"மிருணாளினி
சாராபாய்" - ஆடும்போதே அமரத்துவம்
எஸ்.வி.வேணுகோபாலன்
மக்களுக்கான கலையைப் படைத்துக் கொண்டே இருந்த நாட்டிய மேதை
மிருணாளினி சாராபாய் (11.05.1918-21.01.2016)
தேசத்தின்
அற்புத நடனக் கலைஞர் பத்ம பூஷண் விருது பெற்ற மிருணாளினி சாராபாய்
மறைந்துவிட்டார். அவரது அன்பு மகள், அவரும் ஒரு தலைசிறந்த நாட்டிய மேதை,
மல்லிகா சாராபாய் தமது அன்னை, 'நிரந்தர நாட்டியமாடச் சற்றுமுன் தான்
விடைபெற்றார்' என்று உடனடியாக முக நூலில் பதிவு போட்டிருந்தார்.
உங்களால் எப்போதாவது நாட்டியத்தைத் தவிர்த்து இருக்க முடியுமா, ஏன் அதை
விட முடியவில்லை என்று அவரிடம் கேட்கப் பட்டபோது, மிருணாளினி
பதிலுக்குக் கேள்வியாளரிடம் இப்படி கேட்டார்: 'உங்களால் மூச்சு விடாது
இருப்பதை யோசிக்க முடியுமா, எனக்கு நாட்டியம் அப்படித் தான்!'.
முற்பிறப்பு, மறு பிறப்பு போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்த குடும்ப
மரபில் வந்த மிருணாளினி, எங்கிருந்தோ தமக்குக் கையளிக்கப்பட்ட
பெரும்பேறு தான் நடனம் என்று சொல்வதுண்டு. பிறந்த குடும்பத்திலோ,
புகுந்த வீட்டிலோ அவருக்குமுன் நாட்டியத்தைப் பயின்றவர்கள் ஒருவரும்
கிடையாது. எந்த சுவாமிநாதனும் (அவரது தந்தை), சாராபாயும் (கணவரது
குடும்பப் பெயர்) அதற்குமுன் நடனம் ஆடி இருக்கவில்லை என்று புன்னகை
ததும்ப ஓர் உரையாடலில் அவர் அளித்த பதிலை யூ டியூபில் இப்போதும்
பார்த்து ரசிக்க முடியும்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அம்மு சுவாமிநாதன் தான் அவரது தாய்.
இந்தப் பெயரை வாசகர்கள் உடனே அடையாளம் காணக் கூடும். நேதாஜி அவர்களது
இந்திய தேசிய இராணுவத்தில் பங்கெடுத்த போராளி கேப்டன் லட்சுமியின்
சகோதரிதான் மிருணாளினி! இவர்களது சகோதரர் கோவிந்த் புகழ்பெற்ற
வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். தேச விடுதலைப் போரில் இடையறாத பங்களிப்பில்
அக்கறை கொண்டிருந்த தாய் அம்மு, குழந்தைகள் சுதந்திர சிந்தனையோடு
வளர்வதை உறுதி செய்தார். இள வயதிலேயே நடனம் தான் தமது வாழ்க்கை என்று
முடிவெடுத்துக் கொண்டார் மிருணாளினி. நடனமே வாழ்க்கை என்று சொல்லிக்
கொள்வதை விட, அது ஓர் அர்ப்பணிப்பு என்று குறிப்பிடவே விரும்புகிறேன்
என்பார் மிருணாளினி.
தென்றலை வருணிக்கும் 'பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து....' என்னும்
அழகான திருவிளையாடற் புராண செய்யுள், 'அங்கங்கே கலைகள் தேறும் அறிவன்
போல்' என்று காற்றுக்கு அறிவைத் தேடிச் செல்லும் மாணவரை உவமை
ஆக்கியிருக்கும். வாசம் மிகுந்த மலர்கள், குளிர்ச்சியான நீர் நிலை
பரப்புகள் எங்கணும் புகுந்து நுழைந்து அந்த மணத்தையும், மென்மையையும்,
குளிர்ச்சியையும் தாம் பெற்றுக் கொள்கிற தென்றல் காற்றைப் போலவே
மிருணாளினி, பல்வேறு இடங்கள், நாட்டியத்தின் வெவ்வேறு துறை வல்லுநர்கள்,
சமூகத்தின் பலதரப்பு மனிதர்கள், இயற்கையின் வசீகர தலங்கள் எல்லாம்
கண்டடைந்து மகத்தான கலையை வளர்த்தெடுக்கும் சிறப்பான இடத்தை எட்டியவர்.
