டுமானால் அதற்கு மேலாகவோ பொறுமையாகப் படித்துக்
கட்டுரையைச் சீர்செய்த பின்னரே வெளியிடல் வேண்டும்.
வாழ்த்துக்கள்!
----------------------------
நிறுத்தற் குறியீடுகள்
(Punctuation Marks)
கட்டுரைகளில் நிறுத்தற் குறியீடுகளைப்
பொருத்தமான இடங்களில் நிறுத்தத் தவறும் அல்லது தடுமாறும் கட்டுரையாளரை
வழிப்படுத்த இக்கட்டுரை முயல்கின்றது.
நிறுத்தற் குறியீடுகள் கருத்துகளைத் தெளிவுபடுத்தற் பொருட்டு
வசனங்களுக்கிடையிலும் முடிவிலும் பயன்படுத்தப்படுகின்றன. அக்குறியீடுகள்
பின்வருமாறு:
1. முற்றுப்புள்ளி - Full stop ( . )
2. காற்புள்ளி - comma ( , )
3. அரைப்புள்ளி - semicolon ( ; )
4. முக்காற்புள்ளி - colon ( : )
5. கேள்விக்குறி - Question mark ( ? )
6. வியப்புக்குறி - Exclamation mark ( ! )
7. மேற்கோட் குறிகள் - Quotation marks - Inverted
commas( '' )
8. அடைப்புக் குறிகள் - Brackets
-
Parentheses ( )
9. இடைக்கோடு - Dash (-)
10. பதவுரைக் கோடு - Hyphen ( _ )
1.
முற்றுப்புள்ளி
(1) இது முற்றுந் தரிப்பு என்றும் வழங்கப்படும். முற்றுந் தரிப்பு
பொதுவாக முற்றுத் தொடர்மொழி முடிவிற் பயன்படுத்தப்படும். முற்றுத்
தொடர்மொழி என்பது, எழுவாயும் பயனிலையும் செயப்படுபொருள் முதலியவைகளோடு
சேர்ந்தேனும் சேராமலேனும் முடிவு பெற்று நிற்கும தொடர்மொழியாகும்;.
உதாரணம்: சியாமளா விளையாடினாள்.
சியாமளா மைதானத்தில் தனது தோழியரோடு விளையாடினாள்.
(2)
முற்றுந் தரிப்பு மொழி அல்லது பெயர்க் குறுக்கங்களைக் காட்டவும்
பயன்படுத்தப்படும்.
(3)
உதாரணம்: திரு. (திருவாளர் என்ற மொழியின் குறுக்கம். திருமதி என்பது ஒரு
முழுமையான
சொல்லாதலால் அதன் முடிவில் முற்றுந் தரிப்புத் தேவையற்றது).
திருமதி வ. இராமலிங்கம்
ஐ.நா. (ஐக்கிய நாடுகள்)
க.பொ.த. (கல்விப் பொதுத் தராதரம்)
ஆங்கில மொழியில் இப்பொழுதெல்லாம் தொடர்ப் பெயர்களின் குறுங்கங்கள்
முற்றுப்
புள்ளிகள் இல்லாமலேயே காட்டப்பட்டு வருகின்றன. அந்த வழக்கத்தை நாம்
தமிழ்மொழியிற் பின்பற்றாமல் இருப்பது நல்லது. பின்பற்றினால் சில
சங்கடங்கள்
ஏற்படக்கூடும்.
உதாரணம்: உலகத் தமிழ் வானொலி - உதவா
(4)
எண்ணிக் காட்ட வேண்டிய அல்லது வரிசைப்படுத்திக் காட்ட வேண்டிய
நிலைமைகளில் எண்களுக்குப் பின்னும் முற்றுப்புள்ளி இடம்பெறும்.
உதாரணம்;: நிதியுதவியோர்
1. திரு. ம. வித்தியானந்தன்
2. திரு. ம. செ. அலெக்சாந்தர்
3. திருமதி பூ. சின்னராசா
4. திருமதி ந. இன்பன்
2.
காற்புள்ளி
சொற்கூட்டங்களை அல்லது தொடர்மொழிகளைப் பிரித்துக் காட்ட இது
பயன்படுத்தப்படும்.
உதாரணம்:
(I)
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனத் திணை ஐவகைப்படும்.
(II)
உதாரணமாக, இரு வருடங்களுக்கு முன்னர் பல நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு,
கனடிய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ், நாட்டின் வௌ;வேறு திறமைகளின்
அபிவிருத்தியைப்
பற்றி ஆராய்ச்சி செய்து தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
குறிப்பு: (1) உம்மைத் தொகையாக
வரும் சொற்கூட்டங்களைக் காற்புள்ளி கொண்டு பிரிக்க வேண்டியதில்லை.