பரதம், கதகளி என அந்தந்தநாட்டிய மரபுக்கேற்ற ஆசான்களிடம் மிகுந்த
தேர்ச்சியுரக் கற்றதோடு, அவற்றைச் செவ்வனே வெளிப்படுத்தும் மேதைமையும்
பெற்றார். பரத நாட்டியத்தை, பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை,
முத்துக்குமார பிள்ளை இவர்களிடம் பயின்றவர், புகழ்வாய்ந்த
கல்யாணிக்குட்டி அவர்களிடம் மோகினி ஆட்டத்தையும், குரு ஆசான் குஞ்சு
குரூப் அவர்களிடம் கதகளியையும் கற்றார். ஆனால் தமது குரு என்று அவர்
எல்லாக் காலங்களிலும் சொல்லிக் கொண்டிருந்தது, ரவீந்திர நாத் தாகூரைத்
தான்! சாந்திநிகேதனில் படித்த காலத்தில், அவரது தீர்க்கமான பார்வ, ஆளுமை
தம்மை மிகவும் ஈர்த்ததாக மிருணாளினி குறிப்பிடுவதுண்டு.
பெங்களூரில் சென்று படிக்கையில்தான் எதிர்காலத்தில் இந்தியாவின்
விண்வெளி அறிவியலுக்கு அடித்தளமிட இருந்தவரான விக்ரம் சாராபாய்
அவர்களைச் சந்தித்தார். விடுதலை போராட்டத்தில் சக பங்கேற்பாளராக
இருந்தவர்கள் இந்த இருவரது அன்னையரும்! அன்பின் நட்பு மணவாழ்க்கையில்
இணைய வைத்தது. விக்ரம் சாராபாய் அவர்களது குடும்பம் வாழ்ந்துவந்த
குஜராத் பகுதிக்குப் பெயர்ந்தது மிருணாளினியின் வாழ்க்கை. நடனம்
என்பதைப் பெண்கள், அதுவும் சாராபாய் போன்ற பெரிதும் அறியப்பட்ட
குடும்பத்துப் பெண்கள் நாட்டிய மேடையில் தோன்றுவது யோசிக்க
முடியாதிருந்த காலத்தில் அந்தக் கற்பிதத்தை உடைத்துப் போட்டார்
மிருணாளினி. ஏளனம் செய்யவும், இழிவு செய்யவுமாகக் குழுமிய சுற்றமும்
நட்பும் இவரது நாட்டியத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறது. அதுதான்
கலையின் ஆற்றல் என்பார் மிருணாளினி. பின்னாளில், வெளிநாட்டுப் பயணம்
ஒன்றின்போது, 'ஓ, சாராபாய் குடும்பமா, அது நடனக் கலைக் குடும்பமாயிற்றே'
என்று யாரோ கேட்டதை சுவாரசியமாகச் சொல்லிக் கொள்வதுண்டு. மிருணாளினியைத்
தொடந்து மல்லிகா, அப்புறம் அடுத்த தலைமுறை என்று நாட்டிய பாரம்பரியம்
தொடர்கிறது.
வழி வழியாக எடுத்துக் கொள்ளப்பட்ட கருப்பொருள்களை மிகக் கவனத்தோடு
கடந்து போகத் தொடங்கியதுதான் மிருணாளினி அவர்களது பரவசமிக்க பண்பாக்கம்.
சமூகக் கருத்துக்களை எனது கலை வெளிப்படுத்தும் என்றார். சமூக உணர்வுகளை
பிரதிபலிப்பதுதானே கலை, நான் ஒரு கண்ணாடிதான் என்றார் அவர். நடனம்
என்பது மக்களுக்காக - மேல்தட்டு ரசனைக்கு மட்டுமல்ல என்பதில் அவரது
குரல் தெளிவாக இருந்து வந்தது..சமூக விஷயங்கள் மீது மனசாட்சியைத்
தூண்டும் நோக்கில், வரதட்சணைக் கொடுமையை சாடும் அவரது நாட்டிய நாடகம்
மிகவும் பரந்த அளவில் கொண்டாடப் பட்டது. மூன்று பெண்கள் உற்சாகமாகத்
தமது நாட்டிய அடவுகளைத் தொடங்குகின்றனர். அடுத்துச் சில நிமிடங்களில்
ஒருத்தி தனித்து நிற்கிறாள். மற்றவர்கள் இருவரும் விஷ அம்புகள் எய்வதைப்
போன்ற உடல் மொழியில் அவதூறுகளை அவள் மேல் பொழிகின்றனர். நிர்க்கதியாகத்
தள்ளப்படும் நிலையில் அந்தப் பெண் தற்கொலை நோக்கித் தள்ளப்படுவதைப்
படிப்படியாக நாட்டிய நாடக பாவங்களில் அதிர்ச்சி அடியாக அரங்கேற்றிக்
காண்பித்தார் மிருனாளினி. மனிதர்களது தவிப்புகளைஇ வாழ்க்கைப்
போராட்டங்களை, சமூகத்தின் பல பிரச்சனைகளை அவரது நாட்டியங்கள் மேடையில்
விவாதிக்கத் தொடங்கின.
தர்ப்பண் அகாதமி என்னும் நாட்டியப் பயிற்சி மையத்தை 1948ல் நிறுவியது,
மிருணாளினி அவர்களது மகத்தான பங்களிப்பு. எண்ணற்ற நடன விருப்பம்
கொண்டோரை ஆட்கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்ததோடு குழு நாட்டிய
நாடங்களில் அவர்களை மிகச் சிறந்த முறையில் பிரகாசிக்க வைத்தார்
மிருணாளினி. உலக நாடுகளுக்கு இங்கிருந்து சென்று நமது பாரம்பரியக் கலையை
அறிமுகப் படுத்தி நிகழ்ச்சிகளை நடத்திய முதல் நடனக் கலைஞர் என்ற
பெருமைக்குரியவர் அவர்.
'எனது நாட்டியத்தில் மொழி தேவைப்படவில்லை.....சொல்லுக்கட்டு (தா..தை...தித்
தை...தத் தித் தா...) மட்டுமே உண்டு. ஆனால் உடல் மொழியும், நடன
பாவங்களும், அடவுகளும் எந்த விஷயத்தையும் மேடையில் எடுத்து வைக்கப்
போதுமானதாக இருந்தது' என்றார் மிருணாளினி. 'என் இயற்கை மகன்
கார்த்திகேயன் பிறந்த பிறகு அவனது வளர்ச்சியின் ஒவ்வொரு சிறிய
அம்சங்களையும் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன்....அதன் அழகிய
அனுபவத்திலிருந்து மனித வாழ்க்கையை நாட்டிய நடனமாக்கும் எனது 'மனுஷ்யா'
தோன்றியது....இப்படி பலவற்றை நடன அரங்கிற்குக் கொண்டு செல்ல முடிந்தது..'
என்று ஒருமுறை குறிப்பிட்டார் அவர்.
இதிகாசங்கள், புராணங்கள் இவற்றில் ஆழ்ந்த பற்றுதலும், நம்பிக்கையும்
அவருக்கிருந்தது. ஆனால் அவற்றை மரபார்ந்த முறையில் காட்சிப்
படுத்துவதற்கு அப்பால் அவரது படைப்பு மனம் இயங்கிக் கொண்டிருந்தது.