உதாரணம்: சேர சோழ பாண்டியர்
நன்மை தீமை
தாய் தந்தை
(2) இவை போலவே எளிமையான
முற்றும்மைத் தொடர்களையும் பிரிக்க வேண்டியதில்லை.
உதாரணம்: (1) கணவனையும்
மனைவியையும் இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றனர்.
(2) உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் எப்பொருட்டு எப்பெயர் வழங்கி
வருமோ, அப்பொருளை அச்சொல்லாற் கூறுதலே மரபாம்.
முற்றும்மையிற் பொருள் இணைகின்றது. இணையும் பொருளைக் காற்புள்ளியிட்டுப்
பிரிக்க வேண்டியதில்லை. பல்தொடர் முற்றும்மைகளைத் தெளிவு கருதிப்
பிரித்துக் காட்ட வேண்டுமெனின் காற்புள்ளியைப் பயன்படுத்தலாம்.
3.
அரைப்புள்ளி
(1) ஒரு எழுவாய்த் தொடர் பல பயனிலைகளைத் தாங்கி வருகையில் முன்னுள்ள
பயனிலைகள் அரைப்புள்ளி பெற்றும் இறுதிப்பயனிலை முற்றுப்புள்ளியுடனும்
முடியும்.
உதாரணம்: புலிப்படைகள் திட்டமிட்டவாறு முன்னேறினளூ சிங்கள இராணுவ
முகாமைச் சூழ்ந்து கொண்டனளூ திடீரெனத் தாக்கினளூ யாருமே முகாமை விட்டு
வெளியேற முடியாத வகை வெளிவாயில்களைக் காவல் புரிந்தனளூ முப்பது நிமிடப்
போராட்டத்தின் பின் முகாமைக் கைப்பற்றிக் கொண்டன.
(2) ஏற்கனவே காற்புள்ளியாற் பிரிக்கப்பட்ட வாக்கியத் தொடர்களை
வேறுபடுத்திக் காட்டவும் அரைப்புள்ளி பயன்படுத்தப்படுவதுண்டு.
உதாரணம்: இந்தப் பயணத்தை மேற்கொள்ள முன் இரு விடயங்களைச் சீர்தூக்கிப்
பார்க்க வேண்டும்: ஒன்று, வானிலைளூ மற்றையது, செலவு.
4.
முக்காற் புள்ளி
(1) தலைவாக்கியத்தைத் தொடர்ந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட வேண்டுமாயின்
அத்தலைவாக்கியமும் அதனைத் தொடரும் விளக்கமும் முக்காற் புள்ளியாற்
பிரித்துக் காட்டப்படும்.
உதாரணம்: அந்த வேளையில் நாம் கண்ட காட்சி இது: இரத்த வெள்ளத்தில் ஓர்
உருவம் துடித்துக் கொண்டிருந்தது. 3.(2) இன் உதாரணத்தையும் கவனிக்கவும்.
(2) பின்வருமாறு, கவனிக்க, உதாரணம் போன்ற சொற்களையும் அவற்றைத்
தொடர்ந்து வரும் வாக்கியங்களையும் பிரித்துக் காட்டவும் முக்காற் புள்ளி
பயன்படுத்தப்படும்.
5.
கேள்விக்குறி- கேள்வி அடையாளம்
(1) இது வெளிப்படையான வினா வாக்கியங்களின் முடிவில் நிறுத்தப் பெறும்.
வினா வாக்கியங்கள் இருவகைப்படும்.
(அ) யார், எவன், எவள், எவர், எவர்கள், எது, எவை, ஏன், என்ன, எங்கு,
எந்த, எப்பொழுது,
என்று, எதற்கு, எவ்வளவு, எத்தனை, எத்தனையாவது, எவ்விதம் (எப்படி),
எவ்வகை
(எப்படிப்பட்ட) என்னும் வினாச் சொற்களைக் கொண்டு கேட்கும் வினாக்கள்.
(ஆ) ஆகார இடைச் சொல்லைக் கொண்டு ஆக்கும் வினாக்கள்.
உதாரணம்: யார் நாளைய கூட்டத்துக்குத் தலைவர்?
அவர் வருவாரா?
குறிப்பு: ஐய வினாக்களுக்கும் பிறர் கூற்று வினாக்களுக்கும்
கேள்விக்குறி பயன்படுத்தப்படுவதில்லை.
உதாரணம்: மழை வருமோ தெரியாது.
சாப்பிட்டாயா என்று அம்மா கேட்டார்.
(2) சிலவகை ஐயப்பாடுகளுக்கும்
கேள்விக்குறி பயன்படுத்தப்படும்.
உதாரணம்: இவர் 1650ல் (?) பிறந்து 1720ல் காலமானார்.
6.
வியப்புக்குறி - ஆச்சரியக்குறி
இது வியப்புக்குரிய கருத்துகளை அல்லது கடும் உணர்ச்சிகளை அல்லது
வாழ்த்துகளை அல்லது தூற்றுதல்களைத் தெரிவிக்கும் வாக்கியங்களின்
முடிவில் நிற்கும்.
உதாரணம்;: என்ன அழகான காட்சி!
போடா வெளியே!
பல்லாண்டு வாழ்க!
ஆழ்க தீயதெல்லாம்!
கவனிக்க: வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என அளவுக்கு மீறிய ஆச்சரியக்
குறிகளைப் பயன்படுத்துவது பயனற்றதொன்றுளூ தவிர்த்தல் வேண்டும்.
7.
மேற்கோள் குறிகள்
இவை தலைகீழாகக் கவிழ்ந்து நிற்கும் காற்புள்ளிகள். அமெரிக்கர் இரட்டைப்
புள்ளிகளாகவும் பிரித்தானியர் ஒற்றைப் புள்ளியாகவும் கையாள்வர். ஆன்ற
தமிழ் எழுத்தாளர் மேற்கோள்களுக்கு இரட்டைப் புள்ளிகளையும்
வாக்கியங்களில் வரும் இவ்வகைச் சொற்களைச் சிறப்பித்து அல்லது
புறம்புபடுத்திக் காட்ட ஒற்றைப் புள்ளிகளையும் பயன்படுத்துவர்.
உதாரணம்: பிரதம விருந்தினர் பேசுகையில், 'கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத்
'தமிழர் தகவல்' தமிழ் மக்களுக்கு ஆற்றிவரும் சேவை அளப்பரியது' என்றார்.
8.
அடைப்புக் குறிகள்
இவை மேலதிக தகவல்கள், ஐயப்பாடுகள், இலக்கங்கள், நினைவூட்டும் தகவல்,
அறிவுறுத்தல் போன்றவற்றை வாக்கியத்தின் இடையிற் சேர்த்துக் கொள்ளப்
பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணம்: நான் அவரை முதன்முதலாக 1950ல் (என்று நினைக்கிறேன்)
சந்தித்தேன்.
மேலை நாடுகளுள் கனடாவிலேயே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர்
(அட்டவணை 3.2 ஐப் பார்க்கவும்).
இவ்விதமாக, கூச்சல் போட்டு (குடிவெறியில் இருந்தவர்கள்?) அவரைப்
பேசவிடாது
(பாவம்) தடுத்து விட்டனர்.
9.
இடைக்கோடு
(1) இது மேலதிக தகவலை அல்லது குறிப்பை வேறுபடுத்திக் காட்டப்
பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணம்: பாடசாலை நாட்கள் - அந்தக்
காலத்தில் - எனக்குக் குதூகல நாட்களாகவே
இருந்தன.
(2) எழுத்தில் ஒரு வேகத்தை அல்லது விறுவிறுப்பைத் தோற்றுவிக்கும்
வகையிலும் இது
கையாளப்படுகின்றது.
உதாரணம்: அபாய ஒலி அலறியது. மக்கள் கடுகி நடந்தனர் - ஊரடங்குச் சட்டம்
அமலாகுவதற்கு முன் தத்தம் வீடுகளை அடைவதற்காக.
10.
பதவுரைக் கோடு
இடைக் கோட்டுக்கும் பதவுரைக் கோட்டுக்கும் வித்தியாசம் பலருக்குத்
தெரிவதில்லை. நீளத்தைப் பொறுத்து பதவுரைக் கோடு இடைக் கோட்டின் சரி
அரைவாசியாகும். வாக்கியத் தொடர்களைப் பிரிக்க இடைக்கோடு உதவுகின்றது.
சொற்களைப் பிரித்துக் காட்ட பதவுரைக் கோடு பயன்படுத்தப்படுகின்றது. இது
சொற்களின் பொருளை வலியுறுத்தவும் ஒரு சொல்லில் இரண்டு அல்லது இரண்டுக்கு
மேற்பட்ட எழுத்துக்களுக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உதாரணம்: இறைவன் வாலறிவன் - தூய அறிவினன் - என்று போற்றப்படுகின்றான்.
உ-ம் (உதாரணம்)
ப-ரை (பதவுரை)
|