அதனால்தான், மகாபாரதக் கதையை, அவர் வன்முறை குறித்த விசாரணையாக
சித்தரிக்க முற்பட்டார். பறவைகள், விலங்குகள், காடுகள், மலைகள் என
இயற்கையைக் கொண்டாடியபடி மனிதகுலம் அமைதியுற வாழும் ஓர் உலகைக் கனாக்
கண்ட அவரது கலைக் கண்ணோட்டம் அவரைச் சுற்றுச் சூழலியலாளராகவும்
உருப்பெற வைத்தது. வண்ணங்களும், இனிய ஓசைகளும் அவரது நாட்டியக்
குழுவினரின் அசாத்திய மேடை நடனத்தில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அவரது பாதங்கள் ஆடியபடி இருக்கும்போதே, அவரது சிந்தனையின் கரங்கள் கவிதை
தீட்டத் தொடங்கும். அந்தக் கவிதையின் வரிகள் அமர்க்களமான ஒரு நடன
நாடகமாக பொதுவெளியில் பார்வையாளரை அசர வைக்கும். கலையே வாழ்க்கை,
வாழ்க்கையே கலைக்கு அர்ப்பணிப்பு எனத் தொடர்ந்த பயணத்தில் தமது கள
அனுபவங்களை, சிந்தனைகளை நூலாகவும் கொண்டு வந்தார் மிருணாளினி. 2004ல் வெளிவந்த 'இதயத்தின் குரல்' என்ற அவரது புத்தகம் அதைப் போல் இன்னொன்று
இல்லை என்று பெரிதும் போற்றப்பட்டது.
மறு பிறவி என்று உண்மையில் ஒன்று இருக்குமானால், நீங்கள் என்னவாக
விரும்புவீர்கள் என்று ராஜீவ் மெஹ்ரோத்ரா தமது நீண்ட உரையாடலில் அவரைக்
கேட்கையில், 'ஓர் ஓவியராக, எழுத்தாளராக, முடியுமானால் ஒரு பாடகராக!'
என்று புன்னகை சிந்தியபடி பதில் அளித்தார் மிருணாளினி. தமது மகள்
மல்லிகா சாராபாய் சிறந்த நாட்டிய மேதை, மகன் கார்த்திகேயன் சுற்றுச்
சூழல் செயல்பாட்டாளர் செயல்பாட்டாளர் என்பதில் அவருக்கு நிரம்ப
பெருமிதம் இருந்தது. சிறந்த கலை ரசிகரான தமது கணவர் விக்ரம் சாராபாய்
குறித்த பெருமை சூழ்ந்திருக்கும் எப்போதும் அவர் முகத்தில்.
தமது வளர்ச்சி குறித்த பெரிய அக்கறை எதுவும் காட்ட முடியாதபடிக்கு
சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்தார் தனது தாய் என்ற குறையை அவரது
நேர்காணல் ஒன்று வெளிப்படுத்தியது. ஆனால் தமது கடைசி நாட்களில் தாயைத்
தான், அம்மு சுவாமிநாதனின் மலையாள மொழியைத்தான் அவர் உதடுகள் பேசிக்
கொண்டிருந்தது. செம்மாந்த கலை வாழ்க்கையை, மக்களுக்கான கலையை
வாழ்ந்தும், வாழ்வித்தும் தமது 97ம் வயதில் இயற்கையோடு
நிரந்தரமாகக் கலந்துவிட்டார் மிருணாளினி. அன்னையின் அரசியல்
வாழ்க்கையில் இருந்துதான் மக்களுக்கான கலையை அவரது படைப்புமனம்
உருவாக்கிக் கொண்டே இருந்தது. இனியும் உலகம் அதைக் கொண்டாடிக்
கொண்டேதான் இருக்கும்......
மிருணாளினி சாராபாய்
கணவனுடன்
மிருணாளினி சாராபாய்
மிருணாளினி சாராபாய் அவர்கள் மகள் மல்லிகா சாராபாய் அவர்களுடன்
மிருணாளினி சாராபாய் அவர்கள் நேரு அவர்களுடன்
sv.venu@gmail.com
